Search This Blog

Wednesday, August 15, 2012

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம் 1987



13ம் திருத்தச் சட்டம் தோன்றிய வரலாறு

1978ம் ஆண்டு திரு ஜேஆர் ஜெயவர்தனா அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தாராள பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்தி அதற்குத் தகுந்தாற்போல் ஒரு அமெரிக்க சார்புள்ள அரசியல் கொள்கையை முன்னெடுத்தார். இந்து சமுத்திரப் பிராந்தியம் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முனைந்து நின்ற இந்தியாவுக்கு இது பிடிக்கவில்லை. இதனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்குள் தலையிட்டு அதன் மூலம் கொழும்பு அரசாங்கத்தை நிலை தடுமாற வைக்க எத்தனித்தது. இந்தியாவின் தலையீடு பெரும்பாலும் தமிழ் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்து அவற்றை வளர்ப்பதாயும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்கும்படி கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாயும் அமைந்தது. அது பூடானின் திம்பு நகரிலும், பின்பு புதுடில்லியிலும் தனது மத்தியஸ்தத்துக்கு கீழ் ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழ் இயக்கங்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆயினும் இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் யாழ் மாவட்ட வடமராட்சியில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டபோது இந்திய அரசாங்கம் தனது விமானங்களை ஏவி வடமராட்சியில் பருப்பு மற்றும் உணவுப் பொதிகளை எறிந்ததன்மூலம் தான் இராணுவ ரீதியாகவும் இலங்கையில் தலையிடத் தயாராக இருப்பதை சூசகமாக உணர்த்திற்று. இந்தியாவுடன் போரிட வலுவில்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கா அரசு உடனடியாகப் பணிந்து போய் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யத் தயாரானது. இந்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சம்மதமும் வெகு பிரயாசையுடன் பெறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களுக்கு மிக அதிகமாக அரசியல் அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன என்கின்ற அடிப்படையில் சிங்களவர்களும், தமிழீழம் குறித்து போராடுகின்ற தமிழ் மக்களுக்கு இந்த ஒப்பந்தம் போதுமானளவு அதிகாரங்களைப் பகிரவில்லை என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஆயினும் இந்திய அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின்பேரில் இருவரும் வேறு வழியின்றி இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தமே 13ம் திருத்தச் சட்டமாக இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றது. இதனை செயற்படுத்துவதை மேற்பார்வை செய்யவென இந்திய அரசாங்கம் தனது அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.  

ஆரம்பத்திலிருந்து பலவகையான எதிர்ப்புக்கள் இச்சட்டத்துக்கு எதிராகக் கிளம்பின. இந்திய மேலாதிக்கம் என்கின்ற கோஷத்துடன் இலங்கையின் தென்பகுதியில் ஜேவிபி இயக்கம் தனது பயங்கரவாதத் தலையை நீட்டியது இப்போதுதான். அந்தக் காலத்தில் மைசூர் பருப்பு விற்ற பாவத்துக்காகவே கொலையுண்ட சிங்கள கடைக்காரர்கள் எத்தனைபேர். வுடக்கிலோ, ஒப்பந்தம் சரியாக அமுலாக்கப்படவில்லை என அவசரப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதமே இந்திய இராணுவத்துடன் மோதலாயிற்று. தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியும் வடக்கில் இந்திய இராணுவம் - விடுதலைப்புலிகள் போரும் நமது நாட்டை மூன்று வருடங்களுக்கு துண்டாடின.

