Search This Blog

Tuesday, November 19, 2013

மலையாள சினிமாவின் மகாராஜாக்கள்.

ஒரு திரியளவு, பஞ்சை, மேலும் பக்குவமாய் திரித்து, நாசிக்குள் நுழைத்தால், வரும் அந்த முதல் தும்மல், கொஞ்சம் சிரம காரியம் தான் எனினும்,அதற்குப் பின் நிகழும் அந்த சுவாசம் ரொம்ப சந்தோஷமான அனுபவம்.

இந்திய சினிமாவின், வர்த்தக நாசிக்குள், தும்மல், அதுவாக வந்தால் தான் உண்டு. ஏனெனில், சுவாசிக்க கூட, மறந்து பணம் பண்ணிக் கொண்டிருக்கும் பாவப் பட்ட ஜீவன் அது. மறைந்த ரிது பர்ன கோஷ், இன்றும் பிரகாசிக்கும் ரிதிவிக் கட்டக் போன்றவர்கள் இந்திய சினிமா நாசியில் தும்மல் எழுப்பிய சில திரிகள்.

தென்னிந்திய சினிமாவில், அந்த தும்மல், அடிக்கடி நிகழும் ஒரே நாசி மலையாள சினிமா தான் என்று பகவதி அம்மன் அருள் வாக்கு மாதிரி ,சினிமாவைப் பின் தொடர்பவர்களால் மிக உறுதியாக சொல்ல முடியும். ஆயிரத்து தொள்ளயிரத்து ஐம்பதுகளில், அப்புறம் எண்பதுகளில்,அங்கே விழுந்த தும்மல், கொஞ்சம் வடக்கத்தி பக்கமும்,நிறைய நம் தமிழ் பக்கமும் தொடர் தும்மல்களை ஏற்படுத்தி இருந்திருக்கிறது.

இப்போது மறுபடியும், மாற்றத்திற்கான அந்த தும்மல் மலையாளத்தில் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் கொஞ்சப் பேர் தான். விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆனால்,தம் படங்களில் வாய்ஸ் ஓவருக்கு மட்டும் மோகன்லாலையும்,மம்முட்டி யையும் பயன்படுத்தினால் போதும் என்கிற முடிவு எடுக்கிற மாதிரியான மன வலிமை படைத்தவர்கள்.

முன் மண்டை வழுக்கையான, கொஞ்சம் அசந்தர்ப்பமான மூக்கும் கொண்ட பஹத் பாசிலை நம்பி கதை சொன்னவர்கள். ஆரம்பத்தில் அடி வாங்கினாலும்,இன்று அவர்களை இந்திய சினிமாவே உற்று கவனிக்கிறது. ஆகவே,நாமும்.

ராஜேஷ் பிள்ளை,அமல் நீராட்,ஆசிக் அபு, அன்வர் ரஷீத், சமீர் தாகிர்,ராஜீவ் ரவி,சலீம் அஹ்மத்,வினீத் ஸ்ரீனிவாசன், ஷ்யாம் பிரசாத், அஞ்சலி மேனன்,ரூபேஷ் பீதாம்பரம்,சித்தார்த் பரதன்,லால் ஜோஸ், இப்படி தொடரும் இவர்கள் தான் இன்றைய மலையாள சினிமாவின் மகாராஜாக்கள்.

இவர்களில், எர்ணாகுளம்,மகாராஜாஸ் காலேஜ் தந்த மகாராஜாக்கள் மிகக் குறிப்பிடத் தக்கவர்கள்.

ஏனெனில்,கல்லூரி நட்பும்,கனவும்,உண்மையாகும் போது, அது அந்த நண்பர்கள் சார்ந்த ஒரு துறைக்கே, மாற்றத்தைக் கொணர்வதாக இருக்கக் கூடும் என்பதை உங்கள் கையில் இப்போது தவழும் அந்திமழை மாதிரி, சினிமாவில் நிரூபித்தவர்கள் இவர்கள்.இவர்களுடைய கல்லூரி சீனியர்கள் ஆன மம்முட்டி,திலீப் மாதிரி.

