Search This Blog

Monday, May 28, 2012

நோய் தீர்க்கும் மருத்துவன்!




கிருத யுகத்தில் வீக்ஷாரண்யம் என்ற அடர்வனத்தில் ‘ஹிருத்தாபநாசினி’ என்ற தீர்த்தக்குளம் ஒன்று அமைந்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை முதலான பல தீர்த்தங்கள் இந்‌தக் குளத்து நீரோடு கலப்பதாக ஐதீகம். இந்த உண்மையை அறிந்திருந்த முனிவர்களும் தேவர்களும தை அமாவாசையன்று இக்குளத்திற்கு வந்து நீராடிச் செல்வார்கள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த சாலிஹோத்ரர் என்ற அந்தணர், ஒரு தை அமாவாசையன்று இங்கு வந்தடைந்து முனிவர்களும் தேவர்களும் நீராடும் காட்சியைக் கண்டு விவரங்களை விசாரித்தறிந்தார். ‘இப்பேர்ப்பட்ட குளத்தி்ன அருகில் இறைவன் இல்லாதிருப்பதா?’ என்ற எண்ணம் அவருள் எழுந்தது.

ஓராண்டு காலம் ஒரு கணமும் பிறழாமல் திருமாலை நோக்கித் தவம் செய்வது என்று தீர்மானித்தார். அதற்கு முன் ஒரு வேளை மட்டும் ஆகாரம் உண்ணலாம் என்று அன்னம் தயாரித்தார் அதிதிக்கு உணவளித்து விட்டு உண்ணுதல் மரபென்பதால் காத்திருந்தார். கண்கள் பஞ்சடைந்து களைப்புடன் காணப்பட்ட ஒரு முதியவர் வந்து யாசகம் கேட்க, மகிழ்வுடன் அவருடைய பங்கைப் படைத்தார். அவர் பசி அடங்கவில்லை. ‘இன்னும் கிடைக்குமா?’ என்று கேட்டார். தன் பங்கையும் சாலிஹோத்ரர் தர, அதை உண்டு திருப்தியுடன் சென்றார் முதியவர். வயிறு வாடினாலும் மன நிறைவுடன் சாலிஹோத்ரர் தவத்தில் ஆழ்ந்தார்.

அடுத்த தை அமாவாசையன்று தேவர்களும், ரிஷிகளும் குளத் தில் நீராட வர, கண் விழித்த சாலிஹோத்ரர் ஓராண்டு ஆகி விட்டதை உணர்ந்தார். குளத்தில் நீராடி, ஆண்டவனைத் தொழுது அன்னம் தயாரித்தார். வழக்கம்போல் அதிதிக்குப் பங்கு பிரித்தார். ஆச்சரியமாக, சென்ற ஆண்டு வந்த அதே முதியவர் இன்னும் உடல் தளர்வுற்று பசியுடன் வந்து யாசகம் கேட்டார். சாலிஹோத்ரர் அவர் பாதத்தைக் கழுவிப் பணிந்து அன்னம் படைத்தார். அதிதிக்குரிய பங்‌கை உண்டபின்னும் அவர் பசி அடங்கவில்லை என்பதைக் குறிப்பாலுணர்ந்த சாலி‌ஹோத்ரர், தன் பங்கையும் அவர் இலையில் பரிமாறினார். அதையும் உண்ட முதியவர் கண்ணில் ஒளி பிறந்தது. ‘‘ஐயா, பசி தீர்ந்தது. உண்ட மயக்கத்தால் உறக்கம் பிடித்தாட்டுகிறது. படுக்கக் கொஞ்சம் இடம் வேண்டும். எவ்வுள் படுப்பது?’’ என்று வினவினார்.

சாலிஹோத்ரர் தன் பர்ணசாலையைக் காட்ட, முதியவர் அங்கு படுத்தார். கடுங்குளிரினால் அவர் உடல் நடுங்குவதைக் கண்ட சாலிஹோத்ரர் தான் ஆடையாக அணிந்திருந்த மரவுரியை முதியவருக்குப் போர்த்தி விட்டு வெளியே வந்தார். அதன்பின் நிகழ்ந்தது அதிசயம்! துந்துபி வாத்யங்கள் முழங்க, கந்தர்வர்கள் கானமிசைக்க, அப்சரஸ்கள் நடனமிட, சாலிஹோத்ரரின் முன்பாக திருமா‌ல் திவ்ய சரீரத்துடன் ஆடை ஆபரணங்கள் அணிந்தவராய் காட்சியளித்தார். ‘‘முதியவராக வந்து உம்மிடம் யாசகம் பெற்றது யாமே. உனக்கு என்ன வேண்டும் சாலிஹோத்ரா?’’ என்று வினவினார்.