இந்த நிலைமைகள் எல்லாமே சேர்ந்து 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்த விடவில்லை. அன்று தொடக்கம் இன்றுவரை சிங்கள அரசியல் தலைமைத்துவங்களின் மெத்தனத்தினால் மாகாணசபைகளுக்கு சேரவேண்டிய அதிகாரங்கள் பகிரப்படவில்லை.  
குறிப்பாக எந்த மக்களுக்காக அது விசேடமாக கொண்டுவரப்பட்டதோ அந்த வட கிழக்கு மக்களுக்கு அது உதவவில்லை. 1988ல் தெரிவு செய்யப்பட்ட முதல் வடகிழக்கு மாகாணசபை 1990ம் ஆண்டிலேயே கொழும்பு அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டது. இது நடந்து 17 ஆண்டுகளின்பின்னர் 2007ம் ஆண்டில் வடகிழக்கு இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதன் பின் முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு கிழக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.

2009ல் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் 13ம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தும்படி பல தரப்பினரிடமிருந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வர ஆரம்பித்துள்ளன. 13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றிய விவாதங்களைப் புரிந்து கொள்வதற்கு அச்சட்டத்தில் என்ன இருக்கின்றது என்பதை அறிவது முக்கியமாகும். இதை அறிந்து கொள்ள முன்னர், இச்சட்டம் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அதிகாரப்பரவலாக்கலுக்காக விடுத்த கோரிக்கைகயினைப் பூர்த்தி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டதனால் முதலில் அதிகாரப் பரவலாக்கல் என்றால் என்ன என்பதையும் அது ஏன் கோரப்பட்டது என்பதையும் பார்க்கலாம்.

அதிகாரப் பரவலாக்கல் என்றால் என்ன?

குடிகளாக வாழ்ந்த காலத்திலிருந்து கூட்டுச் சமூகங்களாகவும் நாடுகளாகவும் வாழும் இக்காலம் வரை மனிதர்கள் தங்கள் மத்தியில் ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கான வாழ்வைப் பேணுவதற்காக பலவிதமான ஆட்சி முறைகளைக் கைக்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த ஆட்சிகள் செய்யப்படும் சாதனமாக அரசு தோன்றியது. உலகத்தில் பலவிதமான உருவங்களில் அரசு தோன்றியிருந்தாலும் எங்களெல்லாருக்கும் மிகப் பரிச்சயமான அரசு ராசா ஆளும் அரசுதானே. அதுவும் சகலவித அதிகாரங்களுடனும் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கட்டளையிடும் ராசாதான் எங்களுக்குத் தெரியும்.
ஒரு ராசா அதியுயர் அதிகாரங்களுடன் இருப்பது போலத் தோற்றினாலும், ஆழமாகப் பார்த்தால் ராசாவின் அதிகாரங்களின் வரையறைகள் விளங்க ஆரம்பிக்கும். அந்தக் காலத்தில் போக்குவரத்து செய்யக்கூடிய பெருந்தெருக்கள், தொலைபேசிகள் தொடர்பு சாதனங்கள் ஒன்றுமேயில்லை. ஒரு நாட்டை நிர்வகிக்க இவையெல்லாம் தேவையென்று உங்களுக்குத் தெரியும். எனவே, அனேகமான ராசா ஆட்சிகளில் தலைநகரம் மட்டுந்தான் அந்த ராசாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. நாட்டின் ஏனைய பகுதிகளெல்லாம் வெறுமனே வரி வசூலிக்கப்படும் இடங்களாகவே இருந்தன. இந்த இடங்களில் வரி வசூலிக்கவென ஒரு ஜமீன்தார் போன்றவர் ராசாவினால் நியமிக்கப்பட்டார். அவ்வளவுதான். மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கு மக்கள் சபைகள் அல்லது பஞ்சாயத்துக்கள் இருந்தன. இவற்றின் ஆட்சியில் ராசா அனேகமாகத் தலையிடவே மாட்டார். இவ்வாறு பிரதேசத்துக்குப் பிரதேசம் மக்கள் தமது பாரம்பரியங்களைப் பின்பற்றித் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொண்டு வந்தனர்.    

