Search This Blog

Wednesday, August 6, 2014

ஜென் கவிதைகள்,சில ஹைக்கூக்கள்


திரு. எஸ்.ராமகிருஸ்ணன் வழங்கிய பாஷோவின் ஜென் கவிதைகள் உரையிலிருந்து சில துளிகள்…


ஜென் அதிகம் பேசாது.
அசைவின்மையை, இன்மையை, மரணத்தை வாழ்வின் ஒரு பகுதியாக உணர்தல்.
காட்சிகளைக் கடந்து பார்க்கும் படிம நிலை.
ஜென் என்பது அறிதல் முறை.
தன்னியல்பாக நடக்கையில் நிகழும் மாயத்தைத் தன்வசமாக்கிக் கொள்ள முடியாது.
கியாட்டோ பௌத்த ஆலயத்தில் வாயிலைக் கடந்து பார்த்தால் உள்ளே வெளி மட்டுமே இருக்கும்.
மீவா ஏரிக் கோவிலில் வாயில் கடந்து பார்த்தால் தண்ணீர் மட்டுமே இருக்கும். அதனைப் பார்த்து வியக்கும் பாஷோவின் சிலை அமைக்கப்பட்டிருக்கும்.
மகாயனம் குரு அளிக்கும் பயிற்சி, பகிர்தலின் மூலம் ஞானத்தை அடைதல்.
ஹீனாயனம் துறவின் மூலம் ஞானத்தை அடைதல்.
அவரவர் இயல்பில் இருத்தலின் தனித்துவமும் முக்கியத்துவமும் உணரப்படுகிறது.
மதம் சாராதது, பௌத்த ஞானத்தையே பகடி செய்யக் கூடியது ஜென்.
சைகையைப் போல மொழியைப் பயன்படுத்துகிறது.
சொல்லற்று உள்ளுணர்வில் இயங்குவது. ஆன்மாவின் பாடல்.
ஜென் கதைகள், கோன் புதிர்க்கதைகள், ஜென் கவிதைகள், நீதி மொழிகள் நான்கு வழிகளில் உணரப்படுகிறது.
இரண்டு இருப்புகள் இல்லாமல் போய் ஒரு தாமரை (தூய இருப்பு) உருவாகிறது.
வெளிப்புறத்திலும், தனக்குத்தானேயும், பிரபஞ்சத்தோடும் உறவு நிலையாகக் கொண்டுள்ளான் மனிதன்.
குளிருக்கு புத்தனை எரித்துக் குளிர்காய்வோம் என்றும் வரும்வழியில் புத்தனைக் கண்டால் கொன்றுவிடு அதுவே உனக்குள்ளிருக்கும் புத்தனை அடைய வழி என்றும் சொல்கிறது.
நம் கண் குறைபாடுள்ளது குறுக்கீடுகள் தடைகள் கடந்து இயற்கையைப் பார்க்க வேண்டும். பார்ப்பது என்பது ஒரு கலை.
அருகில் இருக்கும் மனிதன் கிடைவெட்டாக அருகிலும் குறுக்குவெட்டாக முடிவுறாத பல்லாயிரம் மைல் இடைவெளியிலும் இருக்கிறான்.

நிலவு நனைவதுமில்லை கரைவதுமில்லை.”

“ உலகின் எல்லாக் குளங்களிலும் ஒரே நிலவுதான் இருக்கிறது.”

“ நிலவைப் பார்க்கிற ஒருவன்/ தானும் நிலவாகிறான்.”
- ஜென் கவிதைகள்

“ வெட்டுக்கிளியின் சத்தம் / மலையின் மௌனம்/ ஒரு கணம் அசைகிறது. “

“ ஒரு மழைத்துளி மேல் / விழுந்துகொண்டே இருக்கிறது / இன்னொரு மழைத்துளி”

- பாஷோ

நீங்கள் சொற்களைக் கடந்தாலும்

நீங்கள் அர்த்தங்களைக் கடந்தாலும்

அங்கே ஒரு கவிதை இருந்துகொண்டேதான் இருக்கும்”
- யான் வின் லீ.

