Search This Blog

Wednesday, August 15, 2012

ஐ.நா பாதுகாப்புச் சபைப் பிரேரணைகள் 1325உம் 1820உம்




ஐ.நா பாதுகாப்புச் சபை பற்றிய அறிமுகம் 
சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் 1948ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலே இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்தபோது, ஐரோப்பா அதுவரை உலகம் கண்டிராத பெரும் அழிவைக் கண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். யுத்தத்தில் இறந்த 60 மில்லியன் மக்களைத் தவிர, 6 மில்லியன் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த அனுபவம் இனியும் வரவேண்டாம் என்று சூளுரைத்துத்தான் உலக நாடுகளே திரண்டு, தங்களுடைய அங்கத்துவத்தின் மூலம்,  ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை உருவாக்கின. அதற்கான சர்வதேச ஒப்பந்தத்தினை ஏற்படுத்தின. அந்த ஒப்பந்தமே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சாசனம் ஆகும்.
இவ்வாறாக, சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு ஐ.நா ஸ்தாபனம் உருவாக்கிய அங்கமே பாதுகாப்புச் சபையாகும். இச்சபையின் அதிகாரங்கள் ஐ.நா சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அவையாவன, சமாதானத்தை ஏற்படுத்தல், அதற்கு இணங்கி வராத நாடுகளுக்கு எதிராக சர்வதேச பொருளாதாரத் தடைகளை செயற்படுத்துதல், தேவையான பொழுது அவ்வாறான நாடுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பனவாகும். நீங்கள் ஐ.நாவின் அமைதி காக்கும் படைகள் பற்றி பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். இவை செயற்படுத்தப்படுவது பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தின் கீழாகும். இந்த நடவடிக்கைகளெல்லாம் ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிரேரணைகள் மூலம் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அமுலுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவ்வளவு முக்கியமான அதிகாரங்களை, அவற்றை ஐ.நாவின் அதியுயர் அதிகாரங்கள் என்று கூடச் சொல்லலாம், இப்பாதுகாப்புச் சபை கொண்டிருப்பதால், அதில் உலகின் வல்லரசுகள் முக்கிய அங்கத்துவம் வகிக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவை தடையுத்தரவு அதிகாரம் (வீட்டோ) மிக்க நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். இவை தவிர மேலும் 10 நாடுகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு அங்கத்துவம் பெறலாம். காலத்துக்குக் காலம், முக்கிய பிரச்சினைகளைப் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதால் அவற்றைத் தீர்ப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கும் வண்ணம் பிரேரணைகளை அச்சபை கொண்டு வருவதற்கு உதவலாம். இவ்வாறு, உலகெங்கும் உள்ள பெண்கள் அமைப்புக்கள் போட்ட அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையே 1325 ஆகும். இதைக் கொண்டு வருவதற்கு உதவியாக அப்போதைய அங்கத்துவ நாடுகளில் ஒன்றான நமீபியாவின் பெண் அமைச்சர் நெடும்போ நந்தி என்டைட்வா என்பவர் கடுமையாக உழைத்தார். இப்பெண்களின் இடையறாத உழைப்பின் பயனைத்தான் இன்று உலக நாடுகளின் பெண்கள் எல்லோரும் அனுபவிக்கின்றனர்.


