Search This Blog

Saturday, December 31, 2011

தொகாநிலைத் தொடர்மொழி, தொகைநிலைத் தொடர்மொழி - ஒரு பார்வை



முன்னுரை 
                  தமிழ் இலக்கணிகள் தொகை இலக்கணத்திற்கு அளித்துள்ள முதன்மையைக் கருதினால் அதன் சிறப்பினை நாம் உணர முடியும். தொல்காப்பியர் தொகை இலக்கணம் பற்றி எச்சவியலிலும், நன்னூல் இலக்கண விளக்கம் பொதுவியலிலும், முத்துவீரியம் ஒழிபியலிலும், தொன்னூல் தொகை நிலைத் தொடர்மொழி பெயரியல் என்பதிலும், சுவாமிநாதம் எச்ச மரபிலும் கூறுகின்றன. வீரசோழியத்திலும் பிரயோக விவேகத்திலும் தனிப் படலங்கள் அமைந்துள்ளன. இது தொகைக்குரிய சிறப்பை உணர்த்துகின்றது.

தொகை
  மொழி என்பது ஒரே கருத்தைப் பலவேறு வகைகளில் சொல்லும் பண்பு கொண்டது. அக்கா ஒருவளும் தங்கை ஒருவளும் வரும் போது அக்காவும் தங்கையும் வந்தனர் எனக் கூறலாம். ஆனால் இவ்வாக்கியத்தை, அக்கா தங்கையர் வந்தனர் என்றும் கூறலாம். முன்னதில் விரிந்த நிலையில் உம் இடைச்சொற்கள் தொகாமல் உள்ளன. எனவே இவ்வாறு தொகாமல் வரும் அத்தொடரை தொகா நிலைத் தொடர் என்றும் தொக்கு வரும் நிலையைத் தொகை நிலை என்றும் குறிப்பிடலாம்[1] என்கிறார் முனைவர் ச.அகத்தியலிங்கம். மேலும் இரண்டாவதில்  உம்மைச் சொற்கள்  தொக்கு (மறைந்து) வருவதால் அத்தொடரைத் தொகை நிலைத்தொடர், அல்லது தொகை என்றும் அந்நிலையைத் தொகை நிலை என்றும்  குறிப்பிடுகிறார்.
  சொல் ஒன்றனோடு ஒன்று பொருட் பொருத்தமுறத்தொடர்வது தொடர்[2] என விளக்குகிறார் தனது நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலில் அ.கி.பரந்தாமனார்.  இரு சொற்கள் இருந்து நடுவில் எச்சொல்லும், பொருள் கொள்ளும்போது மறையாதிருந்தால் தொகா நிலைத் தொடர் எனப்படும். கவிதா உண்டாள் என்னும் இத்தொடரில் நடுவில் ஒன்றும் மறைந்திருக்கவில்லை. எனவே, இது தொகா நிலைத்தொடர் எனப்படுகிறது. ஆனல், பால் அருந்தினாள் என்னும் இத்தொடரில் பாலை அருந்தினாள் என்று பொருள்படுவதால்  உருபு மறைந்திருக்கிறது. ஆதலால், பால் அருந்தினாள் என்பதைத் தொகை நிலைத் தொடர் என்கிறோம்.
  தொகா நிலைத்தொடரில் இரு சொற்களின் நடுவில் ஒன்றும் மறைந்திருக்காது. தொகைநிலைத் தொடரில் ஏதாவது மறைந்திருக்கும். இரண்டும் தொடர்களாக இருப்பதால் வேறுபாடு காட்டும் பொருட்டுச் சுருக்கமாகத் தொகாநிலைத் தொடரைத் தொடர் என்றும் தொகைநிலைத் தொடரைத் தொகை என்றும் கூறுவர்[3]என்கிறார் அ.கி.பரந்தாமனார்.  



