Search This Blog

Saturday, October 25, 2014

மூன்று நகரங்களின் கதை - க. கலாமோகன்

அப்பா இறந்துவிட்டார் யாழ்ப்பாணத்தில். காலையில்தான் தந்தி வந்தது. பாஸ் எடுத்து கொழும்பில் வந்து நிற்கும் உறவினர்களுடன் நான் உடனடியாகப் பேச வேண்டும் என்பதை தெரிவிக்கும் சிறு குறிப்பு: Contact Immediately. தந்தி கிடைக்குமுன் எழுதத் தொடங்கிய சிறுகதையின் பக்கங்கள் சில மேசையின் மீது அலங்கோலமாகக் கிடக்கின்றன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு கீழேயிறங்கி சிகரெட்Kalamohanவிற்பனை நிலையமொன்றில் நுழைந்து சில ரெலிகாட்களை (பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து பேசுவதற்காக உபயோகிக்கப்படும் கார்ட்கள்) வாங்கிய பின், தொலைபேசிக் கூடமொன்றிற்குள் போய் கொழும்பிற்கு அடிக்கின்றேன். 
“சாப்பிடப் போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து எடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள்.” என்று சொல்லப்பட்டது.
கூடத்தை விட்டு வெளியே வந்தபோது அப்பாவின் மரணம் ஏன் எனது விழிகளிலிருந்து கண்ணீரைக் கொட்ட வைக்கவில்லை என ஒரு தடவை கேட்டுக் கொண்டேன். எனது கண்ணீர்க் கடல் வற்றிவிட்டதோ? ஒருவேள அப்படியுமிருக்கலாம். பல இரவுகள் என்முன் படமாய் வந்து போயின. இந்த இரவுகளில் முகம் தெரியாத பலரிற்காக அழுதேன். இது அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்காக அல்ல. அவர்களது வாழ்வுகள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுவிட்டன என்பதற்காகவே. எனது கடல் இவர்களுக்காக அழுததில் வற்றிப்போய்விட்டது. அப்பா இயேசுநாதர் போல் புத்துயிர் பெற்று வந்தால் என்னிடம் ஏன் அழவில்லை என்று கேட்டுச் சுயவிமர்சனம் செய் என என்னை நிந்திப்பாரா? அவர் அப்படிப்பட்டவரல்ல என எனக்குள் ஒரு தடவை சொல்லிக் கொள்கிறேன்.
நான் இப்போது பாரீஸில் அகதியாக, பாதி உறவினர் கொழும்பிலும், மீதி யாழ்ப்பாணத்திலும். அருகே இருந்த bar ஒன்றிற்குள் புகுந்து ஒரு டெமி (பியர்) அடித்துவிட்டு மீண்டும் தொலைபேசிக் கூடத்திற்குள் புகுந்து கொழும்புக்கு அடிக்கின்றேன்.
”ராமசுந்தரம் வந்துவிட்டாரே?” இது நான்
“ஓம். ஓம் லைனிலை நில்லுங்கோ, நான் அவரை கூப்பிட்டு விடுகிறேன்”
சில கணங்கள் காத்திருப்பை வெட்டும் வகையில், மறு முனையில் பெரியமாமாவின் குரல்.
“நீ ஏன் உடனை ரெலிபோன் எடுக்கேல்லை. நான் இங்கை வந்து ஒரு கிழமையாகுது”
“மாமா, உங்கடை தந்தி பிந்திதான் கிடைச்சுது. விஷயத்தை சொல்லுங்கோ, அப்பா என்னெண்டு செத்தவர்”
“அவருக்கு வருத்தமொண்டுமில்லை, சாப்பிட்டிட்டு விறாந்தைக்கு வந்தவர் திடீரெண்டு விழுந்தார். அப்படியே செத்துப்போட்டார். செத்த வீட்டாலை எங்களுக்கு கனக்கச் செலவு உடனை கொழும்புக்கு காசை அனுப்பிவை. நான் அதை அங்கை கொண்டு போய்க் கொடுக்கிறன். மாமி உன்னோடை கதைக்கப் போறாவாம். அவவிட்டைக் குடுக்கிறன் கதை” ரெலிகாட் யூனிட்டுகள் முடிவுக்கு வந்தததால், அதனை இழுத்துவிட்டு இன்னொரு காட்டை நுழைக்கின்றேன். ஏற்கனவே நான்கு காட்டுகள் தின்னப்பட்டு விட்டன.
“மாமி”
“தங்கச்சியை எப்ப உங்கை எடுக்கப் போறீர்?”
