Search This Blog

Sunday, July 10, 2011

ஜோதிடகலை (பகுதி-4) - பஞ்சாங்க நுணுக்கங்கள்



பஞ்சாங்க நுணுக்கங்கள்- வருடங்களும் மாதங்களும்

கடந்த அத்தியாயத்தில் ஜோதிட கலைக்கு அடிப்படையான பஞ்சாகத்திற்கே அடிப்படையாக உள்ள வருடம், மாதம் இவைகளைப் பற்றி கவனித்தோம். சூரியனின் இயக்கத்தை அடிப்படை யாகக் கொண்டது ‘சௌரமானம் எனவும், சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சந்திரமானம் எனவும், மாநிலத்திற்கு மாநிலம், மதத்திருக்கு மதம் வருட, மாத ஆரம்பம் வித்தியாசப்படுகின்றன எனவும், தமிழர்களின் வருட, மாதங்களையும், கேரளா கொல்லம் ஆண்டு மற்றும் மாதங்களையும் கண்டோம். இனி...

தெலுங்கு வருடம்:

பங்குனி மாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு மறுநாள் இந்த வருடம் ஆரம்பிக்கின்றது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இந்த வருடம் அனுஷ்டிக்கப் படுகிறது.

1)சைததிரம், 2)வைசாகம், 3)ஜேஷ்டம், 4)ஆஷடம்,5)சிராவணம், 6)பாத்ரபதம், 7)ஆஸ்வீஜம்,8)கார்த்தீகம், 9)மார்க்கசிரம், 10)புஷ்யம், 11)மாகம்,12)பால்குனம் என இதற்கு பண்ணிரெண்டு மாதங்கள் உண்டு. சுக்லபட்ச பிரதமை முதல் அமாவாசை வரை ஒரு மாதமாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. எந்தெந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகின்றதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அந்தந்த மாதத்திற்கு சூட்டப் பட்டுள்ளது. உதாரணமாக சைத்ர மாதத்தில் அந்த சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி நிகழ்வதால் ‘சைத்ர என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்ற மாதங்களுக்கு கீழே நட்சத்திரத்தின் பெயர்கள் வடமொழியில் கொடுக்கப் பட்டுள்ளது.  

பௌர்ணமி நிகழும் நட்சத்திரமும் மாதத்தின் பெயரும்:
1)சித்திரா(சித்திரை)...சைத்ரம், 2)விசாகா(விசாகம்)...வைசாகம்,3)ஜேஷ்டா(கேட்டை)..ஜேஷ்ட, 4)பூர்வாஷாடா(பூராடம்)...ஆஷாடம்,5)சிரவனா(திருவோணம்)..சிராவணம், 6)பூர்வபத்ரபத (பூரட்டாதி)...பாத்ரபதம்,7)அஸ்வனி(அசுபதி)...ஆஸ்வீஜம்,8)கிருத்திகா(கார்த்திகை)..கார்த்தீகம்,9)மிருகசிரா(மிருகசீரிஷம்)..மார்க்கசிரம், 10)புஷ்யா(பூசம்)...புஷ்யம்,11)மகா(மகம்)..மாகம், 12)உத்திர பல்குணி(உத்திரம்)..பால்குணம்.  

சக வருடம்:
இந்த சக வருடம் மற்றும் சாலிவாகன வருடம் என்று இந்திய அரசாங்கத்தால் கடைப் பிடிக்கப் படுகிற வருடமாகும். சாலிவாகனன் ஈஸ்வரனின் அருளைப் பெற்ற நாகராஜன் என்னும் மன்னனின் புத்திரன் ஆவான். இவன் விக்கரமார்க்கன் என்னும் மன்னனுடன் போர் செய்து வென்ற நாள் முதல் இது சக வருடம் என்று அவன் பெயரால் வாழங்கப் படுகிறது.
இந்த சக வருடம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22–ஆம் தேதி ஆரம்பமாகும். லீப் வருடத்தில் 21-ஆம் தேதி ஆரம்பமாகும். அந்த மாதங்களுக்குரிய நாட்களும் மாதங்களின் முதல் தேதிக்குச் சரியான ஆங்கிலத் தேதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சக ஆண்டின் மாதங்கள்     மாதங்களுக்குரிய     மாதம் ஆரம்பமாகும் ஆங்கிலதேதி
                                நாட்கள்.
சைத்ரம் (சாதா ஆண்டு).......................30 ..............................மார்ச் …….....22(சாதா ஆண்டு)
சைத்ரம்(லீப் ஆண்டு)............................31 ...............................மார்ச் …….....21(லீப் ஆண்டு)
வைசாகம்.............................................31.................................ஏப்ரல .....….....21
ஜெஷ்டம்..............................................31....................................மே   ...........22
ஆஷாடம்..............................................31..................................ஜூன் ...........22
சராவணம்.............................................31...................................ஜூலை.........23
பாத்ரம்..................................................31...................................ஆகஸ்ட்........23
ஆஸ்வினம்...........................................30௦.................................செப்டம்பர்....23
கார்த்திகம்.............................................30௦.................................அக்டோபர்....23
அக்ரஹாயானம்.....................................30௦.................................நவம்பர்........22
பௌஷம்................................................30.................................டிசம்பர்.........22
மாகம்.....................................................30௦.................................ஜனவரி.........21
பால்குணம்..............................................30௦.................................பிப்ரவரி.......20  
மேற்கண்ட மாத நாட்களும் இந்த மாதங்கள் ஆரம்பமாகும் ஆங்கில தேதிகளும் நிலையானவை.

