Search This Blog

Thursday, July 10, 2014

கணித மேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை

பாரதியின் மனைவியை போல ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கைதான் இன்னும் சொல்லப்படாத வாழ்க்கைகளில் முக்கியமானதாக பட்டது. இது எடுக்கப்படாத இன்னொரு படத்துக்கான கதை. ராமானுஜன் 32 வருடம்தான் வாழ்ந்தார் (1887-1920). ஜானகி 94 வயது வரை இருந்தார்(1899-1994). ராமானுஜனுக்கு ஜானகியை கன்னிகாதானம் கொடுத்தபோது ஜானகி வயது 9. . ராமானுஜன் வயது 21. தன் 15வது வயதில் பருவமடைந்தபின்னர்தான் ஜானகி ராமானுஜனுடன் சென்னையில் குடும்பம் நடத்த வருகிறார். அடுத்து சேர்ந்து வாழ்ந்தது இரண்டே வருடங்கள். அடுத்த ஆறு வருடங்கள் ராமானுஜன் வெளிநாட்டில். திரும்பி வந்த ஒரே வருடத்தில் ராமானுஜன் மரணம். அப்போது ஜானகிக்கு வயது 21. அடுத்த எட்டாண்டுகள் தன் சகோதரருடன் மும்பையில் இருக்கிறார். அங்கே தையல் வேலையும் ஆங்கிலமும் கற்றுக் கொள்கிறார். பின் திருவல்லிக்கேணிக்கு திரும்பி வந்து கொஞ்ச காலம் தன் சகோதரியுடன் இருக்கிறார். பின் தனியே தன் உழைப்பில் தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். அவர் அப்படி தனி வாழ்க்கை நடத்திய காலத்தில் இருந்த ஒரு சிநேகிதி 1950ல் இறந்துவிடவே, அந்த சிநேகிதியின் 7 வயது 'அநாதை'க் குழந்தையை தானே வளர்த்து ஆளாக்குகிறார். அப்போது ஜானகிக்கு வயது 51. மகனை பி.காம் வரை படிக்க வைக்கிறார். வங்கி அலுவலராக பணி சேர்ந்த அந்த வளர்ப்பு மகனுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அந்த மகனின் பராமரிப்பில் இறுதி வரை இருக்கிறார். 1962ல் ராமானுஜனின் 75வது பிறந்த வருட கொண்டாட்டம் வரை ஜானகி அம்மாளை ( இப்போது வயது 63 ) அரசோ அமைப்புகளோ பெரிதாக கவனிக்கவில்லை. ராமானுஜனுக்கான பென்ஷன் பணம் மாதம் ரூ 50. மெல்ல மெல்ல இது 1994ல் ரூ 500 ஆயிற்று. 1962க்குப் பின் நன்கொடைகள் கணிசமாக வந்தன. இதில் திருவல்லிக்கேணியில் தனக்கென ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே இருந்தார் ஜானகி. நிறைய ஏழை மாணவர்களுக்கு எப்போதும் பண உதவி செய்துவந்திருக்கிறார். தையல் டீச்சர் ஜானகி கணித மேதை ராமானுஜன் அளவுக்கு முக்கியமானவர். தன் கணித மேதமையை உலகம் அங்கீகரித்து உதவும் வரை வறுமையில் வாட நேர்ந்ததால், அடிகக்டி மனச் சோர்வுக்கு ஆளானவர் ராமானுஜன். ஜானகி நேர்மாறாக வாழ்க்கை தனக்கு அளித்த இடையூறுகளை மீறி நம்பிக்கையோடு வறுமையில் செம்மையாக வாழ்ந்து சாதித்தவர்.

No comments:

Post a Comment