“எடுக்கத்தான் வேணும் ஆனா...”
”ஆனா வெண்டா....”
“என்னிட்டை இப்ப காசில்லை. வேலையிலையிருந்தும் நிப்பாட்டிப் போட்டாங்கள்...”
“நீர் இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர் எப்பிடியும் அவவை உங்கை எடும். தம்பியும் (அவவின் மகன்) உங்கைதான் இருக்கிறான். அவன் உங்கை வந்து ஒரு வருஷம்தான். நாங்கள் எங்கடை கடன் எல்லாத்தையும் தீர்த்திட்டம். நாளைக்கு அவன் இங்கை 30 (முப்பது ஆயிரம் பிராங்) அனுப்பிறான். நீர் அவனிட்டைக் குடுத்தீரெண்டா அவன் தான் குடுத்தனுப்பிற கடையிலை குடுத்து அனுப்பி வைப்பான். உம்மடை தங்கச்சியின்ரை ஆளும் அங்கைதான் இருக்கு. அவரோட கதைச்சு எப்படியும் அவவை அங்கை எடுக்கிற வழியைக் கெதியாப்பாரும். மாமா உம்மோடை கதைக்கப் போறாராம். கதையும்” றிஸீவர் மாமாவின் கரங்களுக்குச் செல்லும் சத்தம், தொலைவாகயிருந்த போதும் தெளிவாகவே எனது காதில் விழுகிறது.
“காசை உடனை அனுப்பிவை”
“ஓம்”
“அவவை உடனை அங்கை எடு”
“ஓம்”
“நாளைக்கு எனக்கு ரெலிபோன் எடு!”
“ஓம்”
தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஏதோ பிராங் மெத்தையில் சயனம் செய்பவனைப்போல அனைத்துக்கும் “ஓம்” போட்டு விட்டேன். இந்த “ஓம்”கள் எல்லாம் உண்மையா எனக் கேட்டபடி றூம் கதவினை அண்மித்தபோது எனக்கு முன்னே மரணம் வந்தது.
மரணம், முன்பெல்லாம் மரணங்கள் என வரும்போது சோகம் வாழப்படும். பேசிய சமாதானமும், சமாதானம் பேசிய போரும் எனது உணர்வுகளுக்கு இருந்த உரிமைகளைக்கூட பறித்து எங்களையும் வேறு வாழும் பிணங்களாக்கிவிட்டதே. வாழ்விற்காக, மரணிக்காதவர்களையும் கொல்லும் வித்தையைக் கற்றுக்கொண்டிருக்கும் இன்னொரு உலகில் நாம். காசு, காசு, காசு, என்ற ஓலம் தான் மரண ஓலங்களையும் முந்தித் தலையை நீட்டுகிறது.
“ஓம்” போட்டவன் நான் தலைக்குமேலே வெள்ளம் போய்விட்டது. இனிச் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற திடகாத்திரத்தோடு கதவைத் திறந்தால் காலை வங்கியிலிருந்து வந்து என்னால் உடைக்கப்படாதிருந்த கடிதம் தனது அச்சுறுத்தும் விழிகளைக் காட்டுகிறது. எனது கணக்கிலிருந்த 300 பிராங்குகளையும் தின்று அதற்கு மேலும் தின்று விட்டேனாம். வேலையில்லாது இருக்கும் ஒருவர் இப்படி நடந்து கொள்வது வங்கிச் சட்டத்திற்கு முரணானதாம். எவ்வளவு விரைவில் நான் வங்கியின் பணிப்பாளரைச் சந்திக்க முடியுமோ அது நல்லதாம். இல்லையேல் “நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மிகவும் நாகரீகமான குறிப்பு. முழமும் போனால் என்ன என்ற திடகாத்திரம் இருந்ததால் கடிதத்தைக் கிழித்து ஜன்னல் வழியாக எறிகின்றேன்.
இன்றிரவு நான் தூங்க வேண்டும். ஆனால் எப்படி? அதுவும் இவ்வளவு சுமைகளையும் தாங்கியபடி. எனது றூமிற்கு அருகிலுள்ள றூமில் இருப்பவன் ஒரு போர்த்துக்கல் தொழிலாளி. அவனிற்கு பிரெஞ்சு துண்டாகவே தெரியாது. ஆனால் ஒரு பிரெஞ்சுகாரிக்கு மூன்று பிள்ளைகளைக் கொடுத்துவிட்டான். இதற்கெல்லாம் பாஷை இடையூறாக இருக்கவில்லை. முடிவில் பிரெஞ்சுக்காரி அவனைத் துரத்திவிட்டாள். அவன் தனிக்கட்டை. தனக்குப் பிறகு மூன்று பிள்ளைகளையும் பார்த்து நான்கு வருடங்கள், என்னைக் கொண்டுதான் பிள்ளைகளுக்குக் கடிதம் எழுதுவான். பதில்கள் வரா. அவனோ, எனக்கூடாக சளைக்காமல் அவளுக்கும், பிள்ளைகளிற்கும் எழுதிக் கொண்டிருப்பான்.
காலை 4 மணிக்கு வேலைக்குப் போகுமுன் ஒரு பியர். மாலை 5 மணிக்குத் திரும்பி வந்தவுடன் வைனில் தொடங்கி விடுவான். எனது சுமையைக் குறைக்க ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்தது. அவனிடம் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையுடன் போய்க் கதவைத் தட்டுகின்றேன். திறந்தவனின் கையில் போத்தல். அதனைக் கண்டவுடன் எனது சுமையில் அரைவாசி உடனடியாகவே இறங்கியது.
“உது புதுசா வந்த வைன். திறம், குடி” கேட்காமலேயே, குறிப்புணர்ந்து உபசரித்தான். நான் மறுக்கவில்லை உபசரிப்பைத் தேடித்தானே நான் அங்கு போயிருந்தேன்.
“வடிவாக்குடி. இன்னும் மூன்று போத்தல் இருக்கு”
இருவரும் எமது சுமைகளை இறக்கி இன்னோர் உலகை வாழ வெளிக்கிட்டோம். ஏற்கனவே பொரித்து ஆறிப்போன சார்டின் மீன்களைச் சூடாக்கி என் முன் டேஸ்ட்டுக்காக வைத்தான்.
அப்பா மீண்டும் என் நினைவில் முன் வந்தார். தந்தியோடு வந்த கடிதங்கள் பொக்கற்றுக்குள் இருந்ததால் தைரியமாக அவைகளை எடுத்து உடைத்தேன். “நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. நாங்கள் இப்படியொண்டு நடக்குமெண்டு கனவிலை கூட நினைக்கேல்லை மனதை திடமாக வைத்திரு” இந்தச் செய்திகள் எனக்கு ஒத்தடத்தைத் தந்த வேளையில் கடிதங்களில் வாழும் யதார்த்தமும், தொலைபேசிக்கூடாக வாழப்படும் யதார்த்தங்களும் ஒன்றா என ஒரு தடவை கேட்டுக்கொள்கின்றேன்.
இரண்டு பக்கங்களிலும் போலித்தனம் இல்லை. ஒரு வேளை அது என்னிடம்தான் உள்ளதோ? எது போலி? எது யதார்த்தம்? நான் வாழும் விதம் கூட யதார்த்தம்தான். என்னிடம் காசு இல்லை. காசு இருப்பது சிலரின் யதார்த்தமாக இருக்கும் போது என்னுடையதோ அதற்காகத் தவிண்டையடிப்பது. இன்று ஒருமையில் பேசும் பலர் நாளை என் நிலைக்குத் தள்ளப்படும்போது “பாரும், எம்மடை பாடு இப்படியிருக்கு” என்று பன்மையில் பேசுவார்கள். எது ஒருமை எது பன்மை என்பதை விளக்கிக் கொண்டதுதான் எனது இருதலைக்கொள்ளி எறும்பு நிலைக்குக் காரணம் என நான் ஒரு போதுமே சொல்லமாட்டேன். எனது ஒருமை பன்மைகளிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒன்று. ஒருமைகள் பன்மைகளாகி, பன்மைகள் பன்மைகளாகாமல், இன்னொரு ஒருமையை வாழும் உலகில் நான்.
நான் மூன்று நகரங்களின் புத்திரன். எனது முதலாவது நகரம் யாழ்ப்பாணம். போர்த்துக்கல் நண்பனின் றூமைவிட்டு எனது றூமிற்கு வந்து கட்டிலில் களைப்புடன் விழும்போது இந்த முதலாவது நகரை நோக்கி எனது கால்கள் ஒரு தடவை ஓடுகின்றன.
தாழங்காய் பொறுக்கிய நாள்கள். ஊமைக்கடல் அடிக்கடி வற்றும். அதன் மீது கால் விரல்களால் கீறப்படும் ஓவியங்களைச் சூரியன் வந்து முத்தமிட்டுச் செல்வான். வளர்ந்தேன். வேலை கிடைத்தது கொழும்பிற்கு. பாஸ் எடுக்காமல் போனேன். கொழும்பு. இது எனது இரண்டாவது நகரம். மூன்று வருடங்களின் பின் அகதியாகி, முதலாவது நகரிற்கு, இரண்டு சூட்கேஸ் நிறையப் புத்தகங்களைச் சுமந்தபடி வந்தேன். வழியிலே என்னை மறித்த இளம் சிங்களச் சிப்பாய்கள் சூட்கேஸிற்குள் கிடந்த தமிழ்ப் புத்தகங்களைக் கண்டு “ஏன் நீ மஹாவம்சத்தை அவமதித்தாய்?” என விசாரணை ஏதும் செய்யவில்லை. முதலாவது நகரிற்கு வந்தபோது அங்கே நான் அகதி முகாமிலிருந்த விஷயம் தெரியாமல் செத்தவீடு வேறு கொண்டாடப்பட்டிருந்தது. நான் இறந்து உயிர்த்தேன். ஒரு வேளை, யேசுவைப் போல் நானும் மீள உயிர்த்தவனோ? “பரமண்டலத்திலிருக்கும் பிதாவே எனது பாவங்களை அர்ச்சி” ஊரிலுள்ள அனைத்துக் கோவில்களிலும் என் பேரால் அர்ச்சனைகள், பூஜைகள் என்பன செய்யப்பட்டன. நான் மறுஜென்மம் பெற்றுவிட்டேன் என்பதற்காகத்தான்.
“நீ எங்களுக்கு உழைச்சுத்தர வேணாம். ஆனா கொழும்புக்கு மட்டும் திரும்பிப் போகாதை”
வீடு, இப்படி என்னிடம் கெஞ்சிக் கூத்தாடியபோது கொழும்பு வீதிகளில் வாள்களோடு நின்று குங்குமப் பொட்டிட்டவர்களையும் காதில துவாரங்களைக் கொண்டிருந்தவர்களையும் தேடிய அப்பாவிச் சிங்களக் காடையர்கள் மத்தியிலிருந்து எனது உடலைப் பௌவுத்திரமாகக் காத்த குணசேனாவின் நினைவு வந்தது. அவனும் ஒரு அப்பாவிதான். அப்பாவிகள் வாள்களை தூக்க தூண்டுதலாக இருந்தது எது என்பதை என்னைப் போலவே புரிந்து கொண்டவன். யாழ்ப்பாணம் இங்கு எவ்வளவு நாள்கள் தான் வாழ்வது! இது மட்டுமென்ன நகரங்களே இல்லாத நகரா?
வீட்டின் மன்றாட்டம், முடிவில் “வெளிநாடு போ!” என்று என்னைத் துரத்துவதில் வந்து நின்றபோது வியப்படைந்தேன். வெளிநாடு போவதா? எப்படி? நிறையக் காசு வேண்டுமே!
“போறதெண்டது சின்ன விஷயமே காசுக்கு எங்கை போறது?” இது நான்.
பதில் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆனால் என்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். நான் தப்பிவிட்டேன்.
உடல். எனது உடல். காசினால் காக்கப்பட்ட உடல். எனது உடல். கடல் கடந்து அகதியாகிவிட்ட உடல். மூன்றாவது நகரில் நான் இப்போது அகதி. முதலாவது நகரிலோ அகதிப் பெருமை கிட்டாமல் எத்தனையோ உடல்கள் மண்ணிடை மண்ணாய்ப் புதைந்த வண்ணம். தப்புதல், கருத்துடனோ கட்சியுடனோ கடவுளுடனோ சம்பந்தப்பட்ட விஷயமில்ல. காசுடன் சம்பந்தப்பட்டது என்பதை மூன்றாவது நகரில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். எனது மூன்றாவது நகரம் பாரீஸ்.
நான் மூன்று நகரங்களிற்கிடையே சிக்கிக் கிடக்கும் ஒரு புத்திரன். யாழ்ப்பாண போஸ் ஓபிஸ் முத்திரை குத்தப் பெற்று கடிதங்கள் வருவது நின்றுவிட்டது. கடிதங்கள் சுற்றி வளைந்து வரும். அதுவும் கொழும்பு முத்திரை குத்தப்பட்டு வரும் கடிதங்களில் இப்படியொரு குறிப்பு இருக்கும். “உடனடியாக இந்த நம்பருக்கு எடு” என்னிடமோ ரெலிகாட் வாங்கக்கூட காசில்லை. இப்படியெனில் எப்படித் தொலைபேசியிலாவது வாழ முடியும்?
போனவாரம் எனது பிரெஞ்சுச் சிநேகிதியைச் சந்தித்தபோது, தனது பிறந்த தினத்திற்கு ஒரு புத்தகத்தில் சில கவிதை வரிகளையாவது அன்பளிப்புச் செய்திருக்கலாமே என முகத்தைச் சுழித்தாள். நான் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மனிதர்கட்கும் அந்நியமான, என்னைத் தமது வீடுகளிற்கு வாவென நண்பர்கள் எனப்படுவோர் அழைக்கும்போது “ஓம் வருகின்றேன்.” என வாக்குறுதி கொடுத்துவிட்டுப் போகாது விடுக்கின்றேன். போனால்கூட எனது பொருளாதார நிலையை விளங்கிக்கொள்ளாமல் “அப்ப, உம்முடைய றூமுக்கு எப்ப வாறது...” எனக் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தினால்தான். எனக்கு வீடு இல்லை. நான் தூங்குமிடங்கள் எனது வீடுகளுமில்லை. வீடு என்பது அவசியமா என்ற விசாரணைக்குள் நான். சில வேளைகளில் இந்த மூன்று நகரங்களையும் தாண்டி வீடுகள் மனிதர்களும் இல்லாத நான்காவது நகரம் ஒன்று இருக்குமாயின் அங்கே போனால் என்ன என்று என்னிடம் கேட்டுக் கொள்வதுண்டு.
பெரியமாமா கேட்டுக்கொண்டபடி மறுநாள், நான் போன் பண்ணவில்லை. தூங்கி விழித்து, மீண்டும் சில தினங்கள் தூங்கி, விழித்து ஒரு காலையில் எழுந்து பாரிஸிலிருக்கும் எனது ஒன்றவிட்ட தம்பிக்கு போன் பண்ணுகின்றேன்.
“உங்கடை மாமா கொழும்பில வந்து நிற்கிறார். உங்களோடை பேச வேணுமாம். உடனடியாக எடுங்கோ!”
“எந்த மாமா?”
“வேலு மாமா”
இவர் பெரிய மாமாவோ, சிறிய மாமாவோ அல்ல, இன்னொரு மாமா. ஒன்றவிட்ட தம்பி தந்த இலக்கணத்தை எழுதிவிட்டு சொற்ப யூனிட்டுகளுடன் எஞ்சிக்கிடந்த ரெலிக்காட்டின் துணையுடன் கொழும்பிற்கு அடிக்கிறேன். வேலு மாமா பேசுகின்றார்.
“மருமோன் உம்மடை பெரிய மாமா கொழும்பிலையிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போயிட்டார். நீர் திரும்பவும் போன் எடுக்கிற தெண்டு சொல்லீட்டு எடுக்காமல் விட்டிட்டீர்” எண்டு குறையாச் சொன்னவர்.
“ஓம் மாமா. நீங்கள் சொல்லிறது சரி. என்னிட்டைக் காசு வசதியில்லை. அதாலைதான் கொழும்புக்குத் திரும்பவும் அடிக்கேல்லை. இங்கையிருந்து கொழும்புக்கு அடிக்கிறதெண்டா சரியான செலவு”
“ஓம் மருமோன். எனக்கு விளங்குது. எங்களுக்கு இங்கை கஷ்டம் இருக்கிறதைப் போல உமக்கும் அங்கை கஷ்டம் இருக்கும் தானே. எதுக்கும் கொஞ்சக் காசெண்டாலும் அனுப்பி வையும். நான் யாழ்ப்பாணத்திற்குப் போய் விஷயத்தை வடிவா விளங்கப்படுத்திறன்”
”நீங்கள் எப்ப அங்கை திரும்புவியள்”
“5000 ரூபா குடுத்துப் பாஸ் எடுத்தனான். அடிக்கடி பாஸ் எடுத்துக்கொண்டு கொழும்புக்கு வர என்னிட்டை வசதியில்லை. இங்கை கொஞ்ச அலுவல்கள் இருக்கு. அதுகளை முடிச்சிட்டுப் போக இன்னும் ஏழெட்டு நாளாகும்.”
மாமாவுடன் தொடர்ந்து பேச வேண்டும் போல எனக்கு ஆசையாக இருக்கின்றது. அதற்குள் ரெலிக்காட்டினுள் இருந்த கடைசி யூனிட் ஒரு கிக்கீ போட்டுவிட்டுத் தனது இறுதி மூச்சை விடுகின்றது. சோகத்துடன் றூம் திரும்புகின்றேன்.
பாரிஸ் முரசு, 29.04.1992
தட்டச்சு : சென்ஷி

No comments:

Post a Comment