Search This Blog

Wednesday, June 29, 2011

உடல் மெலிந்தவர்களுக்கும் இதய நோய்கள் வரும்: ஆராய்ச்சித் தகவல்



உடல் பருமனாக இருப்பது ஆபத்து. நீரிழிவு, இருதயக் கோளாறு உட்பட இன்னும் பல நோய்களுக்கு இது ஆபத்தானது என்பது தான் இதுவரை இருந்து வந்த நம்பிக்கை.
இதனால் மெலிந்த உடல் அமைப்பு இருப்பவர்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர். தமக்கு நோய்கள் ஏற்படாது என்று அவர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உடல் மெலிந்துள்ளது என்பது முழுமையான திருப்திக்கு உரிய விடயமல்ல. உடல் மெலிந்து காணப்படுவதற்கு காரணமாக இருப்பது ஒரு மரபணு. ஆனால் அதே மரபணு அவர்களுக்கு நீரிழிவும், இருதயக் கோளாறும் ஏற்படவும் காரணமாக உள்ளது என்பது தான் புதிய ஆய்வு தருகின்ற தகவல்.
இந்த ஆபத்து ஆண்களுக்கே பெருமளவு காணப்படுகின்றது. எனவே உடல் ஒல்லியாகி, வயிறும் ஒட்டிப்போய் காணப்படுகின்றவர்கள் தாங்கள் நினைக்கின்ற அளவுக்கு ஆரோக்கியமானவர்கள் அல்ல என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய உடலமைப்பு கொண்டவர்களின் உடல் உள் உறுப்புக்களைச் சுற்றி கொழுப்புப் படிவத்தை ஏற்படுத்தும் மரபணுவே தற்போது இனம் காணப்பட்டுள்ளது. இதற்கென ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 75000 பேரில் அவர்களின் தசைக் கொழுப்போடு ஒப்பீட்டளவில் இந்த மரபணுவும் இனம் காணப்பட்டுள்ளது.
பொதுவாக IRS1 என்று இந்த மரபணு இனம் காணப்படுகின்றது. மெலிந்த உடல் அமைப்பின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் பற்றிய தகவல்களை இது அப்படியே புரட்டிப்போட்டு விடுகின்றது. இந்த ஜீன் உள்ளவர்கள் இரத்தத்தில் கொழுப்புப் படிவு அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.
உடம்பில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றுவதிலும் இவர்களின் உடல் செயற்பாடு சிரமத்தை எதிர்நோக்குகின்றது. இதனால் இந்த மரபணு உடையவர்களுள் 20 வீதமானவர்கள் இரண்டாம் நிலை நீரிழிவு நோயை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளனர். நடுத்தர வயதினரையே இது பெரிதும் பாதிக்கின்றது.
இந்த மரபணுவானது சருமத்துக்கு கீழ் பகுதியிலும், இதயம், நுரையீரல் உட்பட பல உறுப்புக்களைச் சுற்றியும் கொழுப்பைத் தேக்கி வைக்கின்றது. உலகின் பத்து நாடுகளில் 72 நிலையங்களைச் சேர்ந்த குழுக்கள் நடத்திய வெவ்வேறு ஆராய்ச்சிகளைத் தொகுத்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். எனவே மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் இனிமேலும் அலட்சியமாக இருந்து விட முடியாது.

No comments:

Post a Comment