காலப்போக்கில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படவும், தொடர்புகள் அதிகரிக்கவும், அரசு தனது அதிகாரத்தை விஸ்தரிக்கத்தொடங்கியது 19ம் நூற்றாண்டிலேயாகும். இதன்பிறகு மக்கள் தாங்கள் சட்டங்கள் உருவாக்குவதை விட்டு தங்கள் மத்திய அரசு உருவாக்கி நிர்வகிக்கும் சட்டங்களுக்குப் பணியவேண்டிய நிலை உருவாகிற்று. அரசு சர்வ வியாபகமான சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியது இந்தக் காலத்தில்தானேயொழிய ராசா காலத்தில் அல்ல. நாங்கள் பிரஜைகளாக இருக்கும் முறைகள் தொடங்கி நாங்கள் வாழும் முறைகள், எமது தொழில், எமது கல்வி, எமது குடும்ப வாழ்வு, எமது பண்பாடு எல்லாமே நவீன அரசு இயற்றும் சட்டங்களால் ஆளப்படத் தொடங்கின. அப்படிப் பார்த்தால் ஒரு இனக்குழுமத்தின் பாரம்பரிய கலாசார அடையாளங்கள் வாழ்கின்றனவா அல்லது அழிந்தொழிந்து போகின்றனவா என்பதெல்லாம் ஒரு அரசின் கையிலேயே தங்கியுள்ளது என்பதைக் காணலாம்.

ஒரு நாட்டில் எத்தனை இனங்கள், எத்தனை குடிகள், எத்தனை மொழிகள் இருக்கும்? இவையெல்லாவற்றினதும் வித்தியாசமான தேவைகளை அனுசரித்து சட்டங்களும் கொள்கை நடைமுறைகளும் இயற்றப்படவேண்டுமென்றால், அரசு இந்த மக்கள் எல்லோரினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகவும் அவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும்  இருக்க வேண்டுமல்லவா? ஆனால் நாமறிந்த நவீன அரசோ, ஒரு நாட்டின் பெரும்பான்மைசமூகத்தினால் அமைக்கப்பட்டதாகவும், அவற்றின் நலன்களைப் பிரதிபலிப்பதாகவுமே இருந்தது. ஏனெனில் நவீன ஜனநாயகம் என்பதே பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கம் என்பதன் பொருளல்லவா?

ஒரு பெரும்பான்மை சமூகத்தின் அரசு ஏனைய சமூகங்களுக்கு என்ன செய்யும் என்பதைக் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் நாம் காண்கூடாகக் கண்டிருக்கின்றோம். தமிழ் மக்கள் எவ்வளவு எதிர்ப்பைக் காட்டியும் பயனின்றி தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களப் பிரதேசங்களுக்கே முதலீடுகளும் அபிவிருத்தித் திட்டங்களும்; பெருவாரியாக கொண்டு செல்லப்பட்டன. சிங்கள வர்த்தகர்களுக்கு சாதகமாகக் கொள்கைகள் செயற்படுத்தப்பட்டன. தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்கில் பாரம்பரியமாகத் தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களை அழிக்கும்பொருட்டு அரசின் அனுசரணையோடு இன வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இப்படிப் பல உதாரணங்களை எங்கள் வரலாற்றில் காட்டலாம்.

