Search This Blog

Thursday, April 17, 2014

தீரன் சின்னமலை



தீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
அவர், தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.
தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்களை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது.
மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரத்ருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார்.
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.

No comments:

Post a Comment