Search This Blog

Tuesday, June 14, 2011

கதிரேசன் அழுகிறான்!

கதிரேசன் அழுகிறான்!
                                                           -லதா சரவணன்.
தூறிய மழைக்குப் பயந்து நைந்து போன சேலையை இறுகத் தலையைச் சுற்றியபடி வந்தாள் பொன்னுத்தாயி! கதவென்று பெயருக்கு வைக்கப்பட்டு இருந்த தட்டியைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள். மகன் கதிரேசன் சாயம் இழந்த சுவரில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தான். பழக் கூடையை ஓரமாய் வைத்துவிட்டு, அடுக்களைக்குள் சென்றாள். பசி வயிற்றைக் கிள்ள, பாத்திரங்களை எடுக்கும் போதுதான் மகன் இன்னமும் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்தாள்.
ஏலே! கதிரு, மணி பத்தாவப் போவுது, இன்னமும் சாப்பிடாம அப்படியென்னலே படிக்கிறே?

அவனிடம் மெளனம், ஆனால் மிக மெல்லியதாய் விசும்பல் ஒலி கேட்கவும், விதிர் விதிர்த்துப் போய் மகனிடம் நின்றாள்.
பீஸ் கட்ட இன்னும் மூணு நாள்தான் இருக்கு. நீ இன்னமும் தரலை, எல்லாரும் கிண்டல் பண்றாங்க. எனக்கு அவமானமா இருக்கும்மா!
எம்புட்டு பணமுன்னு சொன்னே?
ஆயிரம் ரூபாய்!
இரண்டு மாசத்துக்கு முன்னாடிதானே நான் எண்ணூறு ரூபா தந்தேன்.
அதுவேற, இது வேறம்மா !
அய்யா, நானென்ன கவர்மெண்ட் உத்தியோகமா பாக்குறேன். ரோடுரோடா பழம் விக்கிறேன். வர்ற காசு வாய்க்கும் வயித்துக்குமே பத்தாமப் போனாலும், கடன் பட்டாவது உன்னைப் படிக்க வைக்கிறேன். அடிக்கடி காசு கேட்டா ஆத்தா எங்கேயா போவேன்...?
அப்போ என்னையேன் காலேஜிலே படிக்க வைச்சே, உன்னை மாதிரியே கறிகாய் விக்க வைச்சிருக்கலாமே?
மகனின் அந்தக் கேள்வியில் ரொம்பவே மனமுடைந்து போனாள் பொன்னுத்தாயி.
என்னய்யா, நீயே இப்படிப் பேசுறே? உங்கப்பன் நம்மை விட்டுட்டுப் போன பொறவு நான் உன்னைப் படிக்க வைக்க வளர்க்க என் தோலைச் செருப்பா தைச்சுப் போடுறேனே! அது உனக்குப் புரியலையாய்யா?
அதுக்கு நீ என்னை இத்தனை பெரிய காலேஜிலே சேர்த்து இருக்கக் கூடாது. என் வயசுப் பசங்கயெல்லாம் நல்லா டிரஸ் பண்றாங்க, நானென்ன அதெல்லாம் கேட்டு உன்னைத் தொந்தரவு பண்றேனா?
கோவிக்காதய்யா! நானென்னத்தைக் கண்டேன். இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கோ, நம்ம கண்டிராக்டர் சண்முகத்துக்கிட்டே கேட்டுப் பாக்குறேன். இப்போ சாப்பிட வாய்யா? என்றாள் மகனின் மோவாயைத் தாங்கியபடியே...
எனக்கு வேண்டாம். நீயே போய்ச் சாப்பிடு! அவன் போய்ப் படுத்து விட்டான். மனம் பதைத்தது. பிள்ளையே சாப்பிடலையே? பசியாய் கொதித்த வயிற்றைத் தண்ணீர் ஊற்றி அணைத்தாள். இந்தப் பணத்திற்கு என்ன வழி மனம் புலம்பியது.
கணவன் இறந்த பிறகு, இந்தப் பிள்ளையை வளர்த்துப் படிக்க வைப்பதற்குள் விழி பிதுங்கத்தான் செய்தது. ஏழ்மையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால் ஆண்பிள்ளை இல்லாமல் போனாலும் பயமின்றி வாழ்வு சீராய் ஓடிக்கொண்டு இருந்தது. பொன்னுத்தாயின் லட்சியமே கதிரேசனைப் படிக்க வைப்பதுதான். பொழுது விடியும் வரை இமை மூடாமல் யோசித்தவள் காலையில், முதல் வேலையாய் சண்முகத்தைச் சந்திக்கச் சென்றாள்.
என்ன பொன்னுத்தாயீ? உனக்குத் தெரியாததா? இது மாசக் கடைசி? நானென்ன செய்ய முடியும்? நீயும் ரொம்ப அவசரமின்னு வேற சொல்றே. ஒரு வழியிருககு. ஆனா நீ ஒத்துப்பியான்னு ... ? அவர்
சந்தேகமாய் இழுக்க...
நீங்க இருங்க சித்தப்பா, நான் சொல்றேன். என்று ஒரு இளைஞன் முன்னால் வந்தான்.
அம்மா, எங்க கல்லூரியிலேயே ஒரு ஓவியப் போட்டி நடக்குது. இந்தியாவின் வறுமைக் கோடுங்கிற தலைப்பில், சில படங்கள் வரையணும். அதுக்கு மாடலிங்கிற்கு நீங்க வரமுயுமா? என்று கேள்வியெழுப்பினான், உங்களுக்கு 1000 ரூபா கிடைக்கும், நான் ஏற்பாடு பண்றேன்.
நன்றி தம்பி ! நான் என் உயிரைத் தரவும் சித்தமாய் இருக்கிறேன் என்றாள்.
நைந்து, கிழிந்து போன புடவை, சல்லடையாய் சட்டை, ஏறக்குறைய முக்கால் நிர்வாணமாய் நிற்க வேண்டும் என்றதும், உயிரே போவது போலிருந்தது பொன்னுத்தாயிக்கு!
என்ன சாமி இது ? இங்கேயிருக்கிற பிள்ளைகளுக்கு எம்மவன் வயசுதான் இருக்கும், அதுங்க முன்னாலே போய்..! வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள அழுதாள். கண்கள் அருவியாய் கொட்டின.
பொன்னுத்தாயியை அழைத்து வந்த இளைஞன் முன்வந்தான். அம்மா! நாங்களும் உங்களுக்குப் பிள்ளைகள்தான். தவறான நோக்கத்தோடு ஏதும் இல்லைம்மா, உங்கள் தேவைக்கு இதில் பணமும் கிடைக்கிறதல்லவா..!

