Search This Blog

Thursday, April 4, 2013

"பரதேசி" - நெஞ்சில் எரியும் திரைக்காடு.



உங்களால் நேரடியாக உணர முடியாத மகிழ்ச்சியையோ, வாழ்க்கையின் அவலத்தையோ ஒரு ஊடகத்தால் உணர வைக்க முடியுமென்றால் அது காட்சி ஊடகமாகத் தான் இருக்க முடியும், காட்சி ஊடகங்களில் மிகச் சிறப்பு வாய்ந்ததும், வலிமை பெற்றதுமான திரைப்படம் அத்தகைய ஒரு அக உணர்வை உங்களுக்குள் உண்டாக்கி விடுகிறது, அந்த வகையில் நீண்ட காலத்துக்குப் பிறகு பாலாவின் "பரதேசி" ஒரு வர்ணிக்க இயலாத உழைக்கும் மக்களின் அவலத்தைத் திரையில் புடம் போட்டிருக்கிறது,

இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் எண்ணத்தை எனக்கு உருவாக்கிக் கொடுத்த பரதேசி திரைப்படத்தின் உதவி இயக்குனர் "கவின் ஆண்டனி" அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு நாவலை அல்லது இலக்கியப் படைப்பை வெற்றிகரமான திரைப்படமாக்குவது அத்தனை எளிதான வேலை அல்ல.

ஒரு நாவலை வாசிக்கும் போது வாசகனுக்கு மனதளவில் மிகப்பெரிய வெளியும், தன்னுடைய வெவ்வேறு வாழ்வியல் காட்சி அனுபவங்களோடு ஒப்பிட்டுக் கொள்ளும் காலமும் கிடைக்கப் பெறுகிற நிலையில், அதே கதையைத் திரைப்படமாக்கும் போது பார்வையாளன் காட்சிகளைத் துரத்திச் செல்ல நேரிடுகிறது.

நின்று நிதானித்துத் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளும் தளமோ, வெளியோ அங்கே கிடைக்கிற வாய்ப்பே இல்லை, அத்தகைய நெருக்கடியிலும் ஒரு திரைப்படம் இலக்கியத் தன்மையை பார்வையாளனை நோக்கி அள்ளித் தெளிக்க முடிகிறதென்றால் அதுவே காட்சி ஊடகத்தின் உச்ச வெற்றியாகவும், ஒரு படைப்பாளியின் தன்னிகரற்ற வழங்கு திறனாகவும் பரிணமிக்கிறது. அந்த வகையில் பாலா தமிழ்த் திரையுலகின் திசையை தனது திறன்களால் மாற்றிக் காட்ட முடியுமென்று உரக்கச் சொல்லி இருக்கிறார்.

ஏறக்குறைய நூற்றாண்டுகளுக்கு முன்னாள் நமது சமூக எல்லைகளுக்குள் நிகழ்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை, அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அவலங்களை அந்த மலைச்சரிவுகளில் போய் நின்று மீளப் பார்க்கிற ஒரு வலி மிகுந்த அனுபவத்தை ஒவ்வொரு பார்வையாளனும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது உணர முடிகிறது.

சாலூர் கிராமத்தின் கூரைகளுக்கு நடுவே கேமரா பயணிக்கத் துவங்குகிற போதே நமது புற உலகத்தின் தாக்கங்கள் அகற்றப்படுகிறது, தனது அயராத உழைப்பாலும், வழங்கு திறனாலும் நாயகனுக்குப் பின்னால் செல்கிற ஒரு சின்ன நாய்க்குட்டியைப் போல நாம் பயணிக்கத் துவங்குகிறோம், அன்றைய மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பேச்சு வழக்கு, ஆடை வடிவமைப்பு, இடத்தேர்வு என்று எல்லாமே ஒரு மையப் புள்ளியில் குவிந்திருக்கப் படம் ஒரு தெளிந்த நீரோடையைப் போலப் பயணிக்கிறது.

