Search This Blog

Saturday, August 27, 2011

ரௌத்திரம் பழகு


"அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
  தஞ்சல் அறிவார் தொழில்."
 
 அச்சப்படவேண்டிய விடயங்களுக்கு அஞ்சாதிருத்தல் அறிவற்றசெயல் எனத் திருக்குறள் வலியுறுத்தியது .
அச்சம் , மடம் , நாணம்  , பயிர்ப்பு எனப்  பெண்ணுக்கு அறிவற்றுப் பேதையாய் இருத்தலே அழகு எனச்சொல்லியே வளர்த்தது பழஞ்சமூகம் .மூதோர் சொன்னதன் பொருளறியாமல் , அதனுள் தன் அகந்தையை நுழைத்த பழம் பேய்களை  அடித்தோட்ட வந்த சவுக்காய் பாரதி சொன்னான் "அச்சம் தவிர் !! " .
அச்ச்சந்தவிர்த்தவன் என்ன செய்வான் ? 
 
சிதையா நெஞ்சுகொள்
 
செய்வது துணிந்து செய்
 
தீயோர்க் கஞ்சேல்
 
தொன்மைக் கஞ்சேல்
 
நேர்படப் பேசு
 
கொடுமையை எதிர்த்து நில்

 
சாவதற்க் கஞ்சேல்
 
நையப் புடை
 
நொந்தது சாகும்
 
பேய்களுக் கஞ்சேல்
 
போர்த்தொழில் பழகு
 
இவையெல்லாம் கைவர வேண்டுமா ...? "ரௌத்திரம் பழகு !! " என்கிறான் பாரதி .

 ரௌத்திரம் என்பது என்ன ?

 தனக்கும் ,  கண் முன்னே பிறர்க்கும் இழைக்கப்படும் கொடுமைக்கண்டும் எழாதிருப்பவன் பேடி . 
எதிர்க்கும் துணிவின்றி தன்னுள்ளே உழன்று தன்னைத்தானே அழித்துக்கொள்ளச் செய்வது ஆத்திரம் ...சினம் .
 
அநீதியைக் காணும்பால் பொங்கியெழுந்து தட்டிக் கேட்பதே  ரௌத்திரம் !!
ஆத்திரம் அறிவற்றது ,  விவேகத்துடன்கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரம் !!
 
ரௌத்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் உயிரணுவிலும் இருக்கவேண்டும். அதிலும் பெண்ணுக்கு  ரௌத்திரமேன்பதே உடுக்கை !!
 
பிறந்த நன் நாட்டையும் தாயென்பார் , தெய்வமெலாம் பெண்ணென்பார்.  பெண்ணுக்கிழைக்கும் கேடுகளோ மிகப்பல .
இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி ? ஓடி விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைக்கும் ரௌத்திரம் பயிற்றுவிக்கிறான் பாரதி !!
 
" பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் 
பயங்கொள்ள லாகாது பாப்பா ,
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர் 
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா .
 
தேம்பியழுங் குழந்தை நொண்டி ,- நீ 
திடங்கொண்டு போராடு பாப்பா . "  
 
மனிதா நீ மனிதனாய் வாழவேண்டுமா.. மனிதத்துடன் வாழவேண்டுமா..?
பாரதி வழியில் " ரௌத்திரம் பழகு "  
--
ரௌத்திரம் பழகு 
யாழினி

1 comment: