Search This Blog

Thursday, October 23, 2014

விந்தையான பெண் ‘Phenomenal Woman'


கவிதை: மாயா ஏஞ்சலோ
தமிழ் ஆக்கம்: கால சுப்ரமணியன்
Kaala Subramaniam
எனது ரகசியம் எதிலுள்ளது என்று
அழகிய பெண்கள் வியந்துநிற்பார்கள்
ஒரு ஃபேஷன் மாடலுக்கு ஏற்ற கவர்ச்சியோ
அல்லது கட்டழகோ கொண்டவள் நான் அல்ல
ஆனால் நான் இதைச்
சொல்லத் தொடங்கும்போதே ,
நான் பொய் சொல்கிறேன் என்று
அவர்கள் நினைப்பார்கள்.
அது, என் கைகளின் நீட்சி அசைவில்
என் இடையின் அகற்சியில்,
என் நடையின் துள்ளலில் ,
என் இதழின் சுழிப்பில்
இருப்பதாக நான் சொல்வேன்.
அதிசயிக்கத்தக்க விதத்தில்
நான் ஒரு பெண்,
விந்தையான பெண்
இதுவே நான்.
உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப
சாவதானமான
நான் ஒரு அறைக்குள் நுழைகிறேன்,
ஒரு ஆணிடம் செல்கிறேன்,
அந்த ஆட்கள் எழுந்துநிற்கிறார்கள் அல்லது
மண்டியிட்டுத் தாழ்ந்து பணிகிறார்கள்.
பின்பு அவர்கள் என்னைச் சுற்றிலும்,
தேனீ அடை போல மொய்க்கிறார்கள்.
அது, என் விழிகளின் ஜுவாலையில்,
என் பல்வரிசையின் மின்னலில்,
என் இடையின் நெளிப்பில்,
என் கால்களின் நடனத்தில்
இருப்பதாக நான் சொல்வேன்.
அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.
என்னில் தாம் எதைக் கண்டனர் என்று
தங்களுக்குள் வியந்தனர் ஆண்கள்.
அவர்கள் மிகவும் முயன்றும்
எனது உள்முக ரகசியத்தை
அவர்களால் தொட முடியாமலே போனது.
நான் அதை அவர்களுக்குக்
காண்பிக்க முயன்றபோது
அவர்கள் இன்னும் அதை
காணமுடியவில்லை என்றனர்.
அது, என் பின்அழகின் வளைவில்,
என் புன்னகையின் கதிரொளியில்,
எனது நகில்களின் குதிப்பில்,
என் தனிப்பாங்கின் அருட்சியில்
இருப்பதாக நான் சொல்வேன்.
அதிசயிக்கத்தக்கவிதத்தில்
நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.
இப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
ஏன் என் தலை என்றும் குனிவதில்லை என்று.
நான் கத்துவதில்லை
அல்லது எதற்கும் திடுக்கிடுவதில்லை
அல்லது உண்மையில்
உரத்துப் பேசவும் செய்வதில்லை.
நான் உங்களைக் கடந்து செல்வதைப் பார்க்கையில்
அது உங்களைப் பெருமைப்பட வைக்கும்.
அது, என் குதிகளின் கிளிக்கிடலில்,
எனது துவலும் கூந்தலில்
எனது கரத்தின் அங்கையில் ,
என் அக்கறையான ஒப்பனைகளில்
இருப்பதாக நான் சொல்வேன்.
ஏனெனில், நான் ஒரு பெண்.
விந்தையான பெண்
இதுவே நான்.
(‘Phenomenal Woman’.Cosmopolitan magazine.1978).

No comments:

Post a Comment