Search This Blog

Friday, August 12, 2011

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? உங்கள் சந்ததிக்கே ஒரு கலங்கரை விளக்கமாகும் - சிறப்புக் கட்டுரை





http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRsPA44a1I5kHvwkBVTzv6x2tzYgSRHp-oUyzXcg6aRuoL94zib

 கூடை வைச்சு இருக்கிறவங்களுக்கு எல்லாம் , இல்லை கொண்டை போட்டு இருக்கிறவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் தர்றது இல்லைனு , ஒரு கையறு நிலையில் கவுண்டமணி புலம்புவார் இல்லை , அதே மாதிரி - ஒரு சில பேரது ஜாதக அமைப்பு , என்னதான் பரிகாரம் செய்தாலும் - சமயத்தில் அவர்களுக்கு உரிய நிம்மதி கிடைப்பதில்லை. 
உனக்கு இதே பலன் தான் வேண்டுமா , சிம்னி விளக்கு எல்லாம் கொடுத்தா சமாளிச்சுக்கிட மாட்டியா ?  என்று கடவுளும் மௌனமாகி விடுகிறாரோ என்று பயம் வந்து விடுகிறது. 


 நம்ம தமிழ் சினிமாவில , கொடூரத்தின் உச்சமாக இருந்து வரும் வில்லன், கடைசிலே ஹீரோக்கிட்ட நாயடி வாங்கினதுக்கு அப்புறம் திருந்திட்டேன்னு , கால்ல விழுறார் பாருங்க. அப்போ ஹீரோ மன்னிக்கிறார். ஆனா, நம்ம ரசிக ஜனங்க - அவனை மன்னிக்காதே , கொன்னுடுனு கத்துவாங்க. இல்லை மனசுக்குள்ள தோணும். இவனுக்கு எல்லாம் மன்னிப்பானு? 


அந்த மாதிரி, யார் ஒருவர் சென்ற பிறவியில - செய்யக்கூடாத அத்தனை பாவங்களையும் செய்து ஓவரா ஆடி இருக்கிறாங்களோ  , அதற்குரிய பிரதிபலன் இந்த ஜென்மத்தில அனுபவிப்பாங்க. ஏதாவது நல்ல காரியங்கள் செஞ்சதுக்காக , முற்பாதி ஓரளவுக்கு நல்ல நிலை இருந்தாலும், பின்பாதியில் பாவ பலன்கள் கிடைக்க ஆரம்பிச்சுடும். 


மனுஷனா பிறந்துவிட்டதுனாலே , நம்ம சினிமா வில்லன் ரேஞ்சுலதான் - ஒவ்வொரு மனுஷனுக்கும் திமிரு, தெனாவட்டு எல்லாமே இருக்கு. கொஞ்சம் நல்ல பையனா வளந்தா,யாருக்கும் தெரியாம தப்பு செஞ்சுக்கிட்டு தான் இருக்கிறாங்க. யாருக்கும் தெரியாம ஒரு காரியம்  செய்யனுமா, அதற்க்கு அந்த காரியத்தை  செய்யாம இருக்கிறதுதான் ஒரே வழி.  எந்த தப்புக்கும், அசிங்கப்படாம யாரும் தப்ப முடியாது. 

 மனுஷன்னாலே - ரெண்டே ரெண்டு பிரிவு. ஒன்னு தப்பு செஞ்சுட்டு , புழு மாதிரி துடிக்கப் போறவங்க. இன்னொன்னு - தப்பு செய்ய ஆசைப் பட்டுக்கிட்டு ,சந்தர்ப்பம் அமையாம ஏக்கத்தில இருக்கிறவங்க. waiting லிஸ்ட். இவங்க தப்பு செஞ்சு , அதுக்கு அப்புறம் கஷ்டப்படப் போறவங்க.இந்த ரெண்டுலேயும் சிக்காம - நல்ல புள்ளையா வளரத்தான் , ஆண்டவன் நமக்கு அவ்வளவு சோதனை கொடுக்கிறாரு.  