பசலி ஆண்டு (பஸலி):-
இந்த ஆண்டு வட இந்தியாவில் அனுசரிக்கப் படுகிறது. மொகலாய மன்னர் அக்பர் ஆட்சிக் காலத்தில் அரசாங்க வரவு செலவு கணக்குக்களை எழுதி வைப்பதற்காக இந்த பசலி ஆண்டு முறை உருவானது. பல மன்னர் ஆட்ச்சிக்குப் பின்னர் வந்த ஆங்கிலேயரும் பின்பற்றி வந்தனர். இந்த ஆண்டானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதியன்று ஆரம்பமாகும்.

கார்திக சுக்லாதி ஆண்டு:-   
இந்த ஆண்டு குஜராத்திலும் ராஜஸ்தான் சில பகுதிகளிலும் அனுஷ்டிக்கப் படுகிறது. வட இந்தியாவில் ஐப்பசி மாத அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப் படுகிறது. ஆனால் தமிழகத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசி திதியில்தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. குஜராத்தில் அமாவாசை அன்றுதான் கொண்டாடப் படுகிறது. ஆகவே அங்கு தீபாவளிக்கு மறுநாள் வருட ஆரம்பமாக கணக்கிடப் படுகிறது.

கலியாப்தம்:-
இந்த ஆண்டு சித்திரை மாதம் முதல் ஆரம்பமாகும். கலியுகம் தோன்றிய நாள் முதல் இது கணக்கிடப் பட்டு வருகிறது. நம் மக்கள் அனுஷ்டித்து வரும் வருட முறைகளில் இது மிகவும் தொன்மையானது. கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு வகைப்படும். மகாபாரதப் போர் முடிந்தபின்னர் ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகையில் முப்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின் தனது அவதார நோக்கம் நிறைவேறியதையும், தனது மண்ணுலக வாழ்கை முடிவுக்கு வந்து விட்டதை உணர்ந்து, தனது யாதவ வம்சத்தை அழித்து விட்டு, கானகம் புகுந்து, வேடன் ஒருவனின் அம்பினால் பாதத்தில் அடிபட்டு உயிர் நீத்தார். ஸ்ரீ கிருஷ்ணர் எந்த தினத்தில் பூவுலகம் விட்டு தன் நிலையை அடைந்தாரோ அன்றைய தினமே கருத்த மேனியை உடைய கலியுகபுருஷன் இந்த பூமியில் பிரவேசித்தான். அந்த தினம் முதல் இந்த கலியாப்தம் கணக்கிடப் படுகிறது.    

ஹிஜ்ரி ஆண்டு:
இந்த ஆண்டு இஸ்லாமியர்களின் ஆண்டாகும். முகம்மது நபி மெக்காவிலிருந்து மெதினாவுக்கு ஓடிய நாள் முதல் இந்த ஆண்டு கணக்கிடப் படுகிறது. அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் முதல் இந்த வருடம் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்தரை நாட்களுக்கு முன்னதாகவே இவர்களுடைய வருடம் ஆரம்பமாகிவிடும் வளர்பிறை திருதியை திதி முதல் மாத ஆரம்பமாகும். ஹிஜ்ரி வருட பிறப்பை இவர்கள் மொஹரம் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். வருடம் ஒன்றுக்கு 354 மற்றும் முக்கால் நாட்களாகும். ஹிஜ்ரி வருடத்தில் வரக்கூடிய பண்ணிரெண்டு மாதங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
1)மொகரம், 2)ஸபர், 3)ரபியுலவல், 4)ரபியூசானி, 5)ஜமாதிலவல்,6)ஜமாதிஸானி, 7)ரஜப், 8)ஷாபான், 9)ரம்ஜான், 10)ஷவ்வால், 11)ஜில்காத்,12)ஜில்ஹேத் ஆகிய பன்னிரண்டு மாதங்களாகும்.  

இதுவரை கூறப்பட்டுள்ள வருடம், மாதங்களைத் தவிர மேலும் சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
1)மஹாவீரர் (ஜைனர்)ஆண்டு, 2)போஜராஜாப்தம், 3)விக்கிரம சகாப்தம்,4)புத்த சகாப்தம், 5)பாண்டவாப்தம், 6)ராம தேவாப்தம், 7)பிரதாபருத்ராப்தம்,8)கிருஷ்ணராயாப்தம், 9)வங்காள ஸன்வருஷம், 10)புத்த நிர்வாண வருஷம், 11)பார்ஹஸ் பத்ய வருஷம்(60-வருட சக்ரம்)(வடஇந்திய அனுஷ்டானம்), 12)சௌராவிஜயாப்தம், 13)ஆங்கிலம்(கிறிஸ்து),14)திருவள்ளுவர் ஆண்டு, 15)சேக்கிழார் ஆண்டு ஆகியவைகள்.

இதுவரை வருடம், மாதங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி சூரிய சஞ்சாரம் பற்றி, சூரியனின் நடை அல்லது ஓட்டம அல்லது அசைவு எனப்படும் உத்தராயணம், மற்றும் தட்சிணாயணம் இவற்றைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம். இவைகள் அனைத்தும் நாம் காணப போகும் ஜோதிடத்திற்கு அடிப்படைகளாகும் .....மேலும் பயணிப்போம், வாருங்கள்.

No comments:

Post a Comment