Search This Blog

Tuesday, April 24, 2012

தாய்மை எனும் ஒரு மந்திரச் சொல்!





திறந்திருக்கும் சாளரங்களில் நெடிய இரவொன்று விழித்துக் கிடக்கிறது, பக்கத்தில் பகல் பரிசளித்த களைப்பில் ஒரு தாயும், அவள் மடியில் தலை அழுத்தி என் குழந்தையும் உறங்குகிறார்கள், செங்கல் சூளையொன்றில் இருந்து கிளம்பிய வெண்புகைச் சுருளைப் போல மேகங்கள், புதிர் நிரம்பிய நீல வானத்தின் கீழே நகர்ந்து செல்வது நினைவுகளை பின்னோக்கி இழுக்கிறது.

Join Only-for-tamil


தனிமையைத் தன் பாதையெங்கும் நிறைத்தபடி தாழப் பறக்கும் ஒற்றைப் பறவையின் கூடப் பறக்கிறது மனம். மனித மனங்களின் கட்டுக்கடங்காத எல்லைகளை அடைத்தபடி வானுயரக் கிடக்கும் கட்டிடச் சுவர்களுக்குள் மானுடத்தின் வரலாறு கசிந்து கொண்டிருக்கிறது.
 தாயின் மடியில் மட்டும் எப்போதும் வற்றாது சுரக்கும் பாலின் ஈரத்தில் தான் இந்த உலகம் நீண்ட காலமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறது, 

அதுவும் ஒரு மழைக்கால இரவுதானென்று நினைக்கிறேன், கல்லூரி முடித்துப் பொருள் சேர்க்கும் கனவுகளோடு தொலைதூரக் கடற்கரை நகரத்தில் தஞ்சம் புகுந்த எண்ணற்ற மனிதர்களில் நானும் ஒருவனாகி இருந்தேன்.
தொடர் வண்டிகளில் கனவுகளை நிரப்பியபடி வந்து சேர்ந்த அழுக்கடைந்த பயணப் பைகளை இறக்கிக் கொண்டிருந்தது "தாதர்" ரயில் நிலையம். தூரத்து உறவுக்கார நண்பனொருவனின் அறையில் பகலில் தங்கிக் கொள்ளும் அனுமதி பெறுவதே அத்தனை பெரிய சாதனையாகிப் போனது, வேலை தேடும் படலத்தில் நகரச் சாலைகளில் நடை பயின்று களைத்துத் துவண்டு போன கால்கள். 

Join Only-for-tamil


சட்டைப் பையில் கிடந்த சில்லறைகளைப் பொறுக்கி இரவுக் கடையொன்றில் தேநீர் குடித்து வயிற்றை வற்ற விடாது பார்த்துக் கொள்ளும் கலையில் இரண்டொரு நாட்களில் தேர்ச்சி அடைந்திருந்தேன், அவரவருக்கான உணவுத் தேடலில் சலித்துப் போன மனிதர்கள் நிரம்பிய மாநகரத்தின் மையப் பகுதிக்கு இந்தப் புதிய மனிதனின் பசி ஒன்றும் அத்தனை கொடுமையானதல்ல,
 

நியான் விளக்குகளும், கொண்டாட்டங்களும் வெகு நேரம் தொடரும் இரவுக்குள், சில பருக்கைகள் சோறு கிடைக்காதா??? என்று ஏங்கித் தவிக்கும் மனிதனின் வலி அளவிட முடியாதது. மும்பை மாநகரத்தின் சோப்டாக்கள் அத்தகைய வலியால் கட்டப்பட்டவை, அதன் சதுரப்பெட்டி வாழிடங்களில் நகரம் உமிழ்கிற எச்சங்களைப் போல மனிதர்கள் எப்போதும் சுருண்டு கிடக்கிறார்கள்.
 

Join Only-for-tamil 

நானிருந்த அறையில் பகல் தனித்ததாகவும், இரவு நிரம்பி வழிவதாயும் இருந்தது, நான் ஏழாவது மனிதன், படுக்கை என்று அழைக்கப்படும் நீளமான ஒற்றைப் போர்வையில் அழுக்குத் துணிகளைச் சுருட்டித் தலையணை செய்து கொள்வது ஒன்றிரண்டு நாட்களில் கைகூடி இருந்தது. 
நகரத்தில் கிராமத்தில் இன்னும் எல்லா இடங்களிலும் இலவசமாய்க் கிடைக்கிறது நிலவொளி. இனி எந்த நம்பிக்கைகளும் இல்லை இந்தப் புதியவன் பிழைக்க என்கிற இறுதி இரவுச் சிந்தனைகளோடு பசியில் புரண்டு கொண்டிருந்த அந்தக் கணங்கள் வற்றிக் கொண்டிருந்த நம்பிக்கைப் பயிர்களுக்கு நீரூற்றியவை. 
கடந்து போகிற முக்காடு அணிந்த மராட்டியப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் நிகழ்காலத்தைக் களைத்துப் போடுகிறாள் அதே மாதிரியான உடை அணிந்த ஒரு தாய். அந்தத் தாயின் மொழி என்னுடையதில்லை, அந்தத் தாயின் வாழ்க்கைக்கும் எனக்கும் அன்று வரையில் எந்தத் தொடர்புகளும் இல்லை. 

மணி பன்னிரண்டைத் தாண்டிய அந்த இரவில் மேலிருந்த தகரக் கூரை பொருத்தப் பெற்ற வீட்டின் உலோகப் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்து, "ஏன் வெளியே படுத்திருக்கிறாய் மகனே?" என்று இந்தியில் கேட்ட அந்தத் தாயிடம் உடைந்த இந்தியில் இப்படிச் சொன்னேன்," உள்ளே இடமில்லை அம்மா, அதோடு கொஞ்சம் காற்றும் வருகிறதே, அதனால் தான் வெளியே படுத்திருக்கிறேன்" என்று பதில் சொல்லி விட்டுப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் அலையும் ஒரு பெருச்சாளியைப் பார்த்தேன்.
 

படுக்கையில் துணைக்குப் படுத்திருந்த காலித் தண்ணீர் பாட்டிலைக் காட்டி, "அம்மா, கொஞ்சம் நீர் நிரப்பித் தருவீர்களா? என்று என்னைக் கடந்த அந்தத் தாயிடம் கேட்டேன், "ஊப்பர் ஆஜாவ் பேட்டா" என்று என்னை மேலே வரச் சொல்லி விட்டு மீண்டும் உலோகப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றவரைப் பின்தொடர்ந்து சென்று பாட்டிலை நீட்டியபோது என்னை மேலும் கீழுமாய்ப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியாது, "சாப்பிட்டாயா மகனே?" என்று வாய் நிறையக் கேட்டார் பார்வதி என்கிற ஒரு தாய்.
 

Join Only-for-tamil


கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டிருந்த தன்மானம் ஒட்டுமொத்தமாய்ச் சரிந்து என் கண்ணீரைக் கசிய விட அந்தத் தாயின் உள்ளம் தவித்துப் போனது, விளக்குகளைப் போட்டுவிட்டு "ஷர்மி, ஷர்மி" என்று தன் மூத்த மகளை எழுப்பி விட்டு அடுப்பைப் பற்ற வைக்கத் துவக்கினாள் அந்தத் தாய்.
 

"யார் பெற்ற பிள்ளையோ, எத்தனை நாள் ஆயிற்றோ சாப்பிட்டு" என்று புலம்பித் தீர்த்தபடி என்னை அமரச் சொல்லிவிட்டு, "பகலில் கூடக் கேட்டேனே? உன்னிடம் சாப்பிட்டாயா என்று," "பொய் சொல்லி இருக்கிறான் அம்மா, எங்கள் மண்ணுக்குப் பிழைக்க வந்த பிள்ளைகள் இப்படிப் பட்டினி கிடப்பது பார்க்கச் சகிக்கவில்லையப்பா" என்று தூக்கக் கலக்கத்திலும் தாயின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த ஷர்மி என்கிற அந்த இளம்பெண்ணிடம் என்னன்னெவோ சொல்லிப் புலம்பியபடி இருந்தாள் அந்தத் தாய். இரவும், நிலவும் மனிதர்களை வழக்கம் போலவே கடந்து போய்க் கொண்டிருந்தன.
 

மீதமிருந்த உருளைக் கிழங்கு சப்ஜியையும், ஆறு கனத்த ரொட்டிகளையும், அன்றிரவில் பரிமாறி என் பசியாற்றிய அந்தத் தாயின் உள்ளம் தான் எத்தனை மகத்தானது, எந்த இலக்கியத்தால் அந்தத் தாயின் உள்ளத்தை விளக்கிச் சொல்லி விட முடியும், இந்த உலகின் மனசாட்சியாய்க் கிடந்து எப்போதும் கனன்று கொண்டிருந்த பசியை என்னிடம் கடைசியாய் அடையாளம் கண்டதும் இன்னொரு தாய்தானே
என்று நினைக்கும் போதெல்லாம் உயிரில் பாதி பெண்ணாகவே உணரப்படுகிறது.
 

ஏறத்தாழ இரண்டு வாரங்கள் எனக்கு வேலை கிடைக்கிற வரையில் அந்தத் தாய்க்கு என்னையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். எனக்குள் கிடந்த மொழியையும், என் இலக்கியத்தையும் அணைந்து விடாது அடை காத்தவள் அந்த அடையாளம் தெரியாத மராட்டியத் தாய்.
 

இன்னொரு மழைக்காலத்தின் மாலைப் பொழுதில் வானூர்தியில் பயணித்து, மகிழுந்தில் இறங்கி அந்த மாநகரத்தை அடைந்த போதும் என் கால்கள் அந்தத் தாயின் இருப்பிடத்தை நோக்கியே நடந்தன, அடையாளம் காண முடியாத நகரப் பெருவெள்ளத்தில் கரைந்து காணாமல் போய் விட்ட பார்வதி என்கிற அந்தத் தாயை நான் சந்திக்கிற ஒவ்வொரு பெண்ணிடமும் கண்டு கொள்கிறேன்.
 

Join Only-for-tamil


ஆம், தாயின் மடியில் எப்போதும் வற்றாமல் சுரக்கும் பாலின் ஈரத்தில் தானே இந்த உலகின் பயிர்கள் எப்போதும் செழிக்கிறது. பல்வேறு கணங்களில் வாழ்க்கை இப்படித்தான் புரியாத புதிரைப் போல நீண்டு தொடர்கிறது, கல்வி, இலக்கியம், பொருள், மொழி எல்லாவற்றையும் கடந்து ஒன்றிரண்டு பருக்கைச் சோற்றிலும், துளி அன்பிலும் முடிந்து போகிறது. கோட்பாடுகளை, பேரிலக்கியங்களை எல்லாம் அப்படிச் சுரக்கும் ஒரு துளி அன்பும், சில சோற்றுப் பருக்கைக்களுமே பண்படுத்திப் பாதுகாக்கின்றன.
 

-கை.அறிவழகன்

No comments:

Post a Comment