Search This Blog

Monday, August 15, 2011

அமெரிக்க நிதிச் சிக்கல் – உலகு மீண்டும் சந்திக்க இருக்கும் நிதி நெருக்கடி!



உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த அமெரிக்கா அரசுக்கு வாங்கிய கடனை திரும்பத் தரும் தகுதி குறைந்துள்ளது என்று  S &P எனும் பொருளாதார மதிப்பீட்டு அமைப்பு அறிவித்ததையடுத்து, உலகின் பங்குச் சந்தைகளில், பிரளயம் ஏற்பட்டுப் புரட்டிப் போட்டது போல் கடும் சரிவு ஏற்பட்டது.  
நிறுவனங்களில் இருந்து நாடுகள் வரை, அவற்றின் கடன் பெறும் அல்லது திருப்பிக் கட்டும் திறன் பற்றி ஒரு பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தரும் திறன் சான்று, அமெரிக்கா போன்றதொரு பொருளாதார வல்லரசைத் திணறச் செய்யுமா? என்கிற வினாவிற்கு விடை தேட வேண்டுமெனில், அதற்கு அந்நாட்டு பொருளாதார நிலையை சற்று ஆழமாகவே நோக்க வேண்டியதாகிறது.
அமெரிக்க ஐக்கிய குடியரசின் இன்றைய கடன் என்பது 14.58 டிரில்லியனாக உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கித்தான் அந்நாட்டு அரசு சில நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வந்தபோது, கடன் வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) எழுந்தது. கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்தக் கோரிக்கை நிறைவேறியது. தனது செலவீனங்களுக்காக மீண்டும் சந்தைக்குச் சென்று 2 டிரில்லியன் வரை கடன் பெறுவதற்கு அமெரிக்க அரசின் கருவூலம் கடன் பத்திரங்களை விற்க இருந்த நிலையில்தான், S&P அமெரிக்க அரசு மீதான கடன் மதிப்புத் திறனை AAA யில் இருந்து AA+ ஆக குறைத்தது. 
கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் நாடுகள், வங்கிகள், நிதியமைப்புகள் ஆகியன, தங்களுடைய நிதிக்கு ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதும் அமெரிக்க கருவூல கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால், தேவைப்படும்போது வட்டியுடன் திரும்பப் பெற முடியுமா என்ற ஐயத்தை கிளறிவிட்டதே, அமெரிக்கா இந்த அளவிற்கு பதறக் காரணமாக அமைந்தது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே, பெரும் முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. இதுவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு வித்திட்டது. 

