Search This Blog

Monday, June 27, 2011

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்


இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தோமா (Thomas) கி.பி 52ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் கொடுங்கநல்லூர் என்னும் ஊருக்கு அருகில் இருந்த, மிகவும் பழமை வாய்ந்ததும், கி.பி 1341இல் அழிந்து போனதுமான ‘முகரிஸ்’ என்னும் துறைமுகத்தை வந்தடைந்து, இந்தியாவில் கிறிஸ்தவ மதத்திற்கான முதல் விதையை ஊன்றினார். பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் முக்கியமாக போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், டென்மார்க்கர்கள்;, ஆர்மினியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றோர் வியாபாரத்தின் நிமித்தமாக இந்தியாவில் காலடி வைத்தனர். இவர்களில் போர்ச்சுக்கீசியர் கத்தோலிக்க திருச்சபையை இந்தியாவில் அதிகமாக நிறுவினர்.
புராட்டஸ்டண்ட் திருச்சபைகள் ஐரோப்பாவில் மட்டுமே பரவியிருந்த காலம் அது. அதனை இந்தியாவுக்கு முதலில் கொண்டு வந்தவர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பர்த்தலோமேயு சீகன்பால்க்கும் (Bartholomaus Ziegenbalg) ஹென்ரிச் புளுட்ச்சோவும் (Henrich Pluetchau) ஆவர். அவர்களைத் தொடர்ந்து பெங்சமின் சூல்ச் (Benjamin Schultze), ஜோகான் பிலிப் பப்ரிஷியஸ் (Johazz flillbzP Fabrbcius), சார்ல்ஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் (Clarles Tleoplilus Ewald Rlezius) போன்ற ஜெர்மன் மிஷனரிகள் தங்களின் சுவிசேஷப் பணியோடு, சமுதாயப்பணி, கல்விப்பணி, வேதாகமத்தைத் தழிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியையும் செய்தனர். இதே கால கட்டத்தில் ஆங்கிலேய மிஷனரிகளும் இறைப்பணியோடு சமுதாய, கல்வி, மருத்துவப் பணிகளையும் திறம்படச் செய்தனர்.
சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் (Clarles Tleoplilus Ewald Rlezius) ஐயர் 1790, நவம்பர் 5ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் (Graudens) என்னுமிடத்தில் பிறந்தார். ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் (Otto Gottlebb Nikolaus Rlezius) இறந்து போனார். தாயார் பெயர் காத்தரின் டாரதி (Cathar,na Dorothea). ரேனியசோடு பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், இரு சகோதரர்களுமாவர். ரேனியஸ் 14 வயது வரை மரியன் வெர்டர் நகரிலிருந்த கதீட்ரல் பள்ளியில் கல்வி கற்றார். பின்பு 3 வருடங்கள் ‘பாஸ்கா’ என்ற ஊரிலிருந்த மாமாவிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 1807ஆம் ஆண்டு, ரேனியஸ் தன்னுடைய வயது முதிர்ந்த பெரியப்பாவும், பெரிய பண்ணையாருமான வில். ஹெல்ம் ஏ. ரேனியஸின் அன்பின் அழைப்பை ஏற்று, பாக்மனுக்குச் சென்று அவருடைய நிலபுலன்களைக் கவனித்து வந்தார். அங்கு இருக்கும் போது அவர் மிஷனரி ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள பெர்லின் (Berlin) சென்று, அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று, 1812-ல் குரு பட்டம் பெற்றார்.
இவர் ‘சீர்திருத்தத் திருச்சபை’யைச் (Reformed Church)  சேர்ந்தவர். 1814ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் தேதி, ‘சர்ச் மிஷன் சங்கம்’ (C M S) சார்பில் இந்தியாவுக்கு ஊழியராய் வந்தார். தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னைக்குச் சென்றார். அங்கு அனி வேன் சாமரன் (Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தார். தமிழும், தெலுங்கும் கற்றார். ஜெர்மானிய மிஷனரிகள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ரேனியசால் அது இயலவில்லை. எனவே அவரை சென்னையிலிருந்து அனுப்பிவிடத் தீர்மானம் எடுக்கப்பட்டு, திருநெல்வேலிக்கு அவரை மாற்றினார்கள். அதன்படி ரேனியஸ் 1820, ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலிக்கு வந்து, அங்கு 18 வருடங்கள் தொண்டாற்றினார்.
பப்ரிஷியஸ் ஐயருடைய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சடிக்கப்பட்டாலும், போதிய அளவில் பிரதிகள் சபை மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிகமான பிரதிகள் தேவையென உணர்ந்த வேதாகம சங்கம் பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்பையே திருத்திப் பிரசுரிக்க எண்ணங் கொண்டு, சமீபத்தில் இந்தியா வந்திருக்கும் ரேனியஸ் ஐயரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்தது. ராட்லர் ஐயரும் (J.P. Rottler) வேதாகமம் எல்லோருக்கும் நன்கு புரியும்படியாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கருதி, அந்தப் பணியை ரேனியஸ் ஐயரை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். பப்ரிஷியஸ் மொழிபெயர்ப்பில் அதிகப் பிழைகள் இருந்தன என்பதும் உண்மையே.