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் என்று எதுவுமே கைக்கு அகப்படாத எளிய ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையும், தெருக்களும் பெரிய அளவில் தாக்கம் உருவாக்குகிற நேரத்தில் அவர்களுடைய நம்பிக்கையும், சக மனிதர்களின் மீதான அன்பு கலந்த உரையாடலும் சற்று நம்பிக்கையை உருவாக்க திரைப்படத்தின் ஊடாகவே நம்மை மறந்து நாம் பயணிக்கத் துவங்குகிறோம். தொடர்ந்து காட்டப்படுகிற நாயகத் தோற்றம் ஒரு களைப்பை அல்லது தொய்வை அடைய வைக்கிற உண்மையை நாம் உணரத் தலைப்படுகிற போது நல்ல வேளையாகப் படம் தேயிலைத் தோட்டங்களுக்குப் பயணித்து விடுகிறது.

பாலாவின் பெரும்பாலான படங்களில் அவருடைய நாயகர்கள் மனப் பிறழ்வையோ, மன அழுத்தத்தையோ கொண்டவர்களாக இருக்கிறார்கள். சேதுவுக்கோ, பிதாமகனுக்கோ இல்லை நான் கடவுளுக்கோ அத்தகைய நாயகர்கள் மையப் புள்ளியாய் அல்லது தேவையாய் இருந்தார்கள் என்று சமரசம் செய்து கொண்டாலும் பரதேசியில் வருகிற நாயகன் கொஞ்சம் மனப் பிறழ்வு இல்லாதவனாக இயல்பான மனிதனாக இருந்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்குமோ என்கிற ஐயப்பாட்டை அவருடைய நாயகனே உருவாக்குகிறான்.

எளிய சமூகத்தின் காதலை, எளிய சமூக மக்களின் உழைப்புக்கான அலட்சியத்தை, துயரம் மிகுந்த அவர்களின் அக மற்றும் புற அடிமைத் தளைகளை ஒரு இயல்பான மனிதனால் இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்க முடியுமோ என்கிற ஏக்கம் நெடுக வருகிறது.

கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் வலிமை மிகுந்த நுட்பமான உட்பொருளை அதர்வா மிகச் சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறார், ஆனால் ஒரு பாத்திரத்தின் தன்மையை உருவாக்கும் சிற்பி அதன் இயக்குனர் என்ற வகையில் மனப் பிறழ்வு அல்லது மன அழுத்தம் கொண்ட நாயகர்களை சில இடங்களில் இருந்து வெளியேற்றுவதே சிறப்பானதாக இருக்கும் பாலா.

ஆண் துணையற்ற பெண்களின் வாழ்க்கையை, அவர்களின் தனிமையை பல இடங்களில் சிறப்பாகவே வெளிப்படுத்தி இருக்கும் பாலா நாயகி அங்கம்மாவுக்கு (வேதிகா) அந்த வாய்ப்பை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வழங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது, மிக நுட்பமான முக பாவங்களை வெகு இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிற நாயகிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது,

வழக்கமான தமிழ்த் திரைப்பட நாயகர்கள் செய்யும் ஒரு கட்டாந்தரை உடலுறவின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிற பத்தில் ஒரு பால் அடையாளமாக பாலாவின் படங்களில் நாயகியைப் பார்ப்பது கொஞ்சமாய் நெருடுகிறது. கொடுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இயன்ற வரையில் சிறப்பாக நடித்திருக்கிற நாயகிக்குத் தயக்கங்கள் இன்றி வாழ்த்துக்களைச் சொல்லலாம்.