அமெரிக்காவிற்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது? 
2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சப் பிரைம் கிரைஸிஸ் என்றழைக்கப்பட்ட குறைந்த வட்டிக் கடன்கள் திரும்பச் செலுத்தப்படாத காரணத்தினால் உருவான நிதிச் சிக்கல், அந்நாட்டின் நிதி நிறுவனங்களையும், காப்பீடு நிறுவனங்களையும் பெருமளவு பாதித்தது . பெரும் நிதி நிறுவனங்களாகத் திகழ்ந்த வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவற்றை தூக்கி நிறுத்த முற்பட்ட அமெரிக்க அரசு, அவைகளுக்கு வட்டியில்லாக் கடனாக ஒரு டிரில்லியன் டாலர்களை வழங்கியது. அதனைப் பெற்றுக் கொண்ட நிதி நிறுவனங்களும், வங்கிகளும் தங்களின் கட்ட வேண்டிய கடன் பத்திரங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டன. அந்த கடன் பத்திரங்களை அமெரிக்க கருவூலமே வாங்கியது. எவ்வளவிற்குத் தெரியுமா? 1.75 டிரில்லயன் டாலர்களுக்கு! ஆக, ஒட்டுமொத்தமாக 2.75 டிரில்லியன் டாலர் வட்டியில்லாக் கடனாகவும், நட்டத்தில் போன சொத்துக்களையும் அமெரிக்க கருவூலம் முதலீடு செய்து வாங்கியது. இதனைத்தான் ஊக்க நிதியுதவி என்று கூறப்பட்டது (To stimulate the economy).
வட்டியில்லாமல் கொடுத்த கடனைப் பெற்றுக்கொண்ட  வங்கிகளும், நிதி நிறுவனங்களும், காப்பீடு நிறுவனங்களும், அந்தக் கடனைக் கொண்டு, தாங்கள் கட்டித் தீர்க்க வேண்டிய கடனை கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை அமெரிக்க அரசின் கருவூல கடன் பத்திரங்களிலேயே முதலீடு செய்தன! 
அதாவது, அமெரிக்க அரசு தங்களுக்கு அளித்த வட்டியில்லாக் கடனை பெற்று, தங்கள் கடன் சுமையைக் குறைத்துக்கொண்ட அந்த நிறுவனங்கள், மீதமிருந்த தொகையை அமெரிக்க அரசும் கருவூல கடன் பத்திரங்களிலேயே 2 முதல் 3 % வட்டிக்கு முதலீடு செய்தன. இதனை அமெரிக்க அரசால் தடுக்க முடியவில்லை. காரணம் அங்குள்ள சட்டங்கள் அப்படி! கடனைக் கொடுத்தாய், அதற்காக கேள்வி கேட்காதே, நாங்கள் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்வேன் என்றன. 
கடன் பத்திரங்களில் செய்ய முதலீட்டை திரும்பப் பெறுங்கள் என்றது, அதற்கு ஒரு கட்டணத்தை அமெரிக்க கருவூலம் வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து, பத்திரங்களை மீண்டும் அரசுக்கே விற்றன! இதனால் ஒரு பக்கம் வட்டி வருவாய், மறுபக்கம் தனியாக கட்டணம் வேறு என்று வசூலித்தன. 
நிதி நிறுவனங்கள் தங்களு்டைய நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுக்கு அளித்துவரும் மாத ஊதியத்தை குறைக்க வேண்டும் என்று மக்களிடையே கூக்குரல் எழுந்தது. ஆனால் ‘நீ அளித்த கடனை திருப்பி செலுத்தி விட்டேன். என்னை நீ கேள்வி கேட்காதே என்றன வங்கிகள். 
அதுமட்டுமல்ல, அமெரிக்க கருவூலத்தில் முதலீடு செய்ததனால் கிடைத்த வருவாயைக் கொண்டு பொதுமக்களுக்கு – தொழில் உள்ளிட்ட முதலீடுகளுக்கு – கடன் தரவீர்கள் அல்லவா என்று அமெரிக்க அரசு கேட்டதற்கு, அதிக வருவாயைத் தரும் பங்குகளில்தான் முதலீடு செய்வோம் என்றன நிதி நிறுவனங்கள்! இங்கும் தடையாக நின்றது அமெரிக்க அரசு நிறைவேற்றி கடைபிடித்து வரும் சட்ட முறைகள்தான். கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தில் எந்த நிறுவனத்தின் செயல்முறையையும் அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பது விதி. எனவே எங்கள் மீது எந்த விதிமுறையும் திணிக்காதே என்றன நிதி நிறுவனங்கள்.
ஆக, வீட்டுக் கடன் சிக்கலால் திவாலான வங்கிகளையும், நிறுவனங்களையும் அமெரிக்க அரசு காப்பாற்றிவிட்டது. ஆனால், அவைகள் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றுமாறு செய்ய முடியவில்லை. அமெரிக்க அரசு செய்த ஊக்க நிதியுதவியால் அதற்கு 2.75 டிரில்லியன் கடன் சுமை ஏற்பட்டது. ஆனால் திவாலான வங்கிகள் முன்னெப்போதும் காணாத இலாபத்தை பெற்றன. இலாபத்தை அவைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததால் பங்குச் சந்தைக் குறியீடுகள் செயற்கையாக உயர்த்தப்பட்டன. கடன் மீதான வட்டி விகிதம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்தது. 
ஆனால், அமெரிக்க அரசு செய்த ஊக்க நிதியுதவியால் அந்நாட்டுப் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இதனால் அரசு செலவீனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதற்கான நிதித் தேவைக்கு அந்த சந்தையில் கடன் பத்திரங்களை விற்று நிதி ஆதாரத்தை தொடர்ந்து திரட்டி வந்தது. இந்த நிலையில்தான் இதற்கு மேலும் கடன் பட முடியாது, வாங்கினால் திருப்பிக் கட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதுவே இன்றைய நிதிச் சிக்கலிற்கு அடிப்படையானது.