“நான் அங்கும் இங்கும் அலைகையில்

அப்படியும் இப்படியும் மாறுகிறேன்

அனுபவம் சேர்கிறது இல்லையா?
நான் அங்கும் இங்கும் அலைகையில்
அங்கும் இங்கும் மாறுகின்றன
அனுபவம் சேர்வதில்லை இல்லையா? “

“ காற்றில் வாழ்வைப்போல

விநோத நடனம் புரியும்

இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் இலைகளைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ ஒளிந்துகொள்கிறது.”
- தேவதச்சன்.
ஹைக்கூவின் அடிப்படை ஜென். கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி கி.பி. 532 –இல் இந்தியத் துறவி போதிதர்மரால் சீனாவில் அறிமுகப்படுத்தப் பட்டது ஜென். இது ஜென் பெளத்தம் எனும் பெயரில் எளிமையாக்கப்பட்ட பெளத்த நெறிகளாகும். சீனாவிலிருந்து ஜப்பானுக்கு இராணுவ வீரகளுக்கு அறம் சொல்லச் சென்றது. கொள்கைக்காக உயிரையும் பணயம் வைக்கும் சாமுராய் வீரர்களிடம் செல்வாக்கு பெற்றது. நிறைய இருந்தாலும் சோட்டோ எனும் பிரிவைச் சார்ந்த KEIZEN JOKIN -மலை சார்ந்த கூறுகள், சிண்டோயிச மற்றும் தாவோயிச சாரம், SHUGENDO மலைத் துறவிகளின் தியான வகைகள், பொதுமக்களின் பார்வைகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து,இணைத்து ஜென் பாரம்பர்யத்தைக் கட்டமைத்தார். இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு “ஜென் என்பது பௌத்தமல்ல” எனும் சொற்றொடர் பிரசித்தி பெற்றது.

 ஜென் என்றால் சமஸ்கிருத மொழியில் தியானம் என்று பொருள். அமைதியான மன நிலையில் அடையப்பெறும்( முழுமுற்றாக அடையப்பெறுதல் அல்ல அதனை நோக்கிய வாழ்வியல் தன்மைக்கே முக்கியத்துவமும் கவனமும் அளிக்கப்படுகிறது)  ஞான மார்க்கமாக ஜென் கருதப்படுகிறது. உண்மையான முகத்திற்குத் திரும்புதல். சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிராகரிக்கும் மெளன மொழி. சப்தங்கள் குறியீடுகள் கூர்மையான கேள்வி பதில்களாலும். 

            விழிப்புணர்வு என்னும் நிலையில் மனிதர்களை முழுமையாக வாழ்வதற்கு வலியுறுத்தும் ஜென் உள்முகத் தேடலையும் தியானத்தையும் கைக்கொள்ளத் தூண்டுகிறது.

ஜப்பானின் கதைபாடல்களான செடோகா, கட்டவ்டா,தான்கா,ரென்கு மற்றும் ரென்கா வில் ரென்கா வில் தலைப்பு வினாப்பாடலுக்கு ஹொக்கு என்று பெயர். நாளிடைவில் இவை மட்டுமே பிரபலம் ஆகி ஹைக்கூவானது. மூன்று வரிகள், 5-7-5 அசைகள், மூன்றாவது வரியில் ஒரு வெட்டு வார்த்தை என்று முதலில் இயற்கை மற்றும் பருவகாலங்கள் சார்ந்த ஜென் கவிதைகளாக இருந்தவை பின் மெருகேறிப் பொலிவு பெற்று விளங்குகின்றன.

            பாஷோ(1644-1694),பூசன்(1716-1783),இஸ்ஸா(1763-1827), மற்றும் ஷிகி(1867-1902) ஆகியோர் ஜப்பானிய ஹைக்கூவின் நால்வர். இதில் ஷிகி வந்த பிறகுதான் ஹைக்கூ என்ற பெயர். அதுவரை ஹொக்கு தான்.

            சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் எழுதப்பட்டுவரும் ஹைக்கூவை இந்தியாவில் முதலில் மொழிமாற்றம் செய்யப்பெற்றவையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கத்தின் தாகூரும் தமிழின் பாரதியும் இதனைச் செய்தார்கள். எண்பதுகளுக்குப் பிறகு தென் இந்தியாவில் ஹைக்கூவின் வீச்சு மிகுதியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஹைக்கூ எழுதப்பட்டு வருகிறது..

            இவற்றில் வாழ்வை அற்புதமாக உணரச்செய்கிற ஒரு கணம் அதுவே ஹைக்கூ. இதில் நகைச்சுவையும், சமூகத்தாக்கமும் மிகுதியாக இருப்பவைக்கு சென்ரியூ என்று பெயர்.ஹைக்கூ ஒரு அனுபவம்.தனியே இருக்கும் போது வானத்திலோ வீதியிலோ ஒரு விந்தையான சமாச்சாரத்தைப் பார்த்துவிட்டால் உடனே தெரிந்தவரைக் கூப்பிட்டு “அட இதை வந்து பாரு” என்று சொல்வோமே அதுபோல ஒரு அனுபவப் பங்கீடு.வியப்பு என்பதை மற்றவருக்குச் சுட்டிக் காட்டும் விருப்பமே ஹைக்கூ.

