Search This Blog

Saturday, August 2, 2014

யாரும் சிரிக்க மாட்டார்கள் - மிலன் குந்தேரா

“சிலிவோவுட்ஸ்யை* கொஞ்சம் ஊற்று” என்றாள் கிளாரா. எனக்கு அதில் ஆட்சேபனையில்லை. எப்போதாவதுதான் நாங்கள் ஒரு பாட்டிலைத் திறக்கிறோம். இம்முறை எங்களுக்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது. அன்று பெரிய கட்டுரை ஒன்றிற்காகக் கலை இலக்கியப்  பத்திரிகையொன்றிலிருந்து நான் நல்ல சன்மானம் பெற்றிருந்தேன்.
அந்தக் கட்டுரையைப் பிரசுரிப்பது அத்தனை எளிதாக இருக்க­வில்லை. நான் எழுதியிருந்த கருத்துக்கள் சர்ச்சையைத் தூண்டும் விதத்திலிருந்தன. அதனால்Milankundera_big என்னுடைய கட்டுரை­யைக் காட்சிக்கலை (Visual Arts) நிராகரித்திருந்தது. அதன் ஆசிரியர்கள் வயோதிகர்கள். எச்சரிக்கையுணர்வு மிகுந்தவர்கள். பிறகு ஒரு­வழி­யாகச் சற்று முக்கியத்துவம் குறைந்த பத்திரிகையொன்றில் அது பிரசுரிக்கப்பட்டது. அதன் ஆசிரியர்கள் இளைஞர்கள். சாதூர்யம் குறைந்தவர்கள்.
தபால்காரன் பணத்தைப் பல்கலைக்கழகத்திற்கு எடுத்து­வந்திருந்­தான். ­கூடவே ஒரு கடிதமும் இருந்தது. அது முக்கியமான கடித­மில்லை. காலையில் சந்தோசம் வழிந்தோடிக்­கொண்டிருந்ததால் அதை மறந்துவிட்டிருந்தேன். ஆனால் இப்போது, வீட்டில் நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குவளை ஏறக்குறைய காலியாகி விட்டதால் எங்களை மகிழ்ச்சியூட்டிக்­கொள்ள மேஜையிலிருந்த அந்த கடிதத்தை எடுத்தேன்.
“மரியாதைக்குரிய காம்ரேட் – இப்படி அழைப்பதற்கு நீங்கள் என்னை அனுமதித்தால் – தோழரே!..” கிளாராவிற்காகச் சப்தமாகப் படிக்கத் தொடங்கினேன். “நீங்கள் ஒருபோதும் சந்தித்திராத ஒரு மனிதர் உங்களுக்குக் கடிதம் எழுதுவதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இக்கடிதத்தோடு நான் இணைத்துள்ள கட்டுரையை நீங்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் என் மரியாதைக்குரியவராக இருப்பதற்குக் காரணம், என்னுடைய நீண்ட ஆய்வின் விளைவாக நான் கண்டடைந்த முடிவுகளோடு ஆச்சரியமூட்டும் விதத்தில் தங்களுடைய அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் ஒத்திசைந்து செல்கிறது. மொத்தத்தில் நான் பிரமித்துவிட்டேன்... ” பின் வந்த வரிகளில் நான் வெகுவாகப் புகழப்பட்டிருந்தேன். இறுதியாக ஒரு கோரிக்கை வைக்கப்­பட்டிருந்தது: காட்சிக் கலைக்காக அவருடைய கட்டுரையை மதிப்பீடு செய்து ஒரு விஷேச மதிப்புரை நான் எழுதித்தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். கடந்த ஆறுமாத காலமாகக் காட்சிக்கலைஅவருடைய கட்டுரையைக் குறைவாக மதிப்பிட்டு நிராகரித்து வருகிறது. நண்பர்கள் என்னுடைய அபிப்பிராயம் தெளிவாக இருக்குமென்று அவரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்கள். ஆதலால் தான், நான் அவ்வெழுத்தாளரின் ஒரே நம்பிக்கையாகிப் போனேன். அவருடைய சிறுவெளிச்சக் கீற்று நான். நான் இல்லையேல் அவர் முழு இருட்டில் மூழ்கவேண்டியதுதான்.
திரு.ஸ்ட்டுருஸ்கியை நாங்கள் கேலி செய்தோம். பகட்டான அவரது பெயர் எங்களை வசீகரித்தது. ஆனால் அது வெறும் கேலி மட்டுமே. மட்டுமீறி என்னைப் புகழ்ந்தற்காகச் செய்யப்பட்ட கேலி. ஒருவரை­யும் அது துன்புறுத்தாது. அருமையான சிலிவோவிட்ஸ் என்னை மென்மையானவனாக மாற்றிவிட்டிருந்தது. எத்தகையை மென்மை­யான­வன் என்றால், சிலிவோவிட்ஸ் காரணம், மறக்க முடியாத அந்த கணத்தில் முழு உலகையுமே நான் நேசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆதலால்­தான் அக்கணத்தில் இவ்வுலகிற்குப் பரிசளிப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லாதபோது கிளாராவிற்கு கொஞ்சம் வெற்று நம்பிக்கை­களைப் பரிசளித்தேன்.
கௌரவமான குடும்பத்திலிருந்து வந்த கிளாராவிற்கு இருபது வயதாகிறது. என்ன சொன்னேன்? கௌரவ­மான குடும்பமென்றா? இல்லை, மிகச்சிறந்த குடும்பம். அவளுடைய தந்தை ஒரு வங்கி மேலாளர். 1950ஆம் ஆண்டு வாக்கில், மேல் மத்தியவர்க்கத்தின் பிரதிநிதியான அவளது தந்தையை, பிராக்கிற்கு(Prague) அருகிலிருந்த சிலாகோவிட்ஸ் கிராமத்திற்குக் கட்சி நாடு கடத்தி­யது. அதன் விளைவாக கிளாராவின் கட்சிப்பதிவேடு மோசம­டைந்தது. பிராக்கிலிருந்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அவள் தையல்காரியாகப் பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. அவளைக் களிப்பூட்டுவதற்காக என் தொடர்புகளின் வழியாகக் கிடைக்கவிருக்கும் ஒரு வேலையின் அனுகூலங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அவளைப்போன்ற ஒரு அழகி இப்படித் தையல் வேலைகளில் அழகைப் பாழ்படுத்திக் கொள்வது எத்தகைய அபத்தம் என்பதை விளக்கினேன். அவளை ஒரு மாடல்(Model) ஆக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
கிளாரா ஆட்சேபிக்கவில்லை. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்ததால் இரவு சந்தோசமாக கழிந்தது.
2
நிகழ்காலத்தை நாம் கண்ணை மூடிக்கொண்டு கடக்கிறோம். அனுபவங்களை உய்த்துணரவும் அதைப் பற்றி யோசிப்பதற்குமே நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். கண்கட்டை அவிழ்த்த பிறகு­தான் நம்மால் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்க்க முடிகிறது. நாம் என்னவிதமான அனுபவத்திற்கு ஆட்பட்டிருந்தோம், அதற்கு என்ன அர்த்தம்? என்றெல்லாம் பிறகுதான் யோசிக்கிறோம்.
அன்று மாலை, என் வெற்றிக்காகத்தான் நான் குடித்துக் களித்து கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். ஆனால் அது, என் அழிவுக்கான சிறிய முன்னறிவிப்பு என்பதை, அப்போது நான் உணர்ந்திருக்க­வில்லை.
மறுநாள், எது குறித்தும் நான் சந்தேகபடவில்லை என்பதால், நல்ல மனநிலையோடு கண்விழித்தேன். கிளாரா, அருகில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். கடிதத்தோடு இணைந்திருந்த கட்டுரையை எடுத்தேன். அசட்டையாக ஒரு பார்வைப் பார்த்தேன்.
அது மிகோலஸ் அலஸ்** செக் ஓவியத்துறையின் தலைவன் என்று 
தலைப்­பிடப்­பட்டிருந்தது. அரைமணி நேர அக்கறைக்கு கூட அது பெறுமதியற்றது. நான் அதற்குச் செலவழித்தது வீணாயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்பில்லாத வெற்றுவரிகளால் நிரப்பப்பட்டிருந்த கட்டுரையில் எளிய சிந்தனைக்கான சுவடு கூடத் தென்படவில்லை.
மிகத் தெளிவாக உளறல் என்று தெரிந்தது. அன்றுதான் டாக்டர் கிளாசெக் – காட்சிக்கலையின் ஆசிரியர் (பிற விஷயங்களில் மிக மோசமாக எரிச்சலுட்டுகிற மனிதர்) தொலைபேசியில் அழைத்து என் அபிப்பிராயத்தை உறுதி செய்துகொண்டார். பல்கலைக்கழகத்திற்கு அழைத்து: ஸ்ட்டுருஸ்கியின் கட்டுரை கிடைத்ததா? அதற்கு ஒரு மதிப்புரை எழுதித் தா. இதுவரை அவனுடைய ஐந்து கட்டுரைகளை நிராகரித்துவிட்டோம். இருந்தாலும் அவன் தொல்லை செய்கிறான். அவன் தலைக்குள் நீ தான் நம்பிக்கைக்குரிய ஒரே மனிதன் என்ற எண்ணம் புகுந்து விட்டது. இரண்டே வரிகளில் அது எப்படிப்பட்ட குப்பை என்று எழுது. எப்படி எழுதுவது என்று உனக்குத் தெரியும். அது அவன் தலைக்குள் இறங்க வேண்டும். பிறகு நாமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம்.
ஆனால் எனக்குள் இருந்த ஏதோவொன்று எதிர்ப்பு தெரிவித்தது. நான் எதற்குத் திரு.ஸ்ட்டுருஸ்கியைத் தூக்கிலிடவேண்டும்? அதற்கு, அந்த ஆசிரியரைப் போல் நான் ஏதாவது ஊதியம் வாங்குகிறேனா? அத்தோடு, என் கட்டுரையை அதீத ஜாக்கிரதையுணர்வோடு அவர்கள் நிராகரித்திருந்தது நினைவிற்கு வந்தது. வேறு என்ன வேண்டும்..? திரு.ஸ்ட்டுருஸ்கியின் பெயரோ என் மனதில் அழகான மாலை, கிளாரா, சிலிவோவிட்ஸோடு தொடர்புடையதாகப் பதிவாகி­யிருந்தது. இறுதியில், அவரிடம் நான் அதை மறுக்கவில்லை. அது மனிதமாகாது - என்னை நம்பகமான ஆள் என்று ஒருவர் சொல்வதை நான் எதற்கு மறுக்கவேண்டும்? எதற்காக அந்த ஒன்றையும் நான் இழக்க­வேண்டும்?
புத்திசாலித்தனமாக அந்தப் பேச்சை முடித்துக் கொண்டேன். கிளாசெக்கிற்கோ அது ஒரு வாக்குறுதி. எனக்கோ அது ஒரு மழுப்பல். ரிசீவரைக் கீழே வைத்தபோது திரு.ஸ்ட்டுருஸ்கியைப் பற்றி எந்த­வொரு கட்டுரையும் எழுதக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். ஆனால், அதற்கு மாறாக, பெட்டியிலிருந்து ஒரு காகிதத்­தை ­எடுத்து உடனேயே திரு.ஸ்ட்டுருஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினேன். கடிதத்தில், அவருடைய ஆய்வு பற்றிய என் அபிப்பிராயத்தை மறைத்துவிட்டு, பொதுவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓவியக்கலை பற்றிய என்னுடைய பார்வைகள் குளறுபடியானவை என்றும், அவருடைய ஆய்வைப் பற்றிய என்னுடைய பரிந்துரை – குறிப்பாக காட்சிக்கலையின்ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கே சாதகமாக அமையும் என்றும், திரு.ஸ்ட்டுருஸ்கிக்குச் சாதகமாக அமைவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்திருந்தேன். அதே சமயம் திரு.ஸ்ட்டுருஸ்கியோடு நட்பார்ந்த ரீதியில் சற்று வம்பளந்திருந்ததால் என் நிலை கண்டு அவருக்குப் பரிவு ஏற்படாதவாறும் பார்த்துக்கொண்டேன்.
தபால்பெட்டியில் கடிதத்தைப் போட்டதோடு அதை மறந்துவிட்டேன். ஆனால் திரு.ஸ்ட்டுருஸ்கியோ என்னை மறக்கவில்லை.
3
ஒருநாள் என் விரிவுரையை முடிக்கும் சமயம் - பல்கலைக்கழகத்தில் நான் கலை வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருக்கிறேன் - யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அது மேரி. எங்கள் காரியதரிசி. இரக்கச் சுபாவம் மிகுந்தவள். வயதாகி விட்டது. அவ்வப்போது எனக்கு காபி கலந்து தருவாள். தொலைபேசியில் எனக்கு விருப்ப­மில்லாத பெண் குரல்களைக் கேட்டால் நான் வெளியே சென்றிருப்பதாகச் சொல்லிவிடுவாள். அவள் கதவிடுக்கில் தலையை நீட்டி, என்னை காண ஒரு கனவான் வந்திருப்பதாக சொன்னாள்.
கனவான்களைக் கண்டு எனக்கு பயமில்லை. ஆதலால் மாணவர்­களிடம் விடைபெற்றுக்கொண்டு அவரைக் காணக் கிளம்பினேன். காரிடாரில் நுழைந்தபோது, வெள்ளைச் சட்டையும் நைந்த கருப்பு சூட்டும் அணிந்த ஒரு குள்ளமனிதர், எனக்கு வணக்கம் தெரிவித்தார். மிகுந்த மரியாதையோடு தன்னைத் திரு.ஸ்ட்டுருஸ்கி என்று அறிமுகப்படுத்திக் ­கொண்டார்.
அந்தப் பார்வையாளரை அழைத்துக்கொண்டு ஒரு காலி அறைக்குள் நுழைந்தேன். இருக்கையைக் காட்டினேன். பிறகு, எல்லாவற்றையும் பற்றிச் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தோம். உதாரணமாக, இந்தக்கோடை எவ்வளவு மோசமாகயிருக்கிறது; பிரேக்கில் எங்கெங்கு பொருட்காட்சிகள் நடக்கின்றன.. என்றெல்லாம் பலவற்றை பற்றி பேசிக்கொண்டோம். திரு.ஸட்ருஸ்கி நாகரிகமாக என்னுடைய பேச்சையெல்லாம் ஒத்துக்கொண்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே என்னுடைய பேச்சையெல்லாம் அவருடைய கட்டுரையோடு சேர்த்து புரிந்துகொள்ள முயன்றார். அது கண்ணுக்குப் புலனாகாதபோதும், தவிர்க்க­முடியாத காந்தத்தைப் போல் இருவரையும் பிணைக்க­தொடங்கியது.
