Search This Blog

Sunday, February 8, 2015

பொதுவாக துறவு என்பது சாத்தியமானதுதானா?

யோகம், தியானம், கடவுள் பசி, தாகம், காமம்
இது ஒரு புறம் இருக்க, பொதுவாக துறவு என்பது சாத்தியமானதுதானா?
மனிதன் பிறந்ததே காமத்தில்தானே அப்படி இருக்க அதைத் துறவு எப்படி சாத்தியமாகும்?
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், பிரம்மச்சாரிகளாக இருப்பது அரிதினும் அரிது என்கிறார்கள்.
உளவியலாளர்கள் பசி, தாகம், காமம் இவை மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்கிறார்கள்.
பசியையும் தாகத்தையும் நாம் நினைத்துக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் பசியும் தாகமும் வந்தே தீரும். இதில் பசியையும் தாகத்தையும் அவசியம் என்ற கேட்டகிரியில் வைத்து விட்டு, காமத்தை மட்டும் சமூகம் ஒழுக்கக் கேட்டகிரியில் வைத்திருக்கிறது.
தண்ணீருக்கு உயிரில்லை. சாப்பாட்டுக்கும் அப்படித்தான். நாம் விரும்பும்போது சாப்பிடலாம். அவை இரண்டுமே அஃறிணைகள் என்பதால் நாம் சாப்பிடும் போது அவற்றால் மறுக்க முடியாது. ஆனால் ஆணும் பெண்ணும் அப்படி அல்ல. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது காமம் வருமானால், அதைத் தீர்த்துக் கொள்ள அந்தப் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும். அதைப்போலத்தான் பெண்ணுக்கும். மேற்குறிப்பிட்ட சாப்பாட்டைப் போலவோ தண்ணீரைப் போலவே இவர்கள் அஃறிணைகள் இல்லாமல் உயர்திணைகளாக இருப்பதால் விரும்பியபடி சாப்பிட முடியாது. மறுக்கவும் இடம் உண்டு. அதனால்தான் ஒழுக்கக் கோட்பாடுகள் வந்தன.
அது தவிர ஒரு ஆணுக்கு தன் பெயர் சொல்லும் வாரிசு தேவை. அவனது மனைவியானவள் தன் சவுகரியத்திற்கு எங்கு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கூடலாம் என சுதந்திரம் இருக்குமானால்....பிறக்கும் பிள்ளை இவனுடையதுதானா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
இந்தச் சிக்கல் நெடுநாட்களுக்கு முன்பு மனிதனுக்கு ஏற்பட்டு, தான் சேர்த்து வைத்த சொத்தை தொடர்ந்து தனது வாரிசே அனுபவிக்க வேண்டும் என நினைத்த ஆண், பெண்ணுக்கு கற்பு எனும் கருத்தாக்கத்தை போதித்தான்.
கற்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு என்று ஒருபுறம் சமூகம் அனைத்துக் கதவுகளையும் சாத்தி வைத்து மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருக்க இணையதளம், சினிமா, சின்னத்திரை, பத்திரிகை என அனைத்து ஊடகங்களும் கட்டுப்பாட்டை அவரவருக்கு முடிந்த வரையில் கொஞ்சம் கொஞ்சம் தளர்த்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கின்றன. கோயில் திருவிழாக்களில் நடக்கும் தெருக்கூத்து, கரகாட்டம், ஆடல் பாடல் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் காமம் இல்லாமல் இருப்பதில்லை. இவை எல்லாமே மனிதனை ஆசுவாசப்படுத்தும் முயற்சிகள்தான். அப்படி இருக்க சாமியார்கள் மட்டும் அவர் ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும் முற்றிலும் காமவயப்படாமலே இருந்து விட முடியுமா? இயேசு கிறிஸ்துவில் ஆரம்பித்து, நம்மூரைச் சேர்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், கிறிஸ்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் என அத்தனை பேருமே நமக்கு ஆச்சரியம் அளிக்கிறார்கள்.
புத்தனையாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் புத்தன் சித்தார்த்தனாக அரண்மனையில் இருக்கும் போது அத்தனை விளையாட்டுக்களையும் விளையாடி முடித்து விட்டு அதற்குப் பிறகுதான் துறவியாகிறான். சரி அந்த சந்தோஷம் சலித்து விட்டது. அடுத்து என்ன என்ற கேள்விக்குப் போய்விட்டார் போல என்றாவது நினைக்கலாம்.
ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மனைவி உண்டு. விவேகானந்தர் போன்றவர்களெல்லாம் எப்படி? குறைந்த பட்சம் சுயஇன்பமாவது அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது மடை மாற்றம் என்று சொல்வார்கள் அதுவாவது நடந்திருக்க வேண்டும். ராமலிங்க அடிகளார் விஷயத்தில் அதுதான் நடந்தது. அவர் கடவுளை காதலியாகவோ காதலனாகவோ பாவித்து பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். அவருக்குள் இருந்த காம உணர்வை பக்தி உணர்வாக மாற்றும் முயற்சி அது.
ஆதிசங்கர பகவத் பாதர் எழுதிய நூல்களில் சௌந்தர்ய லஹரீயும் ஒன்று. இதன் தமிழ் அர்த்தம் “அழகு வெள்ளம்“ என்பதாகும். இந்த ஸ்தோத்திரப் பாடல்களில் பார்வதிதேவியின் அழகு வர்ணிக்கப் படுகிறது. அழகு என்பதை விட பார்வதி தேவியின் அங்கங்களை வர்ணித்துள்ளார் என்று சொல்வதே பொருத்தம்.
அமிர்தரஸம் நிறைந்த இரு மாணிக்கக் கும்பம் போன்ற மார்பகங்களில் அழகான இரத்தினங்கள் மின்னுகின்றது என்றெல்லாம் சங்கரரின் வர்ணனை போகிறது.
இன்னொரு பாடலில் தேவியின் தொப்புளை (உந்தி) ஸ்திரோ கங்காவர்த்த என்கிறார். அதாவது தேவியின் தொப்புள் கங்கையின் நீர்ச்சுழி போன்று உள்ளது என்கிறார்.
அபிராமிபட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் உள்ள பாடல் வரிகளில் பலவற்றை நாம் விளக்கி எழுத முடியாத நிலை. இடங்கொண்ட கொங்கை இணை கொண்டு விம்மி இளகி இறுகி.... என்று வரும் பாடலில் உள்ள கடைசிவரிகளை எப்படி எழுத முடியும். வாசகர்கள் அந்நூலை வாங்கிப் படித்தால் புரியும்
ஒரு பெண் கடவுளை ஒரு ஆண் பக்தர் (அதிலும் சங்கரர் ஒரு துறவி) இப்படி வர்ணிக்கிறார் என்றால் அதில் பக்தி இருக்கிறதா? காமம் இருக்கிறதா-?
.உன்னைத்தான் பாட வந்தேன்
வண்ணமயில் வேல்முருகா
உன்னைக் கண்டு மயங்கி விட்டேன்
என்ன சொல்லிப் பாடுவதோ
என்று சூலமங்கலம் சகோதரிகள் பாடுவதில் வெறும் பக்திமட்டும்தான் இருக்கிறதா என்பது யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? மீரா கண்ணன் மீது கொண்டது வெறும் பக்திதானா? அந்தப் பெண்ணுக்கு இயல்பாக இருந்த காதல் உணர்வை பக்தியாக வெளிப்படுத்தினாள் என்று சொல்லலாம்தானே? ஆண்டாளும் அப்படித்தான்.
அகம் புறம் என்று இரண்டு இலக்கிய வடிவங்கள் தமிழில் சொல்லப்படுகின்றன. பக்தி இலக்கியத்தில் புறம் போல பேசப்பட்ட அகம் உண்டு. அது அறம் போலப் பேசப்பட்ட அகம். கடவுள் மீது கொண்ட பக்தி எனும் அறம் என்று அதை நாம் சொல்லிக்கொண்டாலும், அதில் இருந்த உணர்வுகள் அக உணர்வுகளே.
