Search This Blog

Thursday, October 9, 2014

'மெட்ராஸ்' ஒரு சினிமா அனுபவம்

'மெட்ராஸ்', சினிமா வரலாற்றில் பெரிய, கலை முன்னகர்த்தல். அதுமட்டுமன்று, எப்பொழுதுமே நாம் சினிமாவில் முக்கியம் என்று நம்பும், கதைமூலமும் கதைக்களமும் கதைசெயல்படும் விதமும் தாம் சினிமாவில் நமக்குத் தேவையான இன்றைய மாற்றமும் என்றளவில் இந்தப்படம் முதன்மையானதாகவும் இருக்கிறது.
ஏதேதோ கதைகள் எல்லாம் சொல்லப்பட்டு, அவற்றின் அதிகமான தொழில்நட்ப மேன்மைக்காக மட்டுமே உன்னதப்படங்களாகவும் வெற்றிப்படங்களாகவும் வலிந்து நிறுவப்பட்ட வரலாற்றைக் கொண்ட நமக்கு, 'மெட்ராஸ்' எனும் படம் அச்சவாலை நேரடியாக, எந்தத்தந்திரங்களும் இன்றி வென்றிருப்பதை உணரமுடியும்.
இப்படத்தில், அதிகாரத்தைத் துரோகத்தால் வெல்லும் மனிதர்களும், அன்பினாலும் உண்மையாலும் வெல்லும் மனிதர்களும் வேறுபடுத்திக்காட்டப்பட்டிருக்கிறார்கள். அறம் சார்ந்தும், நெஞ்சில் உரத்துடனும் பெண் கதாபாத்திரங்கள் இதுவரை இது போன்று சினிமாவில் பதிவு செய்யப்பட்டதில்லை. இப்படத்தின் பெண் கதாபாத்திரச்சித்திரங்கள் தாம் உண்மையில் நம் சமூகத்தின் முதுகெலும்பு. இருளுக்குள் சென்று வரும் கணத்திற்குள் கதை மாந்தர்கள், நல்லவர்களாவதும், கெட்டவர்களாவதும் துரோகிகளாவதும் என நிழல் மாந்தர்களும் நிறைந்துள்ளனர். இப்படத்தில், 'சுவர்' என்பது ஒரு படிமம் தான். அந்தச்சுவரை வைத்துக்கொண்டு, அதே வகையான சிறு ஊர் வரலாறுகள் ஒட்டுமொத்தத்தையும் இப்படம் அடுக்கடுக்காக நினைவுக்குக் கொணர்கிறது. சினிமா எனும் கலைவடிவத்தின் அதிகபட்ச சாத்தியங்களை எல்லாம் நமக்கு அனுபவமாக்கியிருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி என் முழு கவனமும் , இது வழங்கிய கொண்டாட்டத்தையும் எழுச்சியையும் இங்கே சுட்டிக்காட்டுவது. சமூக அரசியலுடன் கலையையும், கலையுடன் சமூகத்தையும் இணைத்துப் புரிந்து கொள்பவர்களுக்கு, இருக்கைகளில் அமர்ந்து மனஎழுச்சியுடன் படம்பார்க்ககூடிய உச்சபட்ச கொண்டாட்டத்தை அனுபவமாக, இப்படம் வழங்கியதே. இதுவரை இம்மாதிரியான கொண்டாட்டத்தை வேறு எந்தப் படமும் தந்ததில்லை. எனக்கு மட்டுமன்று, நான் சந்திக்கும் நண்பர்கள் எல்லோரும் கண்ணில் நீர்பொங்க, நெஞ்சம் மகிழ இப்படத்தைத் தன் படமாகக் காண்கின்றனர்.
கலையையும் சமூக எழுச்சியையும் இணைக்கும் முயற்சியில் வெல்லும் சாத்தியங்களை சமூகத்தின் முன் வைக்கும் எந்தச் சிறிய கலைஞனையும் நான் கொண்டாடவிரும்புகிறேன். ஏனெனில், 'கிணற்றுத்தவளை' போல் சினிமாவைத் தாம் அறிந்த உலகம் மட்டுமே என உணர்ந்தவர்களுக்கு இப்படத்தின் வீர்யம் தெரியாது. மாற்று சினிமாவின் இலட்சியங்களும், வணிக சினிமாவின் இலட்சியங்களும் வேறு வேறு. வணிகசினிமாவின் வெற்றிகளை வைத்துக்கொண்டு, மாற்றுசினிமா அரங்கில் அங்கீகாரம் கோருவதான அபத்தம் போலவே, மாற்றுசினிமாவின் இலக்கணங்களை வைத்துக்கொண்டு வணிக சினிமாவின் இலக்கணங்களை விமர்சிப்பது, மிகவும் கற்றுக்குட்டித்தனமானது.
வணிக சினிமாவெளிக்குள் நுழையமுடியாமல் நூற்றுக்கணக்கான அருமையான கதைகளுடன் திரியும் உதவி இயக்குநர்களை நான் அறிவேன். கடுமையான சாதி, பணபலம், புகழ், அங்கீகார அதிகாரத்தின் இரும்புக் கதவுகளுடன், சினிமாவெளி மூஞ்சில் அறையும்.
