Search This Blog

Thursday, May 26, 2011

பாதம் காக்கும் பத்து வழிமுறைகள்.

பாதம் காக்கும் பத்து வழிமுறைகள்.
 -தி. செந்தில்குமார்.
உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ள ஒரு ஆய்வில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம் என்றும், சுமார் 10 நபர்களில் இரண்டு பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாகாவும் சர்க்கரை நோய் மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 30 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட 230 மில்லியனாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய சர்க்கரை நோய் மருத்துவர்களின் மாநாட்டில் 230 மில்லியன் 2025 ஆம் ஆண்டு 350 மில்லியனாகஉயரும் என்று கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 6 மில்லியன் மக்கள் உலகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
உலகில் அதிகம் பேரை கொல்லும் நான்கவது வியாதி இதுவாகும். இன்சுலின் ஹோர்மோன் சுரப்பு குறைவாதால் உடம்பின் ஏற்படுத்தும் மாற்றங்களே சர்க்கரை வியாதி. இது பொதுவாகக் கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் (life style changes) போன்ற முக்கிய காரணங்களால் மனிதர்களைப் பாதிக்கிறது. சர்க்கரை நோய் மனிதனின் உடல் உறுப்புக்கள் தலை முதல் பாதம் வரை அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கிறது. இதில் கால் பாதத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் கடைசியில் காலை இழக்கும் அளவுக்கு அபாயத்தில் கொண்டு போய் விடுகிறது.

இதைத் தமிழில் சிலர் இனிப்பு நீர் வியாதி என்றும் அழைக்கின்றனர். கால் பாதம் எப்படி பாதிக்கப்படுகிறது என்று இந்தக் கட்டுரையில் சிறிது விரிவாகப் பார்க்கலாம். முன்பு சொன்னது போல உடம்பின் அனைத்துப்பகுதிகளையும் பாதிக்கும் சர்க்கரை நோய் உடம்பில் உள்ள கால் பகுதியில் உள்ள நரம்புகளையும், ரத்தக்குழாய்களையும் மிக மிக மோசமாகத் தாக்குவதால் கால்கள் அதிகமாக பாதிப்படைகிறது.

உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் முக்கியமாக இரண்டு வேலையை செய்ய மூளையால் பணிக்கப்படுகின்றன. இதில் ஒரு முக்கியப் பணி தொடு உணர்வுகளைக் கடத்தும் பணி. இந்த நோய் நரம்புகள் செய்யும் இந்த வேலையை முற்றிலுமாக துண்டிக்கிறது. நரம்புகளின் அன்றாட செய்யும் பணிகளை பாதித்து அதாவது நீங்கள் நடக்கும் போதோ, பேருந்தில் பயணிக்கும் போதோ, கால் உணர்ச்சிகள் இன்றியமையாதது. நரம்புகள் செயல் இழப்பதால், கால் உணர்வுகள் பாதிக்கப்படுவதால் நாம் நடக்கும் போது சாலையிலோ அல்லது வீட்டிலோ கால்கள் உராய்வினால் தோலில் ஏற்படும் சிறு காயங்கள் மிகப் பெரிய புண்ணாக உருமாறி கால்களைத் துண்டிக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

ரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் தேங்கிப்போய் சிறு புண்கள் பின் புரையோட ஆரம்பித்து செல்களை செயல் இழக்கச் செய்து அதை இறக்கச் செய்கிறது. இந்த நிலையை மருத்துவர்கள் கால்கள் அழுகிய நிலை (நெக்ரோசிஸ்) என்கின்றனர். கடைசியில் வேறுவழி இல்லாமல் மருத்துவர்கள் நோயாளியின் கால்களை எடுக்கும் (amputation) நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதில் இருந்து எப்படி சர்க்கரை வியாதிக்காரர்கள் அழகிய பாதங்களை பாதுகாப்பது என்று சில வழிமுறைகளை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நம் கால் பாதம் குட்டியான 5 விரல்களையும் அதனுள் 26 எலும்புகளையும், 33 மூட்டுக்களையும், சுமாராக 100 தசைகளையும், 250,000 வேர்வை சுரப்பிகளையும் உள்ளடிக்கியது. ஒரு மனிதன் சுமாராகத் தன் வாழ்நாளில் 115,000 மைல்கள் நடக்கின்றான். நடப்பது ஒரு மிக சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது பாதங்களுக்கும், உடம்பிற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கிறது. உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் 56,000 பேர் சரியான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமல் இந்த நோயால் கால்களை இழக்கின்றனர். இப்படிப்பட்ட உன்னதக் குணங்கள் கொண்ட பாதம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் அழகிய பாதங்களை எப்படி பாதுகாப்பது என்ற சில வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

கால் பாதம் காக்கும் பத்து சிறந்த வழி முறைகள்

1. எங்கு சென்றாலும் செருப்பு அணிவதை கடமையாக கொள்ளலாமே. செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிருங்கள். அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலனி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும்.

2. வராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது உங்களின் ஒரு முக்கியக் கடமையாக கொள்ளுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் புண்ணை உருவாகத் துணை செய்கிறீர்கள் எனலாம்.

3. மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக்காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் 
காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்.
4. உங்கள் பாதங்களின் பின் பகுதி உங்களால் எளிதாகப் பார்க்க முடியாததால் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு புண்கள், கொப்புளங்கள், தோலின் சிவந்த நிறம் ஏதும் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதியுங்கள் நீங்களே. இது ஒரு வருமுன் காக்கும் முறையாகும்.

5. படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

6. நீங்கள் நடக்கும் போது பாதம் உங்கள் உடல் எடையின் பெரும் பகுதியை தாங்கிக் கொள்கிறது. அதனால் உங்கள் கால்களுக்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசை உங்கள் பாதங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க MCR (MICRO CELLULAR RUBBER) என்ற ஒரு வகை ரப்பரால் செய்யப்பட்ட காலனிகளை வாங்கி அணிவது ஒரு நல்ல வழியாகும். இது அனைத்து செருப்புக் கடைகளிலும் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7. நீங்கள் காலனி (SHOE) அணிபவரா, அப்படியானால் சாயம் கலந்த செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை (COTTON SHOCKS) உபயோகியுங்கள். காலனிகளை அணியும் முன் உள்ளே ஏதும் கூரான குப்பைகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பின் அணியுங்கள்.

8. நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க ஒரு சிறந்த வழி முறையாகும்.

9. அப்படி புண்கள் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.

10. உங்களின் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிக முக்கியம்.

No comments:

Post a Comment