பாதுகாப்புச் சபை பிரேரணை 1325
பிரேரணை 1325 ஆனது 2000ம் ஆண்டு ஒக்டோபர் 31ந் தேதி அங்கீகரிக்கப்பட்டது. இது பெண்களின் உரிமைகள், மற்றும் அவர்களின் பாதுகாப்பு சமாதானம் போன்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட மிக முக்கியமான சட்ட பூர்வமான தீர்மானம் என்றால் மிகையாகாது. சட்ட பூர்வம் என்றால், பாதுகாப்புச் சபையின் இத்தீர்மானத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கோர்ட்டில் கூட வழக்காடலாம் என்பது பொருள். இப்பிரேரணையானது பெண்களின் உரிமைகளை மதிக்கும் பொருட்டும், சமாதானத்தை உருவாக்குதலிலும் யுத்தத்தின் பின்பான புனர் நிர்மாணப் பணிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை விடுக்கிறது. யுத்தத்தினால் பெண்கள் அதி விசேடமாகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொண்ட முதல் பாதுகாப்புச் சபை ஆவணம் இதுவாகும். பெண்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது மிகக்குறைவு என்று அவதானித்து, அவர்கள் பங்குபற்றுவதால் சமாதான நிலைமைகள் இன்னும் விருத்தியாகும் என்று தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது. அடிதடிபிடியில் உடனேயே இறங்காமல் சுமுகமாகப் பழகும் இயல்பும், அதிகாரம் மிக்க பதவிகளை அதீத பேராசையோடு நாடாத இயல்பும் உள்ளவர்கள் பெண்களல்லவா? அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரசியல், ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரசியலைவிட சற்று வித்தியாசமானதாகத்தானே இருக்கும்?
இப்பிரேரணையைச் சுருக்கமாகக் கூறப்போனால்....
1. உள்ளுர், தேசிய, சர்வதேச அரங்குகளில் சமாதானத்தை உருவாக்கும் சகல நடவடிக்கைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல்

2. ஐ.நா தன்னுடைய அங்கத்துவ நாடுகளுக்கு அவ்வப்போது அனுப்பும் விசேட பிரதிநிதிகளில், உதாரணமாக யுத்த காலத்தில் காணாமற் போனோரை விசாரிப்பது அல்லது பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்று இத்தகைய பிரச்சினைகளை ஆராய்ந்து ஐ.நாவுக்கு அறிவிக்கும் எந்த விசேடப் பிரதிநிதிகள் மத்தியிலும், பெண்களும் அடங்குவதாகச் செய்தல்

3. அமைதி காக்கும் படைகள், அல்லது கண்காணிப்புக் குழுக்கள் என்று ஐ.நா அமைப்பு யாரை அனுப்பினாலும் அதில் பெண்களும் சமமாகப் பங்குபெறச் செய்தல்

4. யுத்த காலத்தில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் குற்றங்களை யுத்தக் குற்றங்களாகக் கருதி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்குதல். அவை நடைபெறாத வண்ணம் உறுதியான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளல்

5. அகதி முகாம்களில் ஏற்படக்கூடிய பெண்களைக் கடத்தும் பிரச்சினைகள், எச்ஐவி எய்ட்ஸ் தொற்று போன்றவற்றைத் தீர்ப்பதற்கான விசேட பயிற்சிகளைப் பெண்களுக்கும் முகாம் பணியாளர்களுக்கும் வழங்குதல்

6. யுத்தத்திற்குப் பின்பான புனர் நிர்மாணப் பணிகளில் பெண்களினதும் பெண் பிள்ளைகளினதும் பிரச்சினைகளை, விசேட தேவைகளைக் கவனத்திற் கொண்டு அதற்கான குறித்த திட்டங்களைச் செயற்படுத்தல்

7. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் பெண் போராளிகளது விசேட தேவைகளைக் கவனித்து அவர்களது அபிவிருத்தியை நிச்சயப்படுத்திக்கொள்ளுதல்

8. யுத்த நாடுகளின் இராணுவ சிவில் அமைப்புக்களுக்கு பெண்கள் பிரச்சினை தொடர்பான அறிவையும் விளக்கத்தையும் கொடுக்கும் விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு உரிய வளங்களை ஒதுக்குதல்

9. யுத்தத்தினாலும் வன்முறையினாலும் பாதிக்கப்பட்ட சகல நாடுகளிலும், அங்கு பெண்களின் நிலைமை என்னவாக இருக்கின்றது என்பதை ஆராயும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான வளங்களை ஒதுக்குதல்

10. யுத்தங்கள், கலவரங்களினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நாடும் தாம் பெண்களையும் பெண்பிள்ளைகளையும் பாதுகாப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்பதை அறிவிப்பதற்கு கிரமமாக பாதுகாப்புச் சபைக்கு ஒரு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தலை நிர்ப்பந்தித்தல். அந்த முன்னேற்ற அறிக்கையைக் கொண்டு ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான இடங்களில் அழுத்தத்தைப் பிரயோகித்தல் 

என்பனவாகும்.