இதே நிலை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் நிலவுகிறது. கிரீஸ் கடன் சுமையால் நொருங்கிப் போயுள்ளது. அதன் தாக்கம் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த வரி விதித்தல் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. அதனால்தான், அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் பெரும் பணக்காரர்களின் வருவாய் மீதான வரியை அதிகரிக்கப் போவதாகவும், அதே நேரத்தில் அரசின் திட்டச் செலவுகளை குறைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா கடைபிடித்து வரும் திறந்த நிலை, சந்தைச் சார்பு பொருளாதாரத்தால் அந்நாட்டில் வருவாய் பகிர்வு எப்படியுள்ளது என்பது குறித்த விவரம் தலையை சுற்ற வைக்கிறது. 2008ஆம் ஆண்டு திரட்டப்பட்ட அந்த புள்ளி விவரப்படி, அந்நாட்டின் மக்கள் தொகையில் உயர் மட்டத்திலுள்ள 1 விழுக்காடு மக்களின் தனி நபர் ஆண்டு வருவாய் சராசரியாக 11 இலட்சம் டாலர்களாக உள்ளது. அடுத்த 9 விழுக்காடு மக்களின் தனி நபர் வருவாய் 1,64,000 டாலர்களாக உள்ளது. மீதமுள்ள 90 விழுக்காட்டு மக்களின் சராசரி தனி நபர் வருவாய் 31 ஆயிரம் டாலர்கள் மட்டுமே. அதிலும் 10 விழுக்காட்டினரை பிழந்தெடுத்துவிட்டு, மீதமுள்ள அடித்தட்டு மக்களின் தனி நபர் ஆண்டு வருவாயைப் பார்த்தால் 19,000 டாலர்கள் மட்டுமே. அமெரிக்க ஐக்கிய குடியரசின் வறுமைக் கோடு என்பது ஆண்டிற்கு 18,000 டாலர்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்களில் 80 விழுக்காட்டினர், வறுமைக் கோட்டிற்கு சற்றே மேலாக உள்ளனர். 
மக்கள் தொகையில் கீழ் மட்டத்திலுள்ள 80 விழுக்காட்டினரின் வருவாய் 1950இல் இருந்து 1980 வரை 75 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆனால் 1980 முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான 28 ஆண்டுகளில் அவர்களின் தனி நபர் சராசரி வருவாய் 1 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆனால் இதே காலகட்டத்தில் அந்நாட்டு மக்கள் தொகையில் உயர் வருவாய் பெறுவோர் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.001 விழுக்காட்டினரின் வருவாய் 1950இல் இருந்து 80 வரை 80 விழுக்காடு உயர்ந்துள்ளது, 1980 முதல் 2008 வரையிலான கால கட்டத்தில் அவர்களின் வருவாய் 403 விழுக்காடு உயர்ந்துள்ளது! 
இதே காலகட்டத்தில், பெரும் நிறுவனங்கள் செலுத்திய வரி 1950இல் மொத்த வரி வருவாயில் 25% ஆக இருந்தது. 2008இல் அது மொத்த வரி வருவாயில் விழுக்காடாக குறைந்துள்ளது. இதே காலத்தில் ஊதியம் பெறும் பணியாளர்களின் வருவான வரி பிடித்தம் மொத்த வரி வருவாயில் 9 விழுக்காடு இருந்தது, 43 விழுக்காடாக உயர்ந்துள்ளது! அமெரிக்க அதிபர்களாக வந்த ஒவ்வொருவரும் பெரு நிறுவனங்களின் வருமான வரி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்துள்ளனர்! 
அந்நாட்டின் தொழில் உற்பத்தி துறை 58% வேலை வாய்ப்பைத் தந்துள்ளது, அது தற்போது 18% ஆக குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பெரும்பான்மை குடிமக்களின் வீட்டு வருவாய் (House hold income) பெருமளவிற்கு குறைந்துள்ளது. இது அவர்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய சந்தையை எதிர்பார்த்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் செழித்த ஏற்றுமதிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன. 
இதனால்தான், அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரங்கள் பின்னடைவைச் சந்திக்கும்போது அது இந்தியா உள்ளிட்ட மூன்றாவது உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. எனவேதான் பங்குச் சந்தைகளில் நேற்று அப்படியொரு வீழ்ச்சி ஏற்பட்டது. 
இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது, 1. நாட்டு மக்களிடையே நிலவும் கடுமையான வருவாய் ஏற்றத் தாழ்வு, 2. வேலை வாய்ப்பை உருவாக்கும் உற்பத்தித் துறையில் முதலீடு குறைவதும், அதிக வருவாய் தரும் நிச்சயமற்ற பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளும், வரி விதிப்பில் உள்ள முரண்களும் 3. சுதந்திரமான சந்தை பொருளாதாரப் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்காது என்பதுதான் என்கின்றனர்.
அந்நிய நிறுவன முதலீடுகள், அந்நிய நேரடி முதலீடுகள் ஆகியவற்றை மட்டுமே நம்பி பொருளாதார ‘வளர்ச்சி’யை உறுதி செய்ய முற்பட்டால் அது இந்த நாட்டை தாங்க முடியாத வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்.

No comments:

Post a Comment