தமிழ் மொழியை நன்கு கற்றறிவதற்காக, சென்னையில் இருக்கும் போது, முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தார். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாகப் பேசும் வரம் உடையவராதலால், தமிழையும் திறமையாகப் பேசக்கூடியவரானார். இவருடைய சொற்பொழிவுகளை இந்துக்களும் இரசித்துக் கேட்பார்களாம். பல தமிழ் உரைநடை நூல்களை எழுதினார். 1832இல் ‘பூமி சாஸ்திர நூல்’ ஒன்றை எழுதினார்.  பின்னர் ‘பலவகைத் திருட்டாட்டம்’, ‘தமிழ் இலக்கணம்’, ‘வேத உதாரணத் திரட்டு’, ‘உருவக வணக்கம்’, ‘மனுக்குல வரலாற்றுச் சுருக்கம்’, ‘சமய சாரம்’, ‘புராட்டாஸ்ட்ண்ட் - கத்தோலிக்கன் உரையாடல்’, ‘சுவிசேஷ சமரசம்’, ‘கிறிஸ்து மார்க்க நிச்சயத்துவம்’, ‘தெய்வீக சாராம்சம்’ ஆகியவைகளையும் எழுதினார். பாட நூல்களான, பூகோளம், சரித்திரம், இயற்கை, வான சாஸ்திரம், மனுக்குல வரலாறு, சூரிய மண்டலம், பிரெஞ்சு இலக்கணம், கால நூல், தர்க்கம் முதலான பள்ளிக்கூட நூல்களையும் அவர் தயாரித்தார்.
ரேனியஸ் ஐயரின் தமிழைப் பற்றி சேதுப்பிள்ளை, ‘உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் அவரிடம் அமைந்திருந்தது. அவர் தம் நூல்களில் அழகுண்டு, இனிமையுண்டு, நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் வனப்பும் உண்டு“ என்று கூறியுள்ளார். தமிழ் மொழிக்குச் சிறப்பாய்த் தொண்டாற்றிய வீரமாமுனிவர், போப் ஐயர், கால்டுவெல் ஐயர் போன்றவர்களுக்கு இணையாக ரேனியஸ் ஐயரும் கருதப்படுகிறார்.
கதீட்ரல் ஆலயம்
கிறிஸ்தவ ஊழியத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இவரை ‘திருநெல்வேலி அப்போஸ்தலர்’ (The Apostle of Tirunelveli) என்று அழைப்பர். திருநெல்வேலியில் இன்று வரை சிறந்து விளங்கும் 371 சபைகளை இவர் நிறுவினார். ரேனியஸ் ஐயர், பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், கதீட்ரல் ஆலயம் (Cathedral Church) இருக்கும் இடத்தில் முதன் முதலில் ஒரு சிறு ஆலயத்தை 1826, ஜனவரி மாதம் கட்டத் தொடங்கி, ஜூன் மாதம் மூன்றாம் நாள் கட்டி முடித்தார். ஆலயம் ஜூன் 26ஆம் நாள் பொது மக்கள் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது. அதுவே இன்றைய தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) ஆகும். மேலும் அதன் அருகே பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தையும், உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு பயிற்சிக்கூடத்தையும் நிறுவினார். ரேனியஸ் அன்று தொடங்கிய முதல் பெண்கள் பள்ளி தான் இன்று ‘மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளி’ யாக உயர்ந்து இருக்கிறது. அதுபோல் அன்று அவர் தொடங்கிய பயிற்சி செமினரி தான் இன்று ‘பிஷப் சார்ஜென்ட் போதனாப் பள்ளி’ யாக வளர்ந்துள்ளது. ‘1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்’ என மறைதிரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் எழுதுகின்றார். ‘வெகுசன கிறிஸ்து இயக்கம்’, ‘அனைத்து மக்கள் கல்வி’, ‘சமுதாய நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் இவையாவும் இவருடைய தெளிந்த கோட்பாடுகளினாலும், அர்ப்பண உழைப்பாலும் தமிழ் நாட்டில் புதிய பரிமாணங்கள் பெற்று வளரலாயின.
‘சமூக அநீதிகளால் விளைந்த துயரங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வேகமாகக் கிறிஸ்தவம் தழுவியதாக ரேனியஸ் கருதினார்’, என பால் அப்பாசாமி தன்னுடைய திருநெல்வேலி திருச்சபை வரலாற்றில் குறிப்பிடுகிறார். உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல கிறிஸ்தவ கிராமங்கள் ரேனியஸ் காலத்தில் தோன்றின. அவ்வாறு தோன்றிய ஊர்கள் தான், நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்ற சமத்துவ சமாதானக் குடியிருப்புகளாகும். ஜெர்மனியிலிருந்து ‘டோனா பிரபுவின் நிதியுதவியோடு புலியூர்க்குறிச்சி கிராமத்தை 1827-ல் ரேனியஸ் விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவர்களைக் குடியேற்றியதால், அந்த ஊர் ‘டோனாவூர்’ என்று பெயர் பெற்றது.
திருநெல்வேலிக்குத் தஞ்சாவூரிலிருந்து வந்த முதல் பாதிரியார் (1786–1805) வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திருநெல்வேலி சபையிலும் சாதிமதப் பழக்கங்களை அனுமதித்திருந்தார். ஆனால் ரேனியஸ் அவ்வாறு அனுமதிக்கவில்லை. பள்ளியிலும், ஆலயங்களிலும் மாணவர் தங்கும் விடுதிகளிலும்கூட சகல மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதும் இவரது கொள்கையாயிருந்தது. அதனால் தேவைப்பட்ட பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். அநேக பாடசாலைகளைத் தோற்றுவித்தார். ஆண்களைப் போல் பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெண்கள் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்.
ரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818-ல், ‘துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்’ (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னாளில் இது ‘கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன்’ (Christian Literary Society) இணைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலியிலும் ‘துண்டுப் பிரசுர சங்கத்தை’ நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட தாளில், துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தனர். இதனால் கிறிஸ்தவ சமய அறிவும், சாதாரண மக்களின் எழுத்தறிவும் வளரலாயிற்று.
‘தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்’ என்பதற்கேற்ப, ரேனியஸ் மேலும் பல சங்கங்களை ஏற்படுத்தினார். ‘தரும சங்கம்’ என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள், கோவில்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தார். ‘விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்’ நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்துவர ஏற்பாடு செய்தார்.
கிறிஸ்தவர்களாய் மதம் மாறிய சில இந்து குடும்பத்தார், தங்கள் பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடைவிழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக ரேனியஸ் ஐயர், பாளையங்கோட்டையில், 09-07-1834, புதன்கிழமை, மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். அது இன்றளவும் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப்பண்டிகையாக வருடந்தோறும், அதேநாளில் (09–18-1834), அதேபெயரில், பாளையங்கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. அதுபோல ஆலய வளர்ச்சிக்காகச் சபை மக்கள் ‘ஒருநாள் வருமானக் காணிக்கைப் படைத்தல்’, ‘ஆலய பரிபாலன நிதித் திட்டம்’ (Local Church Fund), ‘கைப்பிடி அரிசி காணிக்கை’ போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார். அவைகள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் தொடங்கிய வேதாகம மொழிபெயர்ப்பு வேலை திருநெல்வேலியிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்கென ஒரு செயற்குழு நியமனமாகியிருந்த போதிலும், குழுவின் பிரதம மொழிபெயர்ப்பாளரான ரேனியஸ் ஐயரே முழு வேலையையும் செய்து வந்தார். அவர் புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் தொடங்கி தானியேல் வரையும் முடித்தார். மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களை மொழிபெயர்க்க முடியாமற் போனது ஒரு மாபெரும் இழப்பாகும். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ரேனியஸ் மொழிநடை யாவராலும் போற்றப்பட்டாலும், மொழிபெயர்ப்பில் இவர் பப்ரிஷியஸ் ஐயரைப் போல் மூலத்தை நுணுக்கமாய்த் தழுவாததுதான் ஒரு பிழையாகக் கருதப்பட்டது.
சின்னக் கோயில்
இங்கிலாந்து திருச்சபையில், தான் குறைபாடுகளாகக் கருதியவற்றை ரேனியஸ் அழுத்தந்திருத்தமாக ஒரு நூலின் மதிப்புரைக்காக எழுதியதை அந்நூல் ஆசிரியர் பிரசுரிக்கவில்லை. ஆகையால் அதை ரேனியஸ் தாமாகவே பிரசுரித்து விட்டார். அதனால் ‘சர்ச் மிஷன் சங்கம்’ (Church Mission Society) ரேனியஸின் பணி நீக்கும் உத்தரவை, 1835-ல் டக்கர் ஐயருக்கு அனுப்பி, ரேனியஸ் ஐயருடன் உறவை முறித்துக் கொண்டது. அதனால் அவரும், அவரைச் சார்ந்தவர்களும் ஆர்க்காட்டுக்குச் சென்று அங்கே ஒரு புதிய மிஷனை நிறுவி ஊழியம் செய்து வந்தனர். ஆனால் திருநெல்வேலியிலிருந்த உபதேசியரும், மக்களும் அவரை வேண்டிக் கொண்டதன்படி, அவர்கள் திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறைக்கு மீண்டும் வந்தனர். அங்கு புகழ் பெற்ற ‘யாத்ரிகர் சங்கம்’ என்ற சுவிசேஷ சங்கத்தை நிறுவி, சுவிசேஷத்தைக் கிராமங்களில் பரப்பினர். பாளையங்கோட்டையில் இருந்த ரேனியஸ் ஐயரின் ஆதரவாளர்கள் சி எம் எஸ் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டனர். அதனால் அவர்களின் வழிபாட்டிற்காக அடைக்கலாபுரத்தில் ஒரு ஜெபக்கூடம் கட்டப்பட்டது. அதுதான் இன்று ‘சின்னக் கோயில்’ என்று அழைக்கப்படும் தூய. யோவான் ஆலயம் ஆகும்.
வேளாளரை மட்டுமின்றி, முதன் முறையாக நாடார்களையும், ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது. செயற்கரியன செய்த ஒரு மாமேதைக்குத் தேவையான சுதந்திரத்தையும், உரிய மரியாதையையும் சர்ச் மிஷன் சங்கம் அளிக்கத் தவறி விட்டது என்பது மாபெரும் உண்மையே! திருநெல்வேலி கிறிஸ்தவர்களுக்கும் ரேனியசுக்குமிடையே இருந்த பாசப் பிணைப்பையும் அவர்கள் உணராமல் போனதும் வருந்துதற்குரியதே. அதோடு சர்ச் மிஷனரி சங்க அதிகாரிகளின் தொல்லைகளும் அவருக்கு நீடித்தன. அவை யாவற்றையும் அவர் துணிவுடன் பொறுத்துக் கொண்டார்.

ரேனியஸ் ஐயர் கடமை உணர்ச்சி மிக்கவர். அவர் தன் கடமைகளையே தன் உடமைகளாய் மதித்தார். எப்பொழுதும், எல்லா இடத்திலும் அவர் பயன் தரும் செயலையே செய்தார். காலத்தின் அருமை பெருமையை அறிந்தவர். ஒவ்வொரு அலுவலையும் அதற்கேற்ற வேளையில் நிறைவேற்றினார். அவருடைய பொறுமையும், தெய்வ சித்தத்திற்குப் பணிவதும் வியப்பிற்குரியவை. அறிவாற்றலில், மனஉறுதியில், உடல்வன்மையில் சிறந்தவர். தன்னலமற்றவர். குறுகிய மனப்பான்மை அற்றவர். ஆனால் கொள்கைப் பிடிப்பில் தீவிரமானவர். அவருடைய மதிப்பு மிக்க நூல்கள் தமிழர் சமுதாயத்திற்கு அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள். அவருடைய மனைவிக்கும் ஆறு பிள்ளைகளுக்கும் அவர் விட்டுச் சென்ற செல்வமெல்லாம் நல்ல பெயர் – சமுதாய ஊழியன், தெய்வபக்தி மிக்கவன், திறமை மிக்கவன், பயன் மிக்கவன் - என்பவைகளே!
1838ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 5ஆம் தேதி காலை அவர் ஆங்கிலேயருக்கு எழுத்து மூலம் ஒரு விண்ணப்பம் விடுத்திருந்தார். அதில் அவர்கள் ‘பைபிள் சங்கத்தை’ (Bible Society) ஆதரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அன்று மாலை,
வாழும் நாள் உவப்பினோடு
வனப்பினை எவர்க்கும் நல்கி
வீழும் நாள் அரவமின்றி
வீழ்ந்துறை விரைமலர் போல்
அவர் மரணத்திற்குள் மறைந்தார்.
படிமம்:Rhenius Grave.JPG

ரேனியஸ் ஐயரின் சரீரம், அடைக்கலாபுரம், தூய. யோவான் ஆலயக் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே, சற்றுத் தள்ளி ஊரின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒருவிதத்தில் அது நல்லதாகவும் தெரிகிறது. ஏனெனில் இன்று திருநெல்வேலியில் அது ஒன்றுதான் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கும் அடையாளம். அவருடைய கல்லறையில், ‘என் ஆண்டவரிடம் நான் நீதியை நாடுகின்றேன். என் அலுவல் அவருக்கு உரியதாயிற்று’ என்று எழுதப்பட்டுள்ளது. டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்ற யூத மிஷனரி, 1833ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் திருநெல்வேலிக்கு வந்து ரேனியஸ் ஐயருடன் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவர் சொன்ன வார்த்தைகள், ‘பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்’ என்பதாகும்.
- பேராசிரியர். சிட்னி சுதந்திரன்.

No comments:

Post a Comment