Search This Blog

Monday, April 23, 2012

சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?




பஞ்சபூதங்களாக விளங்குபவன் இறைவன். அதில் ஆகாய ரூபமாக திகழ்கிற தலம் தான் சிதம்பரம். இங்கே உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அதாவது ஆனந்தத் தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது உருவநிலை. சிவலிங்க ரூபத்தில் திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமையபார்வதியும் காட்சி தருவது அருவுருவ நிலை. அடுத்து அருவமாக தரிசனம் தருவது தான் சிதம்பர ரகசிய ஸ்தானம். பொற்சபையில் ஆடல்வல்லாரின் வலப்பக்க சுவற்றில் சக்கரம் இருக்கும் இடம் தான் இது. இதை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறலாம். சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாக திருப்பதி விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில் செழிக்கிறது சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று போற்றப்பட்ட தலம் இது.

நான்கு வேதங்களோட விழுப்பொருள், அண்ட சராசரங்களோட முழுமுதற்பொருள் ஆகியவற்றைக் குறிக்கிறது தான் அருவ நிலை. அதனால் தான் இந்தத் தலத்துக்கு சிதம்பரம் என்ற பெயர் அமைந்தது. (சித்-அறிவு; அம்பரம்-வெட்டவெளி) அதனால் தான் பரந்து விரிந்த ஆகாய தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே நம் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனை, கருவறைச் சன்னதியின் திரையை விலக்கியதும், தங்க வில்வ மாலையை தரிசிக்கலாம். உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்கிறவன், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெற, மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம்! இதனை ஆழ்ந்த பக்தியால் உணரமுடியுமே தவிர, எவருக்கும் உணர்த்த முடியாது. இங்கே தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. இந்த பூஜையில் கலந்து கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் புது சக்தியையும், முக்தியையும் கொடுக்கும். சிதம்பரத்தில் இந்த அருவ நிலைதான் மூலஸ்தானம். அதுதான் ரகசிய ஸ்தானமும். திரையை விலக்கியதும், நம் அறியாமை என்கிற இருளை விலக்கி அருள்கிறார் இறைவன்; அஞ்ஞானத்தில் இருக்கிற நமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துகிறார். உலகத்தால் அனைவருமே, ஒரு திரையைப் போட்டபடியே பேசுகிறோம், பழகுகிறோம், வாழ்கிறோம். சகஉயிர்களைப் பார்ப்பதையும் இறைவனை அடைவதையும் உணர்த்துவதே சிதம்பர ரகசியத்தின் நோக்கம்.

No comments:

Post a Comment