Search This Blog

Saturday, May 28, 2011

Life is Beautiful

Life is Beautiful


யுத்தம்! ஒரு மனிதனின் வாழ்க்கையில், குடும்பங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, உறவுகளைச் சிதைக்கிறது என்பதைக் கூறும் திரைப்படம். இரண்டாம் உலகப் போரின்போது நடைபெறும் கதை.

இது போல் எத்தனை கதைகள்...! எமது நாட்டிலும் இன்னும் எங்கெல்லாமோ..!


மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட கிய்டோ நகரத்தில் புத்தகக் கடை ஒன்றை வைப்பதற்காக தனது மாமா வீட்டிற்கு வருகிறான். வரும்வழியில், ஒருபண்ணை வீட்டில் தன்னை இளவரசர் என்று ஒரு சிறுமியிடம் அறிமுகப்படுத்தி தண்ணீர் குடிக்கும்போது, மேலே இருந்து வைக்கோல் போரில் விழும் தோராவைத் தாங்கிப் பிடிக்க இருவரிடையே ஒரு இனிய அறிமுகம்!

தோராவுக்கு திருமண ஏற்பாடுகள், கிய்டோ வேலை செய்யும் ஹோட்டலிலேயே நடைபெற, அது எதுவும் தெரியாமல் கிய்டோ வேலை செய்ய, புத்திசாலித்தனமாக மேசைக்குக் கீழே அவனைச் சந்தித்து தோரா விஷயத்தைச் சொல்ல இருவரும் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள்.


1939 ம் ஆண்டு. இரண்டாம் உலகப் போரின் கடைசி. இப்போது கிய்டோ தான் விரும்பியவாறு புத்தகக்கடை, தோரா, ஐந்து வயது மகன் ஜோஸ்வாவுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஜெர்மன் படைகள் வருகின்றன. கடைகளில் 'நாய்களுக்கும் யூதர்களுக்கும் அனுமதியில்லை' வாசகங்கள்.

ஜோஸ்வாவின் பிறந்தநாள். யூதர்களைக் கைது செய்து தனியிடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.  யூத இனத்தவனான கிய்டோ, மாமா, ஜோஸ்வாவையும் அழைத்துச்செல்ல, யூத இனத்தைச்சாராத தோரா இராணுவ அதிகாரிகளிடம் பேசிப் பார்த்து, பலனின்றி, தன்னையும் அழைத்துச் செல்லக்கோருகிறாள்.

எங்கு போகிறோம் என்றே தெரியாமல் எல்லோரும் இறுகிப் போய் இருக்க, ஜோஸ்வா கேள்வி கேட்டுக் கொண்டே வருகிறான். கிய்டோ வழக்கம் போல் நகைச்சுவையாக உனது பிறந்த நாள் என்பதால் ஜாலியாக சுற்றுகிறோம் எனக்கூற, ஜோஸ்வா நம்புகிறான். கிய்டோவும், மகனும் ஒரே இடத்தில். தோரா தனியாக பெண்கள் சிறையில்.


சிறிய அறைகளில் ஏராளமானோர் நெருக்கமாக, அடுக்கடுக்காக அலுமாரி போன்ற படுக்கைகள். ஜோஸ்வா இது பிடிக்காமல், வீட்டுக்குப் போகலாம் என்கிறான்.

அவனைச் சமாளிக்க கிய்டோ ' இது ஒரு விளையாட்டு, 1000 points எடுப்பவர்களுக்கு ஒரு கவச வாகனம் (tank ) பரிசு என்கிறான். விளையாட்டின் நிபந்தனைகளாக,

-'அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று கேட்கக்கூடாது.
-பிஸ்கட்,ஸ்நாக்ஸ் கேட்கக் கூடாது.
-வீட்டுக்குப் போகவேண்டுமென்று கேட்கக்கூடாது' என்கிறான்.

ஜோஸ்வா அதை நம்புகிறான்.


ஒருநாள் 'குளிக்க' அழைக்கும்போது போகாமல் அறையினுள் ஒளிந்து கொள்கிறான்  ஜோஸ்வா. 'குளிக்க' என்று , விஷவாயுவால் கொல்வதைக் கூறுகிறார்கள். வீட்டிலும் விளையாட்டாக அப்படி அடிக்கடி தன்னை மறைத்துக் கொள்ளும் ஜோஸ்வா, இயல்பாகவே ஒளிந்து தப்பித்துக் கொள்கிறான்.


போர் முடிவுக்கு வரும் காலப்பகுதி. முகாமில் எல்லோரையும் கொன்று இப்போது சொற்பமானவர்களே எஞ்சியிருகிறார்கள். நேச நாட்டுப் படையினர் அருகில் வந்து விட்டார்கள். பின்வாங்கிச் செல்ல ஆயத்தமாகும் ஹிட்லரின் படைகள் அவசரமாக எஞ்சியிருப்பவர்களைக் கூட்டிச்சென்று கொல்கிறார்கள்.

இறுதியில் தோராவையும் அழைத்துச்செல்ல, இப்போது அவளைக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தப்பிக்க முயற்சி செய்யும்  கிய்டோ தாங்கள் தங்கியுள்ள கட்டடத்துக்கு வெளியே வந்து அங்குள்ள ஒரு உறுதியான பெட்டியைக் காட்டி, அதனுள் ஜோஸ்வாவை ஒளிந்து கொள்ளச்சொல்லி, இன்னும்  60 points தான் தேவை என்றும், யார் கண்ணிலும் படாமல், பொறுமையாக எந்த நடமாட்டமும் இல்லாதவரை  திறக்காமல் இருந்தால், கவச வாகனம் கிடைக்கும் எனக் கூற ஜோஸ்வாவும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறான்.

கிய்டோ அங்கிருந்து தோரா தங்கியுள்ள முகாமிற்கு செல்கிறான். அவள் காப்பாற்றப் பட்டாளா ?


படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நகைச்சுவையாகவே நகர்கிறது..சோகம் கூட.

-கிய்டோ, தோராவின் காதல் காட்சிகள்,

-வதைமுகாமில் கைதிகளுக்கான ஒழுங்கு விதிகளைக் கூற வரும் ஜெர்மன் அதிகாரிகள் மொழி பெயர்த்துச் சொல்ல ஒருவரை அழைக்க, கிய்டோ ஓடிவந்து, அவர்கள் சொல்வதை அப்படியே மாற்றி தனது மகனுக்குச் சொன்ன விளையாட்டின் விதிமுறைகளாகக் கூறுகிறான். அதிகாரிகள் போனபின் மற்றவர்கள் குழம்ப, தன்னை ஒன்றும் கேட்க வேண்டாமென்று கூறி விடுகிறான்.

-குளிக்க அழைக்க, அது நச்சு வாயுக் குளியல் என்பதை அறியாத கிய்டோவின் மாமா தனது மேற்சட்டையைக் கழற்றிவிட்டு வருகிறார். குளியலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வரும் பெண் அதிகாரி, தடுக்கி விழப்பார்க்க, அவர் தாங்கி, ' பார்த்து ' எனக்கூறும் நெகிழ்வான காட்சி.

-இறுதியில் நேச நாட்டுப் படை வீரன் ஒருவன் சிறுவனைத் தன்னுடன் கவச வாகனத்தில் தூக்கி வைத்துக்கொள்ள, அது விளையாட்டில் தான் வென்றதற்கு கிடைத்த பரிசாகவே எண்ணி மகிழ்ந்து கொள்ளும் ஜோஸ்வா.

-விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்படும் போதெல்லாம் ஜோஸ்வா பார்ப்பதால் அவன் முன்னிலையில் கைகளை வீசி நகைச்சுவையாக நடந்து செல்லும் கிய்டோ, இறுதியில் தன்னைக் கொல்ல அழைத்துச்செல்லும் போதும், ஜோஸ்வா பெட்டிக்குள், மறைந்திருந்து பார்ப்பதைக் கவனித்ததும், அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு அதேபோல் கைகளை வீசி நடக்கும் நெகிழ்வான காட்சி.

இப்படி ஏராளமான, மனதை வருடும் காட்சிகள், பின்னணி இசையுடன் 1997 இல் வெளிவந்தது.

இயக்கம் - Roberto Benigni அவரே கிய்டோவாக நடிக்க, மனைவி தோராவாக.
மொழி - Italian, German

விருதுகள்-
Academy Award for Best Foreign Language Film 1998 - Best actor 
best dramatic score Grand Prix, Cannes 1998
European Film Award For Best European Film 1998

No comments:

Post a Comment