Search This Blog

Friday, March 28, 2014

“விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான் .

காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.
எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி, சிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.
சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. “ஐசனோவர்…ஆவலோவா…” என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று.
கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.
அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையியெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா…!” என்றார்.
எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு..?. நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.
“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி” என்றார்.
சரியென்று இறங்கினார்கள். “ஐசனோவர்…ஆவலோவா…” என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே” என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் ‘வேலை கொடு விஸ்வநாதா’ என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும் “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான் .

No comments:

Post a Comment