பிரேரணை 1325 கொண்டுவரப்பட்டதால் உலகமெங்கும் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஐரோப்பியப் பாராளுமன்றம் சமாதான நடவடிக்கைகளில் பெண்கள் குறைந்தது 40வீதமாவது ஈடுபடுத்தப்படவேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. பெண்கள் அமைப்புக்கள் முன்னரைவிட இன்னும் துணிகரமாக சமாதானத்துக்கான அறைகூவலை முன்வைத்திருக்கின்றன. இதற்கு உதாரணங்களை எங்கள் நாட்டிலும் இஸ்ரேலிலும் காணலாம். யுத்தம், சமாதானம் என்னும் விடயங்கள் எங்கும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருப்பதனால் பெண்கள் அரசியலில் கூடிய பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பது பெரிய கோஷமாக வளர்ந்து வந்திருக்கின்றது. எங்கள் நாடு அதற்கு நல்லதொரு உதாரணமாகும். 

இது தவிர, வேறு குறிப்பிட்ட நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

13,000 பேரைப் பலி கொண்ட யுத்தம் நிகழ்ந்த நேபாளத்தில், லிலி தபா என்னும் பெண், விதவைகள் மற்றும் காணாமல் போனோரின் மனைவிமார் என்கின்ற அடிப்படையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு பிரதிநிதித்துவம் இவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வாதாடி வென்றிருக்கிறார். ஈராக்கில் பெண்கள் அமைப்புக்கள் மரியாதைக்குரிய முன்னணி சமாதான அமைப்புக்களாக வளர்ந்து வருகின்றன. அடிமட்டத்திலிருந்து பல தலைவிகள் உருவாகி சர்வதேச மட்டத்தில் சமாதானம் பேசக்கூடியவர்களாக வந்திருக்கின்றனர். இதற்கு உதாரணமாக, பிஜி நாட்டைச் சேர்ந்த ஷரோன் ரோல்ஸ், உகண்டாவில் பிறந்த மொபீனா ஜெஃபர், எங்கள் ஊரில் ராதிகா குமாரசுவாமி அத்தகைய பெயர் பெற்ற பெண்ணாவார். அவர் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும், இப்பொழுது படைகளில் பிள்ளைகள் சேர்க்கப்படுவதற்கு எதிராகவும் பணிபுரியும் ஐ.நாவின் விசேட பிரதிநிதியாக இருக்கிறார்.

பாதுகாப்புச்சபை பிரேரணை 1820

பிரேரணை 1325இன் பயனாகக் கொணரப்பட்ட இன்னொரு பிரேரணைதான் 1820 ஆகும். 2008ம் ஆண்டு ஜ}ன் 19ந்தேதி, முழு ஆதரவுடன் பாதுகாப்புச் சபை இப்பிரேரணையை நிறைவேற்றியது. இது, முதன்முறையாக பாலியல் வன்புணர்ச்சியினை யுத்த ஆயுதமாக உபயோகிப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளது. இவ்வகையான குற்றச் செயல்கள் யுத்தக் குற்றங்களாகக் கண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்பு வழக்காக கொண்டுவரப்படலாம் என்கின்றது. யுத்தத்தின் போதான பாலியல் வன்புணர்ச்சியானது மனித குலத்திறகெதிரான குற்றமாகவும், இனப்படுகொலையாகவும் விபரிக்கப்பட்ட முதல் உத்தியோகபூர்வ ஆவணம் இந்தப் பிரேரணையாகும். இந்தக் குற்றத்துக்கு எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்படக்கூடாதென்கின்ற கட்டளையையும் விதித்திருக்கின்றது.