இது எங்களுடைய நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கும் விஷயமாகும். மத்திய அரசுகளின் நடவடிக்கைகளினால் பல சமூகங்களின் இருப்பு அச்சுறுத்தப்படுகின்றது. இதனால்தான், ஒரு நாட்டில் வாழும் சகல சமூகத்தினரும் தமக்குத் தேவையான முறையில் தமது ஆட்சியையும் அபிவிருத்தியையும் கொண்டு செல்வதற்கு அதைச் செய்வதற்குரிய அதிகாரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டியதாக இருக்கின்றது. இந்த அதிகாரங்களை ஒவ்வொரு இனக்குழுமத்திற்கும் வழங்கும் ஏற்பாடுகளை நாம் அதிகாரப் பரவலாக்கல் என்கின்றோம். அதாவது, மத்திய அரசாங்கத்தின் சில அதிகாரங்களை நாட்டின் வௌ;வேறு பிரதேச மக்கள் அல்லது இனக்குழுமங்கள் பகிர்ந்து எடுத்துக் கொள்வது என்று இதற்குப் பொருளாகும். இது உலகில் காணக்கூடிய ஒவ்வொரு சமூகத்தினதும் தம்மைத் தாமே தக்க வைத்துக் கொள்வதற்கான உரிமையாகும். இதனை சுயநிர்ணய உரிமை என்போம்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு முறையில் அதிகாரப் பரவலாக்கல் நிகழ்ந்திருக்கின்றது,  நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனால்தான் அதிகாரப்பரவலாக்கல் வேண்டும் என்கின்ற கோரிக்கையைத் தமிழ் மக்கள் முன்வைத்தனர். ஒரு இனக்குழுமம் சுயாதீனமாக இயங்குவதற்கும், அது ஒரு குறிப்பிட்ட பூகோளப் பரப்பில் இருக்கின்ற ஏனைய இனக்குழுமங்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் இடையே இருக்கின்ற முறுகுநிலை (அது எப்பொழுதும் இருக்கும்) சமநிலையாகப் பேணப்படும்பொழுது ஒரு ஆரோக்கியமான அரசு இயங்குகின்றது என்பது அர்த்தமாகும். இந்தக் கருத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.  

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரதான அம்சங்கள்

இதன் நோக்கம் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பரவலாக்கலாகும். ஆனால் தமிழ் மக்களுக்கென தனித்துவமாக ஏதேனும் வழங்கியதாக இருக்கக்கூடாது என்று ஜேஆர் ஜெயவர்தனா கருதியதால், நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரே மாதிரி அதிகாரப்பரவல் வழங்கப்பட்டது. ஆனால் வேறொரு மாகாண மக்களும் தமக்கு அதிகாரப்பரவலாக்கல் தேவை என்று கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேட்காமலே அவர்களுக்கு அது கொடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழ்க்கு மாகாணமாகியது மட்டும் ஒரு விசேட அம்சமாகும். இனி, 13ம் திருத்தச் சட்டத்தின் நோக்கத்திற்குப் பொருத்தமாக அதன் உள்ளடக்கம் இருக்கின்றதா என்று பார்ப்போம்.

 அ) உள்ளடக்கம்

உள்ளடக்கத்தின் முக்கிய பகுதிகளாவன,

1. சிங்களத்துடன் சேர்ந்து 'தமிழும் ஒரு உத்தியோகபூர்வ மொழியாகும்'
தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழிகள் என்று நேரடியாக சொல்லப்படவில்லை என்பதைக் கவனித்துக் கொள்ளவும்.

2. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு செயற்பட்டாலும், அந்த இணைப்பு ஒரு நாடளாவிய கருத்துக்கணிப்பின் முடிவிலேயே நிரந்தரமாக்கப்பட முடியும்
நாடு முழுவதும் சிங்கள மக்கள் 74வீதம் இருக்கும்போது அவர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தினால் என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்? இதனால், .ணையப்போகிறார்களா பிரிந்திருக்கப் போகிறார்களா என்கின்ற கருத்துக் கணிப்பு வடகிழக்கிலுள்ள மக்களுக்கே விடப்படவேண்டும் என்கின்ற வாதம் பலப்படலாயிற்று.

3. ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆட்சியலகுகளாக மாகாண சபைகள் இருக்கும், இவை ஒவ்வொரு 5 வருடங்களும் தெரிவு செய்யப்படும்
மாகாணசபையில் பெரும்பான்மை வகிக்கின்ற கட்சி அல்லது குழுவின் தலைவரே முதலமைச்சராக நியமனம் பெறுவார். அவருக்குக் கீழ் ஒரு அமைச்சரவை செயற்படும். மாகாணசபைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து சட்டங்களை இயற்ற அவற்றுக்கு முடியும்.

4. மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையேயுள்ள அதிகாரப் பகிர்வுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. அவை மாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்திற்கென ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள், இரண்டிற்கும் பொதுவான அதிகாரங்கள் என்பனவாகும். பொதுவான அதிகாரங்கள் குறித்து இரு சாராரும் பேரம் பேசிச் செயற்படவேண்டுமென்பதும் முடிவாயிற்று.
மாகாணசபைக்கிருக்கும் அதிகாரங்களாவன,
மாகாணப்பொருளாதாரக்கொள்கைகளைத் திட்டமிடல், கல்வியும் கல்விச்சேவைகளும், உள்ளுராட்சி, மாகாண வீடமைப்பு நிர்மாணம், மாகாணத் தெருக்கள், புனர்வாழ்வும் சமூகசேவைகளும், விவசாயமும் விவசாய சேவைகளும், கிராம அபிவிருத்தி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கால்நடைவளர்ப்பு, சூழல் பாதுகாப்பு என்பனவாகும்.
மத்திய அரசாங்கததுக்கென்று வேறு அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டன. அவையாவன,
எல்லா விடயங்களைக் குறித்த தேசியக் கொள்கை வகுத்தல், வெளிநாட்டுறவுகள், தபாற்தந்தி, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, நீதித்துறை நீதிமன்றக்கட்டமைப்பு, தேசிய வரிவிதிப்பு, வெளிநாட்டுதவி, சுங்கம், துறைமுகங்கள், விமான விமானத்தளங்கள், தேசிய போக்குவரத்து, கப்பற்போக்குவரத்து, கனிப்பொருட்கள், பிரஜாவுரிமை, நாட்டை விட்டு வெளியேறல் உட்புகல், பிரதேச மாகாண தேசிய தேர்தல்கள், புள்ளிவிபரக் கணக்கெடுப்பு, தொல்பொருளாய்வு போன்றன.
இரண்டிற்கும் பொதுவான அதிகாரங்களாவன,
திட்டமிடல், உயர் கல்வி, தேசிய வீடமைப்பும் நிர்மாணமும், காணிச் சுவீகரிப்பு, சமூக சேவைகளும் புனர்வாழ்வும், விவசாயம், சுகாதாரம், பிறப்பு இறப்பு பதிவுகள், ஊர்களுக்குப் பெயரிடுதல், குலுக்கல்போட்டிகள்,  விழாக்கள், கண்காட்சிகள், கூட்டுறவு அமைப்புக்கள், கூட்டுறவு வங்கிகள், நீர்ப்பாசனம், உணவு சேகரிப்பு வங்கிகள, ;சமூகக் காடு வளர்ப்பு, காட்டு மிருகங்களின் பாதுகாப்பு, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, தொழில்வாய்ப்பு, உல்லாசப் பயணத்துறை, வர்த்தகம், அச்சு ஊடகங்கள், தர்ம ஸ்தாபனங்கள், விலைக்கட்டுப்பாடு, இந்த நிரல் தொடர்பான குற்றச் செயல்கள், கலப்பட சரக்குகள், மருந்துகள், நஞ்சுகள், சூழல்பாதுகாப்பு, தொல்பொருள் ஆய்வுக்களங்கள், தொற்றுக்களின் தடுப்புகள், தல யாத்திரைகள் போன்றனவாகும்.

