Search This Blog

Tuesday, June 14, 2011

பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன்

பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன்
-முனைவர் மா.  தியாகராஜன்.
முன்னுரை
“முருகு பொருநாறு பாணிரெண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”
என்னும் வெண்பாவில் கூறப்பட்டுள்ளவாறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்களும் பத்துப்பாட்டு நூல்கள். தித்திக்கின்ற பத்துப்பாட்டு நூல்கள் வரிசையில் மூன்றாவது நூலாக இடம் பெற்றிருப்பது சிறுபாணாற்றுப்படை என்னும் சீர்சால் நூலாகும். இந்நூலை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், ஓய்மானாட்டுச் சிற்றரசன் நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, 269 அடிகளால் ஆன ஆசிரியப்பாவால் அழகுறப் புனைந்துள்ளார்.
ஆற்றுப்படை நூலின் அமைப்பு முறை
வள்ளல் ஒருவனிடம் பரிசில் பெற்று வரும் ஒருவன், தன் எதிர்ப்பட்ட வேறு ஒருவனிடம் தான் பரிசில் பெற்று வரும் தலைவனின் கொடைச்சிறப்பினை எடுத்துக் கூறி, அந்தத் தலைவனிடம் நீயும் சென்றால் என்னைப் போலவே பரிசு பெற்று வரலாம் எனக் கூறி அந்த வள்ளல் இருப்பிடத்தை அடைவதற்குரிய வழியையும் விளக்கிக் கூறி அனுப்பி வைத்தல் ஆற்றுப்படை நூலின் அமைப்பாகும். ஆறு – வழி படை - படுத்துதல். வழிப்படுத்தி அனுப்புதல் என்பது இதன் பொருளாகும்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்
என்னும் தொல்காப்பிய நூற்பாவின் மூலம், கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியவர் அவ்வாறு நெறிப் படுத்துதற்குரிநோர் என்பதையும் அறிய முடிகிறது.
கொடைச்சிறப்பைப் போற்றும் ஆற்றுப்படை
கொடைத்திறத்தால் ஓங்கிய தலைமகன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் போற்றிப் புகழ்வதற்கே ற்றுப்படை என்னும் இலக்கிய உத்தி, கண்டறியப்பட்டது. வரையாது வழங்கிய வள்ளல்களைப் போற்றுவதற்கு ஆற்றுப்படை நூல்கள் மட்டுமின்றி, கோவை, உலா, கலம்பகம், பரணி, தூது, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய வகைகளும் தோன்றின.
இவையும் தலைவனைப் போற்றிக் கூறிய போதும், பாட்டுடைத்தலைவன் கொடை நலத்தைப் போற்றுவதற்காக ஆக்கப்படுகின்ற ஆற்றுப்படை நூல்களே பாட்டுடைத் தலைவன் சீர்போற்றும் ஏனைய இலக்கிய வகைகளைக் காட்டிலும் விஞ்சி நிற்கின்றன.
அறிவு, ஆற்றல், வீரம் போன்றவற்றால் உண்டாகும் புகழைக் காட்டிலும் ஈகையால் உண்டாகும் புகழே உயர்ந்தது. இதனைத் திருவள்ளுவர்
“ஈதல் இசைபட வாழ்தல்” என்றும்,
“உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்”
என்றும் கூறியுள்ளார்.
எனவே பாட்டுத்தலைவன் கொடைச் சிறப்பினைப் போற்றிப் புகழ்வதற்கு ஆற்றுப்படை நூல்களே தனிச் சிறப்புக் கொண்டவையாக விளங்குகிறது.
நல்லியல்பு மிக்க நல்லியக் கோடன்
ஆற்றுப்படை நூல்களுள் தலைவன் கொடைச் சிறப்பைப் போற்றுவதில் சிறுபாணாற்றுப்படை பெருஞ்சிறப்புப் பெற்றுள்ளது. ஓய்மானாட்டை ஆண்ட சிற்றரசன் நல்லியக்கோடன். இன்றைய திண்டிவனம் நகரும் அதனைச் சார்ந்த பகுதிகளுமே அன்றைய ஓய்மா நாடு. நல்லியக்கோடன் புகழைச் சிறுபாணாற்றுப்படை மட்டுமின்றி புறத்தினை நன்னாகனார் பாடிய புறநானூற்றுப்பாடல் ஒன்றும் சிறப்புறக் கூறியுள்ளது.
“பெருமாவிலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர்ச் செம்மலை நல்லியக் கோடனை”
என்னும் புறனாநூற்று அடிகளில் நல்லியக்கோடனின் ஊரும், பெயரும் கூறப்பட்டுள்ளன. நல்லியக்கோடனைச் சிறுபாணாற்றுப்படை எங்ஙனம் பாராட்டியுள்ளது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
உவமையிலா உவமைகள்
சிறுபாணாற்றுப்படையில் முதலிரண்டு அடிகளிலேயே,
“மணிமலைப் பயணத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல”
என அழகிய உவமையை அமைந்தே நத்தத்தனார் நூலைத் தொடங்கியுள்ளார்.
நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பத் இந்த அடிகளின் பொருளாகும்.
அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. அதன் கரையோரம் கருமணல் படிந்திருந்தது. அந்தக்காட்சி, பெண்ணின் கூந்தல் விரிந்திருப்பதைப் போலக் காட்சியளிப்பதாகவும் அந்தக் கருமணல் பரப்பின் மீது, அருகில் இருந்த சோலையில் பூத்திருந்த புதிய பூக்கள் அணில்கள் குடைந்ததால் விழுந்ததாகவும், அப்படி விழுந்த புதிய மலர் வாடல்கள் மகளிர் கூந்தலில் சூடியுள்ள பூவைப்போலக் காட்சியளிப்பதாகவும் உவமை அமைத்து நல்லாதனார் நூலை அழகு படுத்தியுள்ளார்.
இத்தகைய வழியில் கொடை வழங்கும் வள்ளலைத் தேடிச் செல்லும் பாணனுடன் அவனைச் சார்ந்த விறலியர் செல்லும் காட்சியைக் குறிப்பிடும் போது,
அந்த விறலியர்தம் மேகம் போன்ற நீண்ட கருங்கூந்தலைக் கண்ட ஆண்மயில்கள், இந்தப் பெண்கள் கூந்தல், சாயம் இவற்றின் எதிர் நீலமணி போன்ற கண்களைக் கொண்ட நம் தோகையும் சாயலும் ஈடாகா என்று எண்ணி நாணம் அடைந்து பெண்மயிலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றன என்றும், அந்தப் பெண்களின் நடந்து சிவந்த பாதங்கள் ஓடி இளைத்த நாயின் நாவைப் போன்று தோன்றுகின்றன என்றும், பெண் யானையின் கைபோலத் திரண்டு செறிந்த தொடை, வாழைப்பூவை ஒத்த அழகிய கூந்தல், அவர்கள் கூந்தலில் வேங்கைப் பூக்களைச் சூடியிருந்தனர். கோங்கின் அரும்பு போன்று விளங்கும் கொங்கை, அந்தக் கொங்கைகளின் மீது படர்ந்திருக்கும் கணங்கினை (தேமலை) வேங்கை மலரை என்று கருதி வண்டுகள் மொய்க்கின்ற முலைகள். அத்தகைய பற்களைப் போன்று கஞ்ச கொல்லை மலர்கின்ற காட்டு முல்லை மலர்கள். புதிய முல்லை மலரைச் சூடுகின்ற கற்புடைவிறலியர் என்று உவமைகளை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கிக் கூறியுள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக உவமை கூறுவதை, மாலை உவமை என்பர். சந்தான உவமை என்றும் சாற்றுவர்.
இங்ஙனம் பாணன் விறலியருடன் நடந்து சென்ற வழி நெடுக அமைந்துள்ள காட்சிகள் அனைத்திற்கும் பொருத்தமுறு உவமைகளை வாரிக் கொட்டித்தம் நூலை அழகுபட ஆக்கியுள்ளார்.
இத்துணை உவமைகளைக் கவிஞர் ஏன் அமைத்துள்ளார்? என்று சிந்தித்தால், பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன் உவமை கூற முடியாத வள்ளல். எனவே அவன் ஒருனுக்கு உவமை கூறமுடியாத தவிப்பினை- உவமைத் தாகத்தைக் காணும் பொருள்களுக்கெல்லாம் உவமை கூறிப் புலவர் தனித்துக் கொள்கின்றாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
மூவேந்தரை மிஞ்சிய கொடை வள்ளல்
நல்லியக்கோடன் சிற்றரசன் ஆயினும் அவன் சேர, சோழ, பாண்டியன் என்னும் முடியுடை வேந்தர் மூவரைக் காட்டிலும் கொடைத்தன்மையால் ஓங்கி நிற்பவன் என்பதை இந்நூலில் புலவர் தெளிவுபடக்கூறியுள்ளார்.