அமல் நீராட்,அன்வர் ரஷீத்,ஆசிக் அபு,ராஜீவ் ரவி, இவர்களுடன் நடிகர் சலீம் குமார். இந்த எர்ணாகுளம் மகாராஜாக்கள் தந்த சில படைப்புகள் மலையாள சினிமாவின் கண்களை மறுபடி திறந்து வைத்தவை.

ஆதாமிண்டே மகன் அபு,
சாப்பா குரிசு,
அன்னையும் ரசூலும்,
சால்ட் அண்ட் பெப்பர்,
22,பீமேல் கோட்டயம்,
அஞ்சு சுந்தரிகள்,
டைமண்ட் நெக்லஸ்,
அன்வர்,
பிக் பீ,
நீல ஆகாசம்,
பச்சக் கடல்,
சுவர்ண பூமி
இவையெல்லாம் இந்த மகாராஜாக்களின் பெயர் சொன்னவை,சொல்பவை.

அமல் நீராட்-டிடம் இருந்து ஆரம்பிக்கிறது மலையாள சினிமாவை மாற்றிய இந்த எர்ணாகுளம் மகாராஜாசின் மகா கனவு.

டாடி கூல், சாப்ப குரிசு, டைமன்ட் நெக்லஸ்,நீலாகசம் பச்சக் கடல் சுவர்ண பூமி,ஆகிய குறிப்பிடத்தக்க படங்களை இயக்கிய சமீர் தாகிர், அமலை தங்களின் குரு என்கிறார்.

அமல் நீரட் எர்ணாகுளம் மகாராஜஸ் கல்லூரி யின் யூனியன் சேர்மன் ஆக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர் (1992-93,1993-94). ஆனால்,இந்த கேங் கின் ஆதார சுதியாக இருக்கும் போட்டோ கிராபி தான் அமலையும் சினிமாவுக்குள் இழுத்து வந்தது. அமல் ஒளிப்பதிவாளர் ஆகப் பணியாற்றிய "ப்ளாக் (2004)" மம்முட்டி நடித்து சூப்பர் ஹிட் ஆனதும், ராம்கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ்,சிவா(89)வின் தொடர்ச்சியான சிவா(2006) ஹிந்தி,தேடி வந்தது.

அன்வர் (2010) - மலையாளத்தில் ,அமல் இயக்கிய முக்கியமான திரைப்படம்.

அமல் நீரட் மாதிரியே சினிமாட்டோகிராபியை தன் கனவாகக் கொண்டு கல்லூரியில் திரிந்தவர் ராஜீவ் ரவி. அமலைக் காட்டிலும் அதிக உயரத்திற்கு ஒளிப் பதிவில் போனவர்.

மொத்த பாலிவுட் உலகமும் தேடும்,கொண்டாடும் ஒளிபதிவு இயக்குனர். அவர் ஒளிப் பதிவு செய்த முதல் படம் மது பண்டார்க்கர் இயக்கிய "சாந்தினி பார்(2001)". "தேவ் டி", அனுராக் காஷ்யப்பின் "கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர்" பார்ட் 1&2, "மான்சூன் சூட் அவுட்" இவையெல்லாம் ராஜீவ் ரவியின் பாலிவுட் பெயர் சொல்லும் சில படங்கள்.

லால் ஜோஸ் இயக்கிய "கிளாஸ் மேட்ஸ்" என்னும் மனதில் நிற்கும் மலையாள கவிதைக்கு ஒளிப் பதிவு ராஜீவ் ரவி தான். ராஜீவ் ரவி முதன் முதலாக இயக்கிய படமும் ஒரு கவிதை தான்."அன்னையும் ரசூலும்(2013)".

ராஜீவ் ரவியின் அசிஸ்டெண்ட் ஆக சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் சமீர் தாகிர். எனினும் அமலைப் போலவோ,ராஜீவைப் போலவோ சினிமா கனவுகளுடன் இருந்தவரில்லை. ஆனாலும் சமீரின் அடிப்படை போட்டோ கிராபிதான்.

