Search This Blog

Wednesday, July 23, 2014

வெருட்டி- உமா வரதராஜன்












































மிகுதியைக் காண வெண்திரைகள் இல்லாமற் போன அரங்குகளில் கரிபடிந்த சுவர்கள் மட்டும் மிஞ்சியிருந்தன. சுற்றி வர ஆளுயர முட்பற்றைகள் காவல் காத்து நின்றன. அவ்வப்போது வழிப்போக்கர்கள் உள்ளே போய் ஒன்றுக்கிருந்து விட்டு வந்தனர். சினிமாப் படப்போஸ்டர்கள் அருகி வந்த நகரத்தில் மாட்டுச் சாணம் மலை போல் உயர்ந்து வர, அதை அகற்ற வழி தேடி மாநகர சுகாதார அதிகாரிகள் வீதிகள் தோறும் அலைந்து திரிந்தனர். சாணமடிப்பதிலும், சேறு பூசுவதிலும் வல்லமை பெற்ற பலரும் சினிமா போஸ்டர்கள் இல்லாத சலிப்பில் இலக்கியப் பத்திரிகைகளின் பக்கம் சென்று விட்டதாகத் தகவல் அறிந்தனர்.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அகில உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ்பொண்டும், தன் வாழ்வின் இன்னொரு தீரச் செயலாக இலக்கியப் பத்திரிகையொன்றை நடாத்திக் கொண்டிருந்தான். கடலின் சுறாக்களோடு போராடி, சுழியோடி அடியில் புதையுண்டு கிடக்கும் கப்பல்களைக் கண்டு பிடித்தவன் அவன். கொட்டும் மழையில் ஆகாய வெளியில் விமானங்களுக்கிடையே பாய்ச்சல் நிகழ்த்திய சாகஸக்காரன் அவன். பனிமலைச் சறுக்கலில் சூரன், கூடுவிட்டுக் கூடு பாயும் அவனுடைய வித்தையும், 'குதிரை'ச் சவாரியும் பேர் பெற்றவை. எனினும் பத்திரிகையொன்றை நடத்துவதிலேயே, தன் காற்சிரங்கைச் சுட்டுவிரலால் லேசாகத் தடவுவதற்கொப்பான பேரின்பத்தை அவன் பெற்றான்.
தன் பூர்வீகத்தை மறவாத ஜேம்ஸ்பொண்ட் தனது பத்திரிகையில் 'க்ரைமி'ற்கு முன்னுரிமை அளித்தான். இசைத்தட்டுக் களஞ்சியத்தினுள் காணாமற் போன ஸப்த நந்தனப் பிரியா ராகத்தை மீட்டெடுத்தமை, ஆலையடி மண்ணுக்குள் புதையுண்டு போன கிட்டிப்புள்ளைத் தேடியெடுத்தமை, பேராசிரியர் சுகுமாரனின் உண்மை முகத்தைக் கண்டு பிடித்தமை சம்பந்தமாக அவன் எழுதிய கட்டுரைகள் அவனுடைய துப்புத்துலக்கும் திறனுக்கு சான்றுகளாக விளங்குகின்றன எனப் பல இலக்கிய விமர்சகர்களும் நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார்கள்.
பனையோலைச் சுவடிகளால் வேயப்பட்ட சொற்கொல்லன் பட்டறையில் ஜேம்ஸ்பொண்டின் அலுவலகம் இயங்கியது. எழுத்தாணி ஏந்திய காவற்காரர்கள் வாசலில் நின்றனர். சொற்களை எடையிட்டுப் பார்க்க ஒரு தராசும் கொஞ்சம் மஞ்சாடிக் கொட்டைகளும், உராய்ந்து பார்க்க ஓர் அண்டா நிறைய நெருப்புத் தண்ணியும் இருந்தன.
சொற்கொல்லன் பட்டறையின் பின் புறத்தில் சமையற்கட்டு, சமையற்காரர்களாக இருந்த ஜேம்ஸ்பொண்டின் சகபாடிகள் ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் சமூகப் பிரக்ஞை சூப் தயாரித்தார்கள். விடுமுறை நாட்களில் அகவயம்-புறவயம் சுண்டல். விசேஷ பண்டிகைக் காலங்களில் போராட்டப் பாயாசம் அல்லது புகலிட ஐஸகிரீம். சமையற்கட்டில் இருக்கும் தடியன் ஒருவன் சதா இறைச்சி வெட்டிக் கொண்டும் இடையிடையே கவிதைகள் எழுதியவாறுமிருந்தான். இரண்டிலுமே ரத்தம் வந்து கொண்டிருந்தது.
சொற்கொல்லன் பட்டறைக் கூடத்தின் சாய்வு நாற்காலியொன்றில் போர்வை போர்த்திய ஒரு முதியவர் இருப்பார். வேலைக்கு நடுவே சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்ட நாவிதனை எதிர்பார்த்திருக்கும் சலூன் கோலமென முதற் பார்வைக்கு அவர் தெரிவார். ஆனால் அவர் போர்த்திருந்தது ஒரு பொன்னாடை. கீறல் விழுந்த இசைத்தட்டுகளும், ஒரு லொறி கொள்ளக்கூடிய பெருங்காய டப்பாக்களும் இவரிடம் நிறைய இருந்தமைக்காக தொல் பொருள் ஆராய்ச்சி அமைச்சு அண்மையில் அவருக்குப் பொன்னாடையொன்றைப் போர்த்தியிருந்தது. அதைப் பிரிய மனமில்லாத காதலாலும், கூதலாலும் பொன்னாடையுடனேயே அவரது அந்திமகாலம் சொற்கொல்லன் பட்டறையில் கழிந்து கொண்டிருந்தது. மயிர் மழிக்கப்பட்ட பூனைக்குட்டியொன்று செல்லப்பிராணியாய் அங்கே உலாவித் திரிந்தது. கொல்லைப்புறத்தில் நின்ற கூரிய கொம்புகளைக் கொண்ட எருமைகள் அவ்வப் போது மேடைகளுக்குச் சென்று புத்தகங்களைத் துவைத்து, மிதித்து, புழுதி கிளப்பி விட்டுத் திரும்பி வந்தன.
ஜேம்ஸ்பொண்ட் தற்போது முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். கட்டபொம்மன் குரலில் பேசும் வியாபாரியான எழுத்தாளன் எவளையெல்லாம், எவ்வாறெல்லாம். எப்போதெல்லாம் தழுவுகின்றான் என்பதைத் தனது பத்திரிகையின் அடுத்த இதழில் விபரிக்க அவன் விரும்பியிருந்தான். இதற்காக அவன் பட்டபாடு கொஞ்ஞநஞ்சமல்ல. 'வியாபாரி எழுத்தாளர்களைக் கொல்வது எப்படி' என்ற நூலெதையும் மணிமேகலைப் பிரசுரம் இன்னும் வெளியிடாத காரணத்தால் ஜேம்ஸ்பொண்ட் வாலிவதைபடலம், சூரபத்மன் வதைபடலம் ஆகியவற்றைப் படிக்கலானான். நாடான் கடைகளின் பழைய பேப்பர் கட்டுகளை அறிவுப் பசியின் காரணமாகத் தின்று தீர்த்தான். ஏடுகளைத் தலையில் சுமந்து மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்தான். பனையோலைச் சுவடிகளைப் பாயாகவும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பேரகராதிகளைத் தலையணையாகவும் போட்டும் படுக்கப் பழகிக் கொண்டான். தன் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றி இராப்பகலாய் எரியவிட்டான். வியாபாரி எழுத்தாளன் தன் கதைகளில் பயன்படுத்தும் அத்தனை சொற்களும் தமிழகராதியிலே இருக்கின்ற இரகசியத்தை இவ்வாறுதான் அவன் கண்டுபிடித்தான். தெலுங்கரான ஸ்ரீ பலிவாட கந்தாராவின் ஆவியைப் பழங்காகித மணம் வீசும் நூலகமொன்றில் ஜேம்ஸ்பொண்ட் சந்திக்க நேர்ந்தது இந்நாட்களில்தான்.
'வணக்கம்'
'யாரது?' என்றது பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஸ்ரீபலிவாட காந்தாராவின் ஆவி.
'நான்தான் ஜேம்ஸ்பொண்ட். துப்பறியும் பத்திரிகையாளன். சங்கீதம், நடனம், விளையாட்டு, நாடகம், சினிமா, கதை, கவிதை, ஓவியம் எனப் பல துறை தெரிந்த சகல கலாவல்லவன்............'
'சமையல், தையல், சோதிடம்?'
'அடுத்து வரும் இதழ்களில் அவற்றைப் பற்றியும் நான் எழுதப்போகின்றேன். அது சரி, பிக்காஸோவின் ஓவியக்கலை சுயமான ஒன்று என நீங்கள் நினைக்கின்றீர்களா? ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் தியாகையர் நாட்டம் கொள்ளாதது ஏன் தெரியுமா?' என எடுத்த எடுப்பில் திடீரென ஜேம்ஸ்பொண்ட் கேட்ட போது 'ஐயா நீங்கள் மகா மேதாவிதான்' எனக்கூறிவிட்டுக் கழன்று கொள்ள முயன்றது ஸ்ரீபலி வாடகாந்தாராவின் ஆவி. ஆனால் ஜேம்ஸ்பொண்ட் விடுவதாக இல்லை.
'ஒரு சின்னக்கேள்வி. நீங்கள் எலியைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?'
'அது கீரியைப் பற்றியது. எலியைப் பற்றிச் சிலவரிகள் அதில் வரும்...'
'அது போதும்...... அது போதும் எனக்கு.....' என்று எலிவாலைப் பிடித்துவிட்ட குதூகலத்துடன் துள்ளிக் குதித்தான் ஜேம்ஸ்பொண்ட்.
'என்ன நடந்தது?'
'வியாபாரி எழுத்தாளன் ஒருவன் வசமாக மாட்டிக் கொண்டான். அவனும் எலியைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறான்.'
'அதனால்....?'
'அந்த எலிதான் இந்த எலி. இந்த எலிதான் அந்த எலி. காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான் காவேரி....' என்று பாடத் தொடங்கினான் ஜேம்ஸ்பொண்ட்.
'உலகின் அத்தனை எலிகளுக்குமாக ஓர் பண்ணையை நான் நடத்துவதாக உங்களுக்கு யார் சொன்னது?' என்று ஸ்ரீபலிவாடகாந்தாராவின் ஆவி எரிச்சலுடன் வினவியது
'விண்வெளியில் விமானங்கள் முட்டுவது சாத்தியமா? யானைகள் வரும் தமிழ்ப் படங்கள் எல்லாம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பல்லவா?' என்றான் ஜேம்ஸ்பொண்ட்.
ஸ்ரீபலிவாட காந்தாராவின் ஆவிக்கு முதற் தடவையாக இப்போது பயம் வந்தது. துர்க்குணம் கொண்ட சாத்தானொன்று தன்னை ஏதோ சோதனை செய்து பார்ப்பதாகத் தோன்றியது. அதற்கு மேலும் தாங்காது என்று மிரண்டு அது புத்தக அலுமாரிகளில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது.
'எலி...எலி...எலி...' என்றுகத்திக்கொண்டே ஜேம்ஸ்பொண்ட் பின் தொடர்ந்து ஓடினான். நூலகத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அனைவரும் அச்சத்தில் கால்களை உயர்த்தித் தூக்கிக் கொண்டனர்.
மாதநாவல் சுவாரஸ்யம் குலைந்து போன எரிச்சலில் 'சைலன்ஸ்...சைலன்ஸ்...' என்று கத்தினாள் நூலகப் பொறுப்பாளர்.
'எலிகள் அங்கேயல்லவா இருக்கின்றன என்று கூறிய அவள் புத்தக அலுமாரிகளைச் சுட்டிக் காட்டினாள். ...அது அசோகமித்திரன் எலி. அது அம்பையின் எலி. அது மலர்மன்னனின் எலி. அது இன்குலாப்பின் எலி...' என்றாள் அவள்.
'இல்லை எனக்கு ஸ்ரீபாலிவாடகாந்தாராவின் எலிதான் வேண்டும்' என்று முனகியவாறு சொற்கொல்லன் பட்டறையை வந்தடைந்தான் ஜேம்ஸ்பொண்ட்.
அன்றிரவு அவனால் தூங்கமுடியவில்லை. நாகத்தின் விஷம் தோய்ந்த மூச்சுக்கள் அறையெங்கும் பரவியிருந்தன. கனவுமற்ற, நினைவுமற்ற ஓர் அந்தரிப்பில் அவன் பாலை நிலத்தில் அலைந்துகொண்டிருந்தான். படிக்கட்டில் அனாதையாக அழுது கொண்டு நிற்கும் அவனுக்கு அம்மை தருகின்றாள் ஞானப்பால். உறிஞ்சுகின்றான். உறிஞ்சுகின்றான் மூர்;க்கம் கொண்டு உறிஞ்சுகின்றான் அவன். அம்மை கலகலவென்று நகைக்கின்றாள். அப்பால் நிற்கும் தோடுடைய செவியன் மர்மப் புன்னகை புரிகின்றான். ஞானப்பால் திகட்டிப் போய் கடைவாய் வழியே வழிகின்றது. பாலின் நிறம் மெது மெதுவாய் நீலமாகிறது. விஷம் உடலெங்கும் பரவி ரத்தம் நீலமாய் ஓடுகிறது. புத்தகங்கள் திடீர் திடீர் எனத் தீப் பற்றி எரிகின்றன. கூவும் குயில்களின் சிறகுகளெனப் பக்கங்கள் மெல்ல மெல்லக் கருகி மடிகின்றன. புத்தகங்களின் புகை வளையங்கள் சுற்றிச் சுற்றி வந்து அவன் குரல்வளையை இறுக்குகின்றன. காளி சூலாயுதம் ஏந்தியவாறு அவனைத் துரத்துகின்றாள். ஜேம்ஸ்பொண்ட் சைக்கிளில் ஏறித் தப்பி ஓடுகின்றான்.
'ஏய் அது எனது சைக்கிள்...' என்று கத்துகின்றான் பின்னாலிருந்து வியாபாரி எழுத்தாளன்.
காலையில் முதல் வேலையாக டொக்டரைப் பார்க்கச் சென்றான் ஜேம்ஸ்பொண்ட். இரவு முழுவதும் தூங்காததில் கண்கள் கலங்கிய குட்டைபோலிருந்தது. 'எல்லாமே மங்கலாகத் தெரிகிறதா?' என அவனைப் பரிசோதித்த வைத்தியர் கேட்டார்.
'இல்லை டொக்டர், பார்க்குமிடமெல்லாம் ஒரே தழுவலாகத் தெரிகின்றன. பதினோராம் நூற்றாண்டு காஜுராஹோ கோயில் சிற்பங்களையும் மிஞ்சிய நெருக்கமான தழுவல்கள். கம்பனைக் கண்ணதாசன் தழுவிக் கொண்டு நிற்கிறார். தாகூரைக் கலாப்ரியாவும், ஷpயாம் பெனகலை மகேந்திரனும் தழுவியபடி நிற்கிறார்கள். கண்களை மூடினால் உமையொருபாகன் எப்போதும் தாண்டவமாடுகின்றான். என்ன அதிசயம் டொக்டர். என் கனவுகளில் பச்சை வயல்கள் இல்லை. நதிகள் இல்லை. குயில்களோ, கிளிகளோ அழகிய பெண்களோ இல்லை. எப்போதும் என் கனவுகளில் குச்சிகள் தீர்ந்த தீப்பெட்டிகளும், அண்டங்காகங்களும், வான்கோழிகளும், மண் புழுக்களுந்தான்..........'
'த்சோ!' என்று அனுதாபப்பட்டார் டொக்டர்.
'எல்லா நூல்களையும் படிக்க எனக்கு ஆர்வம். ஆனால் நான்கைந்து பந்திகளைக் கூடத் தாண்ட முடிவதில்லை. படிக்கின்ற வாசகங்களை எல்லாம் ஏற்கனவே சந்தித்து விட்டதைப் போன்ற உணர்வு மனதைப் பிறாண்டிக் கொண்டேயிருக்கின்றது. மேய்ச்சல் நிலத்தை சரியாகப் பயன்படுத்தாத ஆட்டின் நிலைமையில் நான் இருக்கிறேன் டொக்டர்'
'உங்கள் நோய் என்னவென்று ஓரளவு புரிகின்றது. மனதிற்குள் ஓர் இமயமலையை உண்டாக்கி அதன் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களை யாரும் கவனிக்கவிலலை என்பதால் புழுங்குகின்றீர்கள். நூறு பேர் கவனிப்பார்கள் என்றால் ஆடைகளைக் களைந்தெறிந்து விட்டு ஓடக்கூட தயார். ஆனால் உங்கள் உடல் வனப்பு அதற்கு இசைவாக இல்லையே என்ற எரிச்சல்'.
ஜேம்ஸ்பொண்ட் மௌனமாக இருந்தான். டொக்டர் தொடர்ந்தார்.
'எல்லோரிலும் உங்களுக்கு அவநம்பிக்கை. மனைவியை, சகோதரியைப் பார்க்கும் போதெல்லாம் கூட இவள் சோரம் போன ஒருத்தியாக இருப்பாளோ என்ற சந்தேகம் உங்கள் மனதை வதைக்கின்றது தெருவில் போகும் குடும்பப் பெண்களைப் பார்த்து 'அடீ வேசி' என்று கூக்குரலிடலாம் போல் உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் மனதின் சுவர்களில் பல கறையான் புற்றுகள்.'
'போதும் டொக்டர் போதும். என் நோய் பற்றிய விபரங்கள் போதும். அது தீர என்ன வழி? அதைச் சொல்லுங்கள்'.
'மிகவும் எளிது. உங்கள் அதிமேதாவி வேஷத்தைக் கலைத்து விடுங்கள். துப்பறியும் திறனை ஒரு பக்கம் வைத்துவிட்டு தியானம் செய்யப் பழகுங்கள், பரஸ்பரம் அன்பு செலுத்தப் பழகுங்கள். நான் எழுதித் தரும் நூல்களை சாப்பாட்டிற்கு முன்பும், சாப்பாட்டுக்குப் பின்பும் படியுங்கள். இரவில் தூங்கப்போகும் முன்னர் இதில் எழுதித் தரும் இசை நாடாக்களைக் கேட்டுப் பாருங்கள். இதற்கும் சரியாகவில்லை என்றால் மூளைமாற்று சத்திரசிகிச்சை ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்' என்ற டொக்டர் தாளொன்றில் சில பெயர்களைக் கிறுக்கித் தந்தார்.
தளர்ந்த நடையுடன் தன் அறைக்குள் நுழைந்த ஜேம்ஸ்பொண்ட் கதவைத் தாளிட்டுக் கொண்டான். அன்று தாளிடப்பட்ட கதவுகள் இன்று வரை திறக்கப்படவில்லை. பல நூல்களையும், இசை நாடாக்களையும் அவன் அங்கிருந்து கேட்டுக் கொண்டிருப்பதாக சிலர் சொன்னார்கள். அவன் உள்ளேயிருந்து மீள்பாய்ச்சலுக்கு தயாராவதாக சகபாடிகள் தெரிவித்தனர். அவனை இடையூறு செய்யக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் 'அதிமேதாவித்தனம் உள்ளே உறங்குகிறது' என்ற அறிவிப்புப் பலகையை கதவில் அவர்கள் மாட்டி விட்டு வெளியே காவலிருந்தார்கள்.

30.07.1996
மூன்றாவது மனிதன்

No comments:

Post a Comment