படம் முழுக்க ஒரு தேயிலைத் தோட்டக் கங்காணியாகவே மாறிக் காட்டி இருக்கிற ஜெர்ரி சில நேரங்களில் நாயகனை விஞ்சும் அளவுக்குப் போய் விடுகிறார், வெள்ளைத் துரையிடம் அடி வாங்கி விட்டு அவர் காட்டும் ஆவேசமாகட்டும், வெற்றிலை மடித்துத் தின்றவாறே சாலூர் மக்களிடம் அவர் பேசுகிற தோரணை ஆகட்டும், "மை லார்ட், ப்லேஸ் மீ மை லார்ட்" என்று நாடகம் போடுவதாகட்டும், பாலா ஒரு இயக்குனராக நடிகர்களை நிஜமாகவே அடித்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. சபாஸ் ஜெர்ரி, இந்தப் படத்தின் பாத்திரங்களில் இயல்பான ஒரு தாக்கம் உருவாக்குவதில் உங்கள் உழைப்பு அளப்பரிய பங்காற்றி இருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இன்னொரு பாத்திரம் தன்சிகா (மங்களம்), தப்பித்து ஓடி விடுகிற கணவனை கரித்துக் கொட்டியபடியே அந்தக் குழந்தையோடு அவர் வாழ்ந்து காட்டியிருக்கிற கணங்கள் கவிதைத் துளிகள், ஒட்டுப் பொருக்கி என்கிற ராசாவுக்கு வரும் கடிதம் வாசிக்கப்படும் போதும், அதன் பிறகு நாயகன் கொள்கிற மகிழ்ச்சியின் போதும் அவர் காட்டும் முகபாவங்கள் வியக்க வைக்கிறது, நடிப்புக் கலையில் கண் என்கிற மிக இன்றியமையாத ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தும் வல்லமையை பாலாவின் திரைப்படப் பல்கலைக் கழகத்தில் பயின்று வெற்றி பெறுகிற தன்ஷிகாவுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

ஒரு வரலாற்றுக் காலத் திரைப்படத்தில் காட்சிகளை வெற்றிகரமாகத் திரைக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் இடத்தேர்வு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது, சாலூர் கிராம மக்களின் இடப்பெயர்வு நிகழ்வதாகச் சொல்லப்படும் வழியெங்கும் ஒரு வியப்பு கலந்த பிரம்மிப்பை உருவாக்குகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளர் செழியனும்.

வழியெங்கும் பின்னணியில் நகரும் காட்சிகள், வறண்ட சதுப்பு நிலக் காடுகள், கண்மாய்க் கரைகள், தற்கால நிலப்பரப்பின் அடையாளங்கள் இல்லாத ஒரு படப்பிடிப்பு நிகழ் தளங்கள் என்று அற்புதமான ஒளிப்பதிவுத் திறனை வழங்கி இருக்கிறார் செழியன். தேவையான இடங்களில் மாற்றம் பெரும் "செபியா" மாதிரியான வண்ணமாற்றுத் தொழில் நுட்பம் ஒரு தமிழ்த் திரைப்படத்தில் இத்தனை நுட்பமாக இடம் பெற்று இருப்பது அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். வாழ்த்துக்கள் செழியன், உங்கள் தொழில் நுட்பப் பணிகள் விருதுகளைக் கடந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நிலைக்கட்டும்.

ஜி வீ பிரகாஷ் குமாரின் பின்னணி இசை திரைப்படத்தின் காட்சிகளின் வலிமையோடு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தாலும் எந்த இடத்திலும் கதைக் களனையோ, பாத்திரங்களின் தன்மையையோ தொல்லை செய்யாமல் இயல்பாகவே பயணிக்கிறது, இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியுமோ என்கிற ஏக்கம் மனதில் தோன்றுவதை மறுக்க முடியாது, தேயிலைத் தோட்டத்தை நோக்கி சாலூர் கிராம மக்கள் பயணிக்கிற அந்த பாடல் காட்சியின் வரிகளில் வைரமுத்து என்கிற கவிஞரின் முகம் நிழலாடிச் செல்கிறது.

ஏறத்தாழ ஒரு தெளிந்த நீரோடையைப் போலப் பயணித்துக் கொண்டிருக்கிற திரைப்படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் வில்லனாக வருகிறார் பரிசுத்தம் என்கிற பாத்திரத்தில் சிவஷங்கர். பாலா என்கிற படைப்பாளிக்குள் திடுமென நிகழ்கிற இந்த அலங்கோலமான மாற்றத்தை ஏனோ ஒரு பார்வையாளனாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனம். தொடர்புக் கண்ணிகளே இல்லாத மத மாற்றம் குறித்த காட்சிகள் அல்லது ஒரு மதத்தின் கோட்பாடுகளைக் குறி வைத்துத் தாக்குகிற வன்மம் என்று இலக்கின்றி வேட்டைக் களம் போல குழம்பித் தவிக்கிறது ஒரு பாடலில் நுழைகிற மதம்.