அவர் அதிகபட்சம் ஆர்வம் காட்டியது திருமண வீடியோ,புகைப் படங்கள் எடுப்பதில்தான். ஆனால்,ஒரு குழுவாக, அதிலும் கல்லூரித் தோழர்களாக இயங்குவதன் பூரண பலன் சமீருக்குக் கிடைத்தது. அமல் நீரட் டின் " பிக் பி"படத்தின் ஒளிப்பதிவாளர் சமீர் தான். லால் ஜோஸ் இயக்கிய "டைமன்ட் நெக்லஸ்" படத்திற்காக சிறந்த ஒளிப் பதிவாளர் விருது அவருக்கு கிடைத்தது.

ஆனால்,சமீர் தாகிரின் பெயர் சொன்ன படம் "சாப்ப குரிசு". அவர் இயக்கியது. அவருடைய லேட்டஸ்ட்" நீல ஆகாசம் பச்சக் கடல் சுவர்ண பூமி". மம்முட்டியின் மகன், தல்கர் சல்மான் நடித்த Road Movie.

தல்கர் சல்மான் நடித்த இதற்கு முந்தைய படம் மறக்க முடியாத ஒன்று. "உஸ்தாத் ஹோட்டல்(2012)".இதை இயக்கியவரும் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியின் மகாராஜாக்களில் ஒருவர் தான்.

அவர் பெயர் அன்வர் ரஷீத்.

தன்னுடைய முதல் படத்தில் மம்முட்டியை இயக்கியவர் "ராஜமாணிக்கம் -(2005)". இன்னொரு கமர்சியல் படமான "சோட்டா மும்பை - (2007)க்கு" அப்புறம் அன்வர் ரஷீத் இயக்கிய உஸ்தாத் ஹோட்டல் மலையாள சினிமாவின் மிக முக்கியமான சினிமாவாக விமர்சகர்களால் குறிப்பிடப்பட்ட ஒன்று.

அமல் நீரட்டின் நட்பும்,கொட்டேஷன் படத்தை இயக்கிய வினோத் விஜயனின் அருகாமையும் அன்வர் சினிமாவுக்குள் தன் கனவுகளைக் கடைவிரிக்க உதவின.

டிராமா, யூத் பெஸ்டிவல்கள்,போட்டோ கிராபி தான் அன்வரின் கனவு ஆதாரமும். "உண்மையில் மகாராஜாஸ் கல்லூரியைத்தான் எனக்கும் என் சினிமாவுக்கும் காரணமாக சொல்லவேண்டும்" என்று சொல்லும் அன்வர் ரஷீத் தை நம்பித் தான் மலையாள சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகின்றன.

ஆஷிக் அபுவும் ஸ்டூடண்ட் யூனியன் மெம்பர் தான். அப்படி, நான்கு வருடங்கள் தொடர்ந்து இருந்தவர்.

"எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி யில் நாங்கள் படித்ததாக நினைவில்லை,ஆனால்,வாழ்க்கையைக் கற்றுக் கொண்டோம்,எங்கள் கனவுகளைச் சுமக்கவும்"என்று ஒரு மலையாளப் பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருக்கும் ஆஷிக் அபுவின் சால்ட் அண்ட் பெப்பர் ரசனையான காதல் சமையல் கவிதை. இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஹிந்தி " லஞ்ச் பாக்ஸ் "கூட இதன் பாதிப்பு தான் என்கிறார்கள்.

"22 பீமேல் கோட்டயம்" ஆஷிக் அபு இயக்கிய மறக்க முடியாத படம்.

ஆஷிக் அபுவின் ஆரம்பம் விளம்பர படங்களில் தான். ஆலுக்காஸ்,மாத்ருபூமி,பேனசோனிக் ஆகியவை அவரது முக்கியமான விளம்பர க்ளையண்ட்டுகளில் சில.இப்போது போஸ்டர்களில் ரகளையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மோகன் லாலின் "கொடுங்காட்டு" பட இயக்குனரும் ஆஷிக் தான்.

மேற்சொன்ன மகாராஜாக்கள் எல்லாம் படிக்கிற காலத்தில்,கேரளாவில் கல்லூரி களுக்கு இடையே நடக்கிற யூத் பெஸ்டிவல்கள் ரகளையாகவும்,
ரசனையாகவும்,அதிக போட்டியுடனும் இருக்கும்.