உங்க திமிர், தெனாவட்டைப் பார்த்துட்டு - ஈசனாகிய அந்த ஹீரோ , ஒரு உதை கொடுக்கிறார். அவங்க, அவங்க தன்மையைப் பொறுத்து - ஒருத்தருக்கு, அடி , உதை, குத்து  - ஒரு சிலருக்கு எல்லாமே. திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கிறார். வாழ்க்கையில கஷ்டம் வந்தா, முடிஞ்ச அளவுக்கு கழுதையை அனுபவிச்சு  தொலைச்சுடலாம். செஞ்ச பாவம் கொஞ்சம் கொஞ்சமா குறையிதுன்னு நினைச்சுக்கோங்க. ஒரு சிலருக்கு - சில பரிகாரம் செய்றதுனால , கஷ்டங்கள் நல்லாவே குறையும். அந்த அமைப்பு இருக்கிறவங்களுக்குத் தான் - ஒரு நல்ல ஜோதிடர் , பரிகாரம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறார். 

சார், நான் நல்லவன் சார், மனசறிஞ்சு நான் எந்த தப்புமே செய்யலை. நீங்க சொன்ன எல்லா பரிகாரமுமே செஞ்சுட்டேன். ஆனாலும், ஓரளவுக்கு பலன் தெரிஞ்சதே ஒழிய , முழுசா எதும் கிடைக்கலையேன்னு இன்னும் சொல்றவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க. 


தனது அப்பழுக்கில்லாத பக்தி மூலம் கடவுளையே தரிசிக்கிற அளவுக்கு இருந்த திருநாவுக்கரசரே - கடவுள் கிட்டே கஷ்டம் தாங்குற சக்தியை கொடு இறைவா , அதற்க்கு வழி காட்டுன்னுத்தான் கேட்கிறாரே ஒழிய , கஷ்டம் கொடுக்காதேனு கேட்டது இல்லை. 
நாம மட்டும், நாமன்னா நம்ம அப்பா , தாத்தா எல்லாம் சேர்ந்ததுதான், முடிஞ்ச அளவுக்கு ஆட்டம் போடுவோம்.. ஆனா , அதுக்கு பதிலா கஷ்டங்கள் வர ஆரம்பிக்கிறப்போ தான் - கடவுள் ஒருத்தர் ஞாபகமே வரும். ஆனா , அவரையும் நாம கேட்டது எல்லாம் செஞ்சு கொடுக்கிற ஒரு  'சிட்டி - ரஜினி ' ரேஞ்சுல எதிர்பார்க்கிறோம்..! 


கஷ்டப்பட்டு உயிருக்கு போராடுற நிலைமைல , நான் உன்னை நினைப்பேனோ , நினைக்க மாட்டேனோ - இறையே அதனாலே நான் உன்னை இப்போவே நினைக்குறேன். எனக்கு கஷ்டங்களை சமாளிக்க சக்தி கொடு இறையேனு திருநாவுக்கரசர் உருக்கமா பாடுறார். அதே மாதிரி, நாமளும் நமக்கு வாய்ப்பு கிடைக்கிற நேரத்தில எல்லாம் - அந்த பரம்பொருளை வேண்டனும் சார்.  


சரி, விஷயத்துக்கு வருவோம். என்ன பரிகாரம் செஞ்சாலும் பலன் இல்லையே ? இதற்க்கு என்ன வழின்னு கேட்கிறவங்களுக்கு ......


ஒரு தாய், தகப்பன் எப்படி தன்னோட குழந்தை கஷ்டப்படுறதை தாங்காம , தன்னாலே முடிஞ்ச அளவுக்கு தேவையானதை செஞ்சு கொடுப்பாங்களோ , அந்த அளவுக்கு என்னுடைய அனுபவத்தில் , மிக சமீப காலமாக - பலரது வாழ்வில் - பலப்பல அற்புதங்களை நிகழ்த்தி , ஒரு வரம் தரும் தெய்வமாக  இருப்பவள் - ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் பத்திரகாளி. சின்ன கோவில் தான். ஆனால் , சக்தி ! HIGHLY POWERFUL ! ஒருமுறை உங்களால் முடியும்போது வந்து பாருங்கள். நினைத்தாலே போதும். அம்மனை பற்றி இந்த வரிகளை எழுதும்போதே, என்னுள் ஒரு சிலிர்க்கும் உணர்வு வருவதை உணர முடிகிறது. 