பணம்! கதிரேசனின் சாப்பிடாத கவலை தோய்ந்த முகம் ஒருமுறை கண்ணின் முன் வந்து போனது.சரியென்று தலையசைத்தாள், உணர்ச்சிகளற்ற அந்த முகம்தனை ஓவியத்தில் உணர்வுகளைக் கொண்டு வந்தனர்.
கதிரேனின் கையில் நூறு ரூபாய் நோட்டுகள் பளபளத்தன.
அம்மான்னா அம்மாதான். அவன் பொன்னுத்தாயை அணைக்க வர சரேலேன விலகினாள். சரி வர்றேம்மா..!
பிள்ளையின் முகமலர்ச்சிக்கு முன், தான் பட்ட வேதனை அனைத்தும் கரைந்து போனது அவளுக்கு!
ஒரு வயதிற்குப் பிறகு பெற்ற தாயைக்கூடப் பார்க்க அனுமதிக்காத உடல்.... சற்றே துணி விலகினாலும் பதறி மூடும் நெஞ்சம். அதை இன்று...! அதற்கு மேல் நினைப்பதே நெருப்பில் குளிப்பது போல் இருந்தது.

கதிரேசன் நண்பன் சிவாவின் வீட்டின் முன் நின்றான். டேய் சிவா, என்னடா பண்றே?

இன்டர்காலேஜ் போட்டியில் சேர்ந்தோம் இல்லையா? அதுக்கு ஒரு ஓவியம் இன்று வரைந்தோம். எதிர்பார்த்ததை விடவும் அற்புதமா அமைஞ்சிருக்கு.. ஆமா, நீயெங்கே போயிட்டு வர்றே?
நம்ம ஆளு ப்ரியாவுக்கு இன்றைக்குப் பிறந்த நாள், அதான் கிப்ட், பார்ட்டின்னு என்ஜாய் பண்ணிட்டு வர்றேன். இங்கே பாரு வித் லவ் ப்ரியான்னு கையெழுத்துப் போட்டக் கொடுத்து இருக்கா? என்று ஒரு வழுவழுப்பான அட்டையைக் காண்பித்தான்.
டேய் பாவி, இதுக்கெல்லாம் உனக்குப் பணம் ஏதுடா?
எங்கம்மாகிட்டே பணம் வேணுமின்னு அழுதிட்டே கேட்டேன். நைட்டு சாப்பிடாம படுத்திட்டேன். மறுநாளே பணம் வந்திட்டது.

பாவம்டா அவங்க! என்ன கஷ்டப்பட்டாங்களோ? இப்போது இது தேவைதானா?

விடு சிவா, சில விஷயங்களைக் கிடைக்கும் போதே அனுபவிச்சிடனும்.

சரி இந்தப் படத்தைப் பாரேன்.. சிவா திரையை விலக்கிட, அழுக்காய் நைந்துபோன பழைய கிழிசல் உடையில் பாதி உடல் தெரிய, கலைந்த தலையும், சோகம் அப்பிய கண்ணுமாய்....! பாவம்டா.... என்ன அவசரத் தேவையோ? பணம் தேவையின்னு இப்படி போஸ் தந்தாங்க. ஆனா நம்ம ப்ரண்ட்ஸ் முன்னாடி நிற்க அவங்க பட்ட பாடு .....! சிவாவின் பேச்சு எதுவும் காதில் விழவில்லை.
அம்மா..! அலறலோடு வீடு நோக்கி ஓடினான் அவன். ச்சே! என்ன மனிதன் நான்! அம்மா என்னை மன்னித்து விடுங்கள். எனக்காக எத்தனை பெரிய தியாகம் செய்து விட்டீர்கள்.? வீட்டின் முன் ஒரே கூட்டம். என்னவென்று மனம் பதைத்தது. பக்கத்து வீட்டு அஞ்சலை இவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
தம்பி..! உங்கம்மா போய்ச் சேர்ந்திட்டா அய்யா..! உன்னை அநாதையா விட்டுட்டு...!
கிடத்தப்பட்ட தாயின் சடலத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அந்த முகத்தில் தெரிந்த அமைதியே அவனைச் சுட்டது. நீ கவரிமான் ஜாதியம்மா, மகன் பொருட்டு உயிரை விட்டு விட்டாயே? ஆனால், நான்.... என் அல்ப சந்தோஷத்திற்காக உனை ஏமாற்றி விட்டேனே! அதற்காகாத்தான் இனிமேல் இவனுடன் இருக்கக்கூடாதென்று போய்விட்டாயோ? முதன் முதலாய்த் தாய்மீது உள்ள உண்மையான பாசம் வெளிப்பட, அம்மா...! என்று அழுதான் கதிரேசன் பெருங்குரலெடுத்து...!”

No comments:

Post a Comment