Search This Blog

Monday, September 22, 2014

மைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - அச்சுதன் அடுக்கா

தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பர்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்-எர்-ரக்மான் அல்-மஸ்முதி (இப்பெயரை ’கருணை உள்ளவர்களின் வேலைக்காரன்’ என்று வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்) அவனைக் குறுவாளால் அல்லது விஷத்தால் jorge-luis-borgesகொன்றான் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவன் துஷ்டனான போதிலும், அவன் இயற்கையான மரணத்தில் இறந்து போயிருப்பதும் சாத்தியம் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். காப்டன் ரிச்சர்ட் எப்.பர்டன் அம்மாந்திரீகனை 1853ல் சந்தித்துப் பேசினார். நான் கீழே தந்திருப்பது அவன் நினைவு கூர்ந்த அச் சம்பவம்:
எனது சகோதரன் இப்ராஹிமினால் அவனை ஏமாற்றிய குர்டோஃபானின் ஏமாற்றுக்காரத் தலைவர்களின் வஞ்சகம் நிறைந்த உபயோகமற்ற துணையோடு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கையின் விளைவாகத்தான், துஷ்டன் யாகப்பின் கோட்டையில் நான் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்பது உண்மை. ரத்தம் படிந்த நீதியில் என் சகோதரன் வாளுக்கிரையானான். ஆனால் நான், நானொரு மாந்திரீகன் என்றும், எனக்கு வாழ்வு தருவானானால் மந்திர விளக்கைக் காட்டிலும் அற்புதமான வடிவங்களையும் தோற்றங்களையும் அவனுக்குக் காண்பிக்கிறேன் என்றும் சொல்லி அத் துஷ்டனின் வெறுக்கப்பட்ட கால்களில் விழுந்தேன். அந்தக் கொடுங்கோலன் உடனடியாக நிரூபணம் கேட்டான். ஒரு நாணல் பேனா, ஒரு கத்திரி, ஒரு பெரிய வெனிஸ் காகிதம், ஒரு மைச் செப்பு, கனல்கள் கொண்ட தட்டு, கொஞ்சம் தனியா விதைகள், ஒரு அவுன்ஸ் பென்சோயின் இவற்றைக் கேட்டேன். காகிதத்தை ஆறு துண்டாக்கினேன். முதல் ஐந்து துண்டுகளில் மந்திரங்களும், பிரார்த்தனையும் எழுதினேன். எஞ்சிய துண்டில் புனித குரானிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினேன்: ‘உனது முகத்திரையை உன்னிலிருந்து மாற்றி விட்டோம்: இன்று உனது பார்வை துளைத்துக் கொண்டிருக்கிறது.’ பின், யாகப்பின் வலக்கையில் ஓர் மாந்திரீக வட்டம் வரைந்தேன். கையைக் குழிக்கச் சொல்லி, அதன் நடுவில் மை விட்டேன். அவன் பிரதிபலிப்பதைப் பார்க்கும்படியாக இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறதென்றான். தலையைத் தூக்க வேண்டாம் என்று சொன்னேன். கனல் தட்டில் பென்சோயினையும், தனியா விதைகளையும் இட்டேன். கனலில் பிரார்த்தனைகளைச் சொன்னேன். அடுத்ததாக, அவன் பார்க்க விரும்பும் ரூபத்தின் பெயரைச் சொல்லச் சொன்னேன். அவன் ஒரு கணம் யோசித்து சொன்னான். ‘ஓர் காட்டுக்குதிரை, பாலைவன எல்லைகளில் மேய்பவற்றில் மிகச் சிறந்தது.’ முதலில், அவன் ஒரு அமைதியான பசும் மேய்ச்சல் நிலத்தைப் பார்த்தான். ஒரு நிமிடத்திற்குப் பிறகு, சிறுத்தையின் அசைவுகளும், முகத்தில் ஒரு வெண் புள்ளியும் கொண்ட குதிரை நெருங்கி வருவதைப் பார்த்தான். அதைப்போன்ற வலிமையுள்ள குதிரைக் கூட்டம் ஒன்றைப் பார்க்கக் கேட்டான். தொடுவானில் தூசுப்படலத்தைப் பார்த்தான். பின் குதிரைக் கூட்டம். இப்பொழுதுதன் எனது வாழ்வு காப்பாற்றப்பட்டதென்றறிந்தேன்.
