Search This Blog

Thursday, December 29, 2011

தமிழ்

பழைய தமிழ் நூல்கள் செய்யுள் வடிவிலேயே காணப்பட்டன . புதிய உரைநடையின் தோற்றம் ஐரோப்பியர் வருகையின் பின்னரே ஏற்பட்டது. இதில் ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) புதுச்சேரி, தத்துவபோதக சுவாமிகள்,
வீரமாமுனிவர், ஞானப்பிரகாச சுவாமிகள் , கால்டுவெல், ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்.

உரைநடையின் தன்மைகள் கி.பி.
18, 19 ஆம் நூற்றாண்டுகளில் மாற்றம் பெற்றன. உரைநடையில்
தனி நூல்கள் எழுதும் நிலை உருவாயிற்று. சொல் பயன்பாடு,
தொடர்ப் பயன்பாடு ஆகியவற்றில் எளிமை பின்பற்றப்
பெற்றது. இம்மாற்றங்கள் எல்லாம் ஐரோப்பியர் தமிழகத்திற்கு
வந்ததன் பின் நிகழ்ந்தவை. இந்தப் புதிய உரைநடையின்
தோற்றத்தை மூன்று நிலைகளாகப் பகுத்து விளக்கலாம்.

• முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடை
• பேச்சுத் தமிழ் கலந்த உரைநடை
• இலக்கணத் தூய்மையுடன் அமைந்த உரைநடை

இனி, இவற்றை ஒவ்வொன்றாகப் படித்து அறிந்து கொள்வோம்.

** பேச்சுத் தமிழ்
தமிழர் வாழும் புதுச்சேரி (Pondicherry) பிரெஞ்சு
ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியில் முக்கியப் பதவி
வகித்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761). இவரிடம்
நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்தது. விரிவான நிலையில்
செய்திகளை நாட்குறிப்பில் எழுதி உள்ளார். இதற்கு அவர்
பயன்படுத்தி உள்ள உரை நடை முற்றிலும் பேச்சு
வழக்கினதாக அமைந்து உள்ளது. பேச்சு வழக்குச் சொற்கள்
பயன்பாடு ஒரு நிலை என்றால், மொழிநடையே எதிரே
உள்ளவரிடம் பேசுவது போன்று அமைந்து உள்ளது.

“ஆள் கழுக்கு மழுக்கென்று மணலிலெ பிடுங்கி
யெடுத்த வள்ளிக் கிழங்காட்டமா யிருக்கிறான்.
முகம் பரந்த முகமாய் ஆன வாகனனாய்
இருக்கிறான். அவள் சென்னப் பட்டணத்துக்குப்
போயிருந்து வந்தவள்”.

இந்தச் சான்றுப் பகுதியில் கூட்டுச் சொற்கள் இடம் பெற்று
உள்ளன. பேச்சு வழக்காக இருந்தாலும் சந்தி விதிகளை நீக்கி
எழுதும் வழக்கம் அக்காலத்தில் இல்லை.

**பேச்சுத் தமிழ் கலந்த நடை

தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறித்தவப் பாதிரிமார்களில் சிலர்
குறிப்பிடத் தக்கவர் ஆவர். தத்துவபோதக சுவாமிகள்,
வீரமாமுனிவர், ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோரால்
தமிழ் உரைநடை வளம் பெற்றது.

இவர்களின் உரைநடை சாதாரணப் பொது மக்களை
மனங்கொண்டு எழுதப் பெற்றது. பேச்சு வழக்குச் சொற்களைப்
பெரிதும் பயன்படுத்தி உள்ளனர். நீண்ட தொடராக
அமைந்துள்ளது. என்றாலும் தொடர் அமைப்பு பேச்சு வழக்கை
ஒட்டியதாகவே அமைந்து உள்ளது. இதற்குச் சான்றாகத் தத்துவ
போதக சுவாமிகளின் உரைநடையைக் குறிப்பிடலாம். அது
வருமாறு:

இரண்டாஞ் சல்லாபத்திலே நம்மாலே உபதேசிக்கப்
பட்டதெல்லாம் ஒன்றாய்த் தெளிஞ்சாயானால் இப்பாலும்
அறிய வேண்டியதை சங்கோசப் படாமல் கேழ்ப்பாயாக

இதே காலக்கட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரின்
(1714-1761) உரைநடையும் நீண்ட தொடர் உடையதாகவே
அமைந்து உள்ளது. சந்தி பிரித்து எழுதுதல், எளிமை, தெளிவு
என்னும் பண்புகள் உடையதாகவும் அமைந்துள்ளது. இவரும்
ஐரோப்பாவில் இருந்து தமிழகம் வந்த பாதிரியார்தான். இவர்
உரைநடைக்குச் சான்று ஒன்று பார்ப்போமா?

