Search This Blog

Sunday, October 26, 2014

மூலம்,Hemorrhoids

மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆங்கிலத்தில் Hemorrhoids என்று அழைப்பார்கள். ஆசன வாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மிகவும் முக்கிக் கடினமாக மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலைச் சுற்றி உள்ளது வெளி மூலம்.

இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தக் கசிவைக் காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது.

இதை Prolapsed hemorrhoids என்று சொல்லுவோம். இங்கு வலியும் அரிப்பும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வெளி மூலத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக்கட்டி (Thrombus) உருவாகலாம். இதனால் கடும் வேதனை, வீக்கம், அழற்சி போன்றவை உருவாகலாம். கீழ்ப் பகுதி ஆசன வாயிலில் அழுத்தம் ஏற்படுவதால் இந்நிலை உருவாகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, நீண்ட வயிற்றுப் போக்கு, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்ற வற்றால், இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும். சில நேரம் மூலத்தில் ரத்தம் அதிகமாகப் போய் ரத்தசோகை (Anemia) வருவதற்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் உள் மூலத்தால் வரும் ரத்தம் நின்று போய், திசுக்களே அழியும் நிலை (Stramulation) ஏற்படும்.

நம்முடைய கழிவறையிலேயே மாட்டும்படியான Sitz bathகள் கிடைக்கின்றன. ஆசன வாயைச் சுற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வென்னீரால் நன்றாகக் கழுவ வேண்டும். சோப்பு போட்டால் சில நேரம் எரிச்சல் அதிகரிக்கும். மிகவும் நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளான வெண்டைக்காய், பீன்ஸ், புடலங்காய், கத்திரிக்காய், சேனை, சிறிய வெங்காயம் போன்றவை மிகச் சிறந்த உணவு வகைகள்.

சின்ன வெங்காயமும் மோரும் இதற்கு மிகவும் சிறந்தது என்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மலப் பிரவிருத்தி ஏற்பட்டு அபான வாயு கீழ்முகமாக இயங்கும். முக்குதல் குறையும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். 30 முதல் 40 கிராம் வரை நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மலம் போக வேண்டும் என்று தோன்றினால், உடனே போக வேண்டும்.

மருந்துகள்

# 5 கிராம் ஷட்தர்ண சூர்ணத்தை மோரில் கலந்து இருவேளை சாப்பிடலாம்.

# கடுக்காய் லேகியம் 15 கிராம் இரவு கொடுத்தால் காலையில் மலம் நன்றாகப் போகும்.

# சுகுமார கிருதம் 1 ஸ்பூன் கொடுத்தால் மலம் நன்றாகப் போகும்.

# சிறுவில்வாதி கஷாயத்தில் கைசோர குக்குலு சேர்த்துச் சாப்பிட, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தம் மிகவும் குறையும்.

# ரத்தக்கசிவு இருக்கும்போது முறிவெண்ணெயும், சததௌத கிருதம் என்று சொல்லக்கூடிய ஆல், அரசு, அத்தி, இத்தி போன்றவற்றால் கடைந்து எடுக்கப்பட்ட நெய்யைப் பஞ்சில் முக்கி வைப்பது மிகவும் நல்லது.

# கடுக்காய்ப் பொடி ஒரு சுலபமான மருந்து. அதை மோரில் கலந்து வெல்லமும் சேர்த்துச் சாப்பிட உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் தொட்டால்வாடி இலையை அரைத்து 10 மி.லி. மோரில் கலந்து குடிக்க, உடனே பலன் கிடைக்கும்.

மலச் சிக்கல் செய்ய வேண்டியவை

# முதலில் மலச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும்

# அதிகக் கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.

# ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது.

# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.

# தேங்காய் எண்ணெய் (அ) விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும்.

# Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை வரை செய்யலாம்.

உணவில் கவனம்

# அகத்திக் கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

# மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம்.

# கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது.

# மீன், கருவாடு, கோழி கூடாது.

# மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

பொதுவான தடுப்பு முறைகள்

# அதிகக் காரம் கூடாது. அதிகப்படியாகப் புளிப்பு, இனிப்பு கூடாது.

# இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப் பயணம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

மலச் சிக்கல்: தொடரும் கோளாறுகள்

# மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல்.

# வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும்.

# பசியின்மை ஏற்பட்டு ரத்தக் குறைவு நோய் உண்டாக்கும்.

# நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.

# குடல்வால் நோய் ஏற்படும்.

# மாதவிலக்குக் கோளாறுகள் ஏற்படும்.

No comments:

Post a Comment