Search This Blog

Tuesday, March 4, 2014

அல்ப மேதஸா, உபநிஷம் சொல்லும் முட்டாள் !

உபநிஷம் சொல்லும் இந்த முட்டாள் யாராம்..? 

நடைமுறையில் முட்டாள் என்று யாரைச் சொல்கிறோம்? அறிவில்லாதவனை புத்தி குறைவானவனை முட்டாள் என்கிறோம் ஆங்கிலத்திலே இடியட் என்கிறோம்.

ஆனால், சநாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் வேதாந்திகள் இந்த சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் இந்தமுட்டாள் என்னும் பதம் ஸ்ருதியில் உபநிஷத்தில் எப்படிக் கையாளப்படுகிறது என்பது ருசிகரமானதாகும்.

"அல்பமேதஸா' புத்தி குறைவானவனை இப்படித்தான் உபநிடதம் அழைக்கிறது.

யார் இந்த முட்டாள் அல்பமேதஸ் அல்லது இடியட்?

ஞானப் பெட்டகமான கடோபநிஷத்தில் இந்தப் பதம் மிக அர்த்தபுஷ்டியுடன் கையாளப்படுகிறது முதல் அத்தியாயத்தி லேயே இந்தப் பதம் இடம்பெறுகிறது.

நசிகேதன் என்ற ஒன்பது வயது சிறுவன் மகா அறிவாளி முதிர்ந்த ஞானமுடையவன். வாஜஸ்வா என்ற மாமுனியின் புதல்வர் உத்தாலகர், இவர் விஸ்வஜித் என்ற யாகம் செய்தார்.

அப்போது, யாகத்தை நடத்தித்தந்த ரித்விக்குகளுக்கு வயதான பால் வற்றிய பயனில்லாத பசுக்களை தானமாகத் தந்தார். இதைக்கண்டு அவரது மகனான நசிகேதன் மனம்வருந்தினான் அதேசமயம் தந்தையைக் கண்டிக்க முடியாது அவர் மரியாதைக்குரியவர். எனவே அவன் கேட்கிறான்..

தந்தையே, இந்த யாகத்தில் என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்.இதைப்போல ஒருமுறையல்ல இரண்டு மூன்று முறை கேட்கிறான்.

கோபம் கொண்ட தந்தை உன்னை எமனுக்கு தானமாகக் கொடுத்துவிட்டேன் என்கிறார்.

அதை மனப்பூர்வமாகச் சொல்லவில்லை. தனது ஒரே மகனை எமதர்மராஜனுக்கு தானம் வழங்க எந்த தந்தைக்குத்தான் மனம் வரும்? ஆனால் மகன் தொடர்ந்து நச்சரித்ததால், மனக்கசப்போடு சொன்னது அது.

ஸ ஹோவாச பிதாம் தத் தஸ்மை
மாம் தாஸ்ய தீதி
த்வதியம் த்ருதியம் தம் ஹோவாச
ம்ருத்யுவே த்வாம் ததாம்தி
- கடோபநிஷத்

தந்தை சொன்ன இந்த வாக்கை அப்படியே சத்திய வாக்காக ஏற்ற நசிகேதன் எமன் உலகத்திற்குப் புறப்பட்டுப் போகிறான். அவனது ஞானம் தந்த ஆற்றல் அது.

அவன்தர்மராஜாவின் பட்டிணம் போனசமயம் அவர் அங்கில்லை. எமதர்மனை சந்திக்க முடியாத நிலையில், நசிகேதன் மூன்று நாட்கள் அரண்மனை வாயிலில் பட்டினியாகக் காத்துக்கிடந்தான் - பின்னர் அவன் எமனிடம் உபதேசம் பெற்றது தனிக்கதை.

இந்த இடத்தில்தான் உபநிடதம் நமது தர்மத்தை அழுத்தந்திருத் தமாக வலியுறுத்துகிறது. தனது வீட்டின் முகப்பில் ஞானமறிந்த உத்தமனை மூன்று தினங்கள் பட்டினியுடன் காக்கவைத்த பாவம் செய்தவருக்கு எப்படிப்பட்ட இழப்புகள் ஏற்படும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

அதிதி - விருந்தினர் - என்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவர் என்பது நமது இந்து தர்மத்தின் கோட்பாடு. அவரை `அதிதி நாராயணன்` என்றே அழைப்பர். விருந்தினரை தெய்வமாக பாவித்து உபசரித்தல், உணவளித்தல் இல்லறத்தாரின் முக்கிய கடமைகளில் ஒன்று அதிதி தேவோ பவ என்பது வேதவாக் கியம்.

இதையே நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இல்லறத்தானின் ஐந்து முக்கிய அறங் களைக் கூறும்போது,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்ய வேண்டும். இது இல்லறத் தானின் தலையாய கடமை என்கிறார்.

இப்படி விருந்தினரை ஓம்பாத வரைத்தான் முட்டாள் என்று கூறுகிறது உபநிடதம். அப்படிப்பட்டவனைத்தான் அல்பமேதஸ் என்று கூறுகிறது.

அப்படிப்பட்டவனுக்கு எவ்வகையான இழப்புகள் ஏற்படும் என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது.

சுருதி நம்பிக்கை, வரக்கூடிய ஐஸ்வர்யம், நல்லோர் சேர்க்கை, தார்மீக நெறி பற்றிப் பேசும் மேலோர், தியாக உணர்வுடை யோர், தார்மீகப் பலன்கள், வாரிசுகள், பசுக்கள் இவை எல்லாவற்றையும் அந்த அல்பமேதஸ் முட்டாள் இழந்து விடுகிறான்.

இப்படிப்பட்ட உன்னதமான போதனையை நமது மேலான கடமைகளை வலியுறுத்துகிறது உபநிடதம்

ஞானப்பொக்கிஷமான உபநிடத வாக்கியம் நடைமுறைப் படுத்தப்படுமானால், மனித சமுதாயம் மேன்மையடையும்!


நன்றி பி .ராஜலக்ஷ்மி

No comments:

Post a Comment