“தேவ நற்கருணை வாங்கும் போதெல்லாம் இப்புத்தகத்தில்
அடங்கியிருக்கிற செபத்தியானங்கள் ஒவ்வொன்றையும்
முறையாய் வாசிக்க வேண்டு மென்று நினைக்க
வேண்டாம். ஒரு மாதத்தில் சில தியானங்களையும்
அடுத்த மாதத்தில் மற்றும் சில தியானங்களையும்
வாசித்தால் எப்போதும் எழுப்புதல் உண்டாக ஏதுவாக 
இருக்கும்.”

இதே காலக் கட்டத்தில் இலக்கியம் எழுதுவதற்கு உரைநடை
பயன்படுத்தப் பெற்று உள்ளது. என்றாலும் இந்த முயற்சி
தொடரவில்லை. வீரமாமுனிவர் பரமார்த்த குரு கதை என்று
ஓர் இலக்கியத்தை உரைநடையில் எழுதி உள்ளார். அதில் சிறு
பகுதி:

“ஒரு நாய் திருடின ஆட்டுக்கறிக் கண்டத்தை வாயிலே
கவ்விக் கொண்டு நடுவாற்றிலே நீந்திப் போகையில்
ஆறு கபடாகத் தண்ணீரிலே வேறொரு பெரிய
மாம்மிசத் துண்டைக் காட்டினதாம்....தோன்றினதினாலே
கவ்வியிருந்த ..... சென்ற தென்றான்”

இதில் பேச்சு வழக்குச் சொற்கள் இடம் பெற்று உள்ளன.
நடுவாற்றிலே (நடுஆற்றிலே), தோன்றினதினாலே (தோன்றியது
அதனாலே), கவ்வியிருந்த (கவ்வி இருந்த), சென்ற தென்றான்.
(சென்றது என்றான்) என்ற கூட்டுச் சொற்களும் பயன்படுத்தப்
பெற்று உள்ளன.

ஐரோப்பியப் பாதிரிமார்களிடம் தம் உரைநடை எவ்வாறு
அமைதல் வேண்டும் என்பதிலும் தெளிவு இருந்து உள்ளது.
ஞானப்பிரகாச சுவாமிகள் இதைக் குறிப்பிட்டு உள்ளார்.
சிலுவைப் பாதையின் ஞானமுயற்சி (1849) என்னும் நூலின்
பாயிரத்தில் அவர் கருத்துப் பதிவாகி உள்ளது. அதன்
சாரத்தை நுஃமான் இப்படி வரையறுத்து அளித்து உள்ளார்
(1988). அவ் வரையறை வருமாறு:

• யாவரும் எளிதில் வாசித்து உணரக் கூடியதாய் இருத்தல்
• மிகுந்த புணர்ச்சி விகாரங்கள் இல்லாது இருத்தல்
• செந்தமிழுடன் கொடுந்தமிழும் கலந்து இருத்தல்
• சில வாக்கியங்கள் இலக்கண விதிகளையும் மீறி அமைதல்

இந்த வரையறைகளே புதிய உரைநடை வளர்ச்சியின் தனித்
தன்மைகள் எனலாம்.

**இலக்கணத் தூய்மை

இவ்வகை உரைநடை இலக்கணப் பிழை இல்லாமல்
அமைந்திருந்தது. பேச்சு வழக்குச் சொற்களைப்
பயன்படுத்தவில்லை. மொழி அமைப்பில் ஏற்படும் புதிய
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதில், இலக்கண
நூல்களால் வரையறுக்கப் பட்டுள்ள மொழியே பயன்படுத்தப்
பெற்றுள்ளது. இந்த நடையில் எழுதியவர்கள் செந்தமிழ் மரபை
அல்லது உயர் இலக்கிய மரபைப் பேணும் முயற்சியை
மேற்கொண்டனர்.

“தமிழ் கற்கப் புகும் சைவ சமயிகள்
முன்னர்ப் பால பாடங்களைப் படித்துக்
கொண்டு இலக்கணச் சுருக்கத்தைக்
கற்றறிந்து இயன்றவரை பிழையில்லாமல்
எழுதவும் பேசவும் பழகுக.”