இறுதியில், உங்கள் கட்டுரைக்கு மதிப்புரை எழுவதுபோல் சந்தோசம் தரக்கூடியது எதுவுமில்லை,என்றேன். ஆனால், கடிதத்தில் குறிப்பி­ட்டுள்ளது போல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் செக் ஓவியங்களைப் பற்றிய என்னுடைய புரிதல்கள் அரைகுறையானவை. மேலும், தற்சமயம்,காட்சிக்கலையின் ஆசிரியர்களோடு எனக்கு நல்ல உறவில்லை. என்னை வறட்டு மார்க்சிஸ்ட் என்று கருதுகிறார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் என்னுடைய மதிப்புரை உங்களுக்குக் கெடுதல் விளைவிக்க வாய்ப்பிருக்கிறது, என்றேன்.
ஓ! நீங்கள் மிகவும் தன்னடக்கத்தோடு நடந்துகொள்கிறீர்கள் என்றார் திரு. ஸ்ட்டுருஸ்கி. உங்களால் எப்படி இவ்வாறான தன்னடக்கத்தோடு நடந்துகொள்ள முடிகிறது...? நீங்கள் ஒரு நிபுணர். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. அந்த அலுவலகத்தில் எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது என்றார்கள். நீங்கள் நினைத்தால் அது பிரசுரமாகிவிடும். உங்களை விட்டால் எனக்கு வேறு போக்கிடம் கிடையாது. இந்தக் கட்டுரைக்காக மூன்று வருடம் கடுமையாக உழைத்திருக்கிறேன். நிறையப் படித்திருக்கிறேன். இப்போது எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு மனிதர் எப்படியெல்லாம் சாக்குபோக்குகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள்! திரு.ஸ்ட்டுருஸ்கிக்கு எப்படி பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் எதேச்சையாக அவருடைய முகத்தை அவதானித்தேன். களங்கமற்ற சிறிய, பழமையான கண்கள் என்னை வெறித்துக் கொண்டிருந்தன. நெற்றியில் ஆழமான சுருக்கம் ஒன்று விழுந்திருந்தது. ஓரிரு வினாடிகள் யோசித்த போது என் முதுகுத்தண்டு சில்லிட்டது. இந்தச் சுருக்கம் உறுதியானது; ஆழமானது. மிக்கோலஸ் அலிஸின் ஓவியங்களூடாக அதன் எஜமான பயணித்ததால உண்டான வேதனையை, துரோகத்தை மட்டும் அது தெரியப்படுத்தவில்லை, மாறாக ஒரு அசாத்திய மனவலிமையையும் வெளிப்படுத்தியது. மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. புத்திசாலித்தனமான சாக்குபோக்கு ஒன்றையும் அப்போது என்னால் சொல்ல முடியவில்லை. அந்த மதிப்புரையை என்னால் எழுத முடியாது என்று எனக்குத் தெரிந்து விட்டது. அதே சமயம் அந்தப் பரிதாபகரமான முகத்தைப் பார்த்து அதைச் சொல்லவும் முடியவில்லை.
பிறகு சிரித்து மழுப்ப தொடங்கினேன். திரு.ஸ்ட்டுருஸ்கி எனக்கு நன்றி தெரிவித்தார். விரைவில் சந்திப்போம் என்றார். நாங்கள் புன்னகைத்துப் பிரிந்தோம்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் என்னை தேடி வந்தார். நான் புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்தேன். மறுநாள், என்னைத் தேடிக்கொண்டு அவர் மீண்டும் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. கெட்ட காலம் தொடங்கிவிட்டதை உணர்ந்துகொண்டேன். தக்க நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும என்று புரிந்தது. மேரியைத் தேடிச் சென்றேன்.
மேரி டியர், உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அந்த மனிதன் என்னைத் தேடிக்கொண்டு மீண்டும் வந்தான் என்றால், ஆராய்ச்சிக்காக நான் ஜெர்மனி போயிருப்பதாகச் சொல்லிவிடு. உனக்குத் தெரியும், செவ்வாயும் புதனும்தான் என்னுடைய வகுப்புகள். அதை ரகசியமாக வியாழன் வெள்ளிக்கு மாற்றி விடுகிறேன். இது என் மாணவர்களுக்கு மட்டும்தான் தெரியவேண்டும். எவருக்கும் தெரியக்கூடாது. அட்டவணையைத் திருத்தாதே. நான் கொஞ்சம் தலைமறைவாக வாழ வேண்டி இருக்கிறது. 
4
எதார்த்தத்தில் நான் எதிர்பார்த்தைவிட வேகமாக திரு.ஸ்ட்டுருஸ்கி திரும்பியிருந்தார். என்னுடைய காரியதரிசி நான் திடீரென்று ஜெர்மனி கிளம்பி விட்டதாகத் தெரிவித்தபோது மனிதர் நொடிந்து விட்டார்.இது சாத்தியமில்லை. பேராசிரியர் என்னைப் பற்றி ஒரு மதிப்புரை எழுதியாக வேண்டும். அவரால் எப்படிப் போகமுடியும்?
எனக்குத் தெரியாது, என்றாள் மேரி. எப்படியிருந்தாலும் அவர் ஒரு மாதத்தில் திரும்பி விடுவார்.” “என்ன ஒரு மாசமா?...” திரு.ஸ்ட்டுருஸ்கி புலம்பத் தொடங்கிவிட்டார். உங்களுக்கு ஜெர்மனியில் அவரிருக்கும் முகவரி தெரியுமா? ” “தெரியாது என்றாள் மேரி. பிறகு ஒருமாதம் எனக்கு நிம்மதியாகக் கழிந்தது.
ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வேகமாக அம்மாதம் முடிந்துவிட்டது. திரு. ஸ்ட்டுருஸ்கி மீண்டும் என் அலுவலகத்தில் தோன்றினார். இல்லை, அவர் இன்னமும் திரும்பவில்லை என்றாள் மேரி. பிறகு வேறொரு காரியத்தை முன்னிட்டு நாங்கள் சந்தித்துக்கொண்ட போது என்னிடம் மன்றாடும் விதத்தில் கேட்டுக் கொண்டாள்: உங்களுடைய மனிதர் மீண்டும் வந்திருந்தார். தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். மேரி, மஞ்சள் காமாலை வந்து ஜெனெயிலுள்ள மருத்துவமனையில் நான் கிடக்கிறேன் என்று சொல்லிவிடு. மருத்துவமனையிலா! –திரு.ஸ்ட்டுருஸ்கி கத்தியேவிட்டார் - ஓரிரு நாட்களுக்கு பிறகு மேரி அவரிடம் இக்கதையை சொன்னபோது. இது சாத்தியமேயில்லை. என்னைப் பற்றி அவர் ஒரு மதிப்புரை எழுதியாக வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” “மிஸ்டர். ஸ்ட்டுருஸ்கி என்னுடைய காரியதரிசி அவரை வசைப்பாடினாள். எங்கோ வெளிநாட்டில் ஒரு மனிதர் மருத்துவமனையில் கிடக்கிறார் என்கிறேன். நீங்கள் உங்கள் மதிப்புரையைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். திரு.ஸ்ட்டுருஸ்கி அமைதியாகத் திரும்பிச் சென்றார். ஆனால் இரு வாரம் கழித்து மீண்டும் என் அலுவலகத்தில் தோன்றினார். ஜெனேயிலுள்ள மருத்துவமனைக்கு ஒரு பதிவுத்தபால் அனுப்பினேன். கடிதம் திரும்பி விட்டது என்றார். மறுநாள் மேரி, உன்னுடைய குள்ளன் என்னை ரொம்ப தொந்தரவு செய்கிறான்” என்றாள். நீ என்னிடம் கோபப்படக் கூடாது என்னால் என்ன செய்ய முடியும்? நீ திரும்பி விட்டதாகச் சொல்லிவிட்டேன். நீயே அவனைக் கவனித்துக்கொள்.
மேரியிடம் எனக்குக் கோபமில்லை. அவளால் என்ன செய்யமுடியுமோ அதை அவள் செய்து விட்டார். தவிர, இதில் தோல்வியடைய நான் விரும்பவில்லை.. பிடிபடக் கூடாது என்று முடிவெடுத்தேன். எல்லா நேரமும் தலைமறைவாக நடமாடினேன். வியாழனும் வெள்ளியும் ரகசியமாக வகுப்பெடுத்தேன். ஒவ்வொரு செவ்வாயும் புதனும் அந்த வரலாற்றுப் பேராசிரியர் வாசலில் பதுங்கியிருந்ததை கண்டு­கொண்டேன். நான் எப்போது வருவேன் என்று, ஆசிரியர் கட்டிடத்திற்கு வெளியே அவர் காத்திருந்ததைப் பார்த்தபோது எனக்குச் சந்தோசம் உண்டாயிற்று. பொய்த் தாடியும் தொப்பியும் அணிந்து நடமாடினேன். என்னை ஷெர்லாக் ஹோம்ஸாக, மிஸ்டர். ஹய்டாகநகரத்திற்குள் நடமாடித் திரியும் கண்ணுக்குப் புலப்படாத மனிதனாக உணரத் தொடங்கினேன். சிறு பையனின் குதூகலம் என்னை தொற்றிக்­கொண்டது.
தொடர்ந்து கண்காணித்துவந்த திரு.ஸ்ட்டுருஸ்கி சோர்ந்து போய் மேரியிடம் ஒருநாள் எரிந்து விழுந்தார்: காம்ரேட்! பேராசிரியருடைய வகுப்புகள் எங்கு நடக்கிறது?
சுவரைச் சுட்டிக்காட்டி பட்டியல் அங்கிருக்கிறது, என்றாள் மேரி. அதில் எல்லா பேராசிரியருடைய வகுப்புகளும் தெளிவாக அச்சிடப்பட்டி­ருந்தது.
திரு.ஸ்ட்டுருஸ்கியும் விட்டுக்கொடுக்காமல் ஏற்கனவே அதைப் பார்த்துவிட்டேன் என்றார்.செவ்வாயும் புதனும் நம் பேராசிரியர் மட்டும் வகுப்பெடுப்­பதில்லையே. உடம்புக்கு ஏதாவது..? 
மேரி சற்று தயங்கி ஒன்றுமில்லை,” என்றாள்.
பேராசிரியர் மீண்டும் எரிந்து விழுந்தார். பட்டியலிலுள்ள குழப்பத்திற்கு அவள்தான் காரணம் என்று ஏசினார். எல்லா பேராசிரியர்களுடைய நேரமும் தெரிந்திருந்த அவளுக்கு இதுமட்டும் எப்படித் தெரியாமல் போயிற்று என்று குறுக்கு விசாரணை செய்தார். அவளைப் பற்றி புகார் செய்யப்போவதாக மிரட்டினார். கூச்சலிட்டார். வகுப்பெடுக்க வேண்டிய பேராசிரியர் வகுப்புக்கு வராமல் இருப்பதுப் பற்றி புகார் செய்யப் போவதாகத் தெரிவித்தார். துறைத்தலைவர் இருக்கிறாரா என்று கேட்டார்.
துரதிர்ஷ்டவசமாக துறைத்தலைவர் அன்று இருந்தார்.
திரு.ஸ்ட்டுருஸ்கி கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார். பத்து நிமிடத்திற்குப் பின் மேரியின் அலுவலகத்திற்குள் நுழைந்து என் முகவரியைக் கொடுக்கும்படி நிர்பந்தித்தார்.
இருபது ஸ்கல்நிகோவா தெரு, லிதொம்சில், என்றாள் மேரி.
லிதொம்சில்? 
பிராக்கில் (Prague) பேராசிரியருக்கு தற்காலிக முகவரிதான் இருக்கிறது. அதைப் பிறர் தெரிந்துகொள்வதை அவர் விரும்புவதில்லை-
குரல் நடுங்க அந்தக் குள்ளமனிதர், உங்களை பிரேக்கிலுள்ள அப்பார்ட்மெண்டின் முகவரியைத் தரும்படி கேட்டேன் என்றார்.
எவ்வாறோ மேரியும் தன்நிலை இழந்திருந்தாள். நான் பிடிபட வசதியாக என்னுடைய வீட்டின், என்னுடைய சிறிய புகலிடத்தின் முகவரியை அவரிடம் கொடுத்தாள்.
5
ஆம். லிதொம்சில்தான் என்னுடைய நிரந்தர முகவரி இருக்கிறது. என் அப்பாவின் நினைவுகளும் என் அம்மாவும், அங்குதான் வசிக்கிறார்கள். அவ்வப்போது – சமயம் வாய்க்கிறபோதெல்லாம் – நான் பிராக்கிலிருந்து அந்த வீட்டிற்குப் பறந்துவிடுவேன். அம்மாவுடைய அந்தச் சிறிய அப்பார்ட்மெண்டில் வைத்துதான் நான் எழுதுவது வழக்கம். அதனால் தான் அதை நிரந்தர முகவரியாக்கி கொண்டேன். பிராக்கில் நான் நல்ல அறை எடுக்க முயற்சி செய்யவில்லை – பேச்சிலர்கள் அவ்வாறு எடுப்பது வழக்கம் – மாறாக வாடகைக்கு ஒரு சிறிய மாடியறை எடுத்துக்கொண்டு அதை எவ்வளவு ரகசியமாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு ரகசியமாக வைத்துக்கொண்டேன். அதற்குக் காரணம் இருந்தது. என்னுடையப் பெண் விருந்தினர்கள் மாறிக்கொண்டேயிருந்தார்கள். நான் விரும்பாத மனிதர்களுடைய சந்திப்புகளைத் தள்ளிப் போட முடிந்தது.
தற்போது நான் வசிக்கிற வீட்டில் இந்தக் காரணங்களால் தான் எனக்கு மரியாதை குறைவாகயிருந்தது. மேலும், லிதொம்சில் நான் தங்குகிறபோதெல்லாம் சொகுசான அந்த அறையைப் பலமுறை நண்பர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன். அங்குதான், வீட்டிலிருக்கிற மனிதர்களைத் துளிக்கூட தூங்கவிடாமல் அவர்களும் சந்தோசத்தை அனுபவித்தார்கள். இப்படியான என் ஊழல்களால் அங்கிருப்பவர்கள் என் மீது பனிப்போர் தொடுக்கும்படி ஆகிவிட்டது. அவர்களுடைய கமிட்டி கூடுகிறபோதெல்லாம் என்னைப் பற்றிய மோசமான அபிப்பிராயங்கள் உலவத் தொடங்கும். பிறகு ஒரு சமயம், என்னைப் பற்றி வீட்டு வசதி வாரியத்தில்கூட புகார் கொடுத்ததாக அறிந்தேன்.
அந்நேரத்தில் தான், கிளாராவிற்கு சிலாகோவிட்ஸிலிருந்து வேலைக்குச் சென்று வருவது அசௌகரியமாக இருந்தது. அதனால் சில பின்னிரவுகளை அவள் அங்கு கழிக்க நேர்ந்தது. அபூர்வமாகத்தான் அவள் அங்கு தங்குவது வழக்கம். முதலில் கூச்சப்பட்டுக் கொண்டே தான் தங்கினாள். ஒரே ஒரு உடையை மட்டும் விட்டுச் சென்றாள். பிறகு ஓரிரு உடைகள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பார்த்தால், என்னுடைய இரண்டு சூட்கேஸ்களும் மூலையில் கிடந்தன. சின்ன அறை ஒரு சீமாட்டியின் அறையாக மாறிவிட்டிருந்தது.