தொகைநிலைத் தொடர்கள்
      பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
   முதலிய பொருளின் அவற்றின் உருபிடை
   ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்தொரு
   மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல்(361)[4]
  பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரில் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை பண்பு, உவமை முதலியவற்றின் உருபுகளோ மறைந்து (தொக்கு) நிற்குமானால் அது தொகைநிலைத் தொடர் எனப்படும். இதனைத் தொகை என்றும் சுருக்கமாகக் கூறுவர். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, வினைச் சொல்லோடு வினைச் சொல் சேர்ந்து தொகைநிலைத் தொடர் அமைவதில்லை என்பதாகும்.
  வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை
   அன்மொழி என அத் தொகை ஆறு ஆகும் (362)[5]
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத்தொகை,அன்மொழித் தொகை என்பவையாகும். அன்மொழித் தொகையாவது வேற்றுமைத் தொகை, வினைத் தொகை,பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை ஆகிய ஐந்து தொகைநிலைத் தொடர்களுக்கும் புறத்தே அவையல்லாத பிறமொள் மறைந்து வருவதாகும்[6] என தமது பயன் தரும் இலக்கணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார் புலவர் செந்துறை முத்து.
  வேற்றுமைத் தொகை
     இரண்டு முதலாம் இடை ஆறு உருபும்
      வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே (363)[7]
இதில் இரு பிரிவுகள் உண்டு. ஒன்றில் வேற்றுமை உருபு  மட்டும் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை எனப்படும். மற்றொன்றில் உருபுடன் பயனும் சேர்ந்து வருவதால் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
     திருக்குறள் படிக்கிறாள்.
இத்தொடர் திருக்குறளைப் படிக்கிறாள் என விரிந்து நின்று பொருளை உணர்த்துகிறது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தொடரிலுள்ள இரு சொற்களுக்கும் இடையில் அப்பொருளைத் தரக்கூடிய  என்னும் வேற்றுமை உருபு வரவில்லை. அது தொக்கி (மறைந்து) நின்று பொருளை உணர்த்துகிறது.
     இவ்வாறு ஒரு தெடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவதை வேற்றுமைத் தொகை என்று கூறப்படும்.
     பால் அருந்தினான் – (ஐ) – இரண்டாம் வேற்றுமைத் தொகை
     தலை வணங்கினான் – (ஆல்) – மூன்றாம் வேற்றுமைத் தொகை
     பள்ளி சென்றாள் – (கு) – நான்காம் வேற்றுமைத் தொகை
     சிறை நீங்கினான் – (இன்) – ஐந்தாம் வேற்றுமைத் தொகை
     அழகன் நூல் – (அது) – ஆறாம் வேற்றுமைத் தொகை
     மலைவாழ்வோர் – (கண்) – ஏழாம் வேற்றுமைத் தொகை
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுயில்லாததால், அவற்றிற்குத் தொகையும் இல்லை எனப்படுகிறது.
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
           தேர்ப்பாகன்
           இத்தொடர் தேரை ஓட்டும் பாகன் என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில்  என்னும் வேற்றுமை உருபும், ஓட்டும் என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன. இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
     காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை (364) [8]
     தேர்ப்பாகன் – (தேரை ஓட்டும் பாகன்) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
     பொன்வளையல் – (பொன்னால் செய்த வளையல்) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க கொகை.
     தலைவலி மருந்து – (தலைவலிக்குத் தரும் மருந்து) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
     குழாய்த்தண்ணீர் – (குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீர்) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
     காட்டுப் புலி – (காட்டின் கண் வாழும் புலி) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. ஆனால் இன்றைய சூழலில் கண் என்கிற ஏழாம் வேற்றுமை பயனில் இல்லை. இன்றைய வழக்கில் காட்டில் வாழும் புலி என்றே ஐந்தாம் வேற்றுமை உருபான இல்பயன்படுத்தப்படுகிறது. இந்த இல் என்பது இன் னின் திரிபாகப் பிற்காலத்தில் புதிதாகப் புகுந்த ஓர் உருபாகும்[9]எனத் தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு என்ற நூலில் குறிப்பிடுகிறார் சு. பாலுசாமி.
வினைத்தொகை
     குடிநீர், விரிகடல்
     குடி, விரி என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே நீர், கடல் என்னும் பெயர்ச் சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்களாயின. மேலும் இவை குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் எனவும் விரிந்த கடல், விரிகின்ற கடல்,விரியும் கடல் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலங்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
     இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகைஎனப்படும். காலம் கடந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும். இதில் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச் சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும் என்பதாகும்.
     மேலும் சில எடுத்துக் காட்டுகள் –
     கடிநாய், சுடுகாடு, கொல் களிறு, ஆடுகளம், ஓடு தளம்
பண்புத்தொகை
     செந்தாமரை – செம்மையாகிய தாமரை
     வட்டக்கல் – வட்டமான கல்
     இன்சொல் – இனிமையான சொல்
     இத்தொடர்களிலுள்ள செம்மை, வட்டம், இனிமை என்பன பண்புப் பெயர்கள். இவ்விரண்டிற்குமிடையில் ஆகிய,ஆன என்னும் பண்புருபுகள் தொக்கி வருகின்றன. அவற்றுடன் மை என்னும் பண்பின் விகுதியும் மறைந்து வந்துள்ளன.
     இவ்வாறு பண்புப் பெயருக்கும், அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில் மை என்னும் பண்பு விகுதியும் , ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும்.
     பண்புத் தொகையையும் வண்ணம், வடிவம், அளவு,சுவை ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து நிற்பர் இலக்கணிகள் [10] எனச் சுட்டுகிறார் முனைவர் ச. அகத்தியலிங்கம்.
     செங்கல் – நிறம்
     இத்தொடர் செம்மையாகிய கல் என விரிந்து பொருள் தருகிறது. இதிலுள்ள செம்மை பண்பு நிறத்தைக் குறிப்பதாகும். இதனை வண்ணப்பண்புத் தொகை என்பர்.
     வட்டத்தட்டு – வடிவம்
     இத்தொடர் வட்டமானதட்டு எனப் பொருள் தருகிறது. வட்டம் என்னும் பண்புப் பெயர் வடிவத்தைக் குறிப்பதால் இதனை வடிவப் பண்புத் தொகை எனக் கூறுவர்.
     முத்தமிழ் – எண்
     இத்தொடர் மும்மையாகிய தமிழ் என விரியும். மும்மை என்னும் பண்புப் பெயர் எண்ணிக்கையாகிய அளவைக் குறிப்பதாகும். எனவே இதனை அளவுப் பண்புத் தொகை என வழங்குவர்.
     உவர்நீர் – சுவை
     இத்தொடர் உவர்ப்பான நீர் எனப் பொருள் தருகிறது. உவர்ப்பு என்னும் பண்புப் பெயர் சுவையைக் குறித்தலால் இது சுவைப் பண்புத் தொகை எனப்படும்.
    

பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
      ஒரு பொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை(365)[11] என்கிறார் நன்னூலார்.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
     தமிழ்மொழி
     இத்தொடர் தமிழாகிய மொழி என விரிகிறது. மொழி என்பது அனைத்து மொழிகளையும் சுட்டும் பொதுப் பெயராகும். தமிழ் என்பது பல மொழிகளுள் ஒன்றாகிய தமிழைக் குறிப்பாகச் சுட்டுவதால் சிறப்புப் பெயராகும். இவ்விரு சொற்களுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது.
     இவ்வாறு சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று, இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கு வருவது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
உவமைத் தொகை
     உவம உருபுஇலது உவமைத் தொகையே (366) [12]
முத்துப் பல்
     இத்தொடர் முத்துப் போன்ற பல் எனப் பொருள் தருகிறது. முத்து – உவமை; பல் உவமிக்கப்படும் பொருள் (உவமேயம்). இவ்விரண்டிற்கும் இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
     இவ்வாறு உவமைக்கும் பொருளுக்கும் இடையில் போல்,, போன்ற, நிகர, அன்ன என்னும் உவம உருபுகளுள் ஒன்று தொக்கு நிற்க வரும் தொடர் உவமைத் தொகை எனப்படும்.
     மேலும் சில எடுத்துக் காட்டுகள் –
(மதிமுகம், மலரடி, தேன்மொழி, கமலக்கண்,கயல்விழி)
கவிதைகளிலும், திரையிசைப் பாடல்களிலும் இந்த உவமைத் தொகை இன்றளவும் நிரம்பவே பயனில் உள்ளது எனலாம். குழந்தையும் தெய்வமும் எனும் திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனின் வரிகளில்,
     அன்புள்ள மான்விழியே
      ஆசையில் ஒரு கடிதம் எனவும்,
ரோஜா எனும் திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில்,
     புது வெள்ளைமழை இங்கு பொழிகின்றதே எனவும் உவமைத் தொகைகள் கையாளப்பட்டுள்ளதை அறியலாம்.    
     இந்த உவம உருபுகளை நன்னூலார் இப்படிக் கூறுகிறார்.
போலப் புரைய ஒப்ப உறழ
       மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
       நேர நிகர அன்ன இன்ன
       என்பவும் பிறவும் உவமத்து உருபே (367) [13]
உம்மைத் தொகை
     அண்ணன் தம்பி
     ஆடு மாடு
     தாய் தந்தை
     இத்தொடர்கள் முறையே அண்ணனும் தம்பியும்,ஆடும் மாடும், தாயும் தந்தையும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. ஆனால் சொற்களுக்கு இடையிலோ அல்லது இறுதியிலோ உம் என்னும் இடைச் சொல் இல்லை. அது தொடரின் இடையிலும் இறுதியிலும் மறைந்து நின்று பொருளை உணர்த்துகின்றது.
     இவ்வாறு இரு சொற்களுக்கிடையிலும் இறுதியிலும்உம் என்னும் இடைச்சொல் தொக்கு வருவது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத் தொகை எண்ணல், எடுத்தல்,முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
     வெற்றிலைபாக்கு – வெற்றிலையும் பாக்கும் (எண்ணல் உம்மைத் தொகை)
     மூன்று கிலோ, நூறு கிராம் – மூன்று கிலோவும் நூறு கிராமும் (எடுத்தல் உம்மைத் தொகை)
     இரண்டே கால் லிட்டர் – இரண்டு லிட்டரும் கால் லிட்டரும் (முகத்தல் உம்மைத் தொகை)
     ஐந்தடி, நான்கு அங்குலம் – ஐந்து அடியும் நான்கு அங்குலமும் ( நீட்டல் உம்மைத் தொகை)
இதனையே நன்னூலார்,
     எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
      எனும் நான்கு அளவையும் உம் இலது அத்தொகை(368) [14]
என்கிறார்.
அன்மொழித் தொகை
     ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி(369)[15] 
பூங்குழல் வந்தாள்
     இத்தொடரில் முதலில் உள்ள பூங்குழல் என்னும் சொல் பூவை அணிந்த கூந்தல் என்னும் பொருளைத் தரும் இரண்டாம் வேற்றுமை உருபும், பயனும் உடன் தொக்க தொகையாகும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச் சொல்லைத் தழுவி நிற்பதால், பூவை அணிந்த கூந்தலை உடைய பெண் வந்தாள் எனப் பொருள் பெறப்படுகிறது.உடைய பெண் என்பது இத்தொடரில் இல்லாத மொழியாகும். இவ்வாறு வேற்றுமைத் தொகையை அடுத்து அல்லாத மொழி தொக்கு நிற்பதால் இத்தொடர் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
     இவ்வாறு ஐந்து வகையான (வேற்றுமை, வினை,பண்பு, உவமை, உம்மை) தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கு நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும். (குறிப்பு – அன்மொழி; அல்லாத மொழி – வேற்றுமை உருபுகள், பண்பு,உவம உருபுகள், உம் என்னும் இடைச் சொல் என்ற இவை அல்லாத வேறு மொழிகள் என்பது இதன் பொருள்)
     பொற்கொடி நடந்தாள் – பொன்னால் ஆகிய கொடியின் தன்மை கொண்ட பெண் நடந்தாள். மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும்.
     சுடுகதிர் எழுந்தான் – சுடுகதிர் – வினைத் தொகை. சுடுகின்ற கதிரை உடைய சூரியன் எழுந்தான். வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
     இன்மொழி சொன்னான் – இன்மொழி – பண்புத் தொகை. இனிய மொழி பேசும் ஆண் சொன்னான். பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
     தேன்மொழி நகைத்தாள் – தேன்மொழி – உவமைத் தொகை. தேன் போன்ற மொழி உடையாள். உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
     உயிர்மெய் எழுத்து – உயிர்மெய் – உம்மைத்தொகை. உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து. உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
தொகா நிலைத் தொடர்
            மழை பெய்தது.
     மயில் ஆடியது.
     முதல் தொடரில் மழை என்னும் எழுவாயும்பெய்தது எனும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறு சொல் வேண்டாது பொருள் உணர்த்துகின்றன.
     அதே போன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும்,பயனிலையும் தொடர்ந்து நின்று மயில் ஆடியது என்னும் பொருளைத் தருகின்றன.
     இவ்வாறு ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து, அவற்றின் இடையில் எந்தச் சொல்லோ உருபோ மறையாது, பொருளை உணர்த்துவது தொகா நிலைத் தொடர் எனப்படும்.
     முற்றுஈ ரெச்சம் எழுவாய் விளிப் பொருள்
      ஆறுருபும் இடை உரி அடுக்கிவை தொகாநிலை (374)[16]
     இத்தொகா நிலைத் தொடர் எழுவாய்த் தொடர்,விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர்,வினையெச்சத் தொடர், வேற்றுமைத் தொகா நிலைத்தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர்,அடுக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும்.
     கந்தன் எழுதினான் – இதில் கந்தன் என்னும் எழுவாயைத் தொடர்ந்நு எழுதினான் என்னும் பயனிலை அமைந்துள்ளது. இதனை எழுவாய்த் தொடர் என்பர்.
     மழையே வா! – இத்தொடர் மழையை விளிப்பதால் (அழைப்பதால்) விளித்தொடர் எனப்படும்.
     வந்தார் அமைச்சர் – இதில் வினை முற்று முதலில் நின்று பெயரைத் தொடர்கிறது. இதற்கு வினை முற்றுத் தொடர் என்பது பெயர்.
     தெரிந்த இடம் – இதில் தெரிந்த எனும் எச்சவினை இடம் என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் எனப்படும்.
     கூடி மகிழ்ந்தனர் – இத்தொடரில் கூடி என்னும் எச்சவினை மகிழ்ந்தனர் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. இதனை வினையெச்சத் தொடர் என்பர்.
     பாடத்தைப் படித்தான் – இத்தொடரில்  என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக நின்று பொருளை உணர்த்துகிறது. இது வேற்றுமைத் தொகா நிலைத் தொடர் எனப்படும்.
     மற்றொன்று - மற்று + ஒன்று – இதில் மற்று என்னும் இடைசொல்லை அடுத்து ஒன்று என்னும்    சொல் நின்று பொருள் தருவதால் இதனை இடைச்சொல் என்பர்.
     கடிமணம் – கடி என்பது உரிச்சொல், இதைத் தொடர்ந்து மணம் எனும் சொல் வந்துள்ளது. இது உரிச்சொல் தொடர் எனப்படும்.
     பாம்பு! பாம்பு! பாம்பு! – ஒரே சொல் அச்சத்தின் காரணமாகப் பலமுறை அடுக்கி வந்துள்ளது. இது அடுக்குத் தொடர் என வழங்கப்படும்.


தொகை – தமிழ் இலக்கணிகளின் சிந்தனை
தொகு என்ற சொல்லின் அடையாகத் தொகைஎன்ற சொல் உருப்பெற்றது; அது உணர்த்தும் பொருள் அடிப்படையில் தொகைக்கோட்பாடு உரைக்கப்பெற்றது. இக்கோட்பாட்டைத் தொல்காப்பியர் முதலான இலக்கண ஆசிரியர்கள் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பது இனிச் சிந்திக்க வேண்டியது [17] என்கிறார் சு. பாலுசாமி. மேலும் தொக்கு வருவது தொகை என்றால் உருபு தொக வருதல் தொகையா? பொருள் தொக வருவது தொகையா? என வினா எழுப்புகிறது என்கிறார்.
வேற்றுமைத் தொகை குறித்துக் கூறும் தொல்காப்பியர்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமையியலஎன்று சுட்டுகிறார். இவ்வாறு சுட்டுவதைக் கருத்தில் கொண்டால் பொருளும் உருபும் தொக்கி வருவதையே தொல்காப்பியர் தொகையெனக் குறித்தார் எனலாம்.
நன்னூலார், இரண்டு முதலா யிடையாறுருபும்எனக் கூறுவது உருபாகிய புறநிலைக்கு முதலிடம் தந்து கூறுவதாகும். பிற்கால இலக்கண நூல்கள் இக்கொள்கையைப் பின்பற்றுகின்றன.
தொக்கு வருவது தொகை என்பதோடு மட்டுமன்றி தொகுத்துக் கூறுவது தொகை என்றும் கூறலாம். யானை கொன்றது, யானை கொல்லும் என்ற தொகை விரிகளைக் கொன்ற யானை,கொல்லும் யானை என வகையாக்கிக் கொல்யானை எனத் தொகையாயிற்று என்று சொல்லலாம் என தமது தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு என்ற நூலில் கூறுகிறார் சு. பாலுசாமி.
தொகையின் வகையினை எல்லா இலக்கண ஆசிரியர்களும் ஆறு என்றே கொள்கின்றனர். இவ்வாறனுள், வேற்றுமைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்ற நான்கே தமக்கென உருபு உடையன. வினைத் தொகைக்கும், அன்மொழித் தொகைக்கும் உருபு இல்லை. உருபு இல்லாத இவ்விரண்டும் தொகை என்று கூறப்படுவதால் உருபு தொகுதல் என்னும் இலக்கணம் தவறுபடுகிறது [18] எனக் கூறுகிறார். 
முடிவுரை
          எந்த ஒரு மொழிக்கும் அரணாக அமைவது அம்மொழிக்கு அமைந்த இலக்கணமாகும். தமிழ் மொழியின் முதல் இலக்கணமாகிய தொல்காப்பியம் முதன்மையாகத் திகழ்வதால் தமிழ் அன்றும் இன்றும் என்றும் செம்மையான இலக்கணங்களைப் பெற்று எக்காலமும் இளமையுடன் திகழ்கிறது. தமிழுக்கு வரம்பான இலக்கண நூல்கள் இருப்பதால் அது நெகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் பரவ இயலவில்லை. அதே நேரத்தில் இலக்கண நூல்களின் பிடிப்பால் தமிழின் கட்டமைப்பு எளிதில் சீர்குலையும் வாய்ப்பில்லை.
                                          