சேரநாடு வளம் மிக்க நாடாகவும் நலம் மிக்க நாடாகவும் விளங்குகிறது என்பதை உணர்த்தும் வண்ணம் குளத்தில் செங்கழுநீர் பூக்களைக் உண்ட எருமை மாடுகள் மிளகுக்கொடி படர்ந்துள்ள பலா மரத்தின் நிழலில் காட்டு மல்லிகை மலர்ப் படுக்கைநில் படுத்து உறங்குகின்றன. அங்ஙனம் உறங்கும் எருமைகளின் முதுகை மஞ்சள் இலைகள் காற்றால் அசைந்து இதமாகத் தடவிக்கொடுக்கின்றன என்று புலவர் கூறியுள்ளார். இதனால் சேர நாடு அமைதி நலம் நிறைந்த நாடாகவும் விளங்கியதை நாம் அறிகிறோம்.

இமயத்தில் வில் பொறித்த புகழுக்குரிய வஞ்சி நாட்டின் சிறப்பைக் கூறும் புலவர் அத்தகைய சேர மன்னன் கொடையும் சிறிதாகும் வண்ணம் கொடுப்பவன் நல்லியக்கோடன் என்று கூறியுள்ளார்.

பாண்டிய நாடும் வறுமையில் வாடவில்லை. வளமாகவே இருந்தது. கிளிஞ்சல்களுக்குள் முத்துகளைப் போட்டு அவற்றைக் குழந்தைகள் கிலு கிலுப்பையைப் போன்று ஆட்டி மகிழ்ந்த வளம்மிக்க நாட்டின் மன்னன் கொற்கைக் கோமான், சங்கம் வைத்துத் தமிழ் வள்ர்த்த பாண்டிய மன்னன் என்பதன் மூலம் பாண்டிய நாடு வளம் மிக்கநாடு பாண்டிய மன்னன் தமிழ் வளர்த்த வள்ளல் என்பனவற்றை நாம் உணர்கிறோம். அத்தகைய வள்ளலான பாண்டியனின் கொடையும் சிறிதாகும் வண்ணம் நல்லியக்கோடன் கொடை பெரிதினும் பெரிதாக விளங்கியது எனப் புலவர் கூறியுள்ளார்.

அடுத்து, சோழ மன்னனைக் குறிப்பிடும் போதும், வயல்வளம், நீர்வளம், பகைவென்று நாட்டில் சோழமன்னன் நல்லாட்சி நடத்தும் பாங்கு இவற்றைக் குறிப்பிட்டுள்ள புலவர், வானில் உலவிய கோன்னைகளை அழித்த செய்திகளையும் கூறியுள்ளார். தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் மன்னனின் சிறப்பினைச் சிலப்பதிகாரம்,
“வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன்று எறிந்த இகல்வேல் கொற்றமும்
என்று குறிப்பிட்டுள்ளது.

பழமொழி நூல்,
“வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால்”
எனக்குறிப்பிட்டுள்ளது.
விக்கிரம சோழன் உலா,
“கூடார்தம் தூங்கும் எயிலெறிந்த சோழனும்”
எனப்போற்றப்படுகிறது.
கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார்,
“தேங்கு தூங்கெயில் எறிந்த அன்றும்”
என்று கூறியுள்ளார்.
மேற்குறிப்பிட்டுள்ள இலக்கியங்கள் கூறியுள்ள அதே செய்தியை நத்தத்தனார்.
“தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை
நாடா நல்லிசை நல்தேர்ச் செம்பியன்”
என விளக்கியுள்ளார். அத்தகைய சிறப்புடைய உறந்தைச் சோழனின் பெருங்கொடையும் சிறிதாகும்படி நல்லியக்கோடன் ஒழங்கினான் என நத்தத்தனார் கூறியுள்ளார்.
இங்ஙனம் தமிழ்நாட்டின் பேரரசர்களாக விளங்கிய மூவேந்தரைக் காட்டிலும் மேலான வள்ளல் என நல்லியக்கோடனைக் குறிப்பிட்டுள்ள புலவர்தம் உள்ளத் துணிவினைப் பாராட்டுவதா? புலவருக்கு அந்த அளவுக்கு மனத்துணிவு ஏற்படும் வண்ணம் வாரிவாரிக் கொடுத்து, புலவர் பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்காமல் பாடும் உணர்வு பெறத்தக்க வகையில் வழங்கிய நல்லியக்கோடனைப் பாராட்டுவதா? என அறியாமல் நாம் திகைக்கின்றோம்.

எழுவர்க்கு இணையானவன்
காட்டில் வாழ்ந்த மயிலுக்கும் குளிரும் என்று கருதி அதற்குப் போர்வை அளித்தவன் ஆவியர் கோமான் பேகன், பற்றிப்படரக் கொழுக்கொம்பு இன்றித் தவித்த முல்லைக்குத் தன் தேரையே தந்தவன் பறம்பு மலைத் தலைவன் பாரி. இரவலர்க்கு வரையாது வழங்கி இன்மொழிகளும் கூறிய வள்ளல்கள் காரி, ஆய், நள்ளி. ஓரி ஆகியோர். அரிதில் முயன்று பெற்ற அமிழ்து பொழி நெல்லிக்கனியை அவ்வைக்குத்தந்தவன் அதியன் ஆகிய எழுவர் - கடையேழு வள்ளல்கள் சுமந்த ஈகை என்னும் பாரம் முழுவதையும் தான் ஒருவனாகவே தாங்கியவன் நல்லியக்கோடன் என்பதை,
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடைய நோன்தான்
எனச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. இதனால் நல்லியக்கோடன் கொடை மாட்சியில் கடையேழு வள்ளல்களையும் விஞ்சியவன் என்பதை அறிகின்றோம்.

மன்னன் வழியே மக்கள் வழி
உண்ண உணவில்லாமல் வறுமையின் பிடியில் வாடித் தவித்த பாணன் நல்லியக்கோடனைக் கண்டான் அவனிடம் பரிசில் பெற்றான். செல்வளம் பொலியத் தன் ஊர் நோக்கித் திரும்பினான் அப்போது எதிரில் வறிய நிலையில் வந்த மற்றொரு பாணனைப் பார்த்து நல்லியக்கோடன் என் வறுமை நீங்கும் வண்ணம் பெருஞ்செல்வத்தையும் யானைகள், தேர்கள் போன்றவற்றையும் எனக்கு வழங்கினான். எனவே நீங்களும் நல்லியக்கோடனிடம் சென்றால் எங்களைப் போலவே திரண்ட செல்வம் பெற்றுத் திரும்பலாம் என்று கூறி, நல்லியக்கோடன் ஊருக்குச் செல்வதற்குரிய வழியினையும் கூறி ஆற்றுப்படுத்தினான்.
அப்போது, வளம்மிக்க நெய்தல் நிலத்தின் வழியாக நீங்கள் செல்லும் போது அங்கு வாழும் மகளிர் தூசு நீக்கித் தருகின்ற கள் தெளிவைப் பரதவர் உங்களுக்குத் தருவார்கள். வறுத்த - சூடான குழல்மீன் கறியை நீங்கள் வீடுகள் தோறும் பெறுவீர்கள். அங்குள்ள பெண்கள் தங்கள் மன்னனைப் புகழ்ந்து பாடி ஆடிகின்ற காட்சிகளையும் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
அடுத்து, முல்லை நிலத்தில் அமைந்துள்ள வேலூரை நீங்கள் அடைந்தால் அங்குள்ள பெண்கள் தாம் சமைத்த இனிய புளிங்கறி இட்ட சோற்றை ஆமானின் இறைச்சியுடன் தர உம் பசி நீங்கப் பெறுவீர்கள்.
அடுத்து நீங்கள் மருத நிலப்பகுதி வழியாகச் செல்லும் போது, அங்குள்ள உழவர்கள் உங்களை அன்புடன் வரவேற்று, வெண்மையான அரிசியால் ஆக்கிய சோற்றுடன் நண்டின் கலவையைச் சேர்ந்துத் தருவார்கள்.
நீங்கள் அங்கிருத்து புறப்பட்டால் நல்லியக்கோடனின் கிடங்கில் நகரை விரைவில் அடையலாம். அங்கே நல்லியக்கோடனின் அரண்மனைக்குச் செல்லுங்கள். அந்த அரண்மனை வாயில் மாற்றார் எவரும் புகுவதற்கு இயலாத காவலைக் கொண்டது. ஆனால் பொருநர், புலவர் அந்தணர் முதலியவர்கள் புகுவதற்காக எப்போதும் திறந்தே இருப்பது. அந்த வாயில் மேருமலை ஒரு கண்ணைத் திறந்தது போலக் காட்சியளிப்பது எனக்குறிப்பிடும் போது, மன்னன் பாணர் முதலியவர்களை மதித்துப் போற்றுவதைப் போலவே அவன் நாட்டு மக்களும் அவனைக் காணக் செல்பவர்களுக்கு அன்புடன் விருந்தளித்து உபசரித்தார்கள் என்பதைச் சிறுபாணாற்றுப்படை கூறியுள்ளதால் மக்களும் மன்னனைப் போலவே புலவர், பாணர் போன்றோரை மதித்தனர் என்பதனை உணர முடிகின்றது.
தாரகைக் கூட்டத்தின் நடுவில் ஒரு தண்மதி
பாணனே! நீ உன் சுற்றத்தாருடன் அரண்மனையை அடைந்தவுடன் அங்கே மகளிர், நல்லியக்கோடனின் நடுவுநிலைமையையும், மற்றவர்களை மதிக்கும் பண்பையும் போற்றிப் பாராட்டுவதைக் காண்பீர்கள்.

நல்லியக்கோடன் வரிசை அறிந்து வழங்குவதையும் வாரி வாரி வழங்குவதையும் பாணர், கூத்தர், முதலியவர்கள் பாடிக் கொண்டிருப்பதையும் காண்பீர்கள். இங்ஙனம் நண்பர்கள் சுற்றத்தார்கள், புலவர் ஆகியோர் சூழ்ந்திருந்து வாழ்த்தும் வண்ணம் விண்மீன் கூட்டத்திடையே விளங்குகின்ற முழுமதி போல நல்லியக்கோடன் விளங்கக்காணலாம்.

வரையாது வழங்கும் வான்மழை நிகர்த்தவன்
பாணனே! நீங்கள் நல்லியக்கோடனைக் கண்டவுடன், “மன்னனே! நீ பெற்றோர் ஆசிரியர் முதலிய பெரியவர்களைக் கண்டால் பலமுறை கூப்புகின்ற கரங்களைக் கொண்டவன், நின்னினும் இளைஞர்களைக் கண்டால் அவர்களை ஆரத்தழுவுகின்ற ஈரமும் வீரமும் பெற்ற சீரியன். உழவர்களைக் காக்கும் ஞெங்கோல், பகைவர்க்கு அச்சமூட்டும் அயில்வேல் ஆகியவற்றைக் கையில் ஏந்தியவன்,” எனச்சில கூறி நீங்கள் போற்றத் தொடங்கிய உடனே, உங்களுக்கு மூங்கில் உட்பட்டையை உரித்தாற் போன்ற ஆடையை உடுத்தத்தருவான். பாம்பின் நஞ்சு ஏறியதைப் போன்ற கள்ளை உண்ணச் செய்வான். அருச்சுனனின் தமையனாகிய வீமன் எழுதிய மடைநூல் நெறிப்படி சமைத்த பல்வேறு சுவையான உணவுகளைப் பொன்னால் ஆன உண் கலத்தில் அளித்து அருகில் இருத்து உண்ணச் செய்வான். நல்லியக்கோடன் நீங்கள் வேண்டும் அனைத்தையும் பரிசாக வாரி வாரி வழங்குவான்.