ஆக காம உணர்வுகளையோ காதல் உணர்வுகளையோ முற்றிலும் ஒழித்துக்கட்டுவது என்பது முடியாத காரியம். உயிரினங்களின் தோற்றமே அதனால் வந்தது எனும் போது அதை ஒழித்துக்கட்டுவது என்பது இயற்கைக்கு மாறான விஷயமல்லவா? காம உணர்வை அடக்குபவர்களுக்கு மனநலச் சிக்கல்கள் நிறைய வரும். குடும்பங்களில் பல பெண்கள் சிடுமூஞ்சகளாக இருப்பதற்கு அவர்களது செக்ஸ் வாழ்வில் திருப்தி இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
காசிப் பக்கம் அகோரிகள் என்ற சாமியார்கள் 24 மணிநேரமும் கஞ்சா போதையில் இருப்பார்களாம். அவர்களுக்கு செக்ஸ் உணர்வு வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களது உடல் ஆரோக்கியமானது அல்ல. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் துறவிகளுக்கு எப்படி காம உணர்வு இல்லாமல் இருக்கும். அதை அடக்குவதற்கு அல்லது வெளியேற்றுவதற்கு பல்வேறு விதமான தியானம், யோகம் போன்ற தொழில் நுட்பங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். அவர்களுக்கு ஒரு துளி விந்து கூட கனவில் கூட வெளிப்படாதாம். அவர்கள் அந்த சக்தியை சேமிக்கிறார்கள். அதை சிற்றின்ப நிலையில் இருந்து பேரின்ப நிலைக்கான சக்தியாக உருமாற்றுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
எதற்கு இவ்வளவு பிரயத்தனம்?
துறவிகளுக்கு அதிகாரம் கிடைக்கிறது. மனித சமூகம் தன்னை கடவுளாகப் பார்க்கிறது என்கிற எண்ணம் அவர்களது ஈகோவிற்கு தீனி போடுகிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மனித குலத்திற்கு நல்ல விஷயங்களை சொன்ன துறவிகளும் உண்டு. புத்தன் தனக்கு கிடைத்த அதிகாரத்தை அன்பைப் போதிக்க பயன்படுத்தினான். வாழ்க்கை அநித்தியத்தை எடுத்துச் சொல்ல பயன்படுத்தினான். விவேகானந்தர், தன்னம்பிக்கையை வளர்க்க பயன்படுத்தினார். இயேசு கிறிஸ்து அன்பை எளிமையை தன்னடக்கத்தை போதிக்க பயன்படுத்தினார். அவர்களை தேடிச் சென்றவர்களும் சுயநலமில்லாதவர்களாக இருந்தனர். இப்போது அப்படி அல்ல. லௌகீக வாழ்க்கையில் உள்ள நெருக்கடி உலகமயம் காரணமாக மனிதனுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம், போட்டி மிகுந்த உலகம் தொடர்ச்சியாக தொடுக்கும் தாக்குதலில் முதல் இடத்திற்கு வரவேண்டுமே என்ற தீராத பயம், பதற்றம் போன்றவை மனிதனுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. இந்த மன அழுத்தக்காரர்கள் ரிலாக்சேஷனுக்காக சாமியார்களை தேடிச் செல்கின்றனர்.
