Search This Blog

Monday, July 4, 2011

பதினெண்கீழ்க்கணக்கு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது திருக்குறள். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதாநுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்ற வேறு பெயர்களும் உண்டு. இதே போல திருக்குறளுக்கும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை திருவள்ளுவம், பொய்யாமொழி, முப்பால், தெய்வநூல், உத்தரவேதம், வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன் என்பன.
"குறள்' என்னும் சொல்லுக்கு "குறுகியது' என்று பொருள். இதனால் தான் வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாளை "குறளப்பன்' என்று சொல்வர். குறளப்பன் என்ற பெயருடைய பெருமாளின் சன்னதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது. கேரளாவில் திருக்குறளப்பன் கோயில் இருக்கிறது. ஒன்றே முக்கால் அடியில் உலகக் கருத்துகளை உள்ளடக்கிய அருமையான நூல் இது.
திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பாலாகவும், எட்டு இயல்களாகவும் பிரித்துள்ளனர். அறத்துப்பாலில் இல்லறவியல் (குடும்பவாழ்வு), துறவறவியல், ஊழியல்(விதி) பற்றியும், பொருட்பாலில் அரசு இயல் (ஆட்சி சார்ந்தது), அங்கவியல்(அரசாங்கத்திலுள்ள வரி, படை, பாதுகாப்பு குறித்த அம்சங்கள்), ஒழிபு இயல்( இவை தவிர மற்றவை) பற்றியும், இன்பத்துப்பாலில் களவியல் (காதல்), கற்பியல் ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70
அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன.
திருக்குறள் பாயிரத்தில் (முன்னுரை) நான்கு அதிகாரங்கள் உள்ளன. அதாவது கடவுள், மழை, துறவிகள், தர்மம் ஆகியவற்றை வாழ்த்திப் பாடிவிட்டு நூலுக்குள் நுழைகிறார் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற முதல் நான்கு அதிகாரங்களும் முன்னுரையாக உள்ளன. இந்நூலில் ஒரு சிறப்பு என்னவென்றால், "குறிப்பறிதல்' என்னும் அதிகாரம் இரண்டு முறை வருகிறது. பொருட்பால் 71வது அதிகாரமும், இன்பத்துப்பால் 110வது அதிகாரமும் இந்தப் பெயரைக் கொண்டவை. பொருட்பால் குறிப் பறிதலில், மன்னனின் குறிப்பறிந்து அமைச்சர்கள் செயல்படுவது பற்றியும், இன்பத்துப் பால் குறிப்பறிதலில், காதலி தன் மேல் காதல் கொண்டிருக்கிறாளா என்று குறிப்பறிவது பற்றியும் வள்ளுவர் அருமையாக எழுதியுள்ளார். இந்தநூலுக்கு பழங்காலத்திலேயே பத்து பேர் உரை எழுதியுள்ளனர். திருக்குறள் 1730ம் ஆண்டில் லத்தீன் மொழியில் முதன் முதலாக மொழி பெயர்க்கப் பட்டது. இத்தாலி நாட்டில் இருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் இந்த அரும்பணியைச் செய்தார். இதன்பிறகு பலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். இவர்களில் கிண்டர்ஸ்லே (1784), எப்.டபிள்யு. எல்லிஸ்(1812), ஜி.யு.போப்(1886), வ.வே.சு. அய்யர் (1916), கோ.வடிவேலு (1919), எம்.எஸ்.பூரணலிங்கம்( 1927), ராஜாஜி (1937), கஸ்தூரி ஸ்ரீனிவாசன்(1969) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிரெஞ்சு, ரஷ்யன், மலாய், பர்மீஷ், பிஜி, சைனீஷ், ஸ்பானிஷ், சிங்களம், சமஸ்கிருதம், ஜெர்மன், இந்தி, மராத்தி, குஜராத்தி, உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மொழியில் காமரர் என்பவர் 1980 லும், பிரெஞ்சு மொழியில் 1848, 1853ம் ஆண்டுகளிலும் ஏரியல், டெடுமாஸ்ட் என்ற அறிஞர்கள் மொழி பெயர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment