Search This Blog

Tuesday, December 17, 2013

வள்ளல் – காரி

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று மலாடு என்றும் அழைக்கப்பட்ட நாடு அது. அந்த மலைகளுள் பெரியது முள்ளூர் மலை. மலையடிவாரத்தில் முள்ளுள்ள கொடிகள் பல முளைத்து மலையின் மேல் ஊர்ந்து செல்லும் காரணத்தினால் அப்பெயர் பெற்றிருந்தது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பலவளங்களும் பெற்றுச் சிறந்திருந்தது. திருக்கோவலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும் முள்ளூர் மலைக்கும் தலைவனாகிப் பிறகு மலை நாட்டிற்கே திருமுடி புனைந்து அரசன் ஆனான். அவனுடைய குதிரை கார் நிறமுடையது. அதனால் அவன் மலையமான் திருமுடிக்காரி என்று அழைக்கப்பட்டான்.

படம்: இணையத்தில் இருந்து பெறப்பட்ட சித்தரிக்கப்பட்ட படம்
காரி ஒரு சிறந்த கல்விமான். ஊர்கள் தோறும் கல்விக்கூடங்கள் பல அமைத்தவன். பாலின பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தவன். காரி கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டும் நில்லாமல் போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். எனவே, தனக்கென ஒரு பஞ்சகல்யாணி குதிரையைத் தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழக்கினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும் தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றி அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும் போற்றப்பட்டது. 

ஒருமுறை சோழ வேந்தர் பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசன் தொண்டி என்ற ஊரை ஆண்டு வந்தான். யானைக்கண்ணுக்கு உறையூர் மீது ஒரு கண். அதனால் அவன் பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது அநீதியாகப் படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு சண்டையிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில் காரி செய்தியறிந்தான். காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூர் அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்தான். 

காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக இருந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு மூவேந்தர்களும் அவனுக்கு பல பொருள்களைப் பரிசிலாகவும், ஞாபகார்த்தமாகவும் வழங்குவார்கள். அங்ஙனம் பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாக கொண்டதில்லை காரி. அவன் அவனுடைய இல்லத்தலைவி தவிர்த்து மற்ற அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம் கொண்டிருந்தான். காரி தன்னுடைய அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் சீர்த்தூக்கி பாராமல் அனைவருக்கும் வேண்டுவன அளித்தான்.

அக்காலகட்டத்தில் வடநாட்டில் அரசர்களாய் இருந்த ஆரிய வேந்தர்கள் சிறுகச் சிறுகத் தென்னாட்டின்மேல் படையெடுக்கலானார்கள். அப்படி படையெடுத்து வந்தவர்கள் திருக்கோவலூரின் செழுமையைக் கண்டு, அதனை பறித்துக்கொள்ள எண்ணினார்கள். உடனே திரண்ட சேனையுடன் வந்து திருக்கோவலூரைச் சூழ்ந்து முற்றுகையிட்டார்கள். தகவல், காரியின் காதுகளுக்கு எட்டியது. அவன் சிறிதும் அஞ்சவில்லை. தன்னுடைய சேனைகளை சேர்த்துக்கொண்டு போர்க்களம் பூண்டான். இரு கூட்டத்தாரும் பலநாள் சண்டையிட்டார்கள். இறுதியில் காரியின் வாட்படைக்கு ஆரிய படைகள் சின்னாபின்னமானது. ஆரியர்கள் பலர் மாண்டனர். மற்றவர்கள் அஞ்சியோடினார்கள்.

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி ஆங்கு 

விளக்கம்: ஆரியர் நெருங்கிச் செய்த போரில், பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்தில், பலருடன் சென்று உறையினின்றும் உருவிய ஒளி வீசும் வாட்படையை உடைய மலையனது வேற்படைக்கு அஞ்சி அவ்வாரியப்படை ஓடியது.

ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். காரி தன்னை புகழ்ந்து பாடும் புலவரைக் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள் தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவராதீர்கள். தேர் மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்லுங்கள்...!” என்று மகிழ்ச்சியுடன் கூறி அவருக்கு தேரையும் மற்ற வேண்டிய பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். இதுபோலவே, நிறைய புலவர்களுக்கு தேர் கொடுத்திருக்கிறான் காரி. அவனுடைய தேர்க்கொடையின் காரணமாக அவனுக்கு தேர்வண்மலையன் என்ற பெயரும் உண்டு.

மேற்கூறிய சம்பவத்தைப் பற்றி கபிலர் புறநானூற்றில் ஒரு பாடல் இயற்றியுள்ளார். (புறம் 123). அது சற்றே எள்ளல் தொனி கலந்த பாடல் என்பதால் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். அது குறித்து யாருக்கேனும் ஏற்கனவே தெரிந்திருந்தால் பின்னூட்டமிடவும்.