வெளியூரிலிருந்து வருபவர்கள் , கோவிலுக்கு வரும்போது , பூசாரியிடம் மஞ்சள் காப்பு வேண்டுமென்று , கூச்சப்படாமல்  கேட்டு வாங்குங்கள். அம்மன் பாதத்தில் வைத்து அவர் கொடுக்கும் அந்த மஞ்சளை நீங்கள் தினமும் நெற்றியில் விபூதிக் கீற்று போல பூசிக்கொண்டு , உங்கள் அன்றாட பணியை ஆரம்பியுங்கள்.
நம் வலைப்பூவிலும், ஆன்மீக கடலிலும் - ஏற்கனவே நிறைய கட்டுரைகள் அம்மனின் அதிசயங்களைப் பற்றி எழுதியிருக்கிறோம். சந்தேகமே இல்லாமல் , இப்போது நம் நாட்டில் இருக்கும் அத்தனை பெரிய ஆலயங்களிலும் வெளிப்படும் மாபெரும் சக்தி - இந்த சிறிய ஆலயத்திலும் இருக்கிறது. நீங்கள் முதன் முறை வரும்போதே - இதைக் கண்டிப்பாக உணர முடியும். 


இந்த கட்டுரையைப் படிக்கும் அன்பர்கள் - தமிழ் நாட்டில் இருப்பவர்கள் - முடிந்தால் - நாளை இரவு பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளலாம். இது ஒரு மாபெரும் வாய்ப்பு. சேர்ந்தாற்போல் விடுமுறையும் வருகிறது. 
அம்மாவின் கருணையால் - நாளை நான் பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது. அண்ணாமலை, சதுரகிரி , சமயபுரம், மலையனூர் அங்காளபரமேஸ்வரி போன்ற ஆலயங்களுக்கு செல்லும்போது உணரும் அந்த சக்தியை , உணர்வை நீங்கள் இங்கும் பெற முடியும். 
சதுரகிரியில் பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தும், நான் நாளை இங்கு உட்கார்ந்து இருக்கப்போவதில் இருந்தே , அம்மனின் சக்தியை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஏன்? மகாலிங்கத்தின் அருளை விடவா? சதுரகிரி செல்ல உடல் பலம் இல்லாமலா? அப்படி எல்லாம் இல்லை. 


அம்மாக்கிட்ட , கொஞ்சம் உரிமையோட கொஞ்சி கேட்கலாம். அப்பா கிட்ட பவ்யமாதான் கேட்டு ஆகணும். நம்ம கஷ்டப் படுறது தாங்காம , உடனே மனசு இரங்குவது அம்மாதான். ஏமாத்தி , ஐஸ் வைச்சு - வேணும்கிறதை கேட்டு வாங்கிட்டு வந்திடலாம். இல்லைனா , நாம ஆடுன ஆட்டத்துக்கு எல்லாம் , வண்டியை இவ்வளவு தூரம் ஓட்டி  வந்து இருக்க முடியுமா? 


ஒருவேளை உங்களால் நாளை வரமுடியவில்லை என்றாலும் , போக வேண்டும் என்று மட்டும் நீங்கள் மனதில் நினைத்தால் போதும். உங்களுக்கு அந்த அம்மனே வாய்ப்பு ஏற்படுத்துவாள்.விரைவில் வருவீர்கள். ஸ்ரீவி பஸ் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரம் தான். ஆட்டோவில் சென்றால் இருபது ரூபாய் அதிகம்.  சரி, இது ஒன்று. அப்புறம்? 


இரண்டு , ஒரு ஜோதிடர் என்கிற ரீதியில் - திருமந்திரம் படித்தபோது திருமூலர் சொன்ன ஒரு வழிமுறை. மாமிசம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் - அதை அடியோடு நிறுத்தி ஆகவேண்டும் என்று - அந்த மகா சித்தரே சொல்லியிருக்கிறார். பிற உயிர்களை கொன்று புசிப்பவர்களுக்கு பரிகாரங்கள் எதுவும் பலிக்காது என்கிறார். 

இஸ்லாமிய சகோதரர்கள்ளே கறி , மீன் சாப்பிடாதவங்க ரொம்ப கம்மி. எல்லா ஊர்லேயும் ஒரு கறிக்கடை பாய் இருப்பார். அப்படிப்பட்ட சமூகத்தில பிறந்தாலும், அக்பர் சக்கரவர்த்தி - ஒரு கட்டத்திலே , மாமிசம் சாப்பிடுறதை அடியோட நிறுத்திட்டாராம்.  முழு சைவமாவே மாறிட்டாராம்.   " sorry guys  ,  என்னோட வயிறு வேற ஜீவ ராசிகள் புதைக்க கூடிய சுடுகாடு இல்லைன்னு சொல்லிட்டாராம். ( மதன் - வந்தார்கள் , வென்றார்கள்லே எழுதி இருக்கிறார்) 
அவரே அப்படி சொல்றப்போ, அசைவத்தை விட்டப்போ - நாம விடமுடியாதா என்ன?    

