Search This Blog

Sunday, September 16, 2012

அலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

 

இன்று கணனித்திரையில் நாம் எமது பணிகளை செய்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த அற்புத மனிதர்தான். இவர் இல்லாவிட்டால் என்னால் கணனித்திரையில் இதை எழுதவும் முடியாது. உங்களால் படிக்கவும் முடியாது. Binary எண்களாக பகுத்தெழுதி கணிப்பு நடத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர். சுருக்கமாக கூறினால் நவீன கணனியின் தந்தை.

மூச்சு விடுவதுகூட கணனி என்று ஆகியிருக்கும் இக்காலத்தில் அலன் மாத்திசன் டூரிங்கை யாருக்கும் தெரியாமல் இருப்பது கொடுமைதான்.

1912 ஆம் ஆண்டு இப் புவியில் அவதரித்த அலன் டூரிங் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1938 ஆம் ஆண்டு கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டார். அந்த காலகட்டம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாகையால் அலன் பல்கலைக்கழகத்தில் இருந்து தன் தாய் நாடான பிரிட்டனுக்கு திரும்பி, அங்கே ஜேர்மனியர்களின் போர்க்கால சங்கேதங்களை தகர்க்கும் வேலையில் சேர்ந்தார். 

இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் எனிக்மா இயந்திரம் அதனுடைய சங்கேதங்களை மாற்றிக்கொண்டேயிருக்க எந்த வகையிலும் ஜேர்மனியர்களின் தகவல்களை புரிந்துகொள்ளமுடியாமல் இருந்தது. அப்போது டூரிங் தயாரித்த கணனி செய்முறைகளை (Algorithmas) கொண்டு எந்த அடிப்படையில் எனிக்மாவின் சங்கேதங்கள் மாறுகின்றன என்பதை துல்லியமாக கணிக்க முடிந்தது. விளைவாக ஜேர்மனியரின் A+-போட் என்ற நீர்மூழ்கியின் சங்கேதங்களைப் பிரிட்டானியர்கள் புரிந்துகொள்ள, அந்த நீர்மூழ்கி முறியடிக்கப்பட்டு போரில் நேச நாடுகளுக்கு வெற்றி கிடைத்தது. இரண்டாம் உலகப்போரில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். கிட்டத்தட்ட இதுதான் உயர்தொழில்நுட்ப அடிப்படையிலான போர்த்தந்திரத்துக்கு கிடைத்த முதல் வெற்றி)
தொடர்ந்து எண்கணிதம் (Number Theory), நேரிலி கணக்கீடு (Nonlinear computation), நேரிலிக்கணக்கீட்டின் அடிப்படையில் உயிரியல் பெருக்கங்களை வடிவாக்கல், பிணைப்பு வலைகள் (Neural Networks) என்று பலதுறைகளில் அலன் டூரிங் மிக முக்கியமான பங்களிப்பைத் தந்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இவரது தனிப்பட்ட வாழ்வு சோகம் மிகுந்ததாகவே இருந்தது. அலன் டூரிங்கிற்கு இயற்கையிலேயே ஓரினச்சேர்க்கைமீது நாட்டமிருந்தது. அக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களை உலகம் வெறுத்து ஒதுக்கிய காலம். அரசுகளினால் கூட ஓரினச்சேர்க்கை தடை செய்யப்பட்டிருந்தது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் சமூக விரோதிகளாகவே நோக்கப்பட்டனர். அலன் டூரிங் 1952 ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் இன்னொரு ஆணுடன் உறவுகொள்ள முயற்சித்தபோது போலீசாரால் பிடிக்கப்பட்டார். 

ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதே வழமை. அல்லது பெண்களுக்கு இயற்கையில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஒருவருடத்திற்கு ஊசிமூலம் செலுத்திகொள்ள வேண்டும். சிறையை தவிர்ப்பதற்காக அலன் டூரிங் ஹார்மோன் செலுத்த ஒத்துக்கொண்டார்.


தன்னைக்கவர்ந்திழுக்கும் தொழில்நுட்பம் ஒருபுறமும், ஓரினச்சேர்க்கை ஆர்வம் மறுபுறமும், இயற்கைக்கு மாறாக உடலில் செலுத்தப்பட்ட ஹார்மோன் இன்னொரு புறமும் என்று இழுக்க அலன் டூரிங்கின் வாழ்வு அவலமாகிப்போனது.

தூங்க முடியாத வேதனையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு கணிதம், இயற்பியல், உயிரியல் என்று முடிக்கப்படாத பல சித்தாந்தங்களை உலகிற்கு விட்டுவிட்டு சயனைட் கலந்த அப்பிளை உட்கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார். எந்த பிரிட்டானிய சமூகத்தை தன் அறிவால் போரில் காப்பாற்றினாரோ அதே சமூகத்தின் ஓரினச்சேர்க்கை வெறுப்பினால் துரத்தியடிக்கப்பட்டு அவருடைய வாழ்வு முடிந்துபோனது.

அவருடைய ஆராய்ச்சிகள், கணிதம், இயற்பியல், தர்க்கம், தத்துவம், உயிரியல், சங்கேதம் என்று பல் துறைகளில் பரவி நிற்கிறது. அவருடைய மறைவுக்கு பிறகு 1969 இல் வெளியிடப்பட்ட Intelligent Machines என்ற ஆராய்ச்சிக் கட்டுரை, இன்றைக்கு நாம் அறியும் செயற்கை ஒட்பம் (Artificial Intelligence) என்ற துறைக்கு வித்திட்டது. மனித மூளையின் செயற்பாடுகளை முற்றாகவோ, கிட்டத்தட்ட முழுமையாகவோ நிகழ்த்தவல்ல இயந்திரங்களைப் படைப்பது சாத்தியம் என்று அலன் டூரிங் முழுமையாக நம்பினார். அத்தகைய புத்திசாலி இயந்திரங்களை உளவியல் ரீதியாக கையாள்வதற்கு மனிதனுக்கு இருக்கும் தயக்கங்களையும் முன்மொழிந்தார்.

1950 இல் டூரிங் சோதனை என்ற கட்டுரையை வெளியிட்டார். அதில் செயற்கை ஒட்பத்தை அடையாளம் காணும் வழியை விளக்கியிருந்தார். மொத்தத்தில் நவீன இரண்டடிமான (Binary) கணனி, செயற்கை ஒட்பம், சங்கேதவியல் போன்ற துறைகளை நமக்கு உருவாக்கி கொடுத்தவர் அலன்.

No comments:

Post a Comment