Search This Blog

Monday, October 31, 2011

சாத்தானின் இசை(Blues): 1 - எங்கிருந்து தொடங்கியது ?


எழுதியது.. கொழந்த 


பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பம். தென் அட்லாண்டிக் கடல் பகுதி. இரவு நேரம். அடிமைகளின் கப்பல் ஒன்று கடலை கிழித்துக்கொண்டு அமெரிக்கப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அடிமை மற்றொரு அடிமையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறான். கை – கால் விலங்குகளினால் ஏற்பட்ட காயங்களையும் மீறி கழுத்தை நெறிப்பது சிரமமாகவே இருக்கிறது. நெறிபடுபவனிடம் ஒரு எதிர்ப்பும் இல்லை. ஏனென்றால் நெறிக்கச் சொன்னதே அவன்தானே. ஏன் ? தான் இறந்தால் மட்டுமே இந்த அவல சூழ்நிலையில் இருந்து விடுபட்டு மறுபடியும் தனது நாட்டிற்க்கும் வீட்டிற்கும் சென்று சேர முடியும் என்ற உறுதியான – குழைந்தைத்தனமான நம்பிக்கை. இயற்கையோட இயைந்த அவர்கள் மனது பின் எவ்வாறு சிந்திக்கும். வெற்றிகரமாக இறந்தும் விடுகிறான். சற்று நேரங்கழித்து காவலாளி ஒருவன் உள்ளே வர, இறந்தவனின் உடலைக் காண நேரிடுகிறது. உடலை எடுத்து கடலில் வீசினானா? அதான் இல்லை. நீண்ட கத்தி; ஒரே வெட்டு: தலை வேறு – உடல் வேறாக. தற்கொலை செய்து வீடு போய் சேரலாம் என்று நினைத்தால் அதைக் கூட நடக்க விட மாட்டோம் என்ற கொடூரமான புத்தி.



ஆப்ரிக்க அடிமை முறை:
                        இந்த அடிமை முறை ஆதிகாலம் தொட்டே – எகிப்தியர்களால் திறம்பட தொடங்கிவைக்கப்பட்டது.பின் எட்டாம் நூற்றாண்டில்"மூர்ஸ் என்றழைக்கபட்ட வட-ஆப்ரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஸ்பெயின & போர்ச்சுகல் பகுதிகளை கைபற்றிய போது மீண்டும் அந்த பகுதிகளில் அடிமை முறை செழிப்படையத் தொடங்கியது. அதற்கு முன்னரே, பல நூற்றாண்டுகளாக“அரேபிய அடிமை வணிகமுறை உலகளவில் மிக பிரபலமாக நடைமுறையில் இருந்ததை கவனத்தில் கொள்க.

1492ஆம் ஆண்டு கிறிஸ்தவ படைகள் – யாரின் தலைமையில் என்று உங்களுக்கே தெரியும் – ஏற்கனவே ஸ்பானிய படைகள் கைப்பற்றியிருந்த க்ரானடா போன்ற பகுதிகளுடன் சேர்த்து, புதிதாக மேற்கிந்திய பகுதிகளையும் கைப்பற்றியது. அதற்கப்பிறகு உலக வரலாறே மாறியது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் இந்த கடல் பயணம் கொடுத்த தைரியமும், மிதமிஞ்சிய லாபமும் புதிய நாடுகளை நோக்கி ஐரோப்பியர்களை வெறிகொண்ட குதிரைகள் போல ஓடச் சொன்னது. சேனமில்லாமல் குதிரைகளா......இந்த ஐரோப்பிய குதிரைகளின் சேனம் – மதம். இந்த அனைத்து படையெடுப்புகளிலும் மதம் மிகப்பெரிய பங்காற்றியது.