துணை நூல்கள்
1.       நன்னூல் சொல்லதிகாரம், தமிழண்ணல்,இரண்டாம் பதிப்பு 2008, தமிழ்மொழிப் பயிலகம்,மதுரை.
2.       நன்னூல் சொல்லதிகாரம், சோம. இளவரசு,மூன்றாம் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம்,சென்னை.
3.       நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, அ.கி.பரந்தாமனார். மறுபதிப்பு 2007, பாரி நிலையம், சென்னை.
4.       தமிழ்மொழி அமைப்பியல்ச. அகத்தியலிங்கம்,முதற்பதிப்பு 2002, மெய்யப்பன் தமிழாய்வகம்,சிதம்பரம்.
5.       தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, சு. பாலுசாமி,2007, திருக்குறள் பதிப்பகம், சென்னை.
6.       பயன் தரும் இலக்கணம், புலவர் செந்துறை முத்து,1995, விசாலம், சென்னை.


    
               




  
              


[1] சு.அகத்தியலிங்கம், தமிழ்மொழி அமைப்பியல், பக். 105
[2] அ.கி.பரந்தாமனார்,நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, பக். 119
[3] அ.கி.பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, பக். 119
[4] சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 83
[5]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 83

[6] செந்துறை முத்து, பயன் தரும் இலக்கணம், பக். 45
[7] தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 175
[8]  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக்.176
[9] சு. பாலுசாமி, தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, பக். 50
[10]  ச. அகத்தியலிங்கம், தமிழ் மொழி அமைப்பியல், பக். 111
[11]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 85
[12]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 86


[13]  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 178 - 179
[14]  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 178 – 179
[15]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 88


[16]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 92
[17]  சு. பாலுசமி, தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, பக். 70
[18]  சு. பாலுசமி, தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, பக். 72

No comments:

Post a Comment