Search This Blog

Friday, July 18, 2014

கபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை

தலையிலும் மார்பிலும் தங்கியிருக்கும் கபம் உட்புறங்களில் அடைத்துக் கொள்வதால் மூச்சு விடுவதற்குக் கஷ்டமான நிலை உருவாகிறது. அதை வெளியேற்றுவதற்கு உடல் தும்மலை ஏற்படுத்துகிறது. ஆனாலும் உறைந்த கபம் வெளியேறாமலிருப்பதால் மூச்சுவிடும்போது விசில் சத்தமும் படபடப்பும் ஏற்படுகிறது.

உறைந்த கபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை மருந்துகளைப் பொடித்து சூரணம் செய்து தேன் குழைத்துச் சாப்பிட்டால், கபம் உருகி வெளியேறிவிடும். அதற்கான சில மூலிகைகளும் அதன் தயாரிப்பு முறையும் -

பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலரிசி, இலவங்கப்பட்டை, சிறுநாகப்பூ, ஜாதிக்காய், விலாமிச்சைவேர், சுக்கு, கருஞ்சீரகம், காரகில், மூங்கிலுப்பு, ஜடாமாஞ்சி, அல்லிக்கிழங்கு, திப்பிலி, சந்தனம், அஸôரூன், வெட்டிவேர், வால்மிளகு ஆகிய இந்த பதினெட்டு மருந்துகளும் வகைக்கு 10 கிராம், சீனா கல்கண்டு அல்லது சர்க்கரை 90 கிராம், இவற்றில் பச்சைக்கற்பூரத்தையும் கல்கண்டையும் தவிர மற்றவற்றைத் தனியே இடித்து மெல்லிய கண்ணுள்ள சல்லடையில் சலித்துக் கொள்ளவும். பிறகு அந்தத் தூளில் பச்சைக்கற்பூரத்தைத் தூளாக்கிச் சேர்த்து கல்வத்திலிட்டு அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பிறகு கல்கண்டுத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும். பச்சைக்கற்பூரத்திற்குப் பதிலாக சிலர் நாட்டு கட்டிச் சூடத்தைச் சேர்த்துக்கொள்வது வழக்கம்.

பெரியவர்கள் 1/2 - 1 ஸ்பூன் அளவு எடுத்தால் சூரணத்தின் அளவைவிட ஒரு மடங்கு கூடுதலாகத் தேன் குழைத்து காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். குழந்தைகள் 1 சிட்டிகை முதல் கால் டீ ஸ்பூன் வரை சூரணம் சாப்பிடலாம். அவர்களுக்கும் தேன் ஒரு மடங்கு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மழை பனி நாட்களில் ஏற்படும் சளி உபாதை, நீர்க் கோர்வை, தொண்டைக் கமறல், மார்புச் சளி, இருமல், இடுப்புப்பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, அஜீரணமான மலப்போக்கு, வாயில் ருசியின்மை, குடல் வலுவிழந்து அடிக்கடி மலம் கட்டியும் இளகியும் மாறி மாறிப் போவது முதலியவற்றுக்கு நல்லது. மூலநோய் வறண்டு வலி கொடுத்தால் இதைச் சாப்பிட்டால் வலி குறையும். சளி வெளியேறாமல் வறண்டு விலாப்புறம் முதுகு, மார்பு, தலை முதலிய இடங்களில் வலியுடன் இருமலுமிருந்தால் நெய் அல்லது பாலுடன் சாப்பிட நல்லது. இந்த சூரணத்திற்குக் "கர்பூராதி சூரணம்' என்றும் பெயருண்டு. ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

ரேவல் சீனிக்கிழங்கு 100 கிராம், வேப்பம்விதை 40 கிராம், சதகுப்பை 20 கிராம், சோம்பு 20 கிராம், கருஞ்சீரகம் 20 கிராம். இந்தச் சரக்குகளை வெயிலில் நன்கு காய வைத்து ஒன்றாக இடித்து சூரணம் செய்து சிறு கண் சல்லடையில் சலித்து சீசாவில் பத்திரப்படுத்தவும். தலையில் நீர்க்கோர்வையினால் ஏற்படும் தலைவலி, நீர்முட்டல், கண்ணீர் கசிதல், சளியினால் காய்ச்சல் முதலிய நிலைகளில் 1 - 2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீருடன் கலந்து இரும்பு அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரண்டியிலிட்டு இளந்தீயில் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றிப்பொட்டு, நெற்றியிலும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும். ஒரு நாளில் இரண்டு முறை போடலாம். மண்டை நீரை வற்ற வைத்து வேதனையைக் குறைத்துவிடும்.

மாப்பண்டங்கள், புதுஅரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பலகாரம், ஐஸ் கலந்த பானங்கள், ஐஸ்கிரீம், தயிர், புலால், குளிர்ந்த தண்ணீர், குளிர்ந்த காற்றில் பயணம், ஜனநெருக்கடியிலும், நீர்த்தேக்கமுள்ள பகுதியில் வசிப்பது, பகலில் படுத்து உறங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும்

No comments:

Post a Comment