Search This Blog

Thursday, May 26, 2011

கார்கால நினைவுகள்!

கார்கால நினைவுகள்!
-முனைவர். மா. தியாகராஜன்.
அடர்ந்த காடுகள்! அவற்றில் நடுவே ஒரு கிராமம். அக்கிராமத்தில் ஒரு வீடு!

அவ்வீட்டில், வீட்டின் தலைவியாகிய வெள்ளையம்மாளும் அவள் தோழி அல்லியும் அமர்ந்திருந்தனர்.

அப்பொழுது!
 மழை! பெருமழை! வீதி எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது!

வெள்ளையம்மாள் வாசலுக்கு வந்தாள்; வெளியே பொழியும் மழையைப் பார்த்தாள்; ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கினாள்.

அதைப் பார்த்தாள் அல்லி; அவள் அருகே வந்தாள்; நின்றாள்; வெள்ளையம்மாளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்; பொழியும் மழையையும் பார்த்தாள்; ஏதோ ஒன்றைப் புரிந்து கொண்டவள் போல் தலையை ஆட்டினாள்; அவள் தோளை மெல்லத் தொட்டாள்.

அதை உணர்ந்த வெள்ளையம்மாள் சிந்தனை களைந்தாள். உறக்கத்திலிருந்து திடீரென விழித்து எழுபவளைப் போல் உணர்வு பெற்றாள் - திரும்பினாள் - அல்லியைப் பார்த்தாள் - மெல்லச் சிரித்தாள்.

“ஏண்டியம்மா! வெள்ளையம்மா! உன்னுடைய ஏக்கம் புரிகிறது! சிந்தனை ஓட்டம் தெரிகிறது!

மழை பெய்கிறது! இது மழைக்காலம்! - கார்காலம்! இந்த மழையைப் பார்த்தவுடன் உன் சிந்தனைப் பறவை எங்கோ சிறகடித்துப் பறக்கிறது! இல்லையா?”

“என்னடி அல்லி? ஏனிப்படிப் பேசுகிறாய்? என்ன சிந்தனையில் நான் மூழ்கி இருக்கிறேன்? என்ன கூறுகிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்றாள் தலைவி.

வெள்ளையம்மா! சும்மா மறைக்காதே! நம் ஐயா பொருள் சம்பாதிப்பதற்காக வெளியூர் சென்றுள்ளார். அவர் போகும்பொழுது

‘மழைக்காலம் (கார்காலம்) வருவதற்கு முன்பே திரும்பி வந்து விடுவேன்!’

என்று சொல்லிச் சென்றார். ஆனால் மழைக்காலம் வந்துவிட்டது. மன்னவர் மட்டும் ஏனோ இன்னும் வரவில்லை? அதை எண்ணித்தானே அம்மா துடிக்கிறாய்? மழையைப் பார்த்தவுடன் மன்னவன் நினைப்பு மனத்தில் தோன்றிவிட்டதல்லவா? இனி எப்படி தான் தாங்கிக் கொள்ளப் போகிறாயோ? எப்படித்தான் ஆற்றிக் கொள்ளப் போகிறாயோ? எப்படித்தான் உனக்கு ஆறுதல் கூறுவதோ? ஒன்றும் புரியவில்லையே அம்மா!” என்று புலம்பினாள்.

அதனைக் கேட்ட வெள்ளையம்மாள் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்தாள்.

“அடீ! பைத்தியக்காரி! அப்படி நான் என்ன கோழையா? அவரது பிரிவை ஆற்றிக் கொள்ள முடியாமல் அரற்றித் திரியும் அறிவில்லாதவளா? - தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திடும் பேதை என்றா எண்ணினாய்?

அவர் பிரிவை நான் தாங்கிக் கொள்வேன்.

ஏன் தெரியுமா?

அவர் சென்றுள்ள ஊரிலும் இப்பொழுது கார்காலம் தொடங்கி இருக்கும் - அங்கு மழை பொழியத் துவங்கி இருக்கும். அதைப் பார்த்தவுடன் அவர்க்கு நம் நினைப்பு வரும் - நம்மிடம் கூறிச் சென்ற உறுதிமொழி நினைவுக்கு வரும். எனவே அவர் உடனே திரும்பி வருவாரடி! - விரைந்து வருவாரடி! கார்காலத்திற்கு முந்தியது முதுவேனில் காலம். அந்த முதுவேனில் காலத்தில் கொடுமையான வெப்பத்தால் அவர் சென்றுள்ள ஊர் பொலிவிழந்து மழை இல்லாது இருந்திருக்கும்.

ஆனால், இப்பொழுது மழை பொழிவதால், அங்கு காய்ந்து கிடந்த காயா மரங்கள் எல்லாம் மீண்டும் துளிர்த்துச் செழித்துத் தழைத்திருக்கும்; பூத்துக் குலுங்கி நிற்கும்.

இக்காயாம் பூக்கள் கார்காலத்தின் வரவை அவர்க்குத் தெரிவிக்கும் - உணர்த்தும். அதனால் நமக்குக் கொடுத்த உறுதிமொழி அவர்க்கு நினைவுக்கு வரும். உடனே அவர் புறப்பட்டு வருவாரடி!

பூக்கள் நிறைந்த அம்மரத்தின் கிளைகள் மயிலின் அழகிய கழுத்தைப் போல் காட்சி தந்து நிற்கும். அதைப் பார்த்தவுடன் அவர்க்கு மயிலின் சாயல் நினைவுக்கு வரும். உடனே மயிலின் சாயலைப் பெற்றிருக்கும் என்னை நினைப்பார். உடனே புறப்பட்டு வருவாரடி!

அங்குள்ள காட்டு நிலத்திடையே அவர் நடந்து செல்வார். அங்கு ஆண் மான்கள் எல்லாம் பெண் மான்களோடு இணைந்தே இருக்கும். தன்னைப்போல் எந்த ஆண் மானும் தனித்து இருப்பதை அவரால் பார்க்கவே முடியாது. எனவே, இணை மான்களைப் (ஆண் மான் பெண் மான் ஜோடி) பார்த்தவுடன் அவர் காதல் வயப்படுவார்; தனித்திருக்கும் தன் நிலையை உணர்வார்; தன்னைக் காட்டிலும் பல மடங்கு தவித்து நிற்கும் என்னை நினைப்பார்; உடனே புறப்பட்டுத்தேர் ஏறி வருவாரடி!

அது மட்டுமா?

கொன்றை மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும். அது பூத்து நிற்கும் தோற்றம் பெண் ஒருத்தியின் மேனியில் பசலை பூத்திருக்கும் தோற்றம் போல் தோன்றும். எனவே, பிரிவால் பசலை பூத்திருக்கும் என் மேனி அவர் நினைவுக்கு வரும். உடனே தேர் ஏறி விரைந்து வருவாரடி!

ஆகவே, விரைந்து அவர் வரும் காலம் நெருங்கி உள்ளது. எனவே, அவர் பிரிவை இன்றும் சில நாள்களே பொறுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, நான் பொறுத்துக் கொள்வேன் - ஆற்றிக் கொள்வேன்.

என்னால் பிரிவை ஆற்றிக் கொள்ள முடியாது என்று கருதாதே!

அப்படிக் கருதினால் உன் கருத்துத் தவறு ஆகுமடி!” என்று கூறித் தோழியின் கூற்றை மறுத்தாள்.  
“சென்ற நாட்ட கொன்றை அம் பசுவீ
நம்போல் பசக்கும் காலை, தம்போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகொட்டு
இரலை மானையும் காண்பர் கொல், நமரே?
புல்லென் காயப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தின் தோன்றும்
புன்பல வைப்பிற் கானத் தானே”
  (குறுந்தொகை 183 )

No comments:

Post a Comment