5. ஒவ்வொரு மாகாணத்திற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளுனர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். அவரை விலத்தும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு.
ஆளுனர் மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் குறித்து நிறைவேற்று அதிகாரம் பொருந்தியவர். இதனை நேரடியாகவோ மாகாணத்தின் அமைச்சரவை மூலமோ அல்லது மாகாண அரச அலுவலர்கள் மூலமோ அவர் பிரயோகிக்கலாம். இந்த அலுவலர்களின் மாற்றல்கள் அவர்களை வேலைக்கமர்த்தும் ஒப்பந்தங்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் எல்லாமே ஆளுனரின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆளுனர் ஆட்சி செய்வதற்கு ஆலோசனை தந்து உதவுவதே முதலமைச்சரினதும் அமைச்சரவையினதும் பிரதான கடமைகளாகும். ஆனால் இத்தகைய ஆலோசனைகளைப் புறக்கணிப்பதற்கு ஆளுனருக்கு உரிமையுண்டு. எந்த விடயங்களில் ஆலோசனை பெறப்படவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் ஆளுனரே. இதில் ஏதும் முரண்பாடுகள் ஏற்பட்டால் நீதிமன்றிற்கும் செல்ல மாகாணசபைக்கு உரிமை கிடையாது.
அமைச்சர்களுக்கிடையே வேலைகளைப் பகிர்ந்தளிப்பதும் அவர்களை அழைத்து கட்டளைகள் பிறப்பிப்பதும் ஆளுனரே. அமைச்சரவையின் தீர்மானங்கள் சகலவற்றையும்  ஆளுனருக்குத் தெரிவிப்பது முதலமைச்சராகும். இ.தன்படி ஆளுனர் தமது தீர்மானங்களை எடுப்பார். இவருடைய கட்டளைகளை மாகாணசபை மீறி நடக்குமாயின், சபையின் அதிகாரங்களை பாராளுமன்றம் வலிந்தெடுப்பதற்கும், அமைச்சரவையின் அதிகாரங்களை ஜனாதிபதி வலிந்தெடுப்பதற்கும் முடியும்.

6. மாகாண மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.
.மாகாண மேல் நீதிமன்றிற்கான கடமைகள் ஆற்றுவதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் ஒரு நீதிபதியை முதலமைச்சர் தெரிவு செய்ய முடியும். ஆயினும் அவரை நியமிப்பது ஜனாதிபதியின் அதிகாரமாகும்.

7. மாகாணசபைகளின் கட்டமைப்புக்களுக்குக் கீழே பிரதேச சபைகள், நகர சபைகள் மாநகரசபைகள் ஆகியன கொண்டுவரப்பட்டிருக்கின்றன

8. மாகாணங்களுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும்.
ஜனாதிபதியானவர், மத்திய வங்கியின் ஆளுனர், நிதியமைச்சின் செயலாளர், மேலும் ஒவ்வொரு இனத்தின் பிரதிநிதிகளான மூவர் இவர்களடங்கிய ஒரு ஆணைக்குழுவினை நியமிப்பார். இந்த ஆணைக்குழு பரிசீலனை செய்து ஒவ்வொரு மாகாணசபைக்கும் ஒதக்க வேண்டிய நிதிகள் பற்றி ஆலோசனை கூறும். இதை வைத்துக்கொண்டு ஜனாதிபதி ஒதுக்கடுPகளைத் தீர்மானிப்பார். ஆளுனரின் அனுமதியின்றி மாகாணசபைகள்  வரி விதிப்பதோ, வரிகளை மாற்றியமைப்பதோ, வரி விலக்கு அளிப்பதோ முடியாது. மத்திய அரசாங்கம் ஒதுக்கிய நிதியாகத்தன்னும் இருந்தால்கூட, மாகாண ஒதுக்கீட்டிலிருந்து எந்தச் செலவையும் ஆளுனரின் அனுமதியின்றி மாகாண சபை செய்ய முடியாது. மாகாணசபை மாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்களிலிருந்தோ, வெளியிலுள்ள நிதி நிறுவனங்களிலிருந்தோ கடன் எடுக்க முடியாது. பிணை நிற்க முடியாது. நேரடியாக எந்த வர்த்தகத்திலும் அதை ஒழுங்குபடுத்தவோ அதில் ஈடுபடவோ முடியாது.  