என்று ஆறுமுக நாவலர் குறிப்பிடுகின்றார். சாதாரணத் தமிழ்
உரை நடையைப் படிக்கவும் எழுதவும் இலக்கண அறிவு
தேவை என்பது நாவலர் கருத்து.

இலக்கணத் தூய்மையை விரும்பும் நாவலர் மொழித்
தூய்மையைக் கட்டாயப் படுத்தவில்லை. அவர் எழுதிய
நூல்களில் ஆங்கிலச் சொற்களும், சமஸ்கிருதச் சொற்களும்
மிகுதியாக இடம் பெற்று உள்ளன.

ஆறுமுக நாவலரின் உரைநடைக்குச் சான்று வருமாறு :

“கடவுள் என்றும் உள்ளவர்; அவருக்குப் பிறப்பும் 
இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர்; அவர்
இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிந்தவர்,
அவர் அறியாதது ஒன்றும் இல்லை. அவரது அறிவு
இயற்கை அறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவர் அல்லர்.”

இதில், ஐரோப்பியப் பாதிரிமார்களின் உரைநடையில் இருந்து
வேறுபட்ட தன்மைகள் இரண்டைக் கவனிக்கலாம்.

• சிறு சிறு தொடர்கள்.
• பேச்சு மொழி புறக்கணிப்பு; செந்தமிழ்ச் சொல் பயன்பாடு.

ஆறுமுக நாவலரின் ஒட்டு மொத்த உரைநடைப்
படைப்புகளையும் ஆராய்ந்து உள்ளனர். அவர்கள் மூன்று
முக்கியப் பண்புகளைச் சுட்டிக் காட்டி உள்ளனர். அவை,

• கல்வி அறிவு உடைய வித்துவான்கள், கல்வி அறிவு
குறைந்தவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் ஆகிய யாவருக்கும் எளிதில் பொருள் விளங்குவது.
• பெரும்பாலும் இயற் சொற்களைக் கொண்டு இருப்பது
அவசியமான இடத்து மட்டும் பிற சொற்களைப்
பயன்படுத்துவது.
• பெரும்பாலும் சந்தி பிரித்து எழுதுவது.

**உரைநடை இலக்கியம்

இலக்கியம் எழுத உரைநடையை முதன் முதலில்
பயன்படுத்தியவர் வீரமா முனிவர் என்பதை அறிவோம். இவர்
எழுதிய பரமார்த்த குரு கதைக்கு அடுத்து இம்முயற்சி
தொடரவில்லை. 1887 இல் தமிழின் முதல் புதினமான ‘பிரதாப
முதலியார் சரித்திரம்’ வெளிவந்தது. இதைத் தொடர்ந்து
புதினங்கள் பல எழுதப் பெற்றன. இலக்கியம் எழுதும்
முயற்சிக்குப் பெருமளவில் உரைநடையைப் பயன்படுத்தும்
முறை வழக்குப் பெற்றது. இந்த உரைநடையிலும் மாற்றம்
வேண்டும் என்பது பாரதியின் கருத்து. இதை உரைநடை
வழியே பாரதி வெளிப்படுத்தி உள்ளார்.

“தமிழில் வசன நடை (உரைநடை) இப்போதுதான்
பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது
வசனம் உலகத்தில் எந்தப் பாஷையைக் காட்டிலும்
தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.
கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான்
உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம்
எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம்,
ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை
எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே
அமைந்து விட்டால் நல்லது”

இது பாரதி வாழ்ந்த கால உரைநடை வளர்ச்சியை அறியப்
போதுமான சான்று. பாரதி 1882 இல் பிறந்து 1921 இல் இயற்கை
எய்தினார். இக்காலத்தில் பேசுவது போல் எழுத வேண்டும்
என்பது ஒரு கட்சியாக இருந்து உள்ளது. இதற்கு மாற்றுக்
கருத்து உடையவர் இருந்ததைப் பாரதியின் கருத்துத்
தெளிவாக்குகின்றது.

பாரதிக்குப் பின்னர் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத்
தக்கவர்கள் பலர் உள்ளனர். புதுமைப்பித்தன், திரு.வி.க,
மறைமலை அடிகள் முதலானவர் தமக்கெனத் தனி
உரைநடைப் பாணியை உருவாக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment