Search This Blog

Tuesday, June 14, 2011

சொர்க்கங்கள் சொற்பமாகின...!

சொர்க்கங்கள் சொற்பமாகின...!
அழுதழுது போகும்
ஆரம்ப வகுப்புக்கு
அடுத்த வீட்டு விமலா அக்கா
விரல் பிடித்து கூட்டிச்சென்ற
பயணங்களின்றும்
பசுமையாகவே....

செருப்பில்லாமல்
நடைபழக்கிய - அந்த
செம்மண் பாதை...
சாமி வைத்து விளையாடிய
கற்கள் நிறைந்த ஆற்றங்கரை
பூஜைக்கு பூப்பறித்த
காட்டுச்செடிகள்....

நான் டீச்சராகி அடிவாங்கிய - அந்த
பாவப்பட்ட வேலிச்செடிகள் - இப்போ
நான் பெரியவளாகியதைப் போலவே
மாற்றங்கள் கண்டிருந்தது...

விதியின் வேகத்தில்
விபத்துக்கள் அடைந்திருந்தது - என்
வியத்தகு கிராமம்
விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட
தேயிலை விரிப்பு - பசுமையின்
புதுமையினை ருசித்துக் கொண்டது!

மண் பாதைகள் மறுரூபமடைந்து
'தார்' சேலையை தமதாக்கியிருந்தது
சிக்கனமாய் கட்டியிருந்த
சின்னச்சின்ன வீடுகள்
சிங்கார மாளிகையாயிருந்தது
சின்னதாய் வருத்தம்தான்
எளிமையும் இயற்கையும்
வாடியிருந்ததால்...

நாங்கள் கூட்டாஞ்சோறாக்கி
கூடிவிளையாடிய - அந்த
மண்திட்டை
நீண்ட தேடலின் பின்
அடையாளங்கண்டேனது
பொது மலசலகூடமாய்...

வேறுபடுகள் ஒவ்வொன்றிலும்
வேதனை தெறிக்கிறது - என்
பள்ளிக்கால பசுமை
பறிபோயிருந்தது...

சிங்கார பருவத்தின்
சில்மிஷங்கள் சிதைந்திருந்தது
சிறு வயது சினேகிதராரும்
சிக்கவில்லை-மாங்கல்யம் பெற்று
மாமியார் வீட்டிலாம்...

வறுமைச் சொரூபங்களின்
வடிவம் - வடுக்களாய்
விலகியிருந்தது...

நிமிர்ந்து நின்ற தோட்டத்தின்
தோரணை கண்டு
வியந்த விழிகளுக்கு
பழமையின் பசுமை
பாழாகியது வேதனைதான்...!!!
- த. எலிசபெத், இலங்கை.

No comments:

Post a Comment