மாகாண சபைகளின் கணக்கறிக்கைகளை கணக்காய்வு செய்யும் சகல அதிகாரங்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கணக்காய்வு நாயகத்திடமே உண்டு.

9. பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் மாகாணசபைகளைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இயலும். இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றுமே எடுக்க முடியாது.

ஆ. 13ம் திருத்தச் சட்டத்திலுள்ள பிரச்சினைகள்

மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் நிரல்களின் பெருப்பத்தை வாசித்தவுடனேயே உங்களுக்குப் பிரச்சினைகள் என்னவென்று புரிய ஆரம்பித்திருக்கும். அதுவும், இரண்டிற்கும் பொதுவான அதிகாரங்களின் நிரல்களைப் பார்த்தால் மாகாண சபைகளுக்கு என்னதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவென்பதே புரியாத புதிராகும். இதுதான் இதன் முக்கிய பிரச்சினையாகும். மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையே உள்ள அதிகாரப் பிரிவுகள் தெளிவாக வரையறுக்கப்படவேயில்லை. உண்மையில் மாகாணசபையின் தனித்துவமான அதிகாரத்தின்கீழ் உள்ளது எனக்கூறக்கூடிய வகையில் எந்த அதிகாரமுமேயில்லை.
அத்துடன்கூட, மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் தொடர்பாக அது சட்டம் இயற்றலாம் என்று கொண்டாலும்கூட, தேசியக் கொள்கை வகுத்தல் என்கின்ற தலைப்பிற்குக் கீழே இந்த ஒவ்வொரு விடயத்தைப் பற்றி பாராளுமன்றம் தானும் சட்டம் இயற்றலாம். இந்தக் காரணத்தினால்தான் இதுவரை மாகாணசபைகள் பெரிதாக சட்டம் இயற்றும் பணிகளில் ஈடுபடவில்லை எனலாம்.
அடுத்து ஆளுனருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பாருங்கள். உண்மையில் ஆளுனர்தாம் ஆளுகின்றாரென்பது புரியும். அவர் பதில் சொல்லவேண்டியது அந்த மாகாணத்தின் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்ற முதலமைச்சருக்கல்ல, மாறாக மத்திய அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதிக்கே. மாகாண சபையின் அங்கீகாரம் இல்லாமல் மத்திய அரசாங்கமும் பாராளுமன்றமும் எதனையும் செய்யலாம்.

முக்கியமாக, எந்த நடவடிக்கையையும் அது செய்யக்கூடிய ஆளுமையையும் தீர்மானிப்பது நிதி அல்லவா? அந்த நிதி முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் கையிலேயே இருப்பதைக் காணலாம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு ஒரு அதிகாரமும் இல்லை, ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுனருக்கு சகல அதிகாரங்களும் உண்டு. இது சகல ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் முரணான செயற்பாடாகும்.
பொலிஸ் சேவை ஒரு சமூகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவர்களின் பாதுகாப்பிற்குமான முக்கிய சேவையாகும். ஆனாலும் பொலிஸ் சேவைகள் மாகாண சபையின் அதிகாரத்தி;ன் கீழ் வழங்கப்படவேயில்லை. ஐஜிபி என்னும் பொலிஸ் இன்ஸ்பெக்கடர் ஜெனரலானவர் (இவர் நேரடியாக ஜனாதிபதிக்குக் கீழே வருபவர்) சகல மாகாண பொலிஸ் படைகளுக்கும் அதிபதியாவார். இவருடைய உதவியாளரான டிஐஜியை ஐஜிபியே முதலமைச்சரின் ஆலோசனையுடன் நியமிப்பார். ஆனால் .இதில் ஏதும் கருத்து முரண்பாடுகள் ஏற்படுமிடத்து ஜனாதிபதி அந்த நியமனத்தைச் செய்வார். அதாவது, முதலமைச்சரானவர் எதிலும் எதிர்க்கருத்து சொல்லுவதில் பயனேயில்லை என்று பேசாமல் இருக்கச் செய்யும் சட்டம் இது என்றும் கூறலாம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகள்,  அத்தியாவசிய சேவைகளைச் செயற்படுத்தும் அதிகாரங்கள் இவையொன்றும் மாகாண பொலிஸ் படைகளுக்குக் கிடையாது.
அதே போன்று ஒரு சமூகத்தின் அபிவிருத்தி அது தனது நிலத்தின் மீது கொண்டுள்ள அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. எந்த அபிவிருத்திக்கும், அது விவசாயமாக இருந்தால் என்ன, கைத்தொழிலாக இருந்தால் என்ன, நிலமும் அதன் வளங்களும் தேவையல்லவா. ஆனால் காணி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழேயே இருப்பதைக் காணலாம்.
சகல காணி விடயங்களும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்பட்டவையாகும். மாகாணசபை மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்க முடியாது. இதனால் மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் அனுமதியின்றியே அங்குள்ள காணிகள் வெளி மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்படலாம். இதன் மூலம்தான் தமிழ் பேசும் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்க ஏதுவாகியிருக்கின்றன.

