Search This Blog

Tuesday, June 14, 2011

வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும்

வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும்
-முனைவர் மா. தியாகராஜன்.
"உலகப் பொதுமறை" என்னும் தமிழ் மறையை வாழ்வாங்கு வாழும் வையத்திற்கு வழங்கியவர், "செந்நாப்போதார்" என்று சிறப்புடன் அழைக்கப்படும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பது உலகறிந்த உண்மை! இவர் பல்வேறு அதிகாரங்களில் பல்வேறு செய்திகளைப் பற்றிக் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக "மக்கட்டேறு" என்ற அதிகாரத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை மறைமுகமாக விளக்கிச் சென்றுள்ளார். அது எப்படி என்பதை இனிக் காண்போம்.
இரண்டு மழலைச் செல்வங்கள்
"மக்கட்பேறு" என்னும் அதிகாரத்தில் இடம் பெறும் குறட்பா இது!
‘குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்’’ (குறள் 66)
மழலைச்செல்வத்தின் மயக்கும் தன்மையை விளக்கிச் செல்கின்றார் வள்ளுவர். இக்குறட்பாவின் அறிவுக்குகந்த ஆழ்ந்த கருத்தாவது;
‘தம் மக்களின் மழலைச் செல்வத்தின் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே, குழலின் இசை இனியது. யாழின் இசை இனியது என்று கூறுவர்’ என்பதாம். இக் ‘கரு’ தான், என் உள்ளத்தில் உருக்கொண்டு வேறொரு உட்கருத்தை வெளிப்படுத்துகின்றது.
இசைக்கருவிகள் என்று எடுத்துக் கொண்டால், அவற்றைத் "தோற்கருவி", "நரம்புக்கருவி", "காற்றினால் ஒலி எழுப்பும் கருவி" என்று வகைப்படுத்தலாம். இன்னும் விரிவாகச் சொல்லப் போனால், சங்கு, பறை, கிடுமுட்டி, உருமி, மேளம், நாதசுவரம், குழல், யாழ் என்று பலவாக அடுக்கிக் கொண்டே போகலாம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், எத்தனை இசைக்கருவிகள் உள்ளன என்பதைப் பற்றியும், மறைந்த பல இசைக்கருவிகளைப் பற்றியும் கூறுகின்றார். இவ்வாறு இசைக்கருவிகள் இன்ன அளவின என்று கூறமுடியாது இப்படி இருக்கும் பொழுது, இசைக் கருவிகளிலேயே தேர்ந்தெடுத்த இரண்டை மட்டும் "குழல்", "யாழ்" என்பதை மட்டும் குறிப்பிடுகின்றார், பொய்யாமொழியார். "குழல்" போன்ற இனிமையும், "யாழ்" போன்ற இனிமையும் உள்ள இரண்டு மழலைச் செல்வங்கள்’ என்பதை மறைமுகமாகக் கூறுகின்றார் எனலாம்! அதுவும் குறிப்பாக "மக்கட்பேறு" என்னும் அதிகாரத்தில் கூறுவதும் எண்ணத்தக்கது.
குடும்பக் கட்டுப்பாடு
இசைக்கருவிகளில், இன்பம் பயப்பன குழலும், யாழும் என்பது உலகறிந்த உண்மை! ஆகவே, இரண்டு மழலைச் செல்வத்தைப் பெற்றிருந்தால் தான் அவர்கள் குழலும் யாழும் போல் இனிமை பயப்பர்! அப்படியில்லாவிடில் இன்பத்திற்கு எதிர்விளைவுகள்தான் ஏற்படும் என்று செப்புகின்றார் வள்ளுவர். அதிலும் ஓர் உண்மை இருக்கிறது. அனைத்து இசைக்கருவிகளும் ஒன்றாக இசைப்பின் ஓர் இனிமை தோன்றாது; அஃது இயல்பு! ஆகவே, "குழலும் யாழும் போன்று இன்பம் பயக்கும் மக்களைப் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும்" என்ற கருத்தை வெளிப்படையாகச் சொல்லி "நிறையப் பிள்ளைகள் வேண்டாம்" எனும் கருத்தை மறைமுகமாகப் பெற வைக்கின்றார் வள்ளுவர். ஆகவே குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்த, "இரண்டே பெற்றுக் கொள்" என்று கூறுகின்றார் ஈரடியால் உலகளந்த வள்ளுவப் பெருமான்.
முடிவுரை
துள்ளுநடையில், தெள்ளுத் தமிழில், நெஞ்சை அள்ளும் வண்ணம் கூறியிருப்பது நினைந்து நினைந்து இன்புறத் தக்கதன்றோ?
குறிப்பு
"குழல்" இசைப்போர், பெரும்பாலும் ஆடவரே!,  "யாழ்" மீட்டுவோர் பெரும்பாலும் பெண்டிரே! எனவே "குழல்" என்பது ஆண்மகவையும் "யாழ்" என்பது பெண்மகவையும் குறிக்கும் என்று இங்கு கருதலாம்.

No comments:

Post a Comment