பாதுகாப்புச் சபை பிரேரணை 1820 கொண்டுவரப்படுவதற்கு சில வரலாற்றுக் காரணிகள் உள்ளன. 1990களில் முன்னைய யூகோஸ்லாவியப் பிராந்தியத்தில் சேர்பியத் துருப்புக்கள் அந்நாட்டில் குடியிருந்த முஸ்லிம் சிறுபான்மையினருக்கெதிரான போரினை ஆரம்பித்திருந்தனர். இந்தப்போரில், முஸ்லிம் மக்களின் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்தியவிதம் உலகையே கலக்கியது. இது உத்தியோகபூர்வமாக சேர்பிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த யுத்த உபாயம் என்பதும் நிறுவப்பட்டது. இக்குற்றத்திற்காக சேர்பியத் தலைவர் மிலோசவிச் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். அதன் பிறகுதான், குறிப்பாக பாலியல் வன்புணர்ச்சி யுத்த ஆயுதமாக உபயோகிக்கப்படும் கொடுமையைத் தடை செய்யும் எண்ணம் உலகுக்குத் தோன்றியது.

பிரேரணை 1820 ஆனது  பிரேரணை 1325இன் பல அம்சங்களைப் பொதுவில் கொண்டிருந்தாலும், அது ஐ.நாவின் செயலாளர் நாயகத்தை பொறுப்புக் கூறுபவராக ஆக்குவதில் வித்தியாசப்படுகின்றது. இதன்படி, செயலாளர் நாயகம் அவர்களே யுத்த நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்களைக் கண்காணிப்பவராகவும், அவற்றைப் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருபவராகவும் நியமிக்கின்றது. இதைத் தவிர, நாடுகள் தங்கள் நடவடிக்கைகள் பற்றி பாதுகாப்புச் சபைக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கும்பொழுது, அந்த அறிக்கைகளை மேலும் தரமுள்ள உண்மையான அறிக்கைகளாக மாற்றுவதற்கான வழிமுறைகளைக் காட்டும் பொறுப்பையும் அவரிடமே விடுகின்றது.    

கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:
1. யுத்தம், வன்முறை, மற்றும் கலவரங்களினால் பெண்கள் பிரத்தியேகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்று கூறப்படுவது ஏன்? காரணங்களை ஆராய்க.

2. அவர்கள் ஆண்களிலும் விட வித்தியாசமாகப் பாதிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விவரமாக எடுத்துக்கூறுக.

3. யுத்தத்தின்போது பாலியல் வன்புணர்ச்சி எவ்வாறு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆகலாம்?

4. இந்தக் கட்டுரையில், பிரேரணை 1325 கடும் உழைப்பினால் கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறதே. இந்தக் கடும் உழைப்பு எதைக்குறித்து இருந்திருக்க முடியும்?

5. எங்கள் ஊரில் பெண்களுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள் என்னென்ன? சம்பவங்களாக எடுத்து விளக்குதல் நல்லது.

6. எங்களுக்கு நிரந்தர சமாதானம் ஏற்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன? அவை நடக்கின்றனவா? அவற்றில் பெண்கள் பங்குபற்றுகிறார்களா? ஆம் என்றால் என்ன என்றும் இல்லையென்றால் ஏன் என்றும் குறிப்பிடுக.

7. பிரேரணைகள் 1325, 1820 ஆகியன இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் பெண்களாகிய எங்களுக்கு ஏதும் பிரயோசனம் தரும் பிரேரணைகளா? அவை எப்படிப் பிரயோசனமாகின்றன, அல்லது எங்களுக்கு முக்கியமாகின்றன?

8. அவற்றை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யலாம்? நாங்கள் எங்கள் ஊரில் செய்யக்கூடிய ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க. நீங்கள் கூறியவற்றைச் செய்வதனால் பெண்களாகிய எங்கள் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படுமா?

9. பெண்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதாலும், அவர்கள் பங்குபற்றுவதாலும் சமாதானம் நிலைக்க முடியும் என்று கூறப்படுகிறதே, அது உண்மையா? ஏன்? எப்படி?

10. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.

11. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதைத் தயவு செய்து மறக்காதீர்கள்.







  






No comments:

Post a Comment