நான் உண்மையிலேயே கிளாராவை விரும்பினேன். அவள் அழகு. நாங்கள் வெளியில் செல்லும் போதெல்லாம் ஆட்கள் தலையைத் திருப்பி அவளைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும், அவளுக்கு என்னைவிட வயது குறைவாகத்தான் இருக்கும். அது மாணவர்களிடம் எனக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால் அவள் என்னோடுதான் இருக்கிறாள் என்பதைப் பிறர் தெரிந்துகொள்வதை மட்டும் நான் விரும்பவில்லை. எங்களைப் பற்றிய கிசு கிசுக்களும் வதந்திகளும் அப்பார்ட்மெண்டில் உலவிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்குப் பயமாக இருந்தது. மேலும், எவரேனும் வயதான என் வீட்டின் சொந்தக்காரரிடம் தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் – அவர் விழிப்பான ஆள் தான் - இருப்பினும் அவர் என்னைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை – கனத்த இதயத்தோடு என்னை தேடிக்கொண்டு வந்து, அவருடைய நற்பெயரைக் கருத்தில் கொண்டாவது நான் அவளை அனுப்பி விட வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வது என்று பயந்தேன்.
யார் வந்து கதவைத் தட்டினாலும் கண்டிப்பாகக் கதவைத் திறக்கக்கூடாது என்று கிளாராவிற்கு ஆணையிட்டிருந்தேன்.
ஒருநாள் வீட்டில் அவள் தனித்திருந்தாள். அன்று கடும் வெக்கை. அறையில் புழுக்கம் நிலவியது. படுக்கையறையில், ஏறக்குறைய நிர்வாணமாக, கூரையை ஆராய்ந்தபடி அவள் உலாத்திக் கொண்டிருந்தாள்.
திடீரென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
கிளாரா இதை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் அழைப்பு மணி எதுவும் இல்லாததால் வருபவர் எவராக இருந்தாலும் கதவைத்தான் தட்டியாக வேண்டும். கிளாரா சப்தத்தை அலட்சியப்படுத்தி விட்டு கூரையை மீண்டும் ஆராயத் தொடங்கினாள். ஆனால் தட்டல் நின்றபாடில்லை. மாறாக, சற்றும் அசாராமல் அது தொடர்ந்தது. கிளாராவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதட்டம் அதிகரித்தது. கதவுக்குப் பின்னால் நிற்கும் மனிதன் தன் ஜாக்கெட்டைத் திறந்து அவனுடைய அடையாள அட்டையைக் காட்டிவிட்டு, ஏன் கதவைத் திறக்கவில்லை? எதை மறைத்துக் கொண்டிருந்தாய்? நீ இந்த வீட்டைச் சார்ந்தவள்தானா? என்று விசாரணை செய்யத் தொடங்கிவிடுவானோ என்று கற்பனை செய்தாள். உடன் கொஞ்சம் குற்ற உணர்வுக்குள்ளானாள். கூரையில் நிலைத்திருந்த அவளது பார்வையைத் தழைத்து உடையை எங்கு விட்டேன் என்று யோசிக்கத் தொடங்கினாள். தட்டல் அதிகரித்துக்கொண்டேயிருந்ததால் குழப்பத்தில் அவளால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என் ரெயின் கோட் தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்து அதை எடுத்து அணிந்துகொண்டாள். பின் கதவைத் திறந்தாள்.
விசாரணையை மேற்கொள்ளப்போகும் ஒரு கெட்ட முகம் அங்கிருப்பதற்குப் பதிலாக ஒரு குள்ளமனிதர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர் வணக்கம் தெரிவித்தார். பேராசிரியர் வீட்டில் இருக்கிறாரா?என்று கேட்டார்.
இல்லை, அவர் வீட்டிலில்லை.” “இது பெரிய ஏமாற்றம்தான். அவளைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டார். விஷயம் என்னவென்றால், பேராசிரியர் என்னைப் பற்றி ஒரு மதிப்புரை எழுதியாகவேண்டும். எனக்கு அவர் உறுதி அளித்திருந்தார். மேலும், அது அவசரமும் கூட. நீங்கள் அனுமதித்தால் அவருக்கு ஒரு தகவல் விட்டுச் செல்வேன். 
கிளாரா அவருக்கு பேப்பரும் பென்சிலும் எடுத்துக் கொடுத்தாள். அன்று மாலை, மிகோலஸ் அலீஸின் கட்டுரையும் அதன் விதியும் என் கையிலேயே தங்கிவிட்டதையும் திரு.ஸ்ட்டுருஸ்கி மதிப்புரைக்காக என்னைத் தேடி மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடும் என்பதையும் அறிந்தபோது சோர்ந்து போனேன்.
6
மறுநாள், மேரி என்னிடம் வந்து, திரு.ஸ்ட்டுருஸ்கி எப்படி அவளை மிரட்டினார் என்றும், அவளுக்கு எதிராக எப்படி புகார் செய்ய முயன்றார் என்றும் விளக்கினாள். அவளுடைய குரல் நடுங்கியது. அழுது விடுவாளோ என்று தோன்றினாள். எனக்குக் கடும் கோபம் வந்தது. தற்சமயம் வரை என் கண்ணாம்பூச்சி விளையாட்டைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த என் காரியதரிசியின் உணர்வுகள் (என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும். எனக்கு அவள் உதவியதற்குக் காரணம் வெறும் விளையாட்டல்ல. என் மீதுள்ள பரிவு) காயப்படுத்தப்பட்டு விட்டதையும், நானே அவளுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அவள் தவறாகப் புரிந்துகொண்டாள். அத்தோடு என் புகலிடத்தை அவர் தெரிந்துகொண்ட விதமும் கிளாராவைப் பயமுறுத்தும் வகையில், என்னுடைய அறையின் கதவைத் தொடர்ச்சியாகத் தட்டியதையும் சேர்த்துக் யோசித்தபோது என்னுடைய கோபம் கட்டுக்கடங்காத வெறியாக மாறிற்று.
கடும் கோபத்தோடு உதட்டைக் கடித்துக்கொண்டு எப்படிப் பழிவாங்குவது என்று யோசித்தவாறு அறையில் நடமாடிக்­கொண்டிருந்தேன். அறையின் கதவைத் திறந்து கொண்டு திரு.ஸ்ட்டுருஸ்கி­ தோன்றினார்.
என்னைப் பார்த்தவுடன் அவருடைய முகத்தில் சந்தோசத்தின் கீற்று படரத் தொடங்கியது. வணக்கம் தெரிவித்துவிட்டு என்னை வரவேற்றார்.
என் கோபத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று நான் யோசித்து முடிப்பதற்கு முன்னமேயே அவர் வந்து சேர்ந்திருந்தார்.
நேற்று அவர் விட்டுச் சென்ற தகவல் கிடைத்ததா என்று கேட்டார்.
நான் அமைதியாக இருந்தேன்.
அவருடைய கேள்வியை நினைவூட்டினார்.
கிடைத்தது,” என்றேன்.
உங்களால் மதிப்புரை எழுத முடியுமா?
என் முன்நின்றுக் கொண்டிருந்த அவரைப் பார்த்தேன்: பிடிவாதம், பரிதாபம், மன்றாட்டம் எல்லாமிருந்தது. அவருடைய நெற்றியிலிருந்த சுருக்கத்தைப் பார்த்தபோது எரிச்சல் எழுந்தது. முரட்டுப் பிடிவாதத்தை வெளிப்படுத்துவதாக அது எனக்குத் தோன்றியது. அந்தச் சுருக்கத்தை ஆராய்நதபோது அது இரு புள்ளிகளுக்கு இடையிலிருக்கும் (ஒன்று அவருடைய கட்டுரை, மற்றொன்று என்னுடைய மதிப்புரை) நீண்டகோடு என்பதாகப் புரிந்துகொண்டேன். மேலும், கிறுக்குத்தனமான அந்தக் கோடு அவருக்கு ஒரு துறவு மனப்பான்மையை அளிப்பதாகவும் எனக்குத் தோன்றியது. சட்டென்று என்னுள் ஒரு கெட்ட எண்ணம் எழுந்தது.
நேற்று நடந்த விஷயங்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேச முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றேன் நான்.
புரியவில்லை” என்றார்.
நடிக்காதீர்கள் அவள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். எனக்கு ஒன்றும் தெரியாது என்று நீங்கள் சொல்ல முடியாது. 
அந்தக் குள்ளமனிதர் எனக்குப் புரியவில்லை, என்றார். இம்முறை அது அழுத்தமாக ஒலித்தது.
என் குரலை இயல்பாக வைத்துக்கொண்டேன். பாருங்கள் திரு. ஸ்ட்டுருஸ்கி, நான் உங்களை குற்றம் சாட்டப் போவதில்லை. நானும் ஒரு ஸ்திரிலோலன்தான். உங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் உங்களுடைய நிலையில் நான் இருந்தால்கூட, ஒரு ரெயின் கோட்டுக்குக் கீழே நிர்வாணமாக இருக்கும், அம்மாதிரியான அழகியை பார்த்தால் நானும்தான் கெடுக்க முயற்சிப்பேன்.
இது அநியாயம், என்றார் அவர். முகம் வெளுத்து விட்டது.
இல்லை, அதுதான் உண்மை.
அந்தப் பெண்ணா இதைச் சொன்னாள்?
அவள் என்னிடம் எதையும் மறைப்பதில்லை.
காம்ரேட் இது அநியாயம். நான் திருமணமானவன். எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். குழந்தை இருக்கிறது... ” அவர் ஒரு அடி முன்னோக்கி நகர்ந்தார். நான் ஒரு அடி பின்னகர்ந்தேன்.
திரு.ஸ்ட்டுருஸ்கி உங்கள் தகுதிக்கு இது ரொம்ப இழுக்கு. 
என்ன சொல்லுகிறீர்கள்? என்ன இழுக்கு? 
ஸ்திரிலோலர்களுக்குத் திருமணமாகிவிட்டால் இம்மாதிரியான சூழ்நிலைகள் எரிச்சலூட்டத்தான் செய்யும்.
திரு.ஸ்ட்டுருஸ்கி அச்சுறுத்தும் தொனியில், வார்த்தையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்,என்றார்.
சரி. அப்படியே இருக்கட்டும்,  என்றேன் நான். “ திருமணமானவர்களுக்கு எப்போதும் ஒரு எரிச்சலூட்டும் சூழ்நிலை தேவைப்படுகிறது. சிலவேளைகளில் அது உதவியாகவும் இருக்கிறது. சிலவேளைகளில், மன்னித்துக் கொள்ளுங்கள் ஸ்திரிலோலேரே.. ஒரு வகையில் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. நான் முன்னமே சொன்னது போல் எனக்கு உங்கள்மீது வருத்தமில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒரு விஷயம் தான் எனக்குப் புரியவில்லை. ஒருவருடைய காதலியைக் கெடுக்க முயற்சித்துவிட்டு அவரிடமே எப்படி ஒரு மதிப்புரையை எதிர்பார்க்கிறீர்கள்?
காம்ரேட் காட்சிக்கலையின் ஆசிரியர் டாக்டர்.கிளாசெக் தான் உங்களிடம் மதிப்புரை கேட்க சொன்னார். நீங்கள் கண்டிப்பாக இதை எழுதியாக வேண்டும். 
மதிப்புரையா? பெண்ணா? உங்களால் இரண்டையும் தேர்ந்தெடுக்கமுடியாது?
காம்ரேட், என்ன இது? ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?, திரு.ஸ்ட்டுருஸ்கி கடும் கோபத்தில் கத்தத் தொடங்கினார்.
இதிலுள்ள வினோதமான விஷயம் என்னவென்றால், திடீரென்று நானும் திரு.ஸ்ட்டுருஸ்கி கிளாராவைக் கெடுக்க முயன்றதாக நம்ப தொடங்கினான். உடன் கொதித்தெழுந்து நானும் கத்தினேன்.இதைச் சொல்வதற்கு..என்ன தைரியம்? இப்போதே நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவும் என் காரியதரிசியின் முன்பு.
திரு.ஸ்ட்டுருஸ்கிக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்றுகொண்டேன். அவர் குழம்பிப்போய் விட்டார். தடுமாறினார்.
சரி,” கடும் பிரச்சாரத்திற்குப் பிறகு வெற்றியடைந்த ஜெனரலைப்போல் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன். பின் மேரியைப் பார்த்து, இனி அவருக்கு என்னுடைய மதிப்புரை தேவைப்படாது, என்றேன்.
சில கணங்களுக்குப் பிறகு, மெல்ல சிரித்தபடி, மேரி, சங்கோஜப் பட்டுக்கொண்டே, என்னிடம் எதற்காக அந்த மதிப்புரையை எழுதமாட்டேன் என்கிறீர்கள்?  என்று கேட்டாள்.
டியர், எதற்காக என்றால் அவர் எழுதி உள்ளது எல்லாம் வெறும் குப்பை.
பிறகென்ன, உங்கள் மதிப்புரையில் அதைக் குப்பை என்று சொல்லிவிட வேண்டியதுதானே?
எதற்கு எழுதவேண்டும்? எதற்காக ஆட்களின் வெறுப்பை நான் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்? 
மேரி என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்தாள். அப்போது, கதவைத் திறந்துகொண்டு கையை உயர்த்தியபடி, திரு.ஸ்ட்டுருஸ்கி உள்ளே நுழைந்தார். குரல் நடுங்க, அது நானில்லை, நீங்கள்தான். நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்கபோகிறீர்கள் என்று கத்திவிட்டு மீண்டும் மறைந்துவிட்டார்.
7
அன்றைய தினமே, என்னுடைய தபால்பெட்டியில், முகவரி ஒன்றும் குறிப்பிப்படாத தபாலுறை ஒன்று கிடந்தது அல்லது அதற்கு சில நாட்களுக்கு பிறகாகவும் அது இருக்கலாம். அது எப்போது அங்கு வந்தது என்பதை என்னால் தெளிவாக நினைவுக்கூர முடிய வில்லை. உறையினுள் இருந்த கடிதம் கரடுமுரடான கையெழுத்தில் இருந்தது:
டியர் மேடம், வரும் ஞாயிறன்று உங்களை என் வீட்டில் எதிர்பார்க்கிறேன். என் கணவருக்கு milan gundraநிகழ்ந்த அவமரியாதையைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும். அன்று முழுவதும் நான் என் வீட்டிலேயே இருப்பேன். உங்கள் வருகை நிகழவில்லை என்றால் நான் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கவேண்டியிருக்கும் – 
அன்னா ஸ்ட்டுருஸ்கி, 14, டலிமிலோவா தெரு, ப்ரேக்-3. 
