Search This Blog

Monday, July 29, 2013

கொழுப்பைக் குறையுங்கள்


--------------------------------------------------
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: 
---------------------------------------------------

இன்றைய வாழ்க்கைமுறையில் சர்க்கரை உபாதையால் அவதிப்படுபவர்களைவிட "கொழுப்பு' உடலில் அதிகம் சேர்ந்து துன்பப்படுபவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? எப்படி இதை நீக்குவது?

குடலில் பிசுபிசுப்பை உண்டாக்கி, உட்புற தாதுக்களில் அதைப் பரப்பிவிடும் தன்மை கொண்ட கெட்டியான புளித்த தயிர், வெல்லப்பாகு, கரும்புச்சாறு, சாக்லெட் வகையாறாக்கள், க்ரில் சிக்கன், எண்ணெய்ப் பதார்த்தங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும், எளிதில் செரிக்காத மைதா மாவினால் உண்டாக்கிய உணவுப் பண்டங்கள், சூடாக்காமல் அப்படியே ப்ரட்டை பட்டர் ஜாம் சாண்ட்விச் என்ற வகையில் சாப்பிட்டு மேலே பால், டீ, காபி குடிப்பது, இவை போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு பகலில் படுத்துறங்குவது ஆகியவற்றைச் செய்தால் "மாம்ஸவஹஸ்ரோதஸ்', அதாவது மாமிச தாதுவை உடலில் வளர்ச்சியடைய உதவும் குழாயானது கெட்டுவிடுவதாக சரகர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். அதுபோலவே, உடற் பயிற்சி எதுவுமில்லாமல் எந்நேரமும் உட்கார்ந்திருத்தல் அல்லது படுத்திருத்தல், பகல் தூக்கம், கொழுப்புள்ள பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, பிராந்தி, விஸ்கி, ரம், வைன், பீர் போன்ற மதுபான வகைகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றால் "மேதோவஹஸ்ரோதஸ்' அதாவது சதைக்கு ஊட்டம் தரக்கூடிய குழாய்ப் பகுதியானது கெட்டு விடுகிறது.

இப்படி மாமிச - மேதோவஹஸ்ரோதஸýகளைக் கெடுத்துக் கொண்டால், உடலில் கொழுப்பின் தேக்கம் கூடுகிறது. இந்தத் தேக்கம் குழாய் அடைப்புகளுக்குக் காரணமாகிறது. குழாய்களின் வழியாக வெளியேற வேண்டிய வஸ்துவின் வெளியேற்றம் அதிக அளவானாலோ, அல்லது தடைபட்டாலோ, குழாய்களில் முடிச்சுகள் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஒரு குழாயின் வழியாக வெளியேறினாலோ அவை ஒரு குழாய் உடலில் கெட்டுப் போய்விட்டது என்பதற்கான அறிகுறிகளாகும்.

வயலில் நெற்பயிர் செழிப்பாக வளர்வதற்கு பம்ப் செட் வழியாகத் தண்ணீர் நிரப்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தண்ணீரை அதிகம் தேக்கினால் பயிர் அழுகிவிடும் என்பதற்காக வரப்பு ஓரம் ஓர் ஓட்டையைப் போட்டு வெளியேற்றுவார்கள். இந்த உதாரணம் மனித உடலுக்கும் பொருந்தும். வயல் எனும் உடலில், நெற்பயிர் எனும் உயிரைக் காப்பதற்காக, தண்ணீர் எனும் கொழுப்பைச் சீரான அளவில் சேர்த்தால், உடல் செழிப்பாக இருக்கும். வாய், ஆசனவாய் எனும் ஓட்டை வழியாக அதிக அளவில் சேர்ந்த கொழுப்பை நீராக்கி வெளியேற்றினால் அதுவே வரப்பு ஓரம் போடப்பட்ட ஓட்டைக்கு ஒப்பிடலாம்.

ஆக கொழுப்பை உருவாக்கக் காரணமாகிய நிலம் மற்றும் நீரின் ஆதிக்க பூதங்களாகிய உணவுப் பொருட்களின் நேர் எதிரான தன்மை கொண்ட நெருப்பு, காற்று, ஆகாயம் கொண்ட உணவு மற்றும் மருந்துகளால் உருக்கி வெளிக் கொணருவதே சிறந்த சிகிச்சை முறையாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

வாழைப்பூ, பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி, பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், வெண்டைக்காய், அவரைக்காய், காலிஃபிளவர், வாழைத்தண்டு, கோவைக்காய், வெள்ளைப் பூசணி, கொத்தவரங்காய், சீமைக் கத்தரிக்காய், பப்பாளி, வெங்காயம், கொத்துமல்லி, புதினா, கொண்டைக் கடலை, பாசிப் பயறு, நெல்லிக்காய், மாதுளம்பழம், நாவல் பழம், கொய்யாக்காய், எலுமிச்சம்பழம், கோதுமை, கேழ்வரகு, சோளம், கம்பு, தேயிலைத் தண்ணீர், வெந்தயம், வெண்ணெய் நீக்கிய மோர், வடிகட்டிய காய்கறி சூப் போன்றவற்றைக் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடலாம்.

பேரீச்சை, வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி, மலைவாழை, சீத்தாப்பழம், மாம்பழம், பலா, உலர்ந்த பழங்கள், பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு, மரவள்ளி, சேப்பங்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, கருணைக் கிழங்கு, கொழுப்புமிக்க ஆட்டுக் கறி, முட்டையின் மஞ்சள் கரு, வறுத்த மீன், நுரையீரல், மூளை, தலைக்கறி, அப்பளம், வற்றல், வடாம், கரும்புச்சாறு, ஊறுகாய், பழரச பானங்கள், குளிர்பானம், இனிப்பு லேகியம், கருவாடு, பஞ்சாமிர்தம், கேக், ஜாம், பாயசம், சாக்லெட், க்ரீம் பிஸ்கெட், நெய், வனஸ்பதி, வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சீரகம் - ஓமம் வெந்தெடுத்த தண்ணீர் குடிப்பது நல்லது. வாந்தி - பேதி சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வதே நல்லது.

நன்றி: எஸ். சுவாமிநாதன், டீன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லுரி

No comments:

Post a Comment