Search This Blog

Wednesday, July 18, 2012

திருக்கேதீச்சுரம் (ஈழ நாடு): சுந்தரர்



**********************
நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந் நனை கவுள் வாய்
மத்தம்மதயானை உரி போர்த்த மழுவாளன்;
பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல்,
செத்தார் எலும்பு அணிவான்
---திருக்கேதீச்சுரத்தானே.

சுடுவார் பொடி நீறும், நல துண்டப்பிறை, கீளும்,
கடம் ஆர் களி யானை உரி, அணிந்தக் கறைக்கண்டன்;
பட ஏர் இடை மடவாளொடு, பாலாவியின் கரைமேல்
திடமா உறைகின்றான்
---திருக்கேதீச்சுரத்தானே.

அங்கம் மொழி அன்னார் அவர், அமரர், தொழுது ஏத்த,
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன் நகரில்
பங்கம் செய்த பிறை சூடினன்; பாலாவியின் கரை மேல்
செங்கண் அரவு அசைத்தான்
---திருக்கேதீச்சுரத்தானே.

கரிய கறைக்கண்டன்; நல கண்மேல் ஒரு கண்ணான்;
வரிய சிறை வண்டு யாழ் செயும் மாதோட்ட நன் நகருள்
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரைமேல்
தெரியும் மறை வல்லான்
---திருக்கேதீச்சுரத்தானே.

அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்து அருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன் நகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல்
தெங்கு அம் பொழில் சூழ்ந்த
---திருக்கேதீச்சுரத்தானே.

வெய்ய வினை ஆயவ் அடியார் மேல் ஒழித்து அருளி,
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன் நகரில்
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
செய்ய சடை முடியான்
---திருக்கேதீச்சுரத்தானே.

ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்து அருளி,
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நன் நகரில்
பால் நத்துறும் மொழி யாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்து எயிறு அணிந்தான்
---திருக்கேதீச்சுரத்தானே.

அட்டன் அழகு ஆக அரைதன் மேல் அரவு ஆர்த்து,
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நன் நகரில்
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல்
சிட்டன் நமை ஆள்வான்
---திருக்கேதீச்சுரத்தானே.

மூவர் என, இருவர் என, முக்கண் உடை மூர்த்தி;
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன் நகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல் தேவன்; எனை ஆள்வான்
---திருக்கேதீச்சுரத்தானே.

கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள்
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை
மறை ஆர் புகழ் ஊரன் அடித் தொண்டன் உரை செய்த
குறையாத் தமிழ் பத்தும் சொலக் கூடா, கொடுவினையே.

No comments:

Post a Comment