போரில் தன்னை எதிர்க்கும் பகைவரை அவர்தம் நாடுகளை விட்டே ஓடச் செய்பவன். பகைவர் தம் காவல் அரண்களை அழிப்பவன். ஆனால் தன்னை நாடி வரும் பாணர்தம் வறுமை நீங்கும் வண்ணம் வாரி வாரி வழங்குபவன். அத்தகையவன் உங்களுக்குச் சிறந்த தேர்களையும் குதிரைகளையும் பின்னடையச் செய்யவும் வலிமை மிக்க எருதுகளையும் அவற்றைச் செல்லுத்தும் பாகனுடன் உங்களுக்குக் கொடுப்பான் என்று கூறி அனுப்பினான்.

முடிவுரை
சிறுபாணாற்றுப்படை சிறிய யாழைக் கையில் ஏந்திப் பாடும் பாணனை ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளதால் இது, சிறுபாணாற்றுப்படை எனப்பெயர் பெற்றது. இந்நூலில் வள்ளல் நல்லியக்கோடனைப் பேர்ரசர் மூவர்க்கும் மேலான கொடை வழங்குபவனாகக் கூறுவதும், கடையேழு வள்ளல்கள் எழுவர் அளித்த கொடையைத் தன் ஒருவன் தனியாக வழங்கியவனாகத் திகழ்ந்தான் என்று கூறுவதும் பாட்டுடைத் தலைவன் கொடை மாட்சியை மிகஙும் உயர்த்திப் போற்றும் திறன் பெற்றுள்ளவையாகும். அவன் பாணர்க்கு யானைகள், தேர்கள், பெருஞ்செல்வம் போன்றவற்றை அளித்த செய்திகள் அவன் பாணர் விரும்பும் அனைத்தையும் கொடுப்பவன் என்னும் செய்தி ஆகியவையும் நல்லியக்கோடனின் கொடைத்திறத்தினை விளக்குகின்றன. மாற்றார் புகமுடியாத நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்கள் புலவர்கள் முதலானவர்களுக்காகத் திறந்தே இருக்கும் என்னும் செய்தியும் பாட்டுடைத்தலைவன் புகழை நிலை நிறுத்தும் வண்ணம் அமைந்துள்ளன. எனவே சிறுபாணாற்றுப்படை பாட்டுடைத்தலைவனின் ஈகை பண்பினைப் பாராட்டும் திறத்தால் விஞ்சி நிற்கிறது. வெற்றி பெற்றுள்ளது.

கட்டுரை ஆய்வுக்குத் துணை புரிந்த நூல்கள்
1. சங்க இலக்கியம் (மூலமும் உரையும்)உரையாசிரியர் : புலவர் அ. மாணிக்கனார், எம்.ஏ,  வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 600 017.  (பதினைந்து தொகுதிகள்) பதிப்பு ஆண்டு 1999

2. பத்துப்பாட்டு (மூலம் விளக்க உரையுடன்) விளக்கவுரை : ஞா. மாணிக்கவாசகன்உமா பதிப்பகம்,சென்னை – 600 001. பதிப்பு ஆண்டு டிசம்பர் 2002

3. தமிழ் இலக்கிய வரலாறு ஆசிரியர்: முனைவர். சி. பாலசுப்பிரமணியன்பாரி நிலையம், சென்னை – 600 108 பதிப்பு ஆண்டு 2008.

4. புறநானூறு – முதல் தொகுதிஉரையாசிரியர் : ஒளவை. சு. துரைசாமிபிள்ளைதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூல் பதிப்புக்கழகம் லிமிடெட், சென்னை – 600 001 பதிப்பு ஆண்டு 1964.
5. சிலப்பதிகாரம் (மூலமும் தெளிவுரையும்) உரையாசிரியர். ஜெ. சந்திரன். எம்.ஏ, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 600 017. பதிப்பு ஆண்டு – முதல் பதிப்பு 1988, எட்டாம் பதிப்பு – 2000

6. கலிங்கத்துப்பரணி - குறிப்புரையுடன் உரையாசிரியர் : வித்துவான் பெ பழனிவேலபிள்ளை திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூல் பதிப்புக்கழகம் லிமிடெட், சென்னை – 600 001 பதிப்பு ஆண்டு 1965

7. பழமொழி நானூறு உரையுடன் உரையாசிரியர் : புலவர். ம. இராச மாணிக்கம் பிள்ளை  திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூல் பதிப்புக்கழகம் லிமிடெட், சென்னை – 600 001 பதிப்பு ஆண்டு 1963

No comments:

Post a Comment