முடிவு
அதிகாரப் பரவலாக்கல் என்பதுதான் இலக்காக இருந்ததெனில் 13வது திருத்தச் சட்டம் ஒரு பகிடி (தமாஷ்) ஆகும். இதனைக்கூட, அதாவது இதன்கீழ் மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைக்கூட இத்தனை வருடங்கள் ஆகியும் மத்திய அரசு நிறைவேற்ற இடம் விடவில்லை. இதனால்தான் 2005ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சிலர் அமைச்சர் டிலான் பெரேரா தலைமையில் '13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்கும் இயக்கம்' என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. யோசித்துப் பாருங்கள். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் உறுப்புரை ஒன்றினையே எங்கள் அரசாங்கம் அமுல் படுத்தாததைக் குறித்து அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சில அமைச்சர்களே இயக்கம் உருவாக்கிய சரித்திரம் உலகெங்கும் காண முடியாத அதிசயம் அல்லவா? அந்த அதிசயம் எங்களது நாட்டில்தான் நடக்க முடியும்.

கலந்துரையாடலுக்கான வழிகாட்டிகள்:

1. சுயநிர்ணய உரிமை என்னும் கோட்பாடு முக்கியமானது என்று கருதுகிறீரா? ஏன்?
2. இனத்தின் அடையாளம் பேணப்படவேண்டிய காரணத்தினால் சுயநிர்ணய உரிமை முக்கியம் என்று நீர் கருதினால் பின்வரும் கேள்வியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
இனத்தின் அடையாளங்கள், அதன் மொழியின் பாதுகாப்பு இவையெல்லாம் முக்கியமில்லை. பொதுவாக எல்லா மக்களும் அபிவிருத்தி அடைவதுதான் முக்கியம் என்ற அர்த்தத்தில்; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால்தான் இனப்பிரச்சினை என்ற ஒன்றே கிடையாது, அரசியல் தீர்வு தேவையில்லை அபிவிருத்தியே வேண்டும் என்றிருக்கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
3. 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்று திரு டக்ளஸ் தேவானந்தா கூறி வந்திருக்கின்றார். இதன் கருத்து என்ன என்று நினைக்கின்றீர்? 13வது திருத்தச் சட்டத்தைப் பற்றி வாசிக்கும்போது இவருடைய கோரிக்கை சாத்தியமானது என்று நினைக்கின்றீரா?
4. நீர் 13வது திருத்தச் சட்டத்தைப் பற்றி இப்பொழுது சில விளக்கங்கள் பெற்றிருப்பீர். இதைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்? உமது நடவடிக்கைகளை ஒன்றொன்றாக விளக்குக.

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

No comments:

Post a Comment