இவ்வாறு பல புதிய நாடுகளை பிடித்தாயிற்று.குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளை.அதன் அற்புதமான வளங்களையும் இயற்கை செல்வங்களையும் பல முக்கிய பொருட்களையும் சுரண்டியாயிற்று. சுரண்டப்பட்ட அனைத்தையும் தத்தமது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அவரவர் நாட்டில் ஏற்றுமதி செய்யபட்ட பொருட்களையும் பிற வசதிகளையும் வைத்து -  புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களில், உதராணமாக சுரங்கம், கடும் வயல் வேலைகள், கட்டுமான பணிகள்போன்ற தொழில்களில் வேலை செய்வதற்குரிய ஆட்களை எங்கே பிடிப்பது? அவரவர் நாட்டில் மிக சொற்ப அளவிலேயே ஆட்கள் கிடைத்தனர்.ஐரோப்பியர்களுக்கோ இதுபோன்ற கடுமையான காலநிலை நிலவும் இடங்களில் வேலை செய்து பழக்கம் இல்லை.என்ன செய்வது? யோசித்தனர்..........இதுவரை ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பல வகை பொருட்களை எடுத்து வந்தாகிவிட்டது.வேறு என்ன அங்கிருந்து எடுக்க முடியும் ? அபரிதமாக அங்கிருக்கும் மனித வளங்கள் தான் அவர்கள் கண்ணில்பட்டது. திடகாத்திரமான உடல். எதை சொன்னாலும் நம்பிவிடும் அறியாமை.இயற்கையோட ஒன்றி வாழ்ந்தாலும் அதன் சில விஷயங்களின் மீது பயம். இதுபோதாதா....

நியூ வேல்ட்(New World) பகுதிகள் என்றழைக்கபட்ட அமெரிக்க பகுதிகளை நோக்கியே பெரும்பாலான கடல் வழி அடிமை வியாபரம் அமைந்திருந்தது. முக்கோண வணிகம்(Triangle Trade) என்ற வியாபார முறை தொடங்கிற்று. கீழுள்ள படத்தைப் பார்த்தாலே நான் சொல்ல வந்துது மிகச் சுலபமாகப் புரியும்.


செனகல் போன்ற ஆப்ரிக்க கடல் பகுதிகளில் இந்த அடிமை வணிகத்திற்க்காகவே ஒன்றல்ல....ரெண்டல்ல.......அறுபது சந்தைகள் நிறுவப்பட்டன. சந்தைகளுக்கு மக்களை எங்கிருந்து பிடித்து வந்தனர்?. அனைவரையும் ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்துதான். ஆயிரக்கணக்கான மக்களை எவ்வாறு “அழைத்துவந்தனர்? கை விலங்கிட்டு நடைபயணமாகவே. 1000 மையில் தூரத்தை கூட நடந்தே கடந்து வந்தனர்.மிக கடுமையான பாதைகளில் இந்த கொடுமையான பயணத்தினாலேயே பாதிபேர் உயிரிழந்து விடுவர்.இந்த பயணமே சில சமயம் மாதக்கணக்கில் ஆகும். உயிர் பிழைத்திருப்பவர்களை மாட்டுக் கொட்டடி போன்ற சந்தைகளில் அடைத்து வைத்திருந்தனர்.

கடல் பயணம்:
                 கப்பல்,படகு என்றெல்லாம் அழைக்கவே தகுதியற்ற வஸ்துக்களில் தான் அனைவருக்கும் அமேரிக்கா போன்ற நாட்டை நோக்கி பயணம். கப்பலின் அமைப்பு எவ்வாறு இருக்கும்? கீழுள்ள படத்தைப் பாருங்கள்.



ஒருவரோடு ஒருவர் கை – கால்களுடன் சேர்த்து விலங்கிடப்பட்டு, ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவரின் பிடறி மயிரின் மேல்பட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அளவுக்கு நெருக்கமான சூழ்நிலை.தனது மலஜலம் - ரத்தம், எது பிறரின் மலஜலம் - ரத்தம் எது என்று பிரித்தறிய முடியாத இடப்பற்றாக்குறை.இந்த அவலம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றவர்கள் அநேகம்.அவல சூழ்நிலையின் தாக்கத்தால் சின்னம்மை, கொடுங்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்தவர்களும் அநேகம். குறைந்தபட்சம் இருபது நாட்கள் முதல் மாதக்கணக்கில் இந்தக் கொடூரமான பிரயாணம் நீளும். 















