Search This Blog

Saturday, May 21, 2011

நண்டு

நண்டு


“உங்க கூட யாராவது முக்கியமானவங்க இருக்காளா..? இருந்தா வரச்சொல்லுங்கோ.. கொஞச்ம் பேசணும்” என்ற டாக்டர் வரதராஜனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும், குழந்தை போலிருந்தது அவரின் பேச்சும், முகமும், அதற்கு சற்றும் பொருந்தாத மீசை வைத்திருந்தார்.

“அவருக்கு அண்ணா ஒருத்தர் இருக்கார். ஹைதாராபாத்ல.. ஏன் அவருக்கு என்ன..? ஏதாவது சீரியஸா..? ப்ளட் ஏத்தினா ஹீமோக்ளோபின் ஏறிடும்னு சொன்னேளே..? பெருமாளே.. அவருக்கு ஏதுமில்லைதானே..? என்று அடுக்கடுக்காய் பதட்டத்தோடு, கேள்வி கேட்ட கமலாவின் நெற்றி முழுவதும் ஊரில் உள்ள அத்தனை கோயில் குங்குமம், வீபூதி அப்பியிருக்க, அந்த ஏசி ரூமில் வேர்த்திருந்தாள்.

“அப்ப சரி.. அவர் வரவரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணவேணாம்.. கொஞ்சம் நிதானமா நான் சொல்றத கேளும்மா.. மிஸ்டர்.. ரகுவுக்கு, வந்திருக்கிறது ‘அக்யூட் லூக்கேமியா’ அதாவது ப்ளட் கேன்சர்” என்றதும், கமலாவின் அடிவயிற்றிலிருந்து “அய்யோ.. பெருமாளே...” என்று அலறி அழ ஆரம்பிக்க, வரதராஜன் காத்திருந்தார். ஒரு அழகான பேரிளம் பெண், எதிரே ஒருவர் உட்கார்ந்திருப்பது கூட உணரமுடியாமல், விக்கி, விக்கி அழுவதை பார்த்து எந்தவிதமான உணர்வுமில்லாமல் டாக்டர் வரதராஜன் காத்திருந்தார். இந்தமாதிரி பல பேர்களின் அழுகையை, கதறலை, தன்னுடய இந்த சென்டரில் பார்த்திருக்கிறார். பழகி போய்விட்டது.

கமலா கொஞ்சம், கொஞ்சமாய் அழுவதை நிறுத்த ஆரம்பிக்க, காத்திருந்த வரதராஜன் மெல்ல, ”இதபாரும்மா.. கஷ்டமாத்தான் இருக்கும், வேற வழியில்ல. இப்படி அழறத விட்டுட்டு, அவர ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்கோ.. உடனடியா ஐ.சி.யூல வச்சு டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலைன்னா.. நாலு நாளோ, அஞ்சு நாளோதான், அப்புறம் ரொம்பவே கஷ்டம். இப்பவே 20% தான் சான்ஸ் இருக்கு.”

கமலா மூக்கை உறிஞ்சியபடி, “ அப்படின்னா .. அவர் பொழைக்க மாட்டாறா..? நீஙக் சரியா பாத்தேளா..? சினிமாவுல வர்றாப்புல ரிப்போர்ட் எதாவது மாறியிருக்க போறது..? எப்படி அவருக்கு போய்.. இது..  வெத்தல பாக்குகூட போடமாட்டாறே..டாக்டர்..? என்று மீண்டும் குலுங்க, ஆரம்பிக்க,

“சிலருக்கெல்லாம் காரணமே சொல்ல முடியாது.. வந்துடுத்து.. ஆக வேண்டியதை பார்க்கணும்” என்றார்.

கமலா சட்டென்று சுதாரித்து, “கேன்சர்தானே டாக்டர்.. பெருமாள் மேல பாரத்தை போட்டுட்டு, அட்மிட் பண்ணா.. ஒரு வாரமோ, பத்து நாள்லேயோ.. அப்படியே சிரிச்சிண்டே எழுந்து வர்ராப்புல பெருமாள் பண்ணிடுவார்.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..?”

வரதராஜனுக்கு என்ன சொவதென்றே தெரியவில்லை. இவ்வளவு இன்னொசென்ஸா..? ”நீஙக் நினைக்கிறதைபோல அவ்வளவு ஈஸியில்லை.. ஹி ஹேஸ் காட் சம் வாட் அரவுண்ட் த்ரீ லேக்ஸ் கேன்சர் செல்ஸ். நிறைய செலவாகும், உங்க குழந்தைகள் வரலையா..? இருந்தா வரச்சொல்லுங்கோ..”