விளையாட்டுதனமான சுட்டித்தனம், திடீர் ஆச்சர்யம், பரிசுத்த மெளனம், மனம் உவக்கிற அழகான நிகழ்வுகள்,சுயமற்ற தன்மை, தனிமை,நன்றி சார்ந்த ஏற்புத்தன்மை, பேச்சற்ற மெளனம், முரண்கள்,அறிவு சாரா நிலை, இழையோடும், நகைச்சுவை, சுதந்திரம்,குழந்தையின் எளிமை, அன்பு, துணிவு ஆகியவை ஹைக்கூவின் மனநிலையாகும்.

காட்சியை சட்டென வெளிப்படுத்துவது, எளிமையான அதே சமயம் சிறப்பான சொல்லாட்சியைக் கையாள்வது,இருவித படிமத் தொடர்ச்சிகளை உருவாக்குவது, தத்துவக்கூறுகளை அழகியல் உணர்வோடு படம்பிடிப்பது,சுருக்கமாக அமைவது, வாசகனின் சிந்தனையைத் தூண்டுவது, வார்த்தை வர்ணனைகளை நீக்கி நேர்த்தியான சொற்களைக் கையாள்வது,மூன்றடி எனும் வரையறையைப் பின்பற்றுவது ஆகியவை நவீன ஹைக்கூவின் தன்மைகளில் சில.

தற்போது அசைக்கட்டுப்பாடுகளற்று மிக எளிமையாக உணரப்படும் ஒரு வாழ்வியல் அனுபவமாக ஹைக்கூ விளங்குகிறது .இது கவிதை வடிவம் மட்டுமல்ல கவிதை வகைமையும் கூட என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக புதிய கணங்களின் தரிசனம் அல்லது கண்டுபிடிப்பு மற்றும் CREATING OR ALLOWING SPACE  எனப்படும் சொல்லப்படாதவற்றை உணரச்செய்தல் ஹைக்கூவின் மிக முக்கியப் பண்புகளாகும். ACCEPTING OR REALISING OR BEING THAT SPACE என்று சொல்லிப்பார்த்தல் இன்னும் பொறுத்தம்.

சில ஹைக்கூக்கள்
1.
பழைய குளம்
தவளை குதிக்க
நீரின் சப்தம்
2.
குழந்தை
ஒரு பூவைக் காட்டும்போது
வாயைத் திறக்கின்றது..
3.
ஒரு பூவோடு
ஆக்ரோஷமாகச் சண்டையிடும்
நாய்க்குட்டி.
4.
வைக்கோல் பொம்மை தனது
பின்னலிட்ட தொப்பியைக் கழட்டுதில்லை
மேன்மை தாங்கிய மன்னர் முன் கூட..
5.
உதிர்ந்து வீழும் பூ
கிளைக்குத் திரும்புகிறது
வண்ணத்துப் பூச்சி.
6.
ஆழ்ந்து உறங்கும் நாய்க்குட்டி
மரத்தின் மீது
கால்களைப் பதித்தபடி..
7.
நாயின் மேல் எறிவதற்கு
ஒரு கல்லைக் கூடக் காணோம்
குளிர்கால நிலவு.
8.
மலை மேல் நிலா
பூவுக்கும் திருடனுக்கும்
கருணையுடன்.
9.
ஷார்ப்னரில் பென்சில் சீவ
நத்தைக் கூடு உருவானது.
10.
தாத்தாவைக் கொண்டுபோன பாதையை
சாளரம் வழியே பார்த்திருக்கும்
மூக்குப் பொடிக் குப்பி..

விசேஷப் பகிர்வு, மெல்லிய ஒற்றை உணர்வு, அனுபவக் கவிதை, கடைசி வரியில் ஒரு சுவையான,நெகிழ்வான பிரயோகம் என  நாமும் நம் மண்ணின் வாசனையை, நம் பருவ காலத்தை, நம் அன்றாட வாழ்வின் அற்புதக் கணங்களை ,யாரும் கவனிக்காத ஒரு அசைவை பார்க்கத்துவங்குவோம். முடிந்தால் ஒவ்வொருவரும் ஒரு ஹைக்கூ எழுதி அனுப்புங்களேன். பரிசு நிச்சயம். எல்லோருக்கும் கோடை வாழ்த்துக்கள்.
-    கவின் ,
திருப்பூர்.
9942050065
நன்றி: சுஜாதா,லீலாவதி,அருணாச்சலம்,அமாசாமி.

No comments:

Post a Comment