கிளாரா பயந்துவிட்டாள். என்னைப் பற்றி, என் குற்றவுணவர்களைப் பற்றி ஏதேதோ பிதற்றினாள். நான் கைகளை வீசி மறுத்தபடி வாழ்க்கையின் லட்சியமே சந்தோசம்தான் என்றும், வாழ்க்கை அலுப்பூட்டத் தொடங்கினால் இப்படி ஏதேனும் செய்து அதை நகர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று விளக்கினேன். அவ்வப்போது, நாம் இம்மாதிரி நிகழ்ச்சிகளை முடுக்கி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல், அந்தப் பெண்குதிரைகளைப் பார்த்தபடி பரதேசிகளைப் போல் புழுதியில் கால்களை இழுத்துக்கொண்டு கிடக்க வேண்டியதுதான் என்றேன். கிளாரா, நிகழ்ச்சிகளை முடுக்கிவிட வேண்டிய விருப்பம் அவளுக்கில்லை என்றபோது - நான், அவள் திரு அல்லது திருமதி. ஸ்ட்டுருஸ்கியோ அல்லது எவரையுமே காண வேண்டியதில்லை, எல்லாவற்றையும் – கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு - எந்த நிகழ்ச்சியை நான் முடுக்கி விட்டேனோ அதை – நானே பார்த்துக்கொள்வதாக அவளுக்கு வாக்களித்தேன்.
காலையில் வீட்டைவிட்டு கிளம்பியபோது வாயிற்காவலாளி எங்களைத் தடுத்து நிறுத்தினான். என்னிடம் விரோதத்தோடு அவன் நடந்து கொள்வதில்லை. ஒருமுறை, புத்திசாலித்தனமாக நான் அவனுக்கு ஐம்பது கிரவுன் லஞ்சம் கொடுத்திருந்தேன். இதுநாள் மட்டும் அவனுக்கு என்னோடு ஒரு சுமூக உறவு நிலவி வந்ததால் என் விஷயங்களில் தலையிடக்கூடாது என்பதை அவன் தெரிந்துவைத்திருந்தான். அப்பார்ட்மெண்டில் என்மீது கோபத்தில் குமுறிக்கொண்டிருப்பவர்களிடம்எரிகிற கொள்ளியில் எண்ணெயை வார்ப்பது போல் அவன் ஒன்றும் சொல்வதில்லை.
நேற்று ஒரு தம்பதி உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்கள் என்றான்.
எப்படியிருந்தார்கள்?
ஒரு குள்ளமனிதரோடு ஒரு பெண்மணி வந்தாள்.
பெண் எப்படியிருந்தாள்?
ஆளைவிட அவள் நல்ல உயரம். நல்ல வலு. வெடுவெடுன்றிருந்தாள். எல்லாவற்றையும் பற்றிக் கேட்டாள்.
அவன் கிளாராவைப் பார்த்து, குறிப்பாக உங்களைப் பற்றித்தான் அதிகம் கேட்டாள்
என்றான். நீங்கள் யார்? உங்களுடைய பெயர் என்ன?
கடவுளே! நீங்கள் என்ன சொன்னீர்கள்? என்று பதற்றமாக கேட்டாள் கிளாரா.
என்ன சொல்ல? பேராசிரியரைப் பார்க்க யார் வருகிறார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண் வருகிறாள்” என்றேன் என்றான் அவன். பிரமாதம்! என்றேன் நான். பாக்கெட்டிலிருந்து பத்து கிரவுனை எடுத்து அவன் கையில் திணித்தேன். இப்படியே தொடர்ந்து சொல்லிக்கொண்டிரு.
இதற்கெல்லாம் பயப்பட தேவையில்லை,” என்று கிளாராவைத் தேற்றினேன். “ஞாயிற்றுக் கிழமை நீ எங்கும் போக வேண்டாம். யாரும் உன்னை இங்கு கண்டுபிடிக்க முடியாது.
ஞாயிற்றுக்கிழமை வந்தது. பின் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வந்தது: ஒன்றும் நிகழவில்லை.பார், என்றேன் கிளாராவிடம்.
பிறகு வந்தது வியாழன். என் மாணவர்களுக்கு ரகசியமாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்தேன். எப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னலமற்ற காம்ரேடுகளான ஃபவிஸ்டுகள்(Fauvistl) இம்பிரஷ்னிஸ்ட் கதாபாத்திரங்களிலிருந்து நிறங்களை விடுவித்தார்கள் என்பதை நான் விளக்கிக்கொண்டிருந்தபோது கதவைத் திறந்துகொண்டு மேரி வந்தாள். கிசுகிசுக்த்தாள்: அந்த ஸ்ட்டுருஸ்கியின் மனைவி வந்திருக்கிறாள்,  என்றாள். ஆனால் நான் தான் இங்கில்லையே, என்றேன். பட்டியலைக் காட்டுவது தானே? மேரி, தலையசைத்து வேகமாக மறுத்தாள். நான் அதைக் காட்டினேன். ஆனால் உங்களுடைய அலுவலகத்திற்குள் அவள் எட்டிப் பார்த்துவிட்டாள். ஸ்டாண்டில் கிடந்த உங்களுடய ரெயின் கோட்டையும் பார்த்துவிட்டாள். காரிடாரில் இப்போது உங்களுக்காக காத்திருக்கிறாள்.
இப்படியான ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொள்ளும்போது தான் என் மூளை துரிதமாக வேலை செய்ய தொடங்கும். என் ப்ரியத்துக்குரிய மாணவன் ஒருவனை அழைத்து: எனக்கு ஒரு உதவி செய். என் அலுவலகத்திற்கு போ. அங்கு கிடக்கும் என் ரெயின்கோட்டை எடுத்து மாட்டிக்கொள். உடனே வெளியேறி விடு. ஏதாவது ஒரு பெண் உன்னைத் தொடர்ந்து வரலாம். நீதான் நான் என்று சொல்லலாம். உன் வேலை என்னவென்றால் அதை ஒரு போதும் நீ ஒத்துக்கொள்ள கூடாது.
அந்த மாணவன் உடன் கிளம்பிச் சென்றான் அரைமணிநேரம் கழித்துத் திரும்பினான். வேலை முடிந்துவிட்டது என்றும், பாதையில் இனி பிரச்சனை இருக்காது, அந்தப் பெண் வெளியேறிவிட்டாள் என்றும் தெரிவித்தான். இம்முறை, நான் ஜெயித்துவிட்டேன்.
பிறகு வெள்ளிக்கிழமை வந்தது. கிளாரா, ஒரு இலையைப் போல் நடுங்கிக் கொண்டே மதியம் வேலையிலிருந்து திரும்பியிருந்தாள்.
ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அலுவலகத்திலுள்ள நேர்த்தியான அறையில் வைத்துச் சந்திக்கும் கனவான் ஒருவர், தொழிற்கூடத்திற்குச் செல்லும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து - அங்குதான் கிளாராவும் பிற பதினைந்து தையல்காரிகளும் தையல் மிஷினில் பணிபுரிந்து கொண்டிருப்பார்கள் - யார், ஐந்து, சமிக்கா தெருவில் வசிக்கிறீர்கள்?என்று கேட்டார். கிளாராவிற்குத் தன்னை பற்றித்தான் விசாரிக்கிறார்கள் என்று புரிந்தது. காரணம் அது என்னுடைய முகவரி. என்னோடு அவள் வசித்துவருவது வேறு எவருக்கும் தெரியாதபோதும், ஏதோவொன்று அவளை அப்போது அமைதியாக இருக்கச் செய்தது. ஒருவரும் வாய் திறக்காததைக் கண்டு பாருங்கள்! இதைத்தான் நானும் அவளிடம் சொன்னேன், என்று முணுமுணுத்தபடி திரும்பினார். பிறகுதான், ஒரு மொண்ணையான பெண்குரல், அவர்களுடைய பெண்களில் ஒருத்தி, ஐந்து சமிக்கா தெருவில் வசித்து வருவதாக அவரைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது என்பதையும். அதற்குப் பின்தான் அவர் பணியாளர் பதிவேட்டை ஆராய்ந்திருக்கிறார் என்பதையும் கிளாரா தெரிந்துகொண்டாள்.
எங்களது எளிய அறைக்குள்ளும் திரு.ஸ்ட்டுருஸ்கியின் நிழல் மெதுவாகப் படரத் தொடங்கியதை உணர்ந்தேன்.
உன்னுடைய வேலையிடத்தை எப்படி அவளால் கண்டுபிடிக்க முடிந்தது? இங்குள்ளவர்களுக்கே அது தெரியாதே!. ” என்று கத்தினேன் நான்.
ஆம். இங்குள்ளவர்களுக்கு எதுவும் தெரியாது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒரு பெரிய மதிற்சுவருக்குப் பின்னால் எவரும் கண்காணிக்க முடியாத இடத்தில் ஒரு மடையனைப்போல் வாழ்ந்து வருவதாக என்னை நானே நினைத்துக்கொண்டேன். ஆனாலும் எல்லா சமயமும் ஒரு விஷயம் மட்டும் அவன் கண்ணிலிருந்து தப்பியிருந்தது: அது, எளிதில் ஊடுருவக்கூடிய கண்ணாடியால் ஆன சுவர்.
கிளாரா என்னோடு வசிப்பதை யாரும் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்று விரும்பினேன். அதற்காக வாயிற்காவலாளிக்குக் கொஞ்சம் பணமும் கொடுத்து வந்தேன். அதுவே அவளுக்குத் தொல்லையாயிற்று. யாருக்கும் தெரியாமல் அவள் நடமாடவேண்டும் என்று நான் நிர்பந்திக்க, இதற்கிடையில் அவளை எப்படியோ அறிந்து வைத்திருந்தவர்கள் - ஒருமுறை இரண்டாம் தளத்திலிருந்த பெண்மணியோடு அவள் மடத்தனமான பேச்சில் ஈடுபட்டிருந்தபோது அவள் எங்கு வேலை செய்கிறாள் என்பதை தெரிந்துகொண்டார்கள்.
இதற்கு பிறகு கூட, கொஞ்ச நாட்கள் யாருக்கும் சந்தேகம் வராத விதத்தில் நாங்கள் வசித்து வந்தோம். எங்களுடைய எதிரிகளுக்குத் தெரியாத ஒரே விஷயம் அவளுடைய பெயர் மட்டும்தான். இப்போது கடைசி ரகசியமாக எங்களுக்கு இருப்பது அது மட்டும்தான். விடாமல் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தும் திரு.ஸ்ட்டுருஸ்கியின் மனைவியிடமிருந்து நாங்கள் தப்பிவிட்ட போதும் அவளது அணுகுமுறையைப் பார்த்தபோது எனக்கு அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்படியே தொடர்ந்து நீடிப்பது சிரமம் என்பதைப் புரிந்துகொண்டேன். என் கதையிலுள்ள குதிரையை முடுக்கிவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் அப்போது நான் இருந்தேன்.
8
இது நடந்தது வெள்ளிக்கிழமை. சனிக்கிழமை கிளாரா மீண்டும் நடுங்கிக்கொண்டே வேலையிலிருந்து திரும்பினாள். அன்று நடந்தது இதுதான்:
திருமதி. ஸ்ட்டுருஸ்கி அவளது கணவரோடு அந்த உடைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்குக் கிளம்பினாள். முன்னமே மேனேஜரிடம் அவளுக்கும் அவளுடைய கணவருக்கும் தையல்காரிகளின் முகங்களைப் பார்ப்பதற்கு வசதியாகத் தொழிற்கூடத்தைப் பார்வையிட அனுமதி பெற்றிருந்தாள். இந்தக் கோரிக்கை நம் காம்ரேட் மேனேஜரை ஆச்சரியப்பட வைத்தது என்னவோ உண்மைதான் என்றாலும், அவரால் மறுக்கமுடியாத அளவிற்கு திரு.ஸ்ட்டுருஸ்கியின் மனைவி, வாதங்களை அடுக்கியிருந்தாள். மேலும் அவமதிப்பு, வாழ்க்கையே சீரழிந்துவிட்டது, நீதிமன்றம் போன்ற வார்த்தைகளை வெற்றாக அவள் உதிர்த்திருக்கிறாள். திரு.ஸ்ட்டுருஸ்கியோ அவளுக்குப் பின்னால் புருவத்தை நெரித்தபடி மௌனமாக நின்றிருக்கிறார்.
தொழிற்கூடம் அவர்களுக்குக் காட்டப்பட்டிருக்கிறது. தையல்காரிகள் தலையை வேண்டா வெறுப்பாகத் திருப்பினார்கள். கிளாரா, சட்டென்று அந்தக் குள்ளனை அடையாளம் கண்டுகொண்டாள். வெலவெலத்து போய்விட்டாள். வேலையோடு வேலையாக மறைந்துக்கொள்ள முடியுமா என்று பார்த்திருக்கிறாள்.
இறுக்கமாக நின்றுக்கொண்டிருந்த thamதம்பதிகளிடம், இப்போது நீங்கள் நின்று கொண்டிருப்பது தான் எங்களுடைய தொழிற்கூடம், என்றிருக்கிறார் அந்த மேனேஜர். திரு.ஸ்ட்டுருஸ்கியின் மனைவிக்கு அவள்தான் முயற்சி எடுத்துவேண்டும் என்பது புரிந்தது. கணவரிடம் கிசுகிசுத்தாள்: அவள் இங்கு இருக்கிறாளா என்று பாருங்கள்? 
என்றாள். திரு.ஸ்ட்டுருஸ்கி சிடுசிடுத்தார்.
கண்ணாடி அணிந்திருந்தபோதும் திரு.ஸ்ட்டுருஸ்கியால் அந்த அறையைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. எப்படியிருப்பினும், குப்பைக் கூளம் போல் துணிகள் குவிந்து கிடக்கும் அந்த அறையை ஆராய்வது அத்தனை எளிதல்ல - நீண்ட கம்பிகளில் தொங்கும் ஆடைகள்; வெவ்வேறு நிலைகளில், எழுந்து நிற்கும், வேண்டுமென்றே முகத்தை திருப்பிக்கொள்ளும்; படபடப்போடு அமர்ந்திருக்கும் தையல்காரிகள் – அவர்களில் எவரும் கதவைப் பார்த்து அமர்ந்திருக்கவில்லை. திரு.ஸ்ட்டுருஸ்கி இதன் காரணமாக ஒரு அடி முன்னகர்ந்து, யாருடைய முகத்தையும் விட்டுவிடக்கூடாது என்று கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினார்.
எவரோ தங்களை ஆராய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பெண்கள் – அதிலும் பார்க்கச் சகிக்காத மனிதனால் அது நிகழ்த்தப்படுகிறது என்கிறபோது – மிக மோசமாக முறையில் தாங்கள் அவமதிக்கப்படுவதாக உயர்ந்தார்கள். கேலியும் முணுமுணுப்பும் எழுந்தன. அவர்களிடையே இருந்த துணிச்சலான பெண்ணொருத்தி துடுக்குத்தனமாக ஒன்றைக் கூறிவிட்டு வெடித்துச் சிரித்தாள்: “ இவனை கர்ப்பமாக்கி விட்டு ஓடிவிட்ட பெருச்சாளியை தேடி பிராக் முழுவதும் அலைந்துக் கொண்டிருக்கிறான்!