காரிக்குக் கொடையாலும் படையாலும் வரவரப் பெரும்புகழ் வளர்வதைக்கண்ட சில சிற்றரசர்கள், அவன்மீது அழுக்காறு கொண்டார்கள். சில குறுநில மன்னர்களின் சூழ்ச்சியால் காரிக்கும் அதியமான் அஞ்சிக்கும் பகைமை நேர்ந்தது. அதன் காரணமாக, ஆற்றல் படைத்த அஞ்சி காரியின்மேல் படையெடுத்துத் திருக்கோவலூரை முற்றுகையிட்டான். காரியோ அஞ்சினான். ஆயினும், தன்னிடம் உள்ள சேனைகளைக் கொண்டு எதிர்த்து அவனோடு போரிட்டு பார்த்தான். தனக்கு வெற்றி ஏற்படாது என்று உணர்ந்துக்கொண்டான். அவன் சேனைகளுள் மிகுதியும் மாண்டொழிந்தன. முடிவில் காரி உயிர் தப்பினால் போதுமென திருக்கோவலூரை விட்டு சேரநாட்டிற் புகுந்தொளிந்தான். பிறகு அஞ்சி திருக்கோவலூரைப் பிடித்துக்கொண்டு, தன் நாட்டுடன் சேர்த்தாள்வானாயினன்.

அப்போரில் அஞ்சிக்கு புறமுதுகு காட்டிய காரி சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தஞ்சம் புகுந்தான். சேரனும் காரியை ஏற்றுக்கொண்டு நல்லுரை பல நவின்றான். மீண்டும் அவன் நாட்டை அதியனிடமிருந்து மீட்டுத் தருவதாய் வாக்களித்தான். காரியும் சற்று மனந்தேறினான். ஆயினும், அவன் தனது நாட்டைப் பெறுங்காலம் நோக்கிச் சாலத்துயர் உற்றிருந்தான்.

பெருஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பிலிருந்தே சிற்றரசனான ஓரியின் மீது வெறுப்பு இருந்து வந்தது. அவன் காரியைக் கொண்டு ஓரியைத் தொலைத்துவிட எண்ணினான். சேரனே நேரடியாக ஓரியின் மீது போர் தொடுக்கலாம் எனினும் அது முறையாகாது. ஓரி சேரனுடன் சமபலம் பொருந்தியவனில்லை. அவ்வாறு சமபலமில்லாதவனிடம் போரிட்டு வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதனால் வசையே ஒழிய இசையேற்படாது. எனவே காரியை அழைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான். அதனை ஏற்றுக்கொண்ட காரி, இரும்பொறையின் பெருஞ்சேனைக்கு தலைமை தாங்கிச் சென்று கொல்லிமலையை முற்றுகையிட்டான்.

ஓரியுடனான காரியின் போர் பலநாள் நீடித்தது. அதனை சிறுபாணாற்றுப்படை காரிக்குதிரை காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும் என்று கூறுகிறது. பின்னர் ஓரி இப்போர் சேரனால் ஏற்பட்டது என்று தெரிந்துக்கொண்டான். போரின் முடிவில் காரி மிகத் தந்திரமாக ஓரியை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தான். 

ஓரி அகன்றுவிட்டதைக் கேள்விப்பட்ட இரும்பொறை தன் கவலையை ஒழித்தான். காரிக்கு உதவி செய்ய முற்பட்டான். உடனே பெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு தானே சேனைத்தலைவனாக அமர்ந்து அதியமானின் தகடூரை முற்றுகையிட்டான். அதியமானும் குகையிலிருந்து வெளிப்படும் சிங்கம் போல நேருக்கு நேராக போரில் இறங்கினான். ஆயினும் இரும்பொறையுடன் காரியும் சேர்ந்து போரிட்டமையால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்கத் தொடங்கியது. இறுதியில் இரும்பொறை அதியமானை போரில் கொன்று வீழ்த்தி அவனுடைய நாட்டை தன்னுடையதாக்கிக் கொண்டான். வெற்றிக்களிப்பில் மிதந்த சேரன் காரிக்கு அவனது ஆட்சிப்பகுதியான முள்ளூர் மலை நாட்டை தந்தான்.

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே !
அழல்புறந் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவரு ளொருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென இலை நீ பெருமிதத்தையே !
(புறம் 122) 
 
விளக்கம்: பழந்தமிழ் திருந்தடிக் காரி ! நின்னாடு கடலாலும் கொள்ளப்படாது. பகைவரும் மேற்கொள்ளார். நின்னாடு அந்தணருடைய வேள்வித் தீயைப் போன்றது. மூன்று பெரும் வேந்தர்களிடமிருந்து வந்தோர் நின்னை வாழ்த்தித் தரும் பெரும் பொருள் நும் குடியை வாழ்த்தி வரும் பரிசிலருடையது. ஆதலால் வடதிசை தோன்றும் அருந்ததியை ஒத்த கற்பினளான மென்மொழி நின்துணைவியை மட்டுமே உன்னுடையது என்று சொல்ல ஒன்று உடையவனாய் இருக்கையில் எப்படி நீ பெருமிதமுடையவனாய் இருக்கிறாய் ?

இங்ஙனம், இழந்த நாட்டினை திரும்பப் பெற்றுவிட்ட மலையமான் திருமுடிக்காரி தன்னாட்டை முன்புபோல நன்கு ஆட்சி புரிந்தான்.
Thanks: http://www.philosophyprabhakaran.com

No comments:

Post a Comment