Search This Blog

Thursday, November 14, 2013

திருமந்திரம் ஒரு சக்தி புகழ்பாடும் நூல்

உங்களுக்குத் தெரியுமா?

திருமந்திரம் எப்படி ஒரு சைவத் திருமுறையோ, அதேபோல் அது ஒரு சக்தி புகழ்பாடும் நூல் என்று?

சக்கரங்கள் எந்திரங்களின் இயல்புகளைக் கூறும் திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில், சித்தாந்த மரபை ஒட்டி, சிவசக்தியாகக் கண்டு அம்பிகையைத் துதிக்கிறார் திருமூலர்.

அவற்றில் பல பாடல்கள் பின்னாளில் அபிராமி பட்டர் பாடும் அந்தாதிப் பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தவை என்பது அவற்றின் தனிச் சிறப்பு.

பலபாடல்களில், மலங்களை நீக்கும் மகாமாயையாக, சுத்த அறிவின் வடிவாக, தேவி விளங்குவதை குறிப்பிட்டுள்ளார்.

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வண்ணத்தி
இருள் புரை ஈசி மனோன்மனி என்ன
வருபலவாய் நிற்கும் மாமாது தானே. (1022.)

தானா அமைந்தவம் முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன் செம்மை வெண்ணிறத்தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே. (1023)

தாள் அணி நூபுரம் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளி வில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிற்கே (1025)

குண்டலக் காதி கொலைவில் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே. (1026)

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகுமாறு அறியேனே. (1029)

கொம்பனையாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவளத் திருமேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே. (1034)

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலங் கரமுள நாக பாசாங்குச
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேலங்கமாய் நின்ற மெல்லியலாளே. (1057)

ஏடு அம் கை நங்கை இறை எங்கள் முக் கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த் தோத்திரம் சொல்லுமே. (1043)

ஆதி விதமிகுத்து அண்ட அந்த மால் தங்கை
நீதி மலரின் மேல் நேர் இழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்கால் பயில்விரேல்
சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே. (1045)

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே (1092)

ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந்
தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினை கடிந்தாளே. (1098)

No comments:

Post a Comment