Search This Blog

Saturday, March 29, 2014

ஜூலியஸ் சீசர்

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது.
 
வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.


அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை ‘மகாகவி’ ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான ‘ஜூலியஸ் சீசர்’. கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர்.
அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் ‘Gaul’ என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய ‘Gaul’ பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும்.
இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை ‘Ides of March’ என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார்.

நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் “Et tu, Brutes?” (“You too, Brutus?”) அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல… வரலாற்று உண்மை!.

‘ஜூலியஸ் சீசர்’ என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.

ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை ‘லீப்’ ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே ‘ஜூலியன் காலண்டர்’ என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ‘Gaul’ பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை “De Bello Gallico” என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் “I came, I saw, I Conquered” என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.

சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் ‘கைசர்’ என்றும் ரஷ்ய அரச பட்டம் ‘ஷா’ என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே ‘சீசர்’ என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர்.

சீசரின் அப்பா மற்றும் இவர் இருவருக்கும் ஒரே பெயர் . இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும், மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர். உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது .
சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார், பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார்; பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார்.
ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார், எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர்.
போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட, நீயா நானா போட்டி சீசர் மற்றும் பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே … போர் மூண்டது ;பலகால இழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட
எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான்
அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதிய செனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது. செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர்.
குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள்; அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,”நீயுமா குழந்தையே ?” என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .
எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ் பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல் “.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதம் தான்.

No comments:

Post a Comment