பாலா, ஒரு வேளை நீங்கள் படித்த நூல்களிலோ இல்லை கேள்விப்பட்ட நிகழ்வுகளிலோ கிறித்துவ மதத்தின் மதமாற்றுக் கொள்கைகள் பெருமளவில் தாக்கம் நிகழ்த்தி இருக்கக் கூடும், ஆனாலும் ஒரு மேம்பட்ட கருவைத் தாங்கியவாறு பயணிக்கும் கதைக்களத்தின் நடுவே இடைச் செருகலைப் போல அரங்கேறி இருக்கும் அந்தப் பாடல் காட்சி அருவருக்க வைக்கிறது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் கிறித்துவ மத மாற்றுக் கோட்பாடுகள் உள் நுழைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், தமிழ்ச் சமூகத்தின் உளவியலில், சமூக அவலங்களில் பல நேரங்களில் கிருத்துவம் ஒரு மீட்பரைப் போன்ற பணிகளை ஆற்றி இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது, எளிய உழைக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்றில்லை, தமிழகத்தின் கடற்கரைக் கிராமங்கள் முழுதும் நிறைந்திருக்கும் மீனவக் குடும்பங்கள், ஊரகப் பகுதிகளில் கல்வியும், உணவும், மருத்துவ வசதிளும் இல்லாத அநாதைகளைப் போல வாழ்ந்து கொண்டிருந்த எண்ணற்ற ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் ஒளி ஏற்றி அவர்களின் வாழ்க்கையை அடுத்த படிநிலைகளுக்கு நகர்த்துவதில் கிருத்துவம் பெரும் பங்காற்றி இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.

அந்தப் பாடல் காட்சியிலும், அதன் தொடர்ச்சியிலும் ஒரு குழப்பமான மனநிலைக்குப் பார்வையாளனைத் தேவைகள் இல்லாமல் தள்ளி இருக்கிறீர்கள். நகைச்சுவையாகவும் பார்க்க இயலாமல், தீவிரத் தன்மையும் இல்லாமல் ஒரு கோமாளிப் படம் மாதிரியான சூழலை அந்த இருபது நிமிடங்களில் திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து நீங்களே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது உங்கள் அடுத்த படத்துக்கான ஒரு திறனாய்வாக அமையக் கூடும்.

தேவையற்ற அந்த இருபது நிமிடக் குழப்பக் காட்சிகளைத் தவிர்த்து இந்தப் படம் தமிழ்த் திரை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான முயற்சி என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது, நமது சமூகத்தின் வரலாற்றை மையமாக வைத்து இன்னும் எண்ணற்ற வரலாற்றுப் பதிவுகளை, சமூக அவலங்களை இலக்கியத்தில் இருந்தும், நாவல்களில் இருந்தும் உருவாக்கக் காத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு உங்கள் மனபலம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கும், சாலூர் மாதிரியான ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களின் தெருக்களுக்கும் தமிழ் சினிமாவைக் கட்டி இழுத்துப் போயிருக்கிற உங்கள் துணிச்சலுக்கு ஒரு "கிரேட் ஸல்யூட்". இதே மாதிரி ஒரு மந்திரப் படத்தை நிகழ்காலத் தமிழ் கிராமங்களுக்குள் நிகழும் சாதிய வன்கொடுமைக் களங்களை மையமாக வைத்து உங்களால் உருவாக்க முடியுமேயானால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்ச் சமூக வரலாற்றிலும் நிலைத்திருப்பீர்கள்.

பரதேசி - தமிழ்த் திரையுலகின் மேம்பாடுகளில் இன்னொரு மகுடம் பாலா, வாழ்த்துக்கள்.

Source: http://tamizharivu.wordpress.com/2013/04/04/பரதேசி-நெஞ்சில்-எரியும/

No comments:

Post a Comment