அவர்களிடம் ஏராளமான பணம் உண்டு. நிம்மதி இல்லை. பணத்தை கொடுத்து நிம்மதியை வாங்க தீர்மானிக்கின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியை கொடுப்பதற்கு நவீன சாமியார்கள் தயார். நித்யானந்தர் போன்றவர்களெல்லாம் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆரம்பத்தில் யோகம், தியானம், கடவுள் என்ற மட்டும் சொல்லிக்கொண்டிருந்த சாமியார்கள்தான் இருந்தார்கள். அதன்பிறகு சாமியார்களில் பெரும் படிப்பாளிகள் தோன்றி விட்டனர். எனக்குத் தெரிந்து ஓஷோதான் அதை ஆரம்பித்து வைத்தார். (ஆனால் ஓஷோ நேர்மையானவர். அவர் நான் செக்சுக்கு எதிரி என்றெல்லாம் சொல்லி ஊரை ஏமாற்றவில்லை. அது இயல்பு. அதன் உள்ளே சென்றுதான் அதைக்கடக்க வேண்டுமே தவிர, அதைத் தொடாமலேயே நான் அதைக் கடந்து விட்டேன் என்று சொல்லக் கூடாது என்றுதான் அவர் சொன்னார்) உளவியல், அரசியல், விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம் என்று சகல துறைகளையும் படிக்க ஆரம்பித்து விட்ட இந்த சாமியார்கள் அற்புதமான பேச்சாற்றலை உடையவர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்கள் கற்று வைத்திருக்கும் அத்தனை வித்தைகளும் கடவுள் எனும் கருத்தாக்கத்திற்கு சம்பந்தமில்லாதது. மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான வித்தைகள் அவை. இந்த வித்தைகள்தான் அவர்களை கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக்குகின்றன.
சர்க்கஸ் கலைஞர்கள் பல்வேறு வித்தைகள் கற்று வைத்துள்ளனர். அதுபோன்ற ஒரு வித்தையாகத்தான் நாம் பிரம்மச்சாரியத்தையும் பார்க்க வேண்டும். நம்மால் முடியாததை சில பயிற்சிகள் எடுத்து அவர்கள் செய்கின்றனர்.
இல்லறத்தை துறந்து 24 மணிநேரமும் வருடம் 365 நாட்களும் ஒரு நொடிப்பொழுது கூட காம எண்ணமே இல்லாமல் ஒருவரால் இருக்க முடிகிறது என்று சொன்னால் இருந்து விட்டுப்போகட்டுமே அதனால் என்ன என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும்.
ஆகா! அற்புதம்! எங்களால் கல்யாணம் இல்லாமல் இருக்க முடியவில்லை. ஆனால் இந்தத் துறவிகள் அத்தனை ஆசைகளையும் அடக்கிக் கொண்டு இருக்கிறார்களே என ஆச்சரியப்படாலாம். கைதட்டிப் பாராட்டலாம். அதற்கு மேல் அவர்களைக் கடவுள்களாக்கி கொண்டாடுவதிலும் அவர்களுக்கு அடிமையாவதிலும்தான் ஆபத்து இருக்கிறது.
அவர்கள் துறவிகளாக (உண்மையாகவோ போலியாகவோ) இருப்பதனால் காமத்தை வென்றவர்கள் நாங்கள் என்று கர்வத்தோடு சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். நம்மைப் போன்ற அப்பாவிகளுக்கு, “சே அந்தப்பாவத்தை தினந்தோறும் நாம் செய்து கொண்டிருக்கிறோமே. அற்புதமான அந்தத் துறவிகள் அந்தப் பாவக்கடலைத் தொடுவதே இல்லையே என்று குற்ற உணர்வு வந்து விடுகிறது. குற்றஉணர்வுக்கு ஆட்பட்ட மனிதர்களை கையாள்வது சுலபம். எப்படி ஒரு அற்புதமான ஏற்பாடு பாருங்கள். இயற்கையான ஒரு உணர்வை பாவம் என்று சொல்லி விடுவது? அதை மீற முடியாமல் தவிக்கும் மனிதர்களை அற்ப ஜீவிகளைப் போலப் பார்ப்பது. அதன் மூலம் அவர்களை அடிமைகளாக்கி வெற்றி கொள்வது. இதுதான் துறவானது காலம் காலமாக செய்து வைத்திருக்கும் ஏற்பாடு.
இந்த ஏற்பாடுதான் போப்பில் இருந்து ஆரம்பித்து நித்யானந்தர் வரையில் அனைத்து சாமியார்களுக்கும் அதிகாரத்தை கொடுக்கிறது. அந்த அதிகாரம் அவர்களுக்கு சகல சவுகரியங்களையும் வழங்குகிறது. எனவே நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment