Search This Blog

Friday, March 21, 2014

"ஷோபாவும் நானும்" பாலு மகேந்திரா

கண்ணே ஷோபா ,
ஆந்திர மாநிலத்தின் அமைதியான அந்தக் கிராமத்தின் வயல் வரம்பொன்றில் ,என் மேல் சாய்ந்தபடி நீ உட்கார்ந்திருக்கிறாய் . அடங்கி உறங்கு முன் ,அந்தி நேரப் பறவைகளின் அவசர உரையாடல்களே பின்னணியாக ,அடி வானத்தில் -அனந்த கோடி மைல்களுக்கப்பால் ,அற்புதமான அஸ்தமனம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
அதற்கு முன் எத்தனையோ சூரிய அஸ்தமனங்களை எங்கெல்லாமோ வைத்து நாமிருவரும் தனித் தனியாகப் பார்த்திருக்கலாம். ஆனால் அன்று நிகழ்ந்து கொண்டிருந்த அந்த அஸ்தமனத்தின் அழகை நாம் அதற்கு முன் பார்த்ததில்லை.;அதற்குப் பின்பும் பார்க்கவில்லை.
அந்தக் கொள்ளை அழகு நெஞ்சில் நிறைந்து ,இன்பத்தின் எல்லையே ஒரு சோகத்தின் விளிம்பாய் மனசில் நெருட ,அந்தம் விட்டு ,நெக்கி நெகிழ்ந்து ,வார்த்தைகள் வற்றிப் போன நிலையில் ,விழிகள் நனைய ,இதழ்கள் துடிக்க ,உன் மென்னுடல் நடுங்க ,என்னை இறுக அணைத்து கொண்டு ''அங்க்கிள் .அங்க்கிள் ..அங்க்கிள்..'' என்று முணு முணுத்துக் கொண்டிருக்கிறாய்.
அஸ்தமனத்துப் புள்ளினங்களின் அமிர்தமான சந்தியா ராகத்தோடு , ''அங்க்கிள்..அங்க்கிள் ..'' என்ற உன் முணு முணுப்பும் இரண்டற இழைந்து ,இனிய-அபூர்வமான ஒரு இசையை உண்டாக்க ,நான் உன் கூந்தலை வருடி ,மார்போடு அணைத்து ,நெற்றியில் முத்தமிட்டு ,''தெய்வமே , என் அம்முக் குட்டிக்கு -என் ஆசை மகளுக்கு--( அப்போது மனப் பூர்வமாக அந்தரங்க சுத்தியோடு உன்னை என் மகளாகத்தான் நேசித்தேன் ) ஒரு சிறிய துன்பத்தைக் கூட நீ என்றும் - என்றும் கொடுத்து விடாதே '' என மனமுருக வேண்டிக் கொள்ளுகிறேன்.
ஆண்டவன் ஐந்தாறு நிமிடங்களுக்குள் காண்பித்த அந்த அனந்த கோடி வர்ணஜாலங்கள் ,எந்த ஒரு கேமராவாலும் சிறை படாமல் ,கலைந்து ,கருமை சூழ்ந்து ,இருளாய் மாறிய பின் இருவரும் எழுந்து நடக்கிறோம்.
[தொடர் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி]



No comments:

Post a Comment