பிடிவாதத்தோடு அங்கு நின்றுக் கொண்டிருந்த அந்த தம்பதிகளை அந்த பெண்களின் கேலியும் சிரிப்பும் உசுப்பிவிட்டது.
அம்மா!” அந்த துடுக்குத்தனமான பெண், திருமதி. ஸ்ட்டுருஸ்கியை நோக்கி மீண்டும் கத்தினாள், “ குட்டி பையனை எப்படி பார்த்துக் கொள்வது என்று உனக்குத் தெரியவில்லை. நானாக இருந்தால், இவ்வளவு அருமையான பிள்ளையை வெளியிலேயே விடமாட்டேன்!
திரு.ஸ்ட்டுருஸ்கியின் மனைவி அவளுடைய கணவனிடம் நன்றாகப் பாருங்கள்! என்று முணுமுணுத்தாள். அவர் சிடுசிடுத்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தார் ஏதோ அது அவருடைய கடை என்பது போல். பின் ஒவ்வொரு முகமாகப் பார்க்கத் தொடங்கினார்.
அந்நேரம் மட்டும் ஒன்றும் பேசாமல் சிரித்தபடியே நின்று கொண்டிருந்த மேனேஜர் – அவருக்கு அவருடைய பெண்களைப் பற்றி நன்றாகத் தெரியும் - ஆதலால் அவர்களுடைய கிண்டலை பொருட்­படுத்தாமல் திரு.ஸ்ட்டுருஸ்கியைப் பார்த்து: “ நீங்கள் தேடும் பெண் எப்படியிருப்பாள் என்று இப்போதாவது சொல்ல முடியுமா? என்று கேட்டார்.
திரு.ஸ்ட்டுருஸ்கி மேனேஜரைப் பார்த்து மெதுவாகவும் தீவிரமாகவும்: அழகி... அவள் நல்ல அழகி,என்றார்.
இதற்கிடையில், கிளாரா தனது எரிச்சல், தலை குனிவு, மற்றும் படபடப்பால் விளையாட்டுத்தனமாக பெண்களிடமிருந்து விலகி, ஒரு மூலையில் ஒடுங்கினாள். ஓ! அவளை மறைத்துக் கொள்வதற்குத்தான் அவள் எவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது. திரு.ஸ்ட்டுருஸ்கி இப்போது அவளுக்கு மிக அருகில் நிற்கிறார். ஓரிரு கணங்களில் அவர் அவளை பார்க்கப்போகிறார்.
அது போதாது. அவள் அழகு என்பது மட்டும், அவளைக் கண்டுபிடிக்கப் போதாது, என்றார் மேனேஜர்.
நிறைய அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவள் உயரமா அல்லது குள்ளமா? 
உயரம்,” என்றார் திரு.ஸ்ட்டுருஸ்கி.
மாநிறமா அல்லது சிகப்பா? திரு.ஸ்ட்டுருஸ்கி ஒரு வினாடி யோசித்தார்.
பிறகு சிகப்பு,  என்றார்.
நம் கதையில் வரும் இப்பகுதி அழகின் வல்லமையை வெளிப்படுத்தப்போகும் குட்டிக்கதையாக இருக்கப்போகிறது. முதன் முதலாக திரு.ஸ்ட்டுருஸ்கி கிளாராவை என்னுடைய இடத்தில் வைத்துப் பார்த்தபோது பிரமித்துவிட்டார். உண்மையில் அவர் அவளைப் பார்க்கவேயில்லை. அழகு ஒரு மெல்லிய திரைபோல் அவர் கண்ணுக்கு முன்னால் விரித்திருக்கிறது. ஒரு முக்காடிற்குள் ஒளிந்துகொள்வது போல் அந்த மெல்லியத் திரைக்குப் பின்னால் அவள் மறைந்து இருந்திருக்கிறாள்.
கிளாரா உண்மையில் உயரமானவளோ சிகப்பானவளோ அல்ல. அவளது உள்ளழகுதான் திரு.ஸ்ட்டுருஸ்கியின் கண்ணில் ததும்பி வழிந்து ஒரு பெரிய ஆகிருதி போல் அவளைத் தோன்ற செய்திருக்கிறது. மேலும், அதிலிருந்து வெளிப்பட்ட பிரகாசம் அவளுடைய தலைமயிருக்குப் பொன்னிறத்தை அளித்திருக்கிறது.
முடிவில், அந்தக் குள்ள மனிதர் மூலையை நெருங்கினார். சுருக்கம் விழுந்த சட்டையோடு பழுப்பு நிற மேலங்கி அணிந்தபடி வேலை செய்துகொண்டிருந்த கிளாராவைப் பார்த்தபோது அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. காரணம் அவர் ஒருபோதும் அவளைப் பார்த்ததில்லை.
9
கிளாரா முன்னுக்குப் பின் முரணாக அந்த நிகழ்வைப் பற்றி என்னிடம் சொல்லியபோது, நான் கிளாராவிடம், பார்! நாம் எத்தனை அதிர்ஷ்டசாலிகள், என்றேன்.
ஆனால் கிளாராவோ தேம்பியழுதபடி என்ன அதிர்ஷ்டம் இருக்கிறது என்கிறீர்கள்? இன்று கண்டு பிடிக்கவில்லை என்றால் நாளை கண்டுபிடித்துவிடப் போகிறார்கள், ” என்றாள்.
எப்படி முடியும் என்கிறாய்
அவர்கள் என்னைத் தேடி இந்த இடத்திற்கே வந்துவிடப்போகிறார்கள்...”
நான் யாரையும் உள்ளே விடவில்லை என்றால்...”
அவர்கள் போலீஸை அழைத்தால்?
வரட்டும். அவர்களிடம் நானே இந்த வேடிக்கையைப் பற்றிச் சொல்கிறேன். ஒருவிதத்தில் எல்லாமே வேடிக்கைதானே.. ”
இப்போதெல்லாம் வேடிக்கைக்குக் காலமில்லை, எல்லாமே ஆபத்துதான். நான் திரு. ஸ்ட்டுருஸ்கியின் பெயரைக் கெடுக்க விரும்பினேன் என்று அவர்களால் குற்றஞ்சாட்ட முடியும். அவரை உற்று கவனித்தாலே போதும், அவரால் ஒரு பெண்ணைக் கெடுக்க முடியுமா என்பது தெரிந்துவிடும்.
நீ சொல்வது சரிதான், அவர்கள் உன்னைச் சிறையில் அடைக்கவும் வாய்ப்பிருக்காது, என்றேன் நான்.
விளையாடாதே, என்றாள் கிளார. இது என் பெயரை எப்படிக் கெடுத்துவிடும் என்று உனக்குத் தெரியுமா? நான் ஒழுங்குநடவடிக்கை கமிட்டியின் முன்பு ஆஜராக வேண்டும். என் பதிவேட்டில் வேறு அதை எழுதிவிடுவார்கள். பிறகு இந்தத் தொழிற்சாலையிலிருந்து நான் ஒருபோதும் தப்பிக்க முடியாது. சரி, என்னை விளம்பரப் பெண்ணாக மாற்றிக் காட்டுகிறேன் என்று வாக்குறுதி தந்தாயே. அதாவது நினைவில் இருக்கிறதா? என்னால் இனி இங்கு இருக்கவே முடியாது. அவர்கள் எப்போது வருவார்களோ என்று பயந்துகொண்டே இருக்க வேண்டியதுதான். நான் சிலாகோவிஸ்ற்கே திரும்புகிறேன்,” என்றாள்.
அன்று நிகழ்ந்த முதல் உரையாடல் இதுதான்.
மதியம், எங்கள் இலாகா கூட்டம் முடிந்த பிறகு என் இரண்டாவது உரையாடல் நிகழ்ந்தது.
நரைத்த தலைமயிர் கொண்ட எங்கள் துறைச் செயலாளர் என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்தார். அவர் கலை இலக்கிய வரலாற்றாசிரியர். ஒரு அறிவுஜீவி.
இப்போது நீ பிரசுரித்துள்ள கட்டுரை உனக்கு உதவும் என்று நான் நம்பவில்லை, என்றார்.
ஆம். தெரியும், என்றேன்.
நம்முடைய பேராசிரியர்களில் பலர் உன் கட்டுரை அவர்களைப் பற்றி பேசுகிறது என்று நம்புகிறார்கள். உன் துறைத்தலைவரும் அவருடைய பார்வையை நீ மோசமாகத் தாக்குவதாகத்தான் நம்புகிறார்.
அதற்கு நான் என்ன செய்யமுடியும்? என்றேன் நான்.
ஒன்றும் செய்ய முடியாததுதான், ஆனால் ஒன்றை நீ ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உன் மூன்று வருட ஒப்பந்தம் முடிந்துவிட்டது. உன் இடத்திற்கு யார் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம். வகுப்பெடுத்த அனுபவசாலிகளுக்குப் பதவி அளிப்பது நம் வழக்கமாக இருந்தாலும் உன் விஷயத்தில் இது பொருந்தும் என்று நம்புகிறாயா? நான் உன்னை அழைத்தது இதைப் பற்றியெல்லாம் பேச அல்ல. இதுநாள் வரை நீ ஒழுங்காகப் பாடம் எடுத்திருக்கலாம். உன் மாணவர்களுக்கும் உன்னைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் இன்று? எவ்வளவு நாட்கள் இதை வைத்துக் காலங்கடத்த முடியும். கடந்த மூன்று மாத காலமாக நீ பாடமே எடுக்கவில்லை என்று உன் துறைத்தலைவர் சொல்கிறார். அவருக்கு எந்த முன்னறிவிப்பையும் நீ கொடுக்கவில்லை. இது ஒன்று போதும் உன்னைப் பதவி நீக்கம் செய்ய. 
நான் ஒரு வகுப்பைக் கூட புறக்கணிக்கவில்லை என்பதைப் பேராசிரியருக்கு விளக்கினேன். நடந்த விஷயங்கள் எல்லாம் ஒரு வேடிக்கையென்றும், திரு.ஸ்ட்டுருஸ்கிக்கும் கிளாராவிற்கும் இடையில் நிகழ்ந்த மொத்த கதையை பற்றியும் எடுத்து சொன்னேன்.
சரி, நான் உன்னை நம்புகிறேன், என்றார் என் பேராசிரியர். ஆனால் நான் உன்னை நம்பி என்ன ஆகிவிட போகிறது, எல்லா பேராசிரியர்களும் நீ வகுப்பே எடுப்பதில்லை, ஒன்றுமே செய்வதில்லை என்றல்லவா சொல்கிறார்கள். ஏற்கனவே யூனியன் மீட்டிங்கில் இதைப் பற்றிப் பேசிவிட்டார்கள். நேற்று விஷயத்தை லோக்கல் கமிட்டியிடம் எடுத்துச் செல்ல போவதாகப் பேசிக் கொண்டார்கள். 
ஆனால் இதைப் பற்றி அவர்கள் ஏன் என்னிடம் முதலில் பேசவில்லை.
என்ன பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? அவர்களுக்கு எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறது. இப்போது, உன் கடந்த கால நடவடிக்கையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். உன் கடந்த காலத்திற்கும் உன் நிகழ் காலத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று பார்க்கிறார்கள். 
என்னுடைய கடந்த காலத்திலிருந்து அவர்களால் என்ன கண்டுபிடித்து­விட­ முடியும்? நான் எப்படிப் பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். நான் எதையும் தட்டிக் கழிப்பதில்லை. என்னுடைய மனச்சாட்சி தெளிவாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் பல பரிமாணங்கள் இருக்கிறது, என்றார் பேராசிரியர். தொகுக்கிற விதத்தில் தொகுத்தால் ஒரு நல்ல குடிமகனின் வரலாற்றைக் கூட குற்றவாளியின் வரலாறாக மாற்றிவிட முடியும். சரி, உன்னைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார். உன் வேலையை நீ நேசிக்கிறாய் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? எந்தச் சந்திப்புகளிலும் உன்னைப் பார்க்க முடிந்ததில்லை. சரி, வந்தவற்றிலாவது ஏதாவது பேசினாயா? அதுவுமில்லை. நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்று ஒருவருக்குமே தெரியவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றி நாங்கள் எல்லாம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோது, நீ திடீரென்று கேலி பேசினாய். அது எத்தகைய அசௌகரியத்தை ஏற்படுத்தியது என்றாவது உனக்குத் தெரியுமா? அந்த அசௌகரியத்தை அப்போதே நாங்கள் மறந்து விட்டோம் என்றாலும், அதை இப்போது உன் கடந்த காலத்திலிருந்து எடுத்துப் பார்த்தால், அதற்கு ஒரு பிரத்யேக முக்கியத்துவம் இருப்பதுபோல் அல்லவா தெரிகிறது? உன்னைத் தேடி எத்தனைப் பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்திருப்பார்கள். அவர்களை நீ பார்க்க மறுத்ததாவது நினைவிருகிறதா? சரி, உன் சமீபத்தியக் கட்டுரைப் பற்றிப் பேசுவோம். அதில் சில இடங்கள் சந்தேகப்படும்படியாக இருக்கிறது என்பதாவது உனக்குத் தெரியுமா? எல்லாமே தனித்தனியான நிகழ்வுகள்தான். இருந்தாலும், எல்லாவற்றையும் இப்போது உன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்தின் ஒளியில் வைத்துப் பார்க்கும் போது, எல்லாம் உன் குணத்திற்கும் நடத்தைக்கும் எதிரான அத்தாட்சியாக அல்லவா திரள்கிறது.
ஆனால் நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்! என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக நானே சொல்கிறேன். மனிதார்த்தமான ஆட்களாக இருந்தால் இதை கேட்ட பிறகு சிரிப்பார்கள்.
உன் விருப்பப்படி செய். ஆனால் ஒன்று, மனிதார்த்தமான ஆட்கள் என்றால் யார் அல்லது மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீ விரைவில் தெரிந்து கொள்வாய். யாரும் சிரிக்க மாட்டார்கள். நடந்ததையெல்லாம் நீ அவர்களிடம் சொல்லும்போது உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து நீ வழுவியது மட்டுமல்லாது எதை செய்யக்கூடாதோ அதைச் செய்ததாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக நீ ரகசியமாக வகுப்பெடுத்தது என எல்லாம் வெளிப்பட துவங்கும். மேலும், உன்னிடம் உதவி கேட்ட மனிதனை நீ அவமதித்ததும்; உன் வாழ்வு ஒரு ஒழுங்கில்லை என்பதும்; அனுமதியில்லாமல் உன்னோடு ஒரு பெண் வசித்துவருகிறாள் என்பதும் வெளிப்படும். இவையெல்லாம், நாகரிகப் பெண்மணியான நமது யூனியன் செயலாளரிடம் உன்னைப் பற்றிய ஒரு மோசமான மனப்பதிவை ஏற்படுத்தும். எல்லாம் சேர்ந்து விஷயத்தைக் குழப்பி, பிறகு... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம், வேறு என்ன என்ன வதந்திகள் கிளம்பப் போகிறதோ என்று? ஆனால் ஒன்று, என்ன நடந்தாலும் எல்லாம் அவர்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கப் போகிறது.
இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் பேராசிரியர் என்னை ஏமாற்றவில்லை, எச்சரிக்கை செய்கிறார் என்று எனக்குத் தெரிந்தது. இருந்தபோதும், அவரை ஒரு அரைப்பைத்தியம் என்றுதான் நான் முடிவுசெய்திருந்தேன். அவருடைய சந்தேகங்களுக்கு என்னை ஒப்புக்கொடுத்துவிடக் கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். திரு.ஸ்ட்டுருஸ்கியுடனான எனது ஊழல் என்னைப் பயமுறுத்தியிருந்தபோதும் நான் முற்றாக நம்பிக்கை இழந்துவிடவில்லை. இந்தக் குதிரையை நானாகத்தான் முடுக்கிவிட்டேன். அதன் கடிவாளம் என் கையை அறுத்துக் கொண்டு ஓட நான் அனுமதிக்க மாட்டேன். போட்டிக்கு என்னை நானே தயார் செய்து கொண்டேன்.
குதிரையும் போட்டியிலிருந்து விலகப் போவதில்லை. நான் வீடு திரும்பியபோது தபால்பெட்டியில் எனக்கு ஒரு செய்தி காத்திருந்தது. லோக்கல் கமிட்டி மீட்டிங்கில் நான் ஆஜராக வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
10
முன்பு சேமிப்புக் கிடங்காக இருந்த இடமொன்றில் லோக்கல் கமிட்டியினர் கூடினார்கள். அங்கு நீண்ட மேஜை ஒன்று கிடந்தது. அதைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் நுழைந்தபோது என் முகம் இருண்டு கிடந்ததாகக் கற்பனை செய்துகொண்டார்கள். கண்ணாடி அணிந்த, தலை நரைத்த மனிதரொருவர் எனக்கு இருக்கையைக் காட்டினார். அவருடைய தாடை குறுகலாக இருந்தது. நான் நன்றி தெரிவித்து விட்டு அமர்ந்துகொண்டேன். அவர் பேசத் தொடங்கினார். சமீப காலமாக லோக்கல் கமிட்டியினர் என்னைக் கண்காணித்து வருவதாகவும் என்னுடைய பிரத்யேக வாழ்வு ஒழுங்கற்று இருப்பதால் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் எனக்கு அது நற்பெயரைப் பெற்றுத்தரவில்லை என்றும், எல்லாவற்றையும் கமிட்டி நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். மேலும், என்னுடைய அறையிலிருந்து எழும் கூச்சலால் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்களுக்கு உறக்கம் வருவதில்லை என்றும், அது குறித்து அவர்கள் முன்பே, ஒரு புகார் அளித்திருப்பதாகவும், அது ஒன்றே லோக்கல் கமிட்டியினர் என் மேல் நடவடிக்கை எடுக்க போதுமான சான்று என்றும் தெரிவித்தார். அத்தோடு காம்ரேட் ஸ்ட்டுருஸ்கியின் மனைவி வேறு அவர்களுக்கு உதவப் புறப்பட்டிருந்தார். ஆறு மாதத்திற்கு முன்பே அவருடைய கணவருடைய ஆய்வு கட்டுரையைப் பற்றி நான் ஒரு மதிப்புரை எழுதியிருக்க வேண்டும் என்றும், என்னுடைய மதிப்புரையால் தான் அதன் விதி தீர்மானிக்கப்படப்போகிறது என்பதை நான் நன்கு அறிந்திருந்தபோதும் நான் அவருக்கு உதவவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
குறுகலான தாடையுடைய மனிதரிடம் நான் குறுக்கிட்டேன், ஆய்வுக்கட்டுரை என்றால் என்னவென்று உங்களால் விளக்க முடியுமா? அது ஒரு எழுத்துத்­திருட்டுத்தான் என்று நான் சொன்னால் உங்களால் அதை மறுக்க முடியுமா?  என்று கேட்டேன்.
அப்போது, இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறதே காம்ரேட், என்றபடி நாகரிக உடையணிந்த, சிவந்த மேனியுடைய, முப்பது வயதையொத்த பெண்ணொருத்தி கலந்துரையாடலில் கலந்தாள். அவள் முகத்தில் ஒரு புன்முறுவல் ஒளிர்ந்தது. ஒரு கேள்வி கேட்க நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும், என்றாள். உங்களுடைய துறை என்ன? 
நான் ஒரு கலை இலக்கிய வரலாற்றாசிரியர்.
காம்ரேட் ஸ்ட்டுருஸ்கி?
தெரியாது, ஒருவேளை அவரும் இதையொத்த ஏதாவது ஒன்றை முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.
உடனேயே அவள் உற்சாகமாகி பிற உறுப்பினர்களைப் பார்த்து பாருங்கள்,” என்றாள். காம்ரேட் தன் துறைச் சார்ந்த பிற தொழிலாளர்களைத் தோழர்களாக அல்ல போட்டியாளர்களாகப் பார்க்கிறார். இப்போதெல்லாம் நமது அறிவுஜீவிகள் இப்படித்தான் சிந்திக்கிறார்கள், என்றாள்.
நான் தொடரலாமா?” என்றார் தாடை குறுகிய மனிதர். காம்ரேட், திருமதி. ஸ்ட்டுருஸ்கி எங்களிடம் அவரது கணவர் உங்கள் அபார்ட்மெண்ட்டில் வைத்து ஒரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். திரு.ஸ்ட்டுருஸ்கி பாலியல்ரீதியாக அவளைத் தொந்திரவு செய்துள்ளார் என்றும் அவள் உங்களிடம் குற்றம் சாட்டியிருக்கிறாள். காம்ரேட், திரு.ஸ்ட்டுருஸ்கியால் அப்படியான நடத்தையில் ஈடுபடமுடியாது என்பதற்கான ஆதாரங்கள் திருமதி. ஸ்ட்டுருஸ்கியின் கையில் உள்ளன. மேலும், திருமதி.ஸ்ட்டுருஸ்கி அவருடைய கணவர் மீது குற்றம் சுமத்திய பெண்ணின் பெயரைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளார். விஷயத்தை ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் எடுத்துச் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறார். இந்தத் தவறான குற்றச்சாட்டால் அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று நம்புகிறார்.
அந்த மடத்தனமாக விவகாரத்தை அத்தோடு வெட்டிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். பாருங்கள்! காம்ரேட், இதையெல்லாம் ஒரு பிரச்சினையாகக் கருத முடியாது. இந்தக் கேள்விகள் எல்லாம் பலவீனமாக இருக்கிறது. இதையெல்லாம் ஒருவர் சிபாரிசு செய்ய முடியாது. திரு. ஸ்ட்டுருஸ்கியும் அந்தப் பெண்ணும் ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டதற்காக எல்லாம் ஒரு கூட்டம் போடுவது வீண் என்பது என் எண்ணம்.
துரதிர்ஷ்டவசமாக இந்தக் கூட்டத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை காம்ரேட், என்றார் அந்த தாடை குறுகலான மனிதர். எப்போது நீங்கள் ஒரு காம்ரேடின் படைப்பை மோசம் என்று சொன்னீர்களோ அப்போதே அது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்பது எங்களுக்குத் தெரிந்துவிட்டது. திருமதி ஸ்ட்டுருஸ்கி எங்களிடம் ஒரு கடிதத்தைத் தந்திருக்கிறார். அது திரு.ஸ்ட்டுருஸ்கியின் படைப்பை படித்துமுடித்து பிறகு நீங்கள் எழுதிய கடிதம்.
ஆம். அந்த கடிதத்தில் அவருடைய படைப்பைப் பற்றி நான் ஒரு வார்த்தைக்கூட சொல்லியிருக்க மாட்டேன்.
உண்மைதான். ஆனால் கடிதத்தில் உங்களுக்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சிதான் என்று எழுதியிருக்கிறீர்கள். அவருடைய படைப்பின் மீது உங்களுக்கு மதிப்பு இருந்ததை கடிதம் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் இப்போதோ அதை ஒரு ஒட்டுவேலை என்று சொல்கிறீர்கள். ஏன் அதை அவருடைய முகத்தைப் பார்த்துச் சொல்லவில்லை?
பேராசிரியருக்கு இரண்டு முகங்கள் போலிருக்கிறது, என்றாள் சிவந்த மேனியடையவள்.
அந்த நேரம் ஒரு வயோதிக வசீகரப் பெண்மணி கலந்துரையாடலில் கலந்தாள். சட்டென்று விஷயத்தின் மையத்திற்கு அவள் வந்தாள்: காம்ரேட் எங்களுக்கு ஒன்று தெரியவேண்டும்? திரு.ஸ்ட்டுருஸ்கியை உங்கள் வீட்டில் வைத்துச் சந்தித்த பெண் யார்?
விஷயம் எதை நோக்கி போகிறது என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. எல்லாம் கைமீறி போவதற்கு முன் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். ஒரு வழிதான் புலப்பட்டது. தடயங்களையெல்லாம் அழிப்பது. அவர்களுடைய கவனத்தைக் கிளாராவிடமிருந்து திசை திருப்புவது. ஒரு கௌதாரி, வேட்டை நாய்களிடமிருந்து கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளைக் காப்பதற்கு எப்படித் தன்னைச் சமர்ப்பித்துக் கொள்கிறதோ அதைப்போல் நான் என்னை சமர்ப்பிப்பது என்று முடிவு செய்தேன்.
துரதிர்ஷ்டவசமாக அவளுடைய பெயரை நான் மறந்துவிட்டேன்,என்றேன்.
உங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணின் பெயரை எப்படி உங்களால் மறக்கமுடியும்?என்றாள் வயோதிகப் பெண்மணி.
பெண்களோடு உறவு வைத்துக்கொள்வதில் பேராசிரியர் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார், என்றாள் சிவந்த மேனியாள்.
என்னால் நினைவுகூர முடியும் ஆனால் அதற்குச் சிறிது சமயம் வேண்டும். திரு.ஸ்ட்டுருஸ்கி என்னை என்று சந்தித்தார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?
அது வந்து... ஒரு நிமிடம் பொறுங்கள், அந்த குறுகலான தாடை தன் கையிலிருந்த காகிதங்களைப் பார்வையிட்டது. பதினான்காம் தேதி, புதன் மதியம்.
புதன்... பதினான்கு... கொஞ்சம் பொறுங்கள், தலையைக் கையில் தாங்கி சிறிது சிந்தித்தேன். ஓ! ஞாபகம் வந்துவிட்டது. அது ஹெலினா, என்றேன். என்னுடைய வார்த்தைக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஹெலினா! யார் அவள்?
யார்? மன்னிக்கவும். அவள் யாரென்று எனக்கும் தெரியாது. அப்போது அதைப் பற்றி அவளிடம் கேட்கும் நிலையில் நானில்லை. உண்மையைச் சொன்னால் அவளுடைய பெயர் ஹெலினா தானா என்றுகூட எனக்குத் தெரியாது. எப்படியான போதிலும் அந்தப் பெயரைக் கொண்டு அவளை அழைப்பதை அவள் விரும்பினாள். முதன் முதலாகச் செவ்வாய்க்கிழமை மாலைதான் அவளைச் சந்தித்தேன். சிறிது நேரம் உரையாடியிருப்பேன். அவளுடைய கணவன் மெனிலஸ் மது அருந்துவதற்காக விடுதிக்குள் சென்றிருந்தான். மறுநாள் என் வீட்டிற்கு அவள் வந்திருந்தாள். மதியம் முழுவதும் என்னோடுதான் இருந்தாள். மாலை பல்கலைக்கழகத்தில் எனக்கு ஒரு சந்திப்பு இருந்ததால், ஓரிரு மணித்துளிகள் அவளைத் தனியே விட்டுச் சென்றேன். நான் திரும்பிய போது அவள் கடும் கோபத்தோடு இருந்தாள். யாரோ ஒரு குள்ள மனிதன் அவளிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றதாகவும், அதற்கு நானே காரணம் என்றும் குற்றம்சாட்டினாள். மேலே பேச முயன்றபோது அவள் எதையும் பேச விரும்பவில்லை. அவள் மனம் நொந்திருந்தாள். அதனால் தான் பாருங்கள், நான் அவளுடைய பெயரைக்கூடக் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை.
காம்ரேட் நீங்கள் உண்மையைத்தான் பேசுகிறீர்களா? அல்லது.. ” என்றாள் சிவந்த மேனியாள்.உங்களைப்போன்ற ஒரு மனிதர் எப்படி எங்கள் இளைஞர்களுக்கு வழிகாட்ட முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குடிப்பதையும் பெண்களைக் கெடுப்பதையும் தவிர உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமேயில்லை போலிருக்கிறது. ஆனால் ஒன்று, இதையெல்லாம் பற்றிய எங்களுடைய அபிப்ராயத்தை மேலிடத்திற்குத் தெரிவிக்கத்தான் போகிறோம்.
ஹெலினாவைப் பற்றி வாயிற்காவலாளி ஒன்றும் சொல்லவில்லையே, என்றபடி வயோதிக வசீகரப் பெண்மணி குறுக்கிடத் தொடங்கினாள். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணொருத்தி இவரோடு வசித்துவருவதாக சொன்னானே. அவளுக்குச் சரியான ஆவணங்கள் வேறு கிடையாதாம். காம்ரேட், நீங்கள் வாடகையறையில் தான் வசிக்கிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள். எப்படி ஒருத்தியோடு உங்களால் வாழ முடிகிறது. அது வீடா அல்லது விபச்சார விடுதியா?
சில தினங்களுக்கு முன் வாயிற்காவலாளியிடம் கொடுத்த பத்து கிரவுன் என் கண்முன் பளிச்சிட்டது. வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையடைந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். லோக்கல் கமிட்டியைச் சேர்த்த பெண் மேலும் தொடர்ந்தாள். அவளுடைய பெயரைச் சொல்வதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் சொல்லுங்கள். அதை போலீஸ் கண்டுபிடித்துக் கொள்ளும்,” என்றாள்.