பரிகார பலன் வேண்டுமா? அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். வேறு வழியில்லை. ஒரு பக்கம் பாவ கணக்கை கூட்டிக்கொண்டே சென்றால் , கர்ம வினை கழிவதில்லை. 

மூன்று - கீழே சொல்லியிருக்கிற ஒரு பாடல் . வருடக்கணக்கில் தியானம் இருந்து திருமூலர் எழுதியது இந்த திருமந்திரம். வருடத்திற்கு ஒரு பாடல் என , மூவாயிரம் வருஷம் தியானித்து - திருமந்திரம்  முழுவதும்  எழுதினாராம். நம்மளை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கத் தான் எல்லாம். ஆனா , நமக்கு  இது எல்லாம்  எங்கே இருக்குதுன்னே தெரிய மாட்டேங்குதே.. சரி, பாருங்க என்ன சொல்றாருன்னு. 


 
யாவர்க்கு மாம்இறை வர்க்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

தூய மனதோடு ஒரு பச்சிலை இட்டு இறைவனை வணங்குவதும், சிவனுக்கு வில்வம் , விஷ்ணுவுக்கு துளசி, அம்மனுக்கு வேப்பிலை .. இந்த மாதிரி.

பசித்த பசுவுக்கு ஒரு பிடி புல்லைத் தருவதும், தாம் உண்ணும்போது பிறர்க்கு ஒரு கைப்பிடி உணவு தருவதும், குறைந்த பட்சம் பிறர் மனம் நோகாமல் இனிமையான சொற்களை பேசுவதும் கூட மேலான அறம்தான் என்கிறார் திருமூலர்.

 இந்த மூன்று விஷயங்களும் செய்ய ஆரம்பிச்சுப் பாருங்க. உங்க கஷ்டம் எல்லாம் தீர , ஒரு அருமையான வழி பிறக்கும். கண்டிப்பா , உங்க சந்ததிக்கே மனசுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்கும். தவறான பாதையில் செல்லவிடாது உங்கள் தலைமுறையை காக்கும். 

 தாம் உண்ணும்போது பிறர்க்கு ஒரு கைப்பிடி உணவு தருவது - இது எல்லா நாளும் செய்ய முடியாதே? என்ன பண்றது?

எங்க ஊர் பக்கத்தில ஒரு வழக்கம் உண்டு. தினமும் சோறு காச்சுறப்போ , ஒரு கை அரிசி எடுத்து தனியே வைச்சிடுவாங்க. சதுரகிரி கஞ்சிமடத்துலே இருந்து மாசம் ஒரு தடவை, இல்லை ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஆளுங்க வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. சின்ன வயசுலே. இப்போ எல்லாம் , அமாவாசைக்கு சதுரகிரி போறப்போ , இல்லை பௌர்ணமிக்கு போறப்போ , அவங்க அவங்களே சுமந்துக்கிட்டு போய் - மேல கஞ்சிமடத்துல கொடுத்திடுறாங்க.


 சதுரகிரி - கஞ்சிமடம் பத்தி கேள்விப்பட்டு இருப்பீங்க இல்லை? சதுரகிரி மகாலிங்கம் சந்நிதி பக்கத்துலே, மலை மேலே - எந்த நாளிலும், எந்த வேளையிலும் எத்தனை பக்தர்கள் வந்தாலும், அவங்க சாப்பிட , காசு எதும் வாங்காம , ஏற்பாடு பண்றதுக்காக - காளிமுத்து சுவாமிகள் ஆரம்பிச்ச மடம் . ஆரம்பத்துலே எந்த நேரமும், கஞ்சி  கிடைச்சதுனாலே கஞ்சி மடம்னு பேர். இப்போ நல்ல சுடு சோறே கிடைக்குது. பழைய சோறு, ஊறுகாய், மோர் - எப்பவுமே கிடைக்கும். அஞ்சு பேரு, பத்து பேருன்னா - சாப்பாடு உடனே கிடைக்கும். ஒரு நூறு பேரு , அம்பது பேருன்னா? முதல்லேயே போன் பண்ணி சொல்லிட்டீங்கன்னா , ஏற்பாடு செஞ்சிடுவாங்க.