அன்றிலிருந்து, கீழ்வானில் முதல் ஒளிகிரகணம் தோன்றும் பொழுதில், இரண்டு படைவீரர்கள் என் சிறைக்கூடத்திற்கு வருவார்கள். சாம்பிராணி, கனல் தட்டு, மை இவைகள் ஏற்கனவே தயாராக இருக்கும். துஷ்டனின் படுக்கையறைக்கு என்னை அழைத்துச் செல்வார்கள். உலகில் புலனாகும் எல்லாப் பொருள்களையும் பார்க்கக்கேட்டான். நானும் காண்பித்தேன். நான் இன்னும் வெறுக்கும் அந்த மனிதன் தன் உள்ளங்கையில் இப்போது இறந்து போயிருக்கும் மனிதர்கள் பார்த்திருப்பவைகளையும், இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பார்த்திருப்பவைகளையும் கொண்டிருந்தான்; நகரங்கள், காலநிலைகள், பூமியைப் பிரித்திருக்கும் ராஜ்ஜியங்கள்; தத்தமது கடல்களில் ஓடும் கப்பல்கள்; போர், இசை மற்றும் அறுவைக் கருவிகள்; அழகான பெண்கள்; ஸ்திரமான நட்சத்திரங்களும் கோள்களும்; கடவுளற்ற மனிதர்கள் அருவருக்கத்தக்க அவர்களின் படங்களைத் தீட்ட உபயோகிக்கும் வண்ணங்கள்; சுரங்கங்கள், எந்திரத் தளவாடங்கள், தங்களுக்குள் பூட்டி வைத்திருக்கும் ரகசியங்கள் சொத்துக்களோடு; தேவனின் புகழையும், தொழுதலையுமே உணவாகக் கொண்ட வெள்ளித் தேவதைகள்; பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் பரிசுகள்; பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருக்கும் பறவைகளினதும், அரசர்களினதுமான விக்ரகங்கள்; உலகைத் தாங்கிப் பிடித்திருக்கும் காளையாலும், அதன் அடியில் கிடக்கும் மீனாலும் ஏற்படுத்தப்பட்ட நிழல்; கருணைமிக்க அல்லாவின் சந்தனக் கழிவுகள், வாயு விளக்குத் தெருக்கள், மனிதன் சப்தம் கேட்ட மாத்திரத்தில் மரணமுறும் சுறா போன்ற சொல்ல இயலாதவற்றைக் கண்டான். ஒருமுறை, ஐரோப்பா என்றழைக்கப்படும் நகரத்தைக் காட்டச் சொன்னான். நான் அதன் முக்கிய ரஸ்தாவை அவன் பார்க்கச் செய்தேன். கறுப்பு மற்றும் பலவகைக் கண்ணாடிகள் அணிந்திருக்கும் மனிதர்களின் பிரம்மாண்டமான ஓட்டத்தில்தான் முகமூடி அணிந்த அந்த மனிதனைப் பார்த்தான் என்று நான் நினைக்கிறேன்.
அதுமுதல், சிலசமயம் சூடானிய அணிகளோடும் சிலசமயம் யூனிபார்மோடும் ஆனால் எப்போதும் முகத்தில் முகமூடியோடும் அந்த உருவம் நாங்கள் பார்த்தவற்றினிடையில் அடிக்கடி வந்தது. அவன் வரத் தவறியதேயில்லை. நாங்கள் அவன் யாரென அறியத் துணியவில்லை. முதலில் சீக்கிரம் மறைந்து விடுவதாகவும் அல்லது ஸ்திரமாகவும் தோன்றிய மைக்கண்ணாடி உருவங்கள் இப்போது மிகுந்த சிக்கலாகி விட்டன. அவைகள் எனது கட்டளைக்குத் தாமதமின்றிப் பணிந்தன. அந்தக் கொடுங்கோலன் மிகத் தெளிவாகப் பார்த்தான். அதிகரித்துக் கொண்டே போகும் காட்சிகளின் கொடூரம் எங்களிருவரையும் அசதி நிலைக்குள்ளாக்கியது. தண்டனைகள், மூச்சுத் திணறடித்துக் கொல்லுதல், முடமாக்குதல் போன்ற சிரச்சேதம் செய்பவனின், கருணையற்றவனின் சந்தோஷங்களைத் தவிர வேறெதற்கும் நாங்கள் சாட்சியாகவில்லை.
இவ்வாறாக 14வது பார்மகாட் சந்திர தினத்தின் இரவும் வந்தது. மைவட்டம் அக்கொடுங்கோலன் கையில் உண்டாக்கப்பட்டது. பென்சோயினும், தனியா விதைகளும் கனல்தட்டில் இடப்பட்டன. பிரார்த்தனைகள் சொல்லப்பட்டன. நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். அன்று, அவன் இதயம் ஓர் மரண தண்டனையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால், அந்த துஷ்டன் சட்டப்படியானது, கருணை நிராகரிக்கப்பட்டதுமான ஒரு தண்டனையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். டிரம்ஸீடன் வீரர்களை, விரிக்கப்பட்டிருந்த பசுந்தோலை, பார்வையாளர்களாக இருக்கக் கொடுத்து வைத்த மனிதர்களை, நீதியின் வாளை ஏந்தியிருந்த சிரச்சேதம் செய்பவனை அவன் பார்க்கச் செய்தேன். அவனைப் பார்த்து அதிசயித்து யாகப் என்னிடம் சொன்னான். ‘அது அபுகிர் உனது சகோதரனுக்கு நீதி வழங்கியவன். உனது உதவியில்லாமல் விஞ்ஞானத்தால் இந்த ரூபங்களை ஏற்படுத்தும் விதம் எனக்குத் தெரியப்படுத்தப்படும்போது உனது மரணத்தையும் நிச்சயிப்பவன்.’
அவன் கொல்லப்படப் போகும் மனிதனை முன்னால் கொண்டுவரச் சொன்னான். அது செய்யப்பட்டபோது, கொல்லப்படப்போகும் மனிதன் அந்த முகத்திரை அணிந்த விசேஷமான மனிதன் என்பதைக் கண்டு அக்கொடுங்கோலன் வெளிறினான். நீதி வழங்கப்படுவதற்குமுன், அத்திரையை அகற்றும்படி நான் பணிக்கப்பட்டேன். இதைக் கேட்டதும், நான் அவன் காலடியில் விழுந்து, ‘ஓ இக்காலத்தின் மன்னனே, இச் சகாப்தத்தின் மொத்தமும், சாரமுமானவனே, அவன் பெயரோ அவன் தந்தையின் பெயரோ, அவன் பிறந்த நகரத்தின் பெயரோ நமக்குத் தெரியாததால் இந்த உருவம் மற்றவற்றைப் போன்றதல்ல. நான் பதில் சொல்லியாக வேண்டிய ஓர் பாவத்திற்குள்ளாகும் பயத்தால், இந்த உருவ விஷயத்தில் நான் தலையிடத் துணியவில்லை’ என்று முறையிட்டேன்.
அந்த துஷ்டன் சிரித்தான். சிரித்து முடித்ததும், அப்படியொரு குற்றம் இருக்குமானால், இதைத் தனதாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சத்யம் செய்தான். தனது வாளைக் கொண்டும், குரானைக் கொண்டும் சத்யம் செய்தான். இதன்பின், நான் அந்தக் கைதியின் அடையாளம் காட்டவும், பசுந்தோலில் சுற்றியிருக்கவும், அவன் முகத்திரையைக் கிழிக்கவும் கட்டளையிட்டேன். அப்படியே நடந்தன. கடைசியில் யாகப்பின் மிரண்ட கண்களால் அம்முகத்தைப் பார்க்க முடிந்தது - அது அவன் முகம். பயமும், பைத்தியமும் அவனைக் கவ்விக்கொண்டன. எனது திடமான கையின் மேல் அவனது நடுங்கும் கையை வைத்தேன். அவனது மரணச்சடங்கிற்குச் சாட்சியாகும்படி கட்டளையிட்டேன். அவன் தன் கண்களை அகற்றவோ, மையைக் கவிழ்த்தவோ முடியாத அளவுக்கு, அந்தக் கண்ணாடியோடு ஒன்றிப் போனான். குற்றவாளியின் கழுத்தில் வாள் விழும் காட்சியில் யாகப் எனது இரக்கத்தைத் தொடாத ஓர் சப்தத்தை முனங்கினான். தரையில் தடுமாறி விழுந்து இறந்தான்.
எல்லாம் அவன் மகிமை. அவன் எப்போதும் மன்னிப்பவன். அவன் கைகளில் இருக்கின்றன வரம்பற்ற குற்றங்களின், தீராத தண்டனைகளின் சாவிகள்.
நன்றி: கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு

No comments:

Post a Comment