கமலாவுக்கு மீண்டும் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. “எங்களுக்கு குழந்தைகள் ஏதுமில்ல, பொறக்கல டாக்டர்.. அதவிடுங்கோ.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..? எவ்வளவு செலவாகும்..? தம்பிக்கு ஒண்ணுன்னா அண்ணங்கார செய்ய மாட்டாறா என்ன..? நீங்க சொல்லுங்கோ டாக்டர். எவ்வளவு ஆகும்?”

“உடனடியா அப்பல்லோவோ.. அல்லது அடையார் கேன்சர் இன்ஸ்டிடூயூட்லயோ அட்மிட் பண்ணனும். ஒரு நாலஞ்சு நாள் டீரீட்மெண்ட்டுக்கு அப்புறம், ஹீமோக்ளோபின், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஒரளவுக்கு ஏறினதுக்கு அப்புறம்தான் தெரபி ஸ்டார்ட் பண்ணுவா.. இதுக்கே குறைஞ்சது ரெண்டு மாசம் ஆயிடும். சுமார நாலுலேர்ந்து அஞ்சு லட்சமாகிடும்.. அதுக்கு அப்புறம் அவர் தெரபிக்கு ரெஸ்பாண்ட் செஞ்சார்ன்னா திரும்பவும் அவருக்கு கேன்சர் செல் உருவாகாம இருக்கணும். அதுல சொஸ்தமாகி ’போன் மேரோ டிரான்ஸ்பிளேஷன்’ செய்து வெளிய வரதுக்கு கிட்டத்தட்ட பதினைஞ்சு லட்சம் ஆகிடும். இதெல்லாம் இதுக்கு இருக்கிற டிரீட்மெண்ட். ஆனா முதல் தெரபிய அவர் பாடி ஏத்துக்கிட்டு ரியாக்ட் ஆகாம இருக்கணும். அதுக்கு அப்புறம் கடவுள் விட்ட வழி..” என்று சொல்லிவிட்டு போக,

கமலாவுக்கு உலகமே இருண்டது என்று சொன்னால் அது சாதாரண வார்தை. ’அவர் இல்லாமல் எப்படி வாழப்போகிறேன். நிஜமாகவே போயிடுவாரோ?.. இப்பவே இந்த நிமிஷமே பெருமாள் என்னை எடுத்துக்க மாட்டானா.. ? பெருமாளே..உனக்கு எத்தன விரதம், எத்தன ஆராதனை..? எத்தனை அர்சனைகள்? பத்து பதினைஞ்சு லட்சத்துக்கு எங்கே போவேன். தட்டி முட்டி இன்சூரன்ஸ், அது இதுன்னு மொத்தமா ஒரு லட்சம் வரைக்கும் தேறும்.. பேங்க்ல பெரிசா எதுவுமில்ல.. நகையா பாத்தாக்கூட பெரிசா தேறாதே..? வேற எங்க எவ்வளவு பணம் இருக்குன்னு தெரியல.. இருபத்தி அஞ்சு வருஷமா அடிமாடு கணக்கா சேல்ஸ் ரெப்லேர்ந்து ஊர் ஊரா சுத்தி அலைஞ்சு இப்பத்தான் ஒரு கம்பெனியின் மேனேஜராய் இருப்பவரிடம் என்ன இருந்து விட போகிறது. பெரிசா சாமர்த்தியம் இல்லாட்டாலும், சமத்து.. என்று நினைக்கும் போது ரகுவின் முகம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டியது.

அவரோட நிழல்லேயே சுகமா இத்தனை நாள் இருந்துட்டு.. இதுவரைக்கு எதுக்காகவும் என்னை அலையவிட்டதேயில்லை. எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார். ஆனா அடிக்கடி சொல்லுவார்..” எல்லாத்தையும் தெரிஞ்சிக்கோடின்னு” அப்ப கேட்கல.. யாரை கேட்பது, யார் எனக்கு தருவார்கள்..? அப்படியே கிடைச்சாலும் பொழைக்கற சான்ஸ் 20%ன்னு சொல்றாளே..? கமலாவுக்கு துக்கம் புரட்டி, புரட்டிக் கொண்டு வந்தது. எங்கயாவது ஓவென உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது. தனக்குன்னு அழுவதற்கு கூட ஒருத்தரும் இல்லையே என்பது இப்போது குறையாய் தோன்றியது.

ஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள ஒரு எஸ்.டி.டி.பூத்துக்கு வந்து தன் கைப்பையிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்து அதிலிருந்த ரகுவின் அண்ணனின் நம்பருக்கு போன் செய்தாள். எதிர் முனையில் ரொம்ப நேரம் ரிங் போய் கடைசி நேரத்தில் எடுக்கப்பட

“அண்ணா.. நான் தான் கமலா பேசறேன்..” என்று பேச ஆரம்பித்ததும், ஓவென அழ ஆரம்பித்தாள். சுற்றி உள்ளவர்கள் எல்லாம் பூத்தினுள் அழும் கமலாவையே பார்த்து கொண்டிருக்க, எதிர் முனையில் ”கமலா.. என்னம்ம்மா ஆச்சு..? என்ன ஆச்சு சொல்லும்மா.?” என்று மறுபடி, மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் பதட்டம் அடங்கி, மற்றவர்கள் தன்னை பார்பதை உணர்ந்த கமலா, நிதானமாகி, மூக்கை உறிஞ்சி தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டே டாக்டர் சொன்னதை சொன்னாள். எதிர் முனையில் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தது.

”ஹலோ.. அண்ணா.. ஹலோ.. அண்ணா.. இருக்கேளா..லைன்ல..?”

”ம்.. ம்.. இருக்கேன். என்னம்மா கடவுள் இப்படி உன் தலையில் எழுதிட்டான். இப்ப என்ன பண்றதுன்னே தெரியல.. நெஞ்செல்லாம் படபடன்னு வருது.. சித்த நேரம் கழிச்சு உன் செல்லுல பேசறேன்” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு அவர் மீண்டும் பேசினால் என்ன சொல்வார் என்று இப்பவே ஊகிக்க முடிந்தது. யாராய் இருந்தால் என்ன.. செலவு செய்தால் பிழைப்பார் என்றால் அங்கே இங்கே புரட்டுவார்கள். இப்படி நம்பிக்கையே இல்லாத வியாதிக்கு அஞ்சு லட்சம், ஆறு லட்சம் என்று யார்தான் என்ன செய்வார்கள்.. போன பணம் திரும்பி வருமா..? சிறிது நேரம் ஒரு வெறுமை பார்வை போனை பார்த்தபடி இருக்க, வெளியே கடைகாரன் கதவை தட்ட, வெளியே வந்து எவ்வளவு என்று கேட்டு, பணம் கொடுத்து விட்டு அண்ணாவின் போனுக்காக காத்திருந்தாள். மணி அடித்தது. எடுத்து கொஞ்சம் சத்தமில்லாமல் இருந்த ரோட்டின் முனைக்கு நடந்தபடியே பேச ஆரம்பித்தாள். “சொல்லுங்கோண்ணா..”

“கமலா. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.. எனக்கும் அறுவதிரண்டு வயசாச்சு.. இருந்த காசுல ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி மூழ்கியாச்சு.. இரண்டாமவ ஏதோ இப்பத்தான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கா.. என் பென்ஷன்ல எங்க ரெண்டு பேரோட கதை ஓடிண்டுருக்கு. நினைக்க, நினைக்க அவனுக்கு இப்படி ஒரு வியாதியான்னு துக்கம் நெஞ்ச அடைக்கிறது. ஒரு பத்தாயிரம், இருபதாயிரம்னா அப்படி இப்படி புரட்டிடுவேன். நாலு அஞ்சு லட்சத்துக்கு என்ன பண்ணுவேன், எங்கே போவேன். அப்படியே பண்ணினாலும்..? ” குரல் கம்மியது. ”கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு எதாவது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கு அழைச்சுண்டு போ.. இப்போ அங்கேயே.. எல்லா விதமான டிரீட்மெண்டும் வந்துடுத்து. கையில இருக்கிறதையெல்லாம் அப்பல்லோவுக்கு கொடுத்திட்டயான உனக்குன்னு பின்னாடி எதாவது வேண்டாமா..? என்னடா அண்ணா இப்படி சொல்றாளேன்னு நினைக்காத.. நான் சொல்றத கேட்கிறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். வேற வழியில்லை, பகவான் இருக்கான் , பாரத்தை அவன் மேல போட்டுட்டு போ, அவன் பாத்துப்பான்.. நானும் இங்க வேண்டிக்கிறேன். எதாவது ஒரு பண்ண மாட்டானா அந்த பெருமாள்.. பாத்துக்கோ.. தைரியமா இரு...” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. இது எதிர்பார்த்ததுதான். எனக்குன்னு என்ன இருக்கிறது இவருக்கு அப்புறம்?. கல்யாணமான காலத்திலிருந்து யாரையும் எதிர்பார்காமல் வாழ்ந்தாகிவிட்டது இதுவரை. யாரிடம் கேட்பது பக்கத்து வீட்டு பாங்க் மேனேஜரை கேட்போமா..? எதை வைத்து கொடுப்பார்..? இருக்கிற வீடும் வாடகைதான். அவள் பக்கம் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. வயதான அம்மா, அப்பா.. இப்போது இதை சொன்னால் தாங்குவார்களா..? என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் டாக்டரிடம் போய் நின்றாள்.