இந்நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளில் சொல்லற்கரிய விடயங்களை மானுட நுட்பத்துடன் திரைக்கதையை வீர்யத்துடன் வழங்குவது அவசியம், மிக அவசியம். இதை 'மெட்ராஸ்' செய்திருக்கிறது. இந்தப்படத்தைப் போல் ஒரு படம், வேறு மாநிலங்களில் வேறு மொழியில் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. "ஃபன்றி", ஒரு வணிகசினிமா இல்லை. 'மெட்ராஸ்' படத்தின் இதே கதைக்கருவை வைத்துக் கொண்டு, கலைப்படங்கள் எடுக்கலாம், மாற்றுப்படங்கள் எடுக்கலாம், குறுகிய வெளியில் படங்கள் எடுக்கலாம். ஆனால், அதிகாரங்களும் அழுத்தங்களும் நிறைந்த, வணிக சினிமாவின் வழியே, இது வரை நாம் நம்பியிருக்கும் சமூக மதிப்பீடுகளை, தன் சுய வாழ்வும் சுயலாபங்களும் சாராது கொண்டு சேர்ப்பதற்கு மிகப்பெரிய வலிமை வேண்டும்.
ஒரே சமயத்தில், இறந்து போன வணிக இயக்குநர்களைக் கொண்டாடுவதும், மனித அக்கறை கொண்ட வணிக சினிமாவின் சாதனைகள் உணராமல் இருப்பதும் ஃபேஷனாகிவிட்டது.
சினிமா மொழி இன்று எல்லோருக்குமாக ஆகிவிட்டது.
உலகின் உன்னதப்படங்கள் எல்லாவற்றையும் இன்று எவருமே பார்த்துவிடமுடியும். தனிமனித முயற்சியின் வழியாக, சினிமாவின் எல்லைகளை விரிக்கமுடியும். ஆனால், இன்றைய தமிழ் வணிக சினிமாவில், இது தனிமனிதன் யானையை வளர்ப்பது போல. 'மெட்ராஸ்' இதைச் சாதித்திருக்கிறது. இந்தப்படத்தைத் தம் கொண்டாட்டமாகவும் எழுச்சியாகவும் உணர்ந்த ஒவ்வொரு இதயத்துடனும், நான் பார்க்கும்பொழுது நான் உணர்ந்த கொண்டாட்டத்தை இணைத்துக்கொள்கிறேன்.
இத்தகைய சினிமாவின் அருமை என்னவென்று எல்லோரையும் உணரவைப்பதில், இன்னும் நாம் நெடுவழி போகவேண்டியிருக்கிறது. ஏனெனில், சமூகம் அந்த அளவிற்கு முன்அபிப்ராயங்களுடன் இயங்குகிறது.
மெட்றாஸ் படத்தை பாராட்டுவது அவசியம்தான். பல விதங்களில் முக்கியமான படம். ஆனால் அது ஒரு முற்றிலும் புதிய துவக்கம் என்று சொல்வதில் சிக்கல் இருக்கிறது. காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேல், வெயில், அங்காடித்தெரு வசந்தபாலன், பருத்தி வீரன் அமீர், சுபரமண்யபுரம் சசிகுமார், நாடோடிகள் சமுத்ரகனி, எம்டன் மகன் திருமுருகன், பூ சசி,வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலினால் காதல் செய்வீர் சுசீந்திரன், உள்ளிட்ட பலருடைய பங்களிப்புகள் உருவாக்கிய மாற்றுப்பாதைகளின் தடத்தில் வந்துள்ள படம் மெட்றாஸ் என்பதை ஒரு விமர்சகனாக பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த பட்டியல் மெட்றாஸ் படத்தின் உடனடியான சமகால திரைநிகழ்வுகள். வரலாறு என்று எடுத்துக்கொண்டால் சேரனின் பாரதி கண்ணம்மா என்று தொடங்கி இன்னும் பல திரைப்படங்களை யோசிக்கத்தான் வேண்டும். வட சென்னை என்று எடுத்துக்கொண்டால் செல்வராகவனின் புதுப்பேட்டை, பத்ரி வெங்கடேஷின் பாணா காத்தாடி போன்ற படங்களையும் புறக்கணிக்க முடியாது. திருமலை, கில்லி போன்ற படங்களில் விஜய் வடசென்னைவாசியாக இருந்தது வெறும் சாகச கதாநாயகத்தன்மைக்குள் முற்றிலும் அடங்கிவிடுமா என்பதும் புறக்கணிக்கத்தக்க கேள்வியல்ல. இதையெல்லாம் சொல்வது ரஞ்சித்தின் சாதனையை குறைத்து மதிப்பிடுவது ஆகாது என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ் சினிமா மதிப்பீடுகளில் மீண்டும், மீண்டும் என்னை மிகவும் உறுத்துவது வரலாற்றுப்பார்வை என்பது தவறிவிடுவதுதான். ஏற்கனவே வந்த படங்களுடன் இணைத்து ஒரு படத்தை பேசுவதும், அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதும் அவ்வளவு பெரிய குற்றமா என்ன? எந்த காரணத்தால் இங்கே ஒரு கலாசார அம்னீஷியா மரபாக மாற்றப்படுகிறது என்பது புரிவதேயில்லை.

No comments:

Post a Comment