அப்போதெல்லாம்,நம்பி,இவர்களும்,இவர்கள் கல்லூரியும் அனுப்பி வைத்த தனிநபர் திறமை அதிகம் கொண்ட தோழர்தான் நடிகர் சலீம் குமார்.

இவர்கள் மொத்த பேருமே பெருமைப் படக் கூடிய படமொன்றில் நடித்தவர்,ஏன்,உண்மையில் அது மலையாள சினிமா உலகமே,பெருமைப் படக் கூடிய எளிய மனிதனின் சினிமாவும்தாம்.

அதன் பெயர் "ஆதாமிண்டே மகன் அபு".

இதை இயக்கிய "சலீம் அஹ்மத்",

உஸ்தாத் ஹோட்டலுக்கு திரைகதை எழுதிய, மஞ்சாடிக் குரு என்கிற அற்புதமான படத்தை இயக்கிய "அஞ்சலி மேனன்",

நித்ரா வை இயக்கிய "சித்தார்த் பரதன்",

மோகன்லாலை வைத்து ரெட் வைன் இயக்கிய "சலாம்பாப்பு",

தீவ்ரம் என்கிற டார்க் பிலிமை இயக்கிய "ரூபேஷ் பீதாம்பரம்",

நீலத் தாமர,டைமன்ட் நெக்லஸ்,கிளாஸ்மேட்ஸ் படங்களை இயக்கிய "லால்ஜோஸ்" என்று நீளும் மலையாள சினிமாவின் புதிய பாதை விருப்பு வெறுப்பற்று,கூச்சப் படாமல் எதையும் பேசும் சினிமாவை நம் கண்முன் தவழ விட்டுக் கொண்டிருக்கிறது.

எளிய மனிதர்களின் அன்றாட நிகழ்வை,பணத்தில் புரளும் புதிய தலைமுறை சமூகத்தின் வாழ்க்கையை, வக்கிரத்தை,தனிமனித ரசனை, சோகம், காதல், மரணங்களைப் பதிவு பண்ணுவதோடு,அதை
கமர்சியல் ஆகவும் வெற்றிப் பெற செய்தது தான் இந்த "கேங்க்ஸ் ஆப் கேரளா"வின் நவீன சினிமா சாதனை.

கடவுளின் சொந்த பூமி என்கிற கால கால மலையாளக் கனவை உடைத்து,வறுமையும்,பீடி வலித்தே வயிறு நிரப்பும் மனிதர்களும் இங்கே உண்டு என்று சொன்னவர்களும் இந்த புதிய தலைமுறை இளைஞர்கள் தான்.

இல்லையென்றால் பஹத் பாசில் போன்ற அற்புதமான நடிகனை மலையாள சினிமாவோ,இல்லை நாமோ ஏற்றுக் கொண்டிருப்போமா என்பது சந்தேகம் தான். மம்முட்டியும், மோகன்லாலும் இவர்கள் பின்னே போவதற்கும் இந்த சினிமாவை உடைத்த சினிமா கேங்க்ஸ் தான் காரணம்.

"அந்த நாட்கள் மிக வறுமையானவை. கொஞ்சம் ரொட்டியும்,வாழைப்பழங்களும்,ஒரு பாட்டில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு திருவனந்தபுரத்தில் நடக்கும் பிலிம் பெஸ்டிவல்களுக்கு நாங்கள் பயணப் பட்ட போது,எங்கள் கையில் இருந்தது கொஞ்சம் ரூபாய் நோட்டுகளும்,டன் கணக்கில் கனவுகளும் தான்"...... என்று அமல் நீரட் தன் கேங்க்ஸ் ஆப் மகாராஜாஸ் காலேஜ் வாழ்க்கையை நினைவு கூறும்போது, அந்த கனவுகள் மாற்றிப் போட்டிருக்கிற மலையாள சினிமாவைப் பார்த்து பொறாமையும், வருமா தமிழில் இப்படி ஒரு கேங் என்கிற ஏக்கமும் மிஞ்சுகிறது.


-குமரகுருபரன்(அந்திமழை அக்டோபர் 2013 மாத இதழில் வெளியான கட்டுரை)

No comments:

Post a Comment