சாலி‌ஹோத்ரர் ஆனந்தக் கண்ணீருடன் மண்டியிட்டு, ‘‘ஐயனே, எனக்கு எதுவும் வேண்டாம். உலக மக்களை உய்விக்க நீ இங்கேயே எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும். இக்குளத்தில் நீராடி உன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இடர் எதுவும் நேராமல் காத்தருள வேண்டும்’’ என்று வேண்டினார். ‘‘உமக்காக வேண்டாமல் உலக மக்களுக்காக வேண்டினீரே... உமது சிரசின் மீது ஆணையாக இனி எக்காலமும் நான் இங்கே கிடந்த கோலத்தில் காட்சி தருவேன். என்னைத் தரிசிக்கும் மக்களின் பிணிகளை அகற்றி, அவர்தம் பாவங்களைப் ‌போக்கி அருள்பாலிப்பேன்’’ என்று அருளினார்.

நாராயணன் விரும்பிப் படுத்த பர்ணசாலையே கர்ப்பக்கிரகமாய் .உருவெடுக்க பல்லவர் - சோழர்கள் காலத்தில் அங்கே ஆகம விதிப்படி ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. கோயிலின் நுழைவாயிலின் மேல் ஐந்தடுக்கில் கோபுரம் அமைந்தது. அங்கே குடி கொண்ட பெருமாள் ஆழ்வார்கள் காலத்திலிருந்த ‘வீரராகவப் பெருமாள்’ என்று அழைக்கப்படலானார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் பிணிகளைப் போக்கும் சக்தி படைத்தவராக விளங்கவதால் ‘பிணிதீர்த்த பெருமாள்’ என்றும் ‘வைத்திய வீரராகவப் பெருமாள்’ என்றும் வழங்கலாயின.

பெருமாள் ‘எங்கே படுப்பது?’ என்று கேட்கும் விதமாக ‘எவ்வுள்?’ என்று வினவியதால் ‘திருஎவ்வுளூர்’ என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று ‘திருவள்ளூர்’ என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில் நுழைந்தவுடன் விஸ்தாரமான ஒரு முற்றம், மையத்தில் பலி பீடம், கொடிமரம். அதைக் கடந்து உட்சென்றால் கோயில் கொண்ட பெருமாளின் கூடம். இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்த கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடாழ்வாருக்கு நேரெதிரே கிழக்கு திசை நோக்கி வீரராகவப் பெருமாளின் கர்ப்பக்கிரகம்.

அரவணையில் கிடந்த கோலத்தில் பெருமாள் தென்திசையில் தலையும், வடதிசையில் திருவடியும் வைத்து, இடக்கரம் அவர் நாபியில் உதித்த நான்முனுக்கு பிரவண மந்திரத்தை உபதேசிக்க, வலக்கரம் சாலி ஹோத்ரரின் தலை மீது வலக்கரம் வைத்து சயனித்த திருகக‌ோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னதியில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் லக்ஷ்மி நரசிம்மரின் சன்னதி. வடமேற்கு மூலையில் உள்ள சன்னதியில் மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

வெளிப்பிரகாரத்தில் ஆழ்வார்களுக்கான இரண்டு மணி மண்டபங்கள். அதையடுத்து வசுமதித் தாயார் என்றும் கனகவல்லித் தாயார் என்றும் போற்றப்படும் தாயார் சன்னதி. கனகவல்லித் தாயார் அமைதியும், கருணையும் துலங்கும் முகத்துடன் காட்சி தருகிறாள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் தாயாரின் பேரில் 30 ஸ்லோகங்கள் கொண்ட ‘ஸ்ரீ ஸ்துதி’ பாடியிருக்கிறார். தாயார் சன்னதிக்கு நேர் பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் சன்னதியில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். அடுத்தது ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. பாமா, ருக்மணி சகிதம் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறான் புருஷோத்தமன்.

பிரகாரத்தின் வடக்கு திசையில் ஒரு சிறு மண்டபம். அதில் சுவாமியின் கல் பாதங்கள். ‘உடல் உபாதைகள் நீங்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை யுடன் வருபவர்கள் இந்த கல் பாதத்தில் மிளகு கலந்த உப்பு சமர்ப்பிக்கிறார்கள். அவர்களின் பிணி நீக்கி அருள்கிறார் வைத்திய வீரராகவப் பெருமாள். ஆலய தரிசனம் ‌முடித்து வெளிவந்தால் ஆலயத்தின் வலதுபுறம் ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

தை அமாவாசையன்று வீரராகவப் பெருமாள் சாலிஹோத்ர மகரிஷிக்கு காட்சியளித்ததால் ஒவ்வொரு தை அமாவாசையன்றும் கணக்கில்லா பக்தர்கள் திரண்டு வந்து, குளத்தில் நீராடி, வெல்லம் கரைத்து பால் ஊற்றி, பெருமாளைத் தரிசித்து உப்பு மிளகு சமர்ப்பிதது அவனருள் பெறுகிறார்கள். சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளூருக்கு நீங்களும் ஒரு முறை சென்று வைத்திய வீரராகவப் பெருமாளைத் தரிசித்து அவனருக்குப் பாத்திரமாகுங்கள்!

No comments:

Post a Comment