“டாக்டர்.. உடனடியா அட்மிட் பண்றதுக்கு பணம் புரட்டறதுக்கு கொஞ்சம் லேட்டாகும். அது வரைக்கும் இங்கயே ஏதாவது பண்ண முடியுமா..? இப்போதைக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லையே..?” டாக்டர் வரதராஜன் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு கமலாவை நிமிர்ந்து பார்த்து,

“அம்மா இது என்ன குளிர் ஜூரம் மாதிரியா.. அவர் ரொம்ப அட்வான்ஸ்டு லெவல்ல இருக்கார். இங்க என்னால பேசிக் டிரீட்மெண்ட் மட்டும்தான் பண்ண முடியும். ப்ளட் ஏத்தலாம், ப்ளேட்லெட்ஸ் ஏத்தலாம். ஆனா பாக்கிறதுக்கு நல்லாத்தான் இருப்பார். எந்த நேரத்திலேயும் எது வேணும்னாலும் நடக்கலாம். ப்ளேட்லெட்ஸ் கொறைஞ்சா அப்புறம் ப்ளட்கூட ஏத்த முடியாது. ப்ளட் ஹூஸ் ஆக ஆரம்பிச்சிடும். ஹார்ட், கிட்னி, ப்ரெயின், எது வேணும்னாலும், எப்ப வேணுமின்னாலும் அட்டாக் ஆகலாம். ஏன் திடீர்னு கோமாவுல கூட போகலாம். அவர் உடம்புல எதிர்பு சக்தியே கிடையாது. ஹி இஸ் பவுண்ட் டு பி இன்பெக்டெட்.. தீடீர்னு தொண்டை கட்டிக்கும், ஜலதோஷம் பிடிக்கும், அப்படியே நிமோனியால கூட கொண்டு விடும். அப்படி ஏதாவது ஆயிடுத்துன்னா மேட்டர் ஆப் ஹவர்ஸ். ரொம்ப சீக்கிரமா பரவிடும். உடம்புல ஏதாவது பார்ட்லனா ஆபரேட் பண்ணி அறுத்தெரிஞ்சிடலாம். ஆனா ப்ள்ட் கேன்சர்ல.. இப்போதைக்கு மருந்து, ப்ளட் எல்லாம் ஏத்தியிருக்கேன். சீக்கிரமா அட்மிட் பண்ணியான்னா.. அந்த 20% சான்ஸை யூஸ் பண்ணலாம்” என்று ஒரு கதவை திறக்க, அமைதியாய் வெளியேறினாள்.

வேறு வழியில்லை.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் வரமாட்டார். சின்ன தலைவலிக்கே ஊரை ரெண்டு படுத்தறவர்.. இது தெரிஞ்சா அவ்வளவுதான் இப்பவே உசிர விட்ருவார். வீட்டிற்கு போய் மெதுவாய் பேசி, தயார் படுத்த வேண்டும். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லைன்னு சொல்லி, சொல்லி அழைத்து போக வேண்டும் என்று யோசித்தபடி, வார்ட் ரூமுக்குள் நுழைந்தவளை பார்த்ததும், ஆர்வமாய் சந்தோஷத்துடன், கையில் மாட்டியிருந்த சலைன் டியூப்புடன் எழுந்து உட்கார்ந்த ரகு, கமலாவை பார்த்து..

“என்ன சொன்னார்.. டாக்டர்.. எல்லாம் நார்மல்னு சொல்லியிருப்பாரே.. பயப்படாதேடி லூசு.. இப்பத்தான் ப்ளட், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஏத்துன உடனே.. ரொம்ப ப்ரெஷா ஃபீல் பண்றேன். அநேகமா ஹிமோக்ளோபின் 4.5லேர்ந்து 9க்கு ஏறியிருக்கும்.. பாரு எனக்கு இப்ப மூச்சே வாங்கலை, உடம்புல தான் அங்க, அங்க ப்ள்ட் களாட் குறையல.. மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்லை எல்லாம் சரியா போச்சு.. இன்னும் ஒரு நாளோ, ரெண்டு நாளோ.. ப்ள்ட் ஏத்துனதும் சரியாயிடும். சரியானவுடனே குலதெய்வம் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திடுவோம். ஏதோ ஒரு குறை வச்சிட்டம் போலருக்கு. அதான் இப்படி படுத்தறது” என்றவனின் குரல் கரகரவென்று தொண்டை கட்டியது போலிருக்க,. கமலா அழாமல் அவனை பார்த்தபடியிருந்தாள்.
******************************************************************************
லெமன் ட்ரீயும் .. ரெண்டு ஷாட் டக்கீலாவும் தொகுப்பிலிருந்து..

No comments:

Post a Comment