சாதாரணமாக சிறு நகரத்தில் இரவு பதினோரு மணிக்கு மேல் உணவு கிடைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால், அவ்வளவு பெரிய காட்டில் 10 கி.மீ. தொலைவிலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அருகிலுள்ள இந்த கஞ்சிமடத்தில் இரவு இரண்டு மணிக்கு சென்றால் கூட உணவிடுகிறார்கள். இதில் சுமை தூக்கும் பணியாளர்களின் சேவை மகத்தானது. கடினமான காட்டுப் பாதையில் மூட்டைகளை தலையில் சுமந்தபடி அரிசியையும், மளிகை பொருட்களையும் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தை பார்க்கும்போது சுந்தரமகாலிங்கம்தான் இத்தனை பலத்தையும் தருகிறார் என்று தோன்றுகிறது. 

பக்தர்களின் வருகையையும், எண்ணிக்கையையும் இவர்கள்தான் கஞ்சி மடத்திற்கு தெரிவிக்கிறார்கள். இரவு நேரங்களில் தங்குபவர்களுக்கு மிகச்சிறிதான தொகையை முன்பணமாக பெற்றுக் கொண்டு பாயும், தலையணையும் தருகிறார்கள். மறுநாள் பாயையும், தலையணையையும் திரும்பக் கொடுக்கும்போது முன் பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்கள். 


கஞ்சி மடத்தில் உண்ட பக்தர்கள் அங்கேயே அன்பினால் நெகிழ்ந்து, நன்கொடையாக பணத்தை தருகிறார்கள். சிலர், ‘‘போனமுறை நான் இங்க சாப்டேன். எனக்கும் அன்னதானம் செய்யணும்னு ஆசையாக இருக்கு. இந்தாங்க பத்து கிலோ அரிசி’’ என்று பணிவோடு சமர்ப்பிக்கிறார்கள். எங்கள் நிலத்தில் விளைந்த காராமணி என்று இரண்டு படி காராமணியைக் கொடுக்க, ஆசையாக பெற்றுக் கொள்கிறார்கள். சமையலில் ஈடுபடும் பணியாளர்களின் உபசரிப்பும், பேச்சும் நம்மை நெகிழ்த்துகிறது. ஒரு முறைக்கு பலமுறை ‘நல்லா சாப்டுங்க, நல்லா சாப்டுங்க...’ என்று அன்போடு பரிமாறுகிறார்கள். எல்லோரும் அமர்ந்து உணவருந்துவதை பார்த்து பூரிக்கிறார்கள்.

அன்னதானத்தால் கிடைக்கும் ஆத்ம திருப்தியை நாம் அங்கு சற்று நேரம் அமர்ந்து கவனித்தால் புரியும். இந்தப் பொறுப்பை பெருமையுடன் நிர்வகிப்பவர் பாண்டியநாதன். அன்னதானத்திற்கு பணமாகவோ, அரிசியாகவோ, மளிகை பொருட்களாகவோ உதவ விரும்பும் அன்பர்கள் சுவாமிகளின் ஆஸ்ரம பொறுப்பாளராக உள்ள குருவணக்கம் காளிதாஸ் எனும் அடியாரை 93610 11741 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் எஸ்.ராமச்சந்திரபுரம் எனும் இடத்தில் சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. (பஸ் ஸ்டாப் : பட்டியக்கல் )

இங்குதான் ஸ்ரீகாளிமுத்து சுவாமிகளின் ஜீவசமாதியும் அமைந்துள்ளது. தொடர்பு முகவரி: ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமம், எஸ்.ராமச்சந்திரபுரம் & 626 126. (வழி) கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா. கஞ்சி மடத்தின் தொலைபேசி எண் :-  04563 325433.  

 இன்னொரு விஷயம் - நான் பிறந்து வளர்ந்த ஊர் , இந்த -      எஸ்.ராமச்சந்திரபுரம்  கிராமம். சொந்த ஊர் (?) சொந்தமா ஊர் இருக்கிற அளவுக்கு வசதி இல்லைங்க. சொந்த வீடு இருக்கிற ஊர் .... 



 சதுரகிரி பற்றிய நமது பழைய கட்டுரையை படிக்க இங்கே 'க்ளிக்' கவும்.
வீடியோ தொகுப்பு : http://www.livingextra.com/2011/06/blog-post_23.html


Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_12.html#ixzz1UojHk66m

No comments:

Post a Comment