Search This Blog

Thursday, May 5, 2011

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்
-கணேஷ் அரவிந்த்.
சிலுவையும் சீடர்களும்
ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார்.

இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா!
அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.
சம்பந்தி சண்டையா?

சட்டமன்றத்தில் வினாயகம் என்பவர் எழுந்து, “
மிருகக்காட்சி சாலையில் நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை  சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே!” என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா, ”சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.

புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.
புளியமரத்தின் சாதனை
பேரறிஞர் அண்ணா தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், ”விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக - புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.

அண்ணா அமைதியாக எழுந்து ”அது புளியமரத்தின் சாதனை” என்றார்

அவை சிரிப்பில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?

ஊசி போட்டாச்சா?

அறிஞர் அண்ணா தோழர் இராசகோபால் என்பவரை அடிக்கடி கிண்டல் செய்து கொண்டேயிருப்பார். ஒரு சமயம் தோழர் இராசகோபால் அவர்கள் அண்ணாவிடம் வந்து தம்மை இரவு எலி ஒன்று கடித்து விட்டதாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே எலியா? உன்னையா? என்று கேட்டார்.

”ஆமாங்க! என்னைத்தான் எலி கடித்துவிட்டது!” என்று தோழர் இராசகோபால் இரக்கம் தோன்றக் கூறினார்.

”ஊசி போடனுமே! ஊசி போட்டாச்சா?” என்று அண்ணா கேட்க, உடனே இராசகோபால் இன்னும் போட்டுக்கலிங்க! என்று கூறினார்.
உடனே அண்ணா யாருக்கு ஊசி என்று இராசகோபாலைப் பார்த்துக் கேட்டார்.

எனக்குத்தான்! என்று இராசகோபால் அவசரமாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிர்த்துக்கொண்டே உனக்கல்ல! அந்த எலிக்கு ஊசி போட்டாச்சா என்றுதான் கேட்டேன்! என்றார்.

”எலிக்கு ஏன் ஊசி?” என்று இராசகோபால் கேட்க,
அதற்கு அண்ணா, அதனுடைய விஷம் உன்னைப் பாதிப்பதை விட, உன்னுடைய விஷம் அதனை அகிமாகப் பாதிக்கச் செய்திருக்கும்!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
நாட்கள் எண்ணப்படுகின்றன
ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் என்பவர் அண்ணாவைப் பார்த்து, "Your Days are numbered"  (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.
அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து, "My Steps are measured" (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.
ஆட்டிறைச்சி மட்டும் வேண்டாம்
ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி அண்ணா இல்லத்துக்கு வந்தார்.
 அண்ணா ம.பொ.சி.க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்குச் சொல்லி அனுப்பினார்.
உடனே ம.பொ.சி “ஆட்டு இறைச்சி மட்டும் வேண்டாம்.” என்றார்.
“எதற்கு? ” என்றார் அண்ணா.
 “டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குன்னுட்டார்” என்றார் சிலம்பு செல்வர்.
உடனே அண்ணா நகைச்சுவையாக ”அடடே, அந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சு போச்சா? ” என்றார்.

No comments:

Post a Comment