இங்கே சில புள்ளி விவரங்களை பகிர விழைகிறேன்.

1.இந்த வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்ட நாடுகள் –இங்கிலாந்து,ஸ்பெயின,போர்ச்சுகல்,பிரான்ஸ்,நெதர்லாந்து

2. 16 – 18ஆம் ஆண்டின் தொடாக்கம் வரை – ஐரோப்பியர்கள், இந்த கடல் வழி வணிகத்தில் எத்தனை முறை ஈடுபட்டுள்ளனர் தெரியுமா......50,000 தடவ..

3. 15 - 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் மட்டும் முழுவதுமாக – இந்த கடல் பகுதியில் மட்டும் – குறைந்தபட்சம் 150 லட்சம் பேர் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இதில் 20 இருபது லட்சம் பேர் வரை கடல் பிரயானத்திலேயே உயிரிழந்து விட்டனர். ஆம்...முழுவதுமாக 150 லட்சம் பேருக்கும் மேல்.

4. ஆரம்பத்தில் போர்ச்சுகல் தான் இந்த வணிகத்தின் தாதா.பின்பு அந்த இடத்தை முறையே இங்கிலாந்தும் அமெரிக்காவும் எடுத்துக்கொண்டன

5. இந்தியாவில் இதுபோல அடிமை முறை இருந்ததா என்று யாருக்கும் கேள்வியெழ வாய்ப்பில்லை.நாம்தாம் சொந்த மக்களையே மனுதர்மம்,லொட்டு லொசுக்கு என்ற பல பேர்களில் அடிமைகளாக வைத்திருந்தோமே.

6. அதேசமயம் ஆப்ரிக்காவின் குழுக்களுக்கும் இந்த அடிமைமுறை இருந்தது, அவர்களை கொடூரமாக பலியிடும் பழக்கமும் இருந்தது என்பதும் உண்மை.


அமெரிக்காவில் ஆரம்பித்த அடிமை முறை:


1619ஆம் ஆண்டு. அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம்.அமெரிக்க மண்ணில் முதல் ஆப்ரிக்க அடிமைகளைத் தாங்கிய கப்பல் கரை சேர்கிறது. அன்றிலிருந்து இரண்டு நூற்றண்டுகள், அமரிக்காவின் ஏறக்குறைய எல்லா வகையான கடினமான வேலைகளிலும் பங்கேற்று அல்லது பங்கெடுக்க வைக்கபட்டு, அந்நாட்டை முன்னேற்றியது ஆப்ரிக்கர்களே. 1808ஆம் ஆண்டு, அரசாங்கமே அடிமைகளை “இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்தது. இறக்குமதி செய்யத்தான் தடையே தவிர அடிமைமுறை ஒழியவில்லை. 1861ஆம் ஆண்டு “சிவில் வார்ஆரம்பிக்கின்றது.அமெரிக்க சரித்திரமே அதற்குப்பிறகு முற்றிலுமாக மாறியது.

ஏற்கனவே கூறியது போல, ஆப்ரிக்க நாடுகளிலும் அடிமைமுறை இருந்தாலும், பிற நாடுகளிலும் இந்த அடிமை முறை இருந்தாலும் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த அடிமைமுறை முற்றிலும் மற்ற நாடுகளைவிட மாறுபட்டது.மிக கொடூரமானதொரு பழக்கம் நடைமுறையில் இருந்தது. என்ன அது ? ஒரு அடிமைக்கு பிறக்கும் குழைந்தையும்.....பிறக்கும் போதே அடிமைதான்.அந்த எஜமானனாக பார்த்து மனது வைத்தால் தான் உண்டு.இல்லாவிட்டால் அக்குழந்தையும் அதன் பிறகு வரும் தலைமுறையும் கூட அடிமைதான்.கொடூரம்.


ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் செய்யக் கூடிய மிகபெரிய கொடுமை எதாக இருக்க முடியும்......அவன் வாழ்வாதாரத்தை சிதைப்பது, உணவு இருப்பிடம் போன்ற அத்தியாவசிய விஷயங்களை மறுப்பது....இவைகளா....இவை மட்டும்தானா ? எனக்கு தெரிந்த வரையில் ஒரு மனிதனின் கலாசாரத்தை – அவனது வரலாற்றை அழித்தொழிப்பதுதான் மிகப்பெரிய கொடுமையாக இருக்க முடியும். And the americans precisely did that. முதலில் பெயரை மாற்றினர் (இதன் காரணமாகவே மால்கம் லிட்டிலாக இருந்தவர் மால்கம் சாக மாறினார்). அவர்களின் நாட்டுடன் எவ்வித தொடர்பில்லாமல் செய்தனர்.அவரது மத நம்பிக்கைகளை குழைத்தனர்.

எவ்வளவுதான் தடுக்க முயற்சித்தாலும் நமது இதய துடிப்பை நிறுத்த முடியாதல்லவா....அதுபோலவே ஆப்ரிக்கருக்கு – இசை. உலகின் மூத்த குடி – மிக பழமையான பழங்குடியினர் அவர்கள்தானே.... அதிரவைக்கும் தோல் இசை முதற்கொண்டு பல்வேறு வகை உணர்ச்சிகரமான – நேரடியான இசை அங்கிருந்ததானே பிறந்தது...சாப்பிடுவது உறங்குவது ஏன் சிறுநீர் கழிப்பது போல, இசை என்பது ஆப்ரிகர்களுக்கு வாழ்கை முறை. அப்படிப்பட்ட இனத்தை சேர்ந்த ஆப்ரிக்க அடிமைகளிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தாலும், இசையை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. அடிமைகளை கொண்டு வரும் கப்பலில் இருந்தே – ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளவும், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் - இந்த இசைதான் அவர்களுக்கு வடிகால். அதுவும் 18ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில்தான் இதுபோன்ற “கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடைத்தது.


வயல்களில் வேலை பார்க்கும் பொழுது அலுப்பு தெரியாமல் இருக்கவும், தன் இயலாமை, கோபம், வருத்தம், காதல், காமம், மகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளை வெளிப்படுத்துவும்,எல்லாவற்றையும் விட முக்கியமாக – தனது தாய்நாட்டிற்கும் தனக்குமான தொடர்பை பேணிக் காக்கவும் இசையே அவர்களுக்கு உற்று துணையானது. மலையுச்சியில் இருந்து கூக்குரலிட்டால் ஏற்படும் எதிரொலிப்பு போல, அவர்களது எண்ணங்களின் எதிரொலிப்பாக இசை மாறிப்போகிறது.இசையின் மூலமே இந்த அவலச் சூழ்நிலையில் இருந்து விட்டு விடுதலையாகி எங்கெங்கோ, பெயர் தெரியாத பறவைகள் போல பறந்து செல்லமுடியுமென்று நம்பினர். கிடார் - அவர்களது உற்ற தோழனானது. குடும்பத்தில் ஒரு உறுப்பினரானது. அவர்கள் பேசுவதற்கு பதிலாக தனது நரம்புகளின் மூலமாக பதிலளிக்க ஆரம்பித்தது. அன்றிலிருந்து பிறந்ததுதான் உலகளவில் Rock n Roll, Jazz, Rhythm & Blues(R & B) போன்ற இசை வகைளுக்கு நேரடியாகவும் பிற்பாடு வந்த Rock, Ska, Reggae, Hip  Hop, Rap போன்றவற்றிக்கு மறைமுகமாகவும் காரணமாக இருந்த, சாத்தானின் இசை என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட – ப்ளுஸ் இசையாகும். 



No comments:

Post a Comment