Search This Blog

Wednesday, September 24, 2014

பரப்ரம்மம் ஸ்தூலப் பொருள்கள் சூக்கும்ப் பொருள்கள்

கண்ணுக்குத் தெரிகின்ற ஸ்தூலப் பொருள்களெல்லாம் பஞ்ச பூதங்களாலானவை. சூக்கும்ப் பொருள்கள் அனைத்தும் அவற்றின் தன்மாத்திரைகளால் ஆனவை. அண்டத்திலும், பிண்டத்திலும் யாவும் இவ்வாறே அமைந்துள்ளன. எனவே பிண்டமாகிய நம் உடலில் நடைபெறும் இயக்கங்களுக்கும், உணர்வகளுக்கும் அண்டத்தோடு நாம் கொள்ளும் தொடர்பு நிலைகளுக்கும் சூக்குமமான தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில் இப்போது நாம் ஜாக்ரதா, சொப்னம், சுஷுப்தி என்ற மூன்று நிலைகளுக்கும் மற்றவைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறித்து இப்போது பார்க்கப் போகிறோம். அதாவது விழித்திருக்கும் இயல்பான நிலை, கனவு, கனவற்ற உறக்கம் என்ற மூன்று நிலைகள். இவற்றை அவஸ்தைகள் என்றும் சொல்வார்கள். உணர்வுகள் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இந்த அவஸ்தைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை போலத் தோன்றினாலும், உண்மையில் இந்த மூன்று அவஸ்தைகளும் துரியத்தில் அடங்கியுள்ளன. எனினும் துரியம் இந்த மூன்று நிலைகளையும் கடந்த பேருணர்வாக, தூய அறிவு ஒளி உணர்வாக உள்ளது. துரியத்தை ஈஸ்வரன் என்றும், ப்ரம்மம் என்றும், ப்ரணவம் என்றும் கூறுவார்கள். துரியத்தின் மேலான நிலையே துரிய அதீதம். இதுவே பரப்ரம்மம். இந்த மூன்று அவஸ்தைகளுக்கும் போக்குவரவு உண்டு. எனவே இவற்றை மாயா காரியங்கள் என்றழைப்பார்கள். ஆனால், துரியத்திற்கு போக்கு வரவு இல்லை. அது சுத்தமனதோடு தரிசிக்கும் போது துரியம் என்றும், மனதற்ற பரிசுத்தமான நிலையில் தரிசிக்கும் போது துரியாதீதமென்றும் பாகுபடுத்திச் சொல்கிறார்கள். உண்மையில் அது ஏக வஸ்துவாக இருந்தாலும் மனதின் நிலையினால் இரண்டு நிலையாக தோன்றுகிறது.
பிரணவத்தைப் பொறுத்த வரை அ காரம், ஜாக்ரதையாகும், உ காரம் சொப்னமாகும், ம காரம் சுஷுப்தியாகும். இந்த மூன்றும் சேர்ந்த ஓம் இந்த மூன்று நிலைகளையும் கடந்த துரியமாகும். இதிலே மகாரத்தில் உள்ள புள்ளியே துரிய அதீதமாகிய பரப்ரம்மமாகவும், லிங்கமாகவும், சதாசிவமாகவும் சூக்குமமாக நின்று இயக்குகிறது, அந்த புள்ளி இல்லை என்றால் ஒம் இல்லை. இதையே அ காரமாகிய ஆண் ப்ரம்மமென்றும், ம மாயையாகிய சக்தி அல்லது ஹரி என்றும், உ பரப்ரம்மத்தின் அம்சமாகிய சிவமென்றும் சொல்லப்பட்டுள்ளது. அ காரம் தமோ குணத்தையும், ம காரம் இரஜோ குணத்தையும், உ காரம் சத்துவ குண்த்தையும் உணர்த்துவதாகும். மேலும் அ என்பது நான் என்பதையும், உ என்பது இது என்பதையும், ம என்பது அல்ல என்பதையும் குறிப்பதாகவும் சொல்வார்கள். எனவே ஓம் என்பது ''நான் இது அல்ல(அஹம் ஏதத் ந;)'' எனப் பொருள்படுகிறது.
இனி துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் இந்த மூன்றையும் அவஸ்தைகளோடு தொடர்புபடுத்தி உபநிடதங்கள் விளக்குகின்றன. அதாவது, ஜாக்கிரதை என்கிற விழிப்பு நிலையில் ஜீவனாகிய நான் வேறு, ஜகத் வேறு, பரம்பொருள் வேறு என்ற நிலை காணப்படுகிறது. இது துவைதம். சாதனங்கள் புரிவதற்கும் அதில் முன்னேற்றம் அடைவதற்கும் துவைத நிலையே உகந்ததாக இருக்கிறது. அடுத்து சொப்னமாகிய கனவு நிலையில் காணும் உலகக் காட்சிகளும், தெய்வீகக் காட்சிகளும் மனதின் கற்பிதங்களே. ஒரு பொருளாகிய மனது கனவில் பல பொருள்களாகத் தோன்றிக் கொண்டிருக்கிறது. மனோ விகாரங்களே புறப் பொருளாகப் பொருள் படுத்தப்படுகின்றன. இதுவே பேதாபேதமாகிய விசிஷ்டாத்வைத நிலை. கனவற்ற உறக்கமாகிய சுஷுப்தியில் நான் இல்லை. என்னால் காணப்படும் புறப் பொருள்களுமில்லை. வெறும் பிரக்ஞை மட்டும் தன்மயமாக இருக்கிறது. இது இரண்டற்ற அத்வைத நிலை. இந்த மூன்று அவஸ்தைகளிலும் மனிதன் பக்குப்படுகிறான். எனவே இந்த மூன்று அவஸ்தைகளையும், மூன்று நிலைகளையும் ஒன்றை உயர்த்தி, ஒன்றைத் தாழ்த்தி போருள்படுத்துவது அறியாமையே ஆகும்.
முக்தி அடைய முயல்கின்ற ஜீவன் பரம்பொருளை நோக்கி பயணப்படும் போது அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்ற மூன்று நிலைகளையும் அடைந்து பக்குவப்படுகிறான். சாதாரணமான மனிதன் தன் வாழ்வில் இந்த நிலைகளை அவஸ்தைகளாக உணர்ந்து பக்குவப்படுகிறான்.

No comments:

Post a Comment