11
என் காலடி நிலம் நழுவுவதை உணர்ந்தேன். பேராசிரியர் சொன்ன பிறகு பல்கலைக்கழகத்திற்குள் என் மீது ஒரு விதமான வெறுப்பு நிலவுவதைக் கண்டு­கொண்டேன். பிறகு வந்த சிறிது நாட்களுக்கு என்னை அழைத்து அவர்கள் மீண்டும் விசாரிக்கவில்லை. ஆனால் எனக்கு சந்தேகம் இருந்தது. அங்குமிங்கும் நடந்தபடி மேரி ஏதாவது பேசிக்கொண்டுதான் இருந்தாள். அவளுடைய அலுவலகத்தில் வைத்துப் பிற பேராசிரியர்கள் தேனீர் அருந்தியபடி சாடைமாடையாக ஏதோ பேசிக்கொண்டார்கள். எல்லா இடங்களிலிருந்தும் சாட்சியங்கள் திரட்டியப் பிறகு, ஓரிரு நாட்களுக்குள் தேர்வு கமிட்டி கூடுவதாக ஏற்பாடு. லோக்கல் கமிட்டியின் அறிவிக்கையைத் தேர்வு கமிட்டியினர் படித்திருப்பார்கள் என்று நான் கற்பனை செய்துகொண்டேன். லோக்கல் கமிட்டியின் அறிவிக்கையோ படு ரகசியமானது ஆதலால் ennaaஎன்னால் அதை நெருங்க முடியவில்லை.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இவ்வாறான சில கணங்கள் இருக்கத்தான் செய்கின்றன - ஆவேசத்தோடு சிலவற்றை பாதுகாக்க வேண்டியுள்ளது; சிலவற்றிற்கு பணிந்து செல்லவேண்டியுள்ளது - சில முக்கிய விஷயங்களை முன்னிட்டு, முக்கியத்துவம் குறைந்த விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டி சூழ்நிலை எழுகிறது. இவ்வாறானச் சூழ்நிலையில்தான், என்னுடைய காதல் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என எனக்குத் தோன்றியது. ஆம், நெருக்கடி மிகுந்த அந்த நாட்களில்தான், பூஞ்சையான துரதிர்ஷ்டம் வாய்ந்த என்னுடைய தையல்காரியை நான் உண்மையாகவே நேசிப்பதை உணர்ந்தேன்.
அன்று கிளாராவை ஒரு தேவாலயத்தில் வைத்துச் சந்தித்தேன். இல்லை, வீட்டில் சந்திக்கவில்லை. இத்தனை விஷயங்களுக்கு பிறகும் அதை ஒரு வீடாகக் கருத முடியுமா? கண்ணாடிச் சுவர்களாலான அறையை வீடு என்று சொல்ல முடியுமா? மேலும் பைனாகுலர்கள் வேறு அதைக் கண்காணிக்கின்றன. ஒரு கள்ளச் சரக்கைப் பாதுகாப்பதை விட அதிக கவனத்தோடு நாம் நேசிப்பவரைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது அப்படிப்பட்ட இடமெல்லாம் ஒரு வீடா?
வீடு வீடாக இல்லை. அங்கிருக்கும் போதெல்லாம் எப்போது மாட்டப் போகிறோமோ என பயந்தபடியிருக்கும் திருடனைப் போல் எங்களை நாங்கள் உணர்ந்தோம். காரிடாரில் ஒலித்த காலடி சப்தம் எங்களைப் பதற்றமூட்டியது. கதவை யாரோ தட்டப் போகிறார்கள் என்று பயந்தபடி தான் நாங்கள் அமர்ந்திருப்போம். கொஞ்ச காலத்திற்காவது - எங்களுக்கே அன்னியமாகிவிட்ட எங்களுடைய வீட்டில் வைத்து - இருவரும் சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். சிலாக்கோவிலிருந்து கிளாராவிற்காக என்னுடைய ஓவிய நண்பனின் ஸ்டுடியோவை ஒரு இரவிற்கு மட்டும் நான் வாடகைக்கு எடுத்தேன். முதன் முதலாக அவனுடைய அறையின் சாவியை நான் கையில் வாங்கினேன்.
இதன் மூலம் சின்னப் படுக்கையும் பெரிய ஜன்னலுமுடைய ஒரு பெரிய அறையில் நாங்கள் சந்தித்துகொண்டோம். அவ்வறையிலிருந்து முழு பிராக் நகரையுமே பார்க்க முடிந்தது. சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்த ஓவியங்களும், தாறுமாறாகக் கிடந்த பொருட்களும், அழுக்கடைந்த ஓவியனின் தோற்றமும் என எல்லாம் சேர்ந்து ஆசிர்வதிக்கப்பட்டதான சுதந்திரம் போன்ற ஒரு உணர்வு என்மேல் கவிந்தது. 
கைகால்களைப் பரப்பியபடி படுக்கையில் உருண்டேன். ஒரு ஒயின் பாட்டிலைத் திறந்தேன். ஒரு மகிழ்ச்சியான மாலைப்பொழுதை எதிர்பார்த்துக் காத்திருந்தபடி சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் அவளுடன் உரையாடத் தொடங்கினேன்.
அப்போது நான் உணராத மன அழுத்தம் முழுவதும், அதன் முழுச்சுமையோடு கிளாராவின் மீது கவிந்ததது.
நான் முன்னமே கூறியபடி, அவள் முன்பெல்லாம் எவ்விதத் தயக்கமோ வருத்தமோயின்றி என் அறையில் வசித்திருக்கிறாள். ஆனால் இப்போது, வேறொருவருடைய அறையில் வைத்துச் சந்திக்கும்போது அவள் எரிச்சல் அடைந்தாள். இது ரொம்ப அவமானமாக இருக்கிறது, என்றாள்.
என்ன அவமானம்?
ஒரு இடத்தை வாடகைக்குப் பிடிப்பது.
ஒரு இடத்தை வாடகைக்கு எடுப்பதையெல்லாம் அவமானமாகக் கருத வேண்டியதில்ல.
இருந்தாலும், அவமானப்படுத்துகிற மாதிரியான விஷயங்கள், இதில் இருக்கத்தான் செய்கின்றன.
அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.
அதுதான் எனக்குத் தெரியுமே,” என்றாள் அவள். வாடகை இடத்தில் வேசியைப் போல் என்னை உணர்கிறேன்.
அட ஆண்டவா! நீ எதற்கு உன்னை வேசியை போல் உணரவேண்டும். உனக்கு ஒன்று தெரியுமா? வேசிகளெல்லாம் அவர்களுடைய சொந்த இடத்திலிருந்து தான் இந்த தொழிலை புரிவார். வாடகை இடத்திலிருந்து அல்ல.
அவளுடைய கற்பனையின் மீதான நுட்பமான தாக்குதல் இது. பெண்களின் ஆன்மா இவ்வாறான உணர்வுகளால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே எங்களுடைய உரையாடலில் ஒரு கெட்ட வாசனை படிந்திருந்தது.
பேராசிரியர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களையெல்லாம் நான் கிளாராவிடமும் பகிர்ந்து கொண்டேன். லோக்கல் கமிட்டியில் நடந்த விஷயங்களையும் அவளிடம் சொன்னேன். நான் கிளாராவை ஒருவாறு சமாளித்து, ஒருவரை ஒருவர் நாம் உண்மையாக நேசித்தால் முடிவில் வென்றுவிடலாம் என்று நம்பிக்கையூட்ட முயற்சித்தேன்.
கிளாரா, கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினாள்.
தயவு செய்து அந்தத் தையல்காரிகளிடமிருந்து உன்னால் என்னை காப்பாற்ற முடியுமா?” 
கொஞ்சம் நாட்களுக்கு நாம் பொறுமையைத்தான் கடைபிடித்தாக வேண்டும், என்றேன் நான்.
பார்! நீ தான் எனக்கு முதலில் வாக்குறுதி தந்தாய். ஆனால் இன்றுவரை ஒன்றும் செய்யவில்லை. இதிலிருந்து விடுபட எனக்கு யாராவது உதவ முன்வந்தால் கூட அவர்களால் உதவ முடியாது போலிருக்கிறது. என் பெயரை நீ முழுதாகக் கெடுத்து வைக்கிறாயே.
நான் கிளாராவிடம், அவளுக்கும் திரு.ஸ்ட்டுருஸ்கிக்கும் இடையிலான விஷயம் அவளுடைய வாழ்வை எவ்விதத்திலும் பாதிக்காது என்று ஆறுதல் கூறினேன்.
எனக்கு ஒன்று புரியவில்லை. நீ ஏன் அந்த மதிப்புரையை எழுத மறுக்கிறாய். அதை எழுதிவிட்டால் இந்தப் பிரச்சினையெல்லாம் தீர்ந்து விடாது, ” என்று கேட்டாள்.
காலம் கடந்துவிட்டது கிளாரா, என்றேன் நான். அந்த மதிப்புரையை இப்போது நான் எழுதினால் பழி தீர்த்துக்கொள்வதற்காக எழுதுகிறேன் என்று புரிந்துகொள்வார்கள். இது அவர்களை மேலும் கோபம் கொள்ளச்செய்யும்.
எதற்குக் கண்டித்து எழுதுகிறாய். அவருக்கு சாதகமாக எழுதி விட வேண்டியதுதானே. 
அது என்னால் முடியாது. அது சுத்த அபத்தம்.
ஏன் கூடாது? திடீரென்று முழு யோக்கியனாக ஏன் வேஷம் போடுகிறாய்? அந்தக் குள்ளனிடம்காட்சிக்கலைக்கு உன் மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது என்பதை நீ மறைக்கவில்லையா? அந்தக் குள்ளன் என்னைக் கெடுக்க முயற்சித்தான் என்று பொய் சொல்லவில்லையா, ஹெலினா என்ற பெண்ணை நீ கண்டுபிடிக்கும்போது அது பொய்யாக தெரியவில்லையா. இவ்வளவு பொய்கள் சொன்ன பிறகு மேலுமொரு பொய் சொல்வதில் என்ன வந்துவிடப் போகிறது. ஒன்று தெரிந்துகொள். இது ஒன்றுதான் இப்போது நம் பிரச்சினையை தீர்ப்பதற்குள்ள ஒரே வழி.
இங்கு பார், கிளாரா, நீ ஒரு பொய்யைப் பொய்யாகத்தான் பார்க்கிறாய். மேலும், அப்படிப் பார்ப்பதைச் சரியென்றும் நம்புகிறாய். ஆனால் உண்மை அதுவல்ல. நான் பல பொய்கள் சொல்கிறவன்தான். பலரை முட்டாள் ஆக்கியிருக்கிறேன். குறும்பு செய்திருக்கிறேன். கேலி செய்திருக்கிறேன் – ஆனால் இதையெல்லாம் வைத்து நான் என்னை ஒரு பொய்யன் என்று கருதவில்லை. என் மனச்சாட்சி தெளிவாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களையெல்லாம் – இவற்றையெல்லாம் நீ ஒரு பொய்யாகக் கருதினால் – ஒரு வகையில் அவை தான் என்னை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும், அதைக்கொண்டு நான் எதுவும் செய்வதில்லை. ஒரு வகையில் இந்த பொய்களைக் கொண்டுதான் நான் உண்மையைப் பேசுகிறேன். ஆனால், எனக்கென்று சில விஷயங்கள் உள்ளன. அது பற்றி என்னால் பொய் பேச முடியாது. அந்த விஷயங்களையெல்லாம் நான் ஊடுருவியிருக்கிறேன். புரிந்துகொண்டிருக்கிறேன். உண்மையாகவே நேசிக்கிறேன். மேலும் அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். அவற்றைக் கேலி செய்ய என்னால் முடியாது. ஒருவேளை அப்படி ஏதேனும் செய்தால் அதை மிகப்பெரிய அவமானமாகக் கருதுகிறேன். அது சாத்தியமேயில்லை. அதைச் செய்யும்படி என்னை நிர்பந்திக்காதே. என்னால் முடியாது.
நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை.
இருந்தபோதும் கிளாராவை நான் மெய்யாகவே நேசித்தேன். என்னால் முடிந்தமட்டும் அவளுக்கு உதவுவது என்று தீர்மானித்தேன். அதற்குப் மறுநாள், திருமதி. ஸ்ட்டுருஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், மதியம் இரண்டு மணிக்கு என் அலுவலகத்தில் அவரை எதிர்பார்ப்பதாகத் எழுதியிருந்தேன்.
12
திருமதி.ஸ்ட்டுருஸ்கி அவளுடைய பிடிவாதத்திற்கு ஏற்றாற்போல குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமாக ஆஜர் ஆனார். நான் கதவைத் திறந்து வரவேற்றேன்.
பிறகுதான் அவளை பார்த்தேன். நல்ல உயரம். நீலக் கண்கள். பாந்தமான முகம். 
உங்கள் அங்கியைக் நீங்கள் கழற்றலாம், என்றேன் நான். தடுமாறியபடி அலங்கோலமாக அதை அவள் கழற்றினாள். வித்தியசமான, நீண்ட, இடுப்பு குறுகிய அந்த கருப்பு அங்கியைப் பார்த்தபோது - ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் – ஏனோ ஒரு ராணுவ அங்கியைப் போல் அது எனக்குக் தோன்றியது.
உடனேயே என்னுடைய தாக்குதலைத் தொடங்க நான் விரும்பவில்லை. என் எதிரிக்கு அவளுடைய சீட்டுகளைக் காட்ட வாய்ப்பளித்தேன். திருமதி. ஸ்ட்டுருஸ்கி அமர்ந்த பிறகு, சாடைமாடையாக பேசி உரையாடலைத் தொடங்கினேன்.
திருமதி.ஸ்ட்டுருஸ்கி சீரிய தொனியில் பேராசிரியரே என்று தொடங்கினாள். சண்டைக்கான முனைப்பொன்றும் அதில் தென்படவில்லை. நான் ஏன் உங்களைத் தேடினேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என் கணவருக்கு உங்கள்மீது அபரிதமான மரியாதை உண்டு. உங்களுக்குள்ள நற்பெயரைப் பற்றி எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு அறிஞர். உங்களுடைய மதிப்புரையில் தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. ஆனால் உங்களுக்கோ அவருக்கு உதவ மனமில்லை. இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு என் கணவருக்கு மூன்று வருடம் பிடித்தது. அவருடைய வாழ்க்கை உங்கள் வாழ்க்கையை விடக் கடினமானது. அவர் ஓர் ஆசிரியர். பிராக்கிலிருந்து தொலைவில் வசிப்பதால், தினசரி அறுபது கிலோமீட்டர் அவர் பயணம் செய்ய வேண்டியுள்ளது. போன வருடம் நான்தான் அவரை வற்புறுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தேன்.
திரு.ஸ்ட்டுருஸ்கி இப்போது வேலையில் இல்லை?
இல்லை.
எப்படி வாழ்கிறார்?
சமீப காலமாக நான்தான் வேலைக்குப் போகிறேன். இந்த ஆராய்ச்சி என் கணவருடைய நீண்ட நாள் கனவு. இதற்காக அவர் எவ்வளவு பக்கங்களைப் படித்திருப்பார் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தால் தான் அவருடைய உழைப்பை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவர் எப்போதும் ஒன்று சொல்வது வழக்கம். ஒரு உண்மையான ஆய்வாளர் முப்பது பக்கங்களுக்காக முன்னூறு பக்கங்களை எழுதவேண்டும் என்பார். அத்தோடு இந்தப் பெண் வேறு.. என்னை நம்புங்கள், எனக்கு அவரைத் தெரியும். என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அவர் இதைச் செய்திருக்கமாட்டார். எதற்காக அந்தப் பெண் இவரைக் குற்றஞ்சாட்ட வேண்டும்? என்னால் நம்ப முடியவில்லை. அதை என் கணவர் முன்னும் என் முன்னும் வைத்துச் சொல்லச் சொல்லுங்கள். பெண்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் உங்களை அதிகம் நேசித்திருக்க வேண்டும் நீங்கள் அவளை அலட்சியப்படுத்தி இருக்கலாம். உங்கள் பொறாமையைத் தூண்டுவதற்காகக் கூட அவள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். முதலில் நீங்கள் என்னை நம்பவேண்டும். இம்மாதிரியான விஷயங்களைச் செய்வதற்கு என் கணவர் அஞ்வார்.
திருமதி. ஸ்ட்டுருஸ்கி சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தபோது, சட்டென்று ஏதோ என்னுள் நிகழ்ந்தது: இந்தப் பெண்ணை முன்னிட்டுதான், பல்கலைக்கழகத்தை நான் விட வேண்டியிருந்தது. இவள் பொருட்டுத்தான் எனக்கும் கிளாராவிற்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது. இவளால்தான் நான் பல நாட்களைக் கோபத்திலும் மகிழ்ச்சியின்மையிலும் கழித்திருக்கிறேன். நடந்து முடிந்து விட்ட நிகழ்ச்சிகளுக்கும் அவளுக்குமான உறவைப் பற்றி யோசித்தபோது – இதில் நாங்கள் இருவருமே சோகப்பாத்திரங்களைத்தான் வகித்தோம் – சட்டென்று எல்லாம் விஷயமற்றதாக, எங்கள் கைமீறியதாக, தற்செயலானதாக, எங்களுடைய தவறு என்பது ஒன்றுமற்றதாக எனக்குத் தோன்றியது. இந்நிகழ்ச்சிகளை எல்லாம் நாங்கள் தான் முடுக்கிவிட்டோம் என்று நான் நம்பியது, என்னுடைய கற்பனையை தவிர ஒன்றுமில்லை என்று எனக்குப் புரிந்தது. உண்மை என்னவென்றால் அதுஎங்களுடைய கதையல்ல எங்கோ வெளியிலிருந்து எங்கள்மீது கவிந்துவிட்ட கதையது. எவ்விதத்திலும் நாங்கள் அதன் பிரதிநிதி இல்லை. அவை ஒரு வினோதப் பாதையைப் பின்பற்றியதற்கு எங்களை குறைசொல்ல முடியாது. இதில் அவை எவர்களால் வழிநடத்தியிருக்கலாம் என்று எவருக்கும் தெரியாது. ஒருவேளை, அவை அமானுஷ்ய சக்திகளால் வழி நடத்தப்பட்டிருக்கலாம்.
திருமதி.ஸ்ட்டுருஸ்கியின் கண்களை பார்த்தபோது, அந்தக் கண்கள் என் செயலின் விளைவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை என்பதாக; எதையும் பார்க்கவில்லை என்பதாக; வெறுமனே மிதந்துகொண்டிருப்பதாக; ஒட்டிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
நீங்கள் சொல்வதெல்லாம் ஒருவிதத்தில் சரியாக இருக்கலாம், என்றபடி குரலில் ஓர் இணக்கத்தை வெளிப்படுத்தினேன். என்னுடைய பெண் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால், உங்களுக்குத் தெரியும், ஒரு ஆணின் பொறாமை எப்படிப்பட்டதென்று. அவளை நான் முழுமையாக நம்பியதால் தான் பிரச்னை இப்படி வளர்ந்துவிட்டது. இது யாருக்கும் நடக்கக்கூடியதுதான். ”
ஆம் நடக்கக்கூடியதுதான், என்றாள் திருமதி.ஸ்ட்டுருஸ்கி. அவளுடைய மனதிலிருந்த பளு நீங்கிவிட்டதற்கு அதுதான் சாட்சி. நீங்களே இதை புரிந்துகொண்டது நல்ல விஷயம். எங்களுக்கு இருந்த பயமெல்லாம் நீங்கள் அவளை முழுமையாக நம்பி விடுவீர்களோ என்பதுதான். அவள் என் கணவருடைய வாழ்க்கையை கெடுத்திருப்பாள். அவள் ஏற்படுத்திய மனநெருக்கடியைப் பற்றி நான் பேசவில்லை. அதைச் சமாளித்துவிட முடியும். ஆனால் மதிப்புரையைப் பொறுத்தமட்டில் உங்களைத்தான் அவர் நம்பியிருக்கிறார். அந்தப் பதிப்பாசிரியர்களும் எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். அது பிரசுரமானால் மேலாய்வு செய்ய என் கணவரை அனுமதிப்பார்கள். உங்களை நான் ஒன்று கேட்கலாமா? இப்போது தான் எல்லாம் சரியாகிவிட்டதே. இனியாவது அந்த மதிப்புரையை உங்களால் எழுதி தரமுடியுமா?
அப்போது, எல்லாவற்றிற்குமாக என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அந்த தருணத்தில் தான், ஒரு குட்டிகோபம்கூட என் மனதில் எழவில்லை. வேறு வழியில்லை என்பதால் தான் அதைப்பற்றி பேச வேண்டியதாயிற்று: திருமதி.ஸ்ட்டுருஸ்கி, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இதைப்பற்றி பேசுவதில் எனக்குச் சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. எல்லாம் ஏன் இப்படி நடந்தது என்பதை என்னால் விளக்கமாகச் சொல்லமுடியும். என்னால் மனிதர்களின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியற்ற விஷயங்களைப் பேசமுடியாது. இதுதான் என் பலவீனம். உண்மையில் திரு.ஸ்ட்டுருஸ்கியை பல்வேறுவிதமாகத் தவிர்த்துவந்தேன். அதை அவர் புரிந்துகொள்வார் என்று நம்பினேன். அவருடைய கட்டுரை மிகவும் பலவீனமானது. அதற்குப் பெரிய மதிப்பொன்றும் கிடையாது. உங்களால் என்னை நம்ப முடிகிறதா?
இதை நம்புவதற்கு எனக்கு சிரமமாக இருக்கிறது. உங்களை என்னால் நம்ப முடியவில்லை. 
அத்தோடு, இது உண்மையான ஆய்வுக்கட்டுரையில்லை. நான் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஒரு அறிஞன் எப்போதும் புதிதான ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் பிறர் எழுதியதையோ அல்லது எல்லோருக்கும் தெரிந்ததையோ அவன் பிரதியெடுக்கக்கூடாது.
என்னுடைய கணவர் எதையும் பிரதியெடுக்கவில்லை.
நீங்கள் அவருடைய கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான் பேச்சைத் தொடர்ந்தேன். ஆனால் திருமதி.ஸ்ட்டுருஸ்கி குறுக்கிட்டார்.
இல்லை, படிக்கவில்லை.
எனக்கு ஆச்சரியமாகயிருந்தது. பின், இப்போதாவது படியுங்கள், என்றேன்.
என் கண்கள் பழுதடைந்துவிட்டன, என்றார். கடந்த ஐந்து வருடமாக நான் ஒரு வரிகூட வாசிக்கவில்லை. அதற்காக என் கணவரின் யோக்கிதையை நான் படித்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. அதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஒரு தாய்க்குத் தன் குழந்தையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அந்த அளவிற்கு என் கணவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் என்னிடம் எதையும் மறைத்ததில்லை. அவர் எதைச் செய்தாலும் அதில் உண்மையிருக்கும். 
அப்போது சற்றுக் கீழ்த்தரமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளானேன். திருமதி.ஸ்ட்டுருஸ்கியிடம் சில புத்தகங்களை எடுத்து, சில வாக்கியங்களை சத்தமாக வாசித்துக்காட்டினேன். அந்த ஆசிரியர்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் திரு.ஸ்ட்டுருஸ்கி எப்படி எடுத்துக் கையாண்டிருக்கிறார் என்பதை விளக்கினேன். அது மனப்பூர்வமாகச் செய்யப்பட்ட திருட்டா என்பதல்ல கேள்வி. சில ஆசிரியர்களை அவர் மட்டுமீறி மதித்ததன் விளைவாக அவரை அறியாமலேயே அந்த நிபுணர்களின் கருத்துக்களை அவர் ஸ்வீகரித்து இருந்திருக்கிறார். எந்தத் தீவிர இதழும் திரு.ஸ்ட்டுருஸ்கியின் கட்டுரையை பிரசுரிக்காது.
திருமதி. ஸ்ட்டுருஸ்கி என் விளக்கத்தை எவ்வளவு தூரம் கவனித்தார், புரிந்துகொண்டார் என்று எனக்கு தெரியாது. ஆனால் மிகுந்த அடக்கத்தோடு தனக்கு விதிக்கப்பட்ட இடத்தை விட்டு தன்னால் நகரமுடியாது என்பதை அறிந்த ராணுவவீரன் போல் அமைதியாக வீற்றிருந்தார். எல்லாவற்றையும் பேசிமுடிக்க அரை மணி நேரம் ஆயிற்று. திருமதி. ஸ்ட்டுருஸ்கி இருக்கையிலிருந்து எழுந்தார். ஊடுருவும் விழிகளை என் மேல் பதித்தார். மெல்லிய தொனியில் என்னிடம் மன்னிப்புகோரினார். இத்தனைக்கு பிறகும், அவருக்கு, அவருடைய கணவரின் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை என்பதை என்னால் அப்போது உணரமுடிந்தது. என் வாதங்களுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று அவருக்கு தெரியவில்லை என்பதால் அவரைத் தவிர வேறு எவரையும் அவரால் கடிந்துகொள்ள முடியவில்லை. என் வாதங்கள் குழப்பமானதாகவும் மடத்தனமானதாகவும் அவருக்கு தோன்றியது. ராணுவ அங்கியை எடுத்து அணிந்து கொண்டார். அவர், உடலாலும் மனதாலும் ஆன ஓர் மெய்யான ராணுவ வீரன். நீண்ட பயணங்களால் சோர்வுற்ற, துரதிர்ஷ்டம் மிகுந்த ஓர் உண்மையான ராணுவ வீரன். கட்டளைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாதவன். ஆட்சேபிக்காமல் கட்டளைகளை நிறைவேற்றுபவன். எப்போதும் தோற்கடிக்கப்படுபவன். ஆனால் இந்த தோல்விகளால் அவனை இழிவுபடுத்திவிட முடியாது என்பதை அப்போது நான் புரிந்துகொண்டேன்.
13
ஓரிரு நாட்களுக்குப் பிறகு டால்மேட்டியா உணவுவிடுதியில் வைத்து நாங்கள் சந்தித்துக்கொண்டபோது, கிளாராவிடம் இனி, எதற்கும் நீ பயப்பட வேண்டியதில்லை, என்றேன் நான். திரு.ஸ்ட்டுருஸ்கியின் மனைவிக்கும் எனக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை சொன்னேன்.
எதற்காக நான் பயப்படவேண்டும், என்று தன்னம்பிக்கை இழையோடிய குரலில் பதில் சொன்னாள் கிளாரா. அவளுடைய தன்னம்பிக்கை எனக்கு ஆச்சரியமூட்டியது.
பயப்படத் தேவையில்லையா? எனக்குப் புரியவில்லை. உன் பொருட்டுதான் திருமதி. ஸ்ட்டுருஸ்கியையே நான் சந்தித்தேன்.
நீ அவளைச் சந்தித்தது நல்லது. தேவையில்லாமல் நீதான் அவர்களைத் தொந்தரவு செய்திருக்கிறாய். டாக்டர் கிளாசெக் சொன்னது சரிதான். ஒரு அறிவுள்ள மனிதருக்குகூட இதையெல்லாம் புரிந்துகொள்வது கடினம்.
நீ எப்போது கிளாசெக்கை சந்தித்தாய்?
நான் அவரை பார்த்தேன்.
எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிட்டாயா?
எதை? இதென்ன ரகசியமா என்ன? நீ யார் என்பதை நான் நன்கு தெரிந்து கொண்டேன். 
அப்படியா?
ஆம். நீ யார் என்று சொல்ல வேண்டுமா?
தயவுசெய்து சொல்.
சிடுமூஞ்சி
கிளாசெக் சொன்னாரா?
ஏன்? இதை கிளாசெக்கிடமிருந்து தான் நான் தெரிந்துகொள்ள வேண்டுமா? என்னால் கண்டுபிடிக்க முடியாது? என்னால் உன்னை மதிப்பிட முடியாது என்று நீ நம்புகிறாய் அல்லவா. எல்லாம் உன் விருப்பப்படிதான் நடக்க வேண்டும். நீதானே திரு. ஸ்ட்டுருஸ்கிக்கு மதிப்புரை எழுதித்தருவதாக வாக்கு கொடுத்தாய்?
எழுதி தருவதாக நான் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை.
எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னாய். என்னிடம் திரு. ஸ்ட்டுருஸ்யை ஒரு சாக்காகவும் திரு.ஸ்ட்ருஸ்கியிடம் என்னை ஒரு சாக்காகவும் நீ நன்கு பயன்படுத்திக்கொண்டாய். ஆனால் என்னால் ஒரு வேலை வாங்கிவிட முடியும் என்பது உனக்குத் தெரியாது.
கிளாசெக் வழியாகவா? என்றேன் சற்றே ஏளனமாக.
கண்டிப்பாக, உன் வழியாக அல்ல. நீ அதிகம் விளையாடி விட்டாய். எவ்வளவு தூரம் விளையாடிகிருக்கிறாய் என்று கூட உனக்குத் தெரியாது.
உனக்குத் தெரியுமா?
ஆம். உன் ஒப்பந்தத்தை அவர்கள் புதுப்பிக்கப்போவதில்லை. ஏதேனும் நாட்டுப்புறத்திலுள்ள ஒரு கலைக்கூடத்தில் ஒரு குமாஸ்தா வேலை கிடைத்தால் நீ சந்தோசபட்டு கொள்ள வேண்டும். எல்லாம் உன் தவறால் விளைந்ததுதான் என்பதை நீ உணருவாய். நான் ஏதாவது அறிவுரை சொல்லலாம் என்றால் ஒன்றை மட்டும் உனக்கு சொல்லிகொள்கிறேன்: இனியாவது நேர்மையாக நடந்து கொள். பொய் சொல்லாதே. எந்த பெண்ணுக்கும் பொய் சொல்கிறவன் மீது மதிப்பு கிடையாது.
அவள் எழுந்துகொண்டாள். கைகுலுக்கி (தெளிவாகத் தெரிந்தது அதுதான் எங்களுடைய கடைசி சந்திப்பென்று) விடைபெற்றாள்.
கொஞ்சம் நேரத்திற்குப் பிறகுதான் எனக்கு உறைத்தது (ஒரு சில்லிடும் அமைதி என்னைச் சூழ்ந்திருந்தது) என்னுடைய கதை அவலமாக முடியவில்லை மாறாக வேடிக்கையாகத்தான் முடிந்திருக்கிறது.
அந்த எண்ணம் சிறிய ஆறுதலை எனக்கு அளித்தது.
[மீள்சிறகு - இதழ் 2 – 2005]
---------------------------------------------------
* செக் தேசத்து மது – ஒருவகை ப்ளம் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பிராந்தி.
** மிகோலஸ் அலஸ் – 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல செக்கோஸ்லோவிய ஓவியர்.