Search This Blog

Thursday, June 2, 2011

தீர்க்க முடியாத பிரச்னைகள் விரைவில் தீர - ஒரு ஆன்மீக ஆலோசனை.




கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி முறைகளை உணர்ந்து , அதை நடை முறைப் படுத்தினால் - உங்கள் கஷ்டங்கள் காற்றாய் பறந்து ஓடும். சொல்வது எளிது. செய்வது அரிது.  இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்று தயங்கி தயங்கி நின்றால், கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதுதான். 

உங்கள் குழந்தைகளுக்கு  இந்த நடைமுறைகளை சின்ன வயதில் இருந்தே பழக்கப் படுத்துங்கள். வருங்கால சந்ததி வளமாகட்டும்.

பாரதத்தில் பிதாமகர் பீஷ்மருக்கும், தருமருக்கும் - இடையே நடந்ததாக கூறப்படும் , இந்த சம்பவம் - இந்த கலியுகத்தில் , நம் அனைவருக்கும் தேவையான ஒரு வரப்ரசாதம் .

தருமர் 'கடினமான துன்பங்களைக் கடப்பது எப்படி?' என பீஷ்மரிடம் வினவ..பீஷ்மர் உரைக்கிறார்.
http://www.sawf.org/newedit/edit11212005/mahabharat1.jpg
'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். 

யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
தருமா! மனிதன் இவ்வுலகிலும், மேலுலகிலும் கொடுந் துன்பங்களைக் கடந்து செல்ல ,  செய்யத்தக்க செயல்களில் சிலவற்றை உனக்கு உபதேசித்தேன்.நீயும் இவ்வாறு நடந்து துன்பங்களைக் களைவாயாக!" என்று கூறி முடித்தார் பிதாமகன்.

நாமும், முயற்சி செய்ய ஆரம்பிக்கலாமே !


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_01.html#ixzz1O5GV0C58

No comments:

Post a Comment