Search This Blog

Friday, June 28, 2013

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்

:

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி... இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப் படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.

‘நீ இனி குழந்தை இல்லை. குமரி...’ என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.

பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்னைகள்... இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.
‘வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.

பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏது? அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிகமாகும். ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில், உணவைத் தவிர்ப்பார்கள்.

குறிப்பாக காலை உணவு! தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே! மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.

வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் அதற்கு உண்டு. மன பலம் இல்லாத காரணத்தினால்தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மனச்சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உணர்ந்து, புரிந்